
மகேஷ் முத்துசுவாமியின் இயல்பான ஒளிப்பதிவு கதைமாந்தர்களை நம்மோடு இன்னும் நெருக்கமாக்குகிறது.
அதிகாரம் நினைத்தால் விளிம்புநிலை மக்களின் வாழ்வை கருணையே இல்லாமல் நிர்மூலமாக்கும் என்பதைப் பேசும் படமே ‘ஆதார்.'
கட்டடத் தொழிலாளிகளாக, புழுதிக்கும் பசிக்கும் நடுவே வாழ்ந்துவருகிறார்கள் கருணாஸும் அவரின் மனைவியான ரித்விகாவும். ஒரு நள்ளிரவில் அந்த ஏரியாவில் சின்னச் சின்னதாய்க் குற்றங்கள் செய்துவரும் இனியாவும் அவரின் சகோதரர் திலீபனும் இவர்கள் வேலை பார்க்கும் கட்டடத்தில் கம்பிகளைத் திருட முயல, கணவனும் மனைவியும் சேர்ந்து அதைத் தடுத்து அவர்களை போலீஸில் பிடித்துக்கொடுக்கிறார்கள். அதன்பின் சில மாதங்கள் கழித்து, பிரசவ வலியில் துடிக்கும் ரித்விகாவிற்கு உதவுகிறார் இனியா. குழந்தை பிறந்த மறுநாள் ரித்விகா பிரசவ வார்டிலிருந்து காணாமல்போகிறார். அவருக்குத் துணையாய் இருந்த இனியா உயிரற்ற சடலமாய்... பச்சிளம் குழந்தையோடு தன் மனைவிக்கு என்ன ஆனது, இனியா எப்படி இறந்தார் போன்ற கேள்விகளுக்கு விடைதேடி சட்டத்தின் இரும்புக்கதவை சாமானியன் கருணாஸ் தட்டித் திறக்க முயல்வதே மீதிக்கதை.

நீண்ட நெடிய உருவமாய் நின்று பயமுறுத்தும் அதிகாரத்திடம் இறைஞ்சும் வளைந்த முதுகு கொண்ட சாமானியன் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்துகிறார் கருணாஸ். கண்களில் மன்றாடலும் உடல்மொழியில் பணிவுமாய் நெகிழ வைக்கிறார். அவருக்கு இணையாய் திரையில் கவர்வது அருண் பாண்டியன். காலங்காலமாய் மேலிருப்பவர்களின் சொல்லுக்கு அடிபணிந்து அது தரும் குற்றவுணர்ச்சியால் இறுதிக்காலத்தில் மருகும் எண்ணற்ற ஏவலாளிகளின் பிம்பமாய் நம் முன் நிற்கிறார். அதிகார வர்க்கத்தின் இரக்கமற்ற சக்கரத்தில் நசுங்கும் முகங்களாக ரித்விகா, இனியா, அவர்களை நசுக்கும் முகமூடிகளாக உமா ரியாஸ், பாகுபலி பிரபாகர் என அனைவருமே கதைக்குத் தேவையான பங்களிப்பைச் சரியாக வழங்கியிருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமியின் இயல்பான ஒளிப்பதிவு கதைமாந்தர்களை நம்மோடு இன்னும் நெருக்கமாக்குகிறது. உணர்வுகளைக் கிளறவேண்டிய ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை வெற்று இசையாக முடிந்துபோவது படத்தின் சில குறைகளுள் ஒன்று. ‘தேன்மிட்டாய் மாங்காய்த்துண்டு' என்ற பாடல் மட்டும் இனிமையான அனுபவமாய்த் தேங்குகிறது.
காவல்துறை இயங்கும் களத்தை யதார்த்தமாய்ப் படம்பிடித்துக் காட்டியதற்காகவும், அரசு இயந்திரத்தின் எல்லாத் தளங்களிலும் புரையோடிப்போயிருக்கும் ஆதிக்க மனநிலையை சமரசமின்றிப் பேசிய துணிவிற்காகவும் இயக்குநர் ராம்நாத் பழனிக்குமாருக்குப் பாராட்டுகள். இந்த எத்தனிப்பே ‘ஆதார்' படத்தை மிளிர வைக்கிறது.

நான் லீனியராய்க் கதை சொல்ல முயன்றிருப்பதால் ஆங்காங்கே கதையை விட்டும், அது கடத்தும் உணர்வுகளை விட்டும் நாம் விலகிச் செல்ல நேர்வதுதான் படத்தின் பெரிய சிக்கல். சிலரின் அமெச்சூர்த்தனமான நடிப்பும் லாஜிக் இடறல்களும் படத்தைக் கொஞ்சம் கீழிறக்குகின்றன.
பார்ப்பவர்களிடம் தாக்கத்தை உண்டு பண்ண நல்ல கதையும் களமும் போதும் என்பதை உரக்கச் சொல்லும் ஆவணமே இந்த ‘ஆதார்.'