Published:Updated:

PC Sreeram: `ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்' இந்திய சினிமா வியப்புடன் உச்சரிக்கும் பெயர்! ஏனென்றால்...

பி.சி.ஸ்ரீராம் |PCSreeram

இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை. #HBDPCSreeram

PC Sreeram: `ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்' இந்திய சினிமா வியப்புடன் உச்சரிக்கும் பெயர்! ஏனென்றால்...

இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை. #HBDPCSreeram

Published:Updated:
பி.சி.ஸ்ரீராம் |PCSreeram
ஒரு தசாப்தத்துக்கு முன்பு, திருவண்ணாமலையில் சமுத்திர ஏரிக்கரையில் ஒரு சந்திப்பு நடந்தது.

சுனாமி, எய்ட்ஸ் இன்னும் பிறவற்றால் தம் பெற்றோரை இழந்து நிர்கதியாய் நிற்கும் 300 குழந்தைகள் பங்குபெற்ற, குழந்தைகளுக்கான சந்திப்பு அது. சந்திப்பில் ஏரிக்கரை, மரம் இவற்றோடு ஆர்வலர்கள் சிலர். எழுத்தாளர் பவா செல்லதுரை தன் நண்பர்களோடு சேர்ந்து அந்த நிகழ்வைச் சாத்தியப்படுத்தியிருந்தார்.

நதியின் பார்வையில் நாடகம் நிகழ்த்துதல், கதை சொல்லல், ஓவியம் தீட்டல் என கலைகளின் கரம் பற்றி லயித்தனர் குழந்தைகள்.

சூரியன் இந்த தரிசனத்தைக் காண வான் ஏற எத்தனித்த போது, நீண்ட அரைக்கை சட்டை, கண்ணாடி சகிதமிருந்த தாடிக்காரர் தன் விலையுயர்ந்த நிகான் கேமராவை ஒரு சிறுவனுக்குக் கொடுக்கிறார். அதை ஆச்சரியமாக வருடிப் பார்க்கின்றன சிறுவனின் கரங்கள். தாடிக்காரர் சில சமிக்ஞைகள் செய்கிறார். துயரம் தோய்ந்த சிறுவனின் விழிகள் வியூ பைண்டரில் எதையோ பார்கின்றன. பிரமிக்கின்றன. நகக்கணுவை ஒத்திருந்த பட்டன்களை அழுத்தி சட்டகங்களைச் சீர்படுத்தின. சட்டகத்தின் வழி தாங்கள் கண்ட காட்சியை, அந்த கணத்தை சட்டங்களுக்குள் பதியவைத்தன. இப்படியாக சூரியன் மறையும் வரை தாடிக்காரரின் கேமரா 50 குழந்தைகளின் கைகளுக்கு மாறியிருந்து. பல காட்சிகள் பதிவாகின.

ஏரி ( மாதிரிப்படம் )
ஏரி ( மாதிரிப்படம் )

சமுத்திர ஏரிக்கரையில் நடந்த அந்த நிகழ்வுதான் காலம் காலமாக மனிதன் சாத்தியப்படுத்த முயன்று தோற்று நிற்கும் புள்ளி. பன்னெடுங்காலமாய் கலை சாத்தியப்படுத்தி வருகிற புள்ளி. வெற்றி, தோல்வி, தீர்மானம் இவற்றைக் கடந்து வாழ்வின் மீதான பற்றுதலை நோக்கி நகர்த்திச் செல்கிற வழி. அந்த சூட்சுமத்தை நமக்கு உணர்த்துபவர்கள்தான் வரலாற்றில் மேதமை பெருந்தியவர்களாக நல்ஆசான்களாக உருபெறுகிறார்கள்.

காட்சிகள் நிறைந்திருந்த பிலிம் சுருள்களைப் பத்திரமாய், பக்குவமாய் புகைப்படங்களாக அந்தக் குழந்தைகளுக்கு மாற்றிக் கொடுக்கிறார் தாடிக்காரர். பரவசமடைந்தன மழலைகளின் விழிகள். கேமராவை, தாடிக்காரரை மாறி மாறிப் பார்த்தன நூறு கண்கள். காலம் தன் வியூ பைண்டரில் அந்தத் தருணங்களை அவ்வளவு ஆசையாக பதியவைத்து பத்திரப்படுத்திக்கொண்டது.

  பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

ஏரிக்கரையில் குழந்தைகளோடு திரிந்த அந்த தாடிக்காரர்தான் இந்திய சினிமாவின் மகத்தான ஆளுமை பி.சி.ஸ்ரீராம். அப்போதுதான், `பா' என்கிற பாலிவுட் படத்தில் 6 அடி உயர அமிதாப் பச்சனை பள்ளிச் சிறுவனாய், படம் முழுக்க உலவவிட்டு ஆச்சரியமாய் காட்சிப்படுத்தியிருந்தார். இந்திய சினிமாவில் தான் எட்டிய உயரத்தை, தானே மற்றுமொரு முறை கடந்து வந்திருந்த சில தினங்களில் நதிக்கரையில் நம்பிக்கை விளைச்சல் செய்தார் அந்த ஒளிக்கலைஞன்.

`பா' படத்தில் தான் நிகழ்த்தியிருந்த மாயத்தை ஊரே வியக்க, இந்த ஆர்பாட்டங்கள் ஏதுமின்றிதான் அந்த குழந்தைகள் சந்திப்பில் கலந்துகொண்டார். அந்த சந்திப்புக்காக பி.சியை அழைத்த பவா செல்லதுரை பி.சி.ஸ்ரீராமை ஒருமுறை மட்டுமே நேரில் பார்த்திருக்கிறார். பவா பி.சி-யிடம், இப்படியொரு நிகழ்ச்சிக்கு வரமுடியுமா என தொலைபேசியில் கேட்க, “இதுல கலந்துக்குறதைவிட வேற என்ன புடுங்குற வேலை எனக்கு இருக்கு” என தெரிவித்தவர், ஏரிக்கரையில் சூரியன் மறைந்து இருள் நெருங்க, `இருள் என்பதே குறைந்த ஒளி!' என அந்தக் குழந்தைகளுக்குக் கலைஞானம் புகட்டலானார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் என திரையில் விரியும் அந்தப் பெயர் இந்திய திரையுலகம் இன்றும் ஆச்சர்யமாய் உச்சரிக்கும் பெயர்களில் ஒன்று.

`பா' படத்தில் அமிதாப் பச்சன்
`பா' படத்தில் அமிதாப் பச்சன்

திரைப்படத் தயாரிப்பில் அதிமுக்கியமான அங்கம் வகிக்கும் ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்ற துறைகள் வெகுஜன மக்களின் கவனம் பெறாத ஒன்றாகவே உள்ளது. திரையில் தோன்றும் நாயகன், நாயகிக்கு இணையான, பல நேரங்களில் கூடுதல் உழைப்பைச் செலுத்திய பல மேதைகள் ஒரு காட்சிகளில் நடித்து கவனம் பெற்றர்களைவிட குறைந்த அளவே கவனிக்கப் பெற்றவர்கள். நல்வாய்ப்பாக பி.சி.ஸ்ரீராம் கவனிக்கப்பட்டார். `திரைப்படம் என்கிற அற்புதமான கலை, வெறுமனே கதை சொல்வதற்கு அல்ல’ என்பர். ஆம், அது பல கலைகளின் ஒத்திசைவு என்பதை அழுத்தமாக பதிவு செய்த கேமராக்காரன்.

அந்த காலம், வின்சென்ட் மாஸ்டர், அசோக்குமார், பாலுமகேந்திரா என பல ஒளிப்பதிவு ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவின் நாடகத்தனத்தை காட்சிகளாக, உணர்வுகளாக, மௌனங்களாக உருமாற்றியிருந்த பொற்காலம். தமிழ் சினிமா நம்பிக்கையானதொரு பாதையில் பயணித்து சென்றுகொண்டிருந்த நேரம். அப்படியான ஒரு சூழலில், தான் ஒளிப்பதிவு செய்திருந்த படம் ஒன்றில் நீண்ட கண்ணாடிக் கதவுகளை, கதாநாயகி திறக்க வீட்டுக்குள் நுழையும் பனிபோல கேமராவோடு களம் கண்டார் பி.சி.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

அதுவரை கட்டமைக்கப்பட்டிருந்த அத்தனை விதிகளையும், தேர்ந்த பொற்கொல்லன் நாள் பட்ட தங்கநகையை உருக்கி, மற்றொரு ஆபரணமாக்கி அழகு சேர்க்கும் விஞ்ஞானத்தைப் போல கலைத்துப் போட்டு கலை செய்தார். பிரதாப் போத்தனின் ‘மீண்டும் ஒரு காதல் கதை’யில், மனநலம் பிறழ்ந்தவர்களின் உலகை, அவர்தம் ப்ரியத்தை பதிவு செய்திட்ட அப்படத்தின் ஒளிப்பதிவாளராக கவனம் ஈர்த்தார்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

‘மௌன ராக’த்தில் முகம் கழுவ ரேவதி வாஷ் பேஷினில் குனிய வாஷ் பேஷனிலிருந்து முகத்துக்கு ஒளியடிக்கும். டாப் ஆங்கிளில் லைட்டிங் என்பதை உடைந்து கீழிருந்து மேலாக டை்டிங் செய்திருப்பார். அழுத்தமான காட்சிகளில் ஒளி ஊடுபாய, க்ளோசப் ஷாட்களில் உணர்ச்சிப் பிழம்பாய் கொந்தளிந்த முக பாவங்களைப் புறந்தள்ளி ஒளிகளைக் கச்சிதமாகக் கையாண்டு மௌனம், இசை, ஒளி மூன்றும் சம்பவிக்க உணர்வுகளைக் கடத்தும் மாயம் கைவரப் பெற்றவர் பி.சி.

இயக்குநர் சொல்கிற காட்சியை லென்ஸ்களை மாற்றிப் பதிவுசெய்வதல்ல ஒளிப்பதிவாளனின் பணி என்பதை உணர்ந்தவர், உணர்ந்துபவராக இருக்கிறார். கதையின் தன்மையை, களத்தை, கதாபாத்திரங்களின் மனநிலையை, காட்சிகளின் தீவிரத்தன்மையை உணர்ந்து குறிப்பிட்ட காட்சியை கோணங்கள், லென்ஸ், பாத்திரங்களின் நிற்கும் position, நகரும் விதம் என Stagging செய்வதில் வித்தைக்காரர்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

ஒரு அறைக்குள் நடக்கும் காட்சியில் கேமரா இங்கும் அங்கும் அலையும், வெற்று பாலைவனத்தில் சுற்றிப் புரளும், ஏதுமற்ற நிலத்தில் தூரமாய் நிற்கும். ஒவ்வொரு காட்சிக்கும் பின்னணியில் சரியான அலைவரிசையில் நிகழ்த்தப்பட்ட இந்த உழைப்புதான் காட்சியின் வீரியத்தை நம்முள் கடத்த துணை செய்கின்றன.

இந்திய சினிமாவின் முக்கியமான படைப்பான ‘நாயகன்’ 30 ஆண்டுகளைக் கடந்தும் தனித்துவமாக நிற்பதற்கு இசை, இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இன்ன பிறவற்றின் பிசிரற்ற ஒத்திசைவுதான். சிறுவனாக மணல் மேடுகளில் ஓடி பரிதவித்து, துப்பாக்கி குண்டுக்குத் தகப்பனை மடியில் இழந்து, மனைவியை இழந்து, மகனை இழந்து, மகளைப் பிரிந்து ஒற்றை குண்டில் இறக்கும் நாயகன் என படத்தை எடுத்துக்கொண்டால் இந்த ஒவ்வெவொரு காட்சிகளையும் எடுத்த விதத்தை, பின்னணி இசையை, ஒளிப்பதிவை பார்க்கையில் ஆச்சர்யம் மேலிடும்.

நாயகன் படக்காட்சி
நாயகன் படக்காட்சி

பி.சி ஒருமுறை இப்படி சொல்லியிருக்கிறார்: "ஒளிப்பதிவாளரா எனக்கு ஒளியை ஆதிக்கம் பண்ணவும் பிடிக்கும். ஒளி பின்னாடி ஓடவும் ரொம்பப் பிடிக்கும்!''. 'நாயகன்' படத்தில் கமல், பாலியல் தொழிலாளியாக இருக்கும் பள்ளி மாணவி சரண்யாவைச் சந்திக்கும் அந்தக் காட்சியை அவர் Staging செய்தவிதம் அற்புதமான ரசவாதம். திரைச்சீலைகளுக்கு பின் நிற்கும் சரண்யாவை கண்ணாடியில் பார்ப்பார் கமல். மெல்ல மெல்ல தன்னைப் பற்றி சரண்யா சொல்ல சொல்ல கமல் மெதுவாக காட்சி நகர்ந்து, திரைச்சீலைகளைக் கடந்து அவர் முகத்தைத் தெளிவாகக் காண்பார்.

சரண்யாவைப் படிக்கச் சொல்லிவிட்டு தூங்கிவிட, காலையில் தூங்கும் சரண்யாவை நோக்கி அடைத்துகிடக்கும் கதவைத் திறக்க ஒளி நுழைந்து சரண்யாவை நிரப்பும். அந்த ஒளி உணர்ந்தும் செய்திதான் வசனங்களின்றி அந்த காட்சியின் வீரியத்தை நமக்குக் கடத்தியது. அந்த காட்சியின் தொடர்ச்சியாக சரண்யாவை சுதந்திரமாய் பறந்து திரிகின்ற புறாக்களுக்கு அருகில் சந்தித்து தன் காதலை உணர்த்த, அத்தனை ரம்மியமாக சரண்யாவின் புது வாழ்வை காட்சிப்படுத்தியிருப்பர்.

‘திருடா திருடா’ படத்தின் பறக்கும் ஜீப்பிலிருந்து பறக்கும் கோழிகள், வீரபாண்டிக் கோட்டையிலே பாடலின் லைட்டிங், ஒற்றை லொகேஷனில் எடுத்த ராசாத்தி பாடல், வைட் ஷாட்டில் தொடங்கி மெல்ல க்ளோஸ் அப் காட்சிகளாக நகரும் ‘குருதிப்புனல்’ படம் என இவரி்ன் காட்சியமைப்பு குறித்து பல சினிமா ரசிகர்கள், விமர்சர்கள், வாழ்த்தியும் விமர்சித்துமிருக்கின்றனர்.

கவிதை, ஓவியம் போல உணர்ந்து மட்டுமே அறியமுடிகிற ஒன்றாகவே ஒளிப்பதிவும், சினிமாவும் எஞ்சி நிற்கின்றன. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இருக்கக்கூடிய சவாலே சிந்தனை ரீதியாக மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியாகவும் தன்னை காலத்துக்கேற்ப நவீனப்படுத்திக் கொள்ள வேண்டும். பி.சி. அதில் கைதேர்ந்தவர்.

ஓகே கண்மணி படத்தில்
ஓகே கண்மணி படத்தில்

மணிரத்னம் வெவ்வேறு கால இடைவெளிகளில் இயக்கிய மூன்று காதல் படங்களான ‘மௌன ராகம்’ - ‘அலைபாயுதே’ - ‘ஓ காதல் கண்மணி’ இதற்கு சரியான உதாரணம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான காதல் கதை ஒவ்வெவொன்றும் படமாக்கப்பட்ட காலமும் வேறானவை. ‘அலைபாயுதே’வின் ரயில்கள் காட்சிப்படுத்தப்பட்டதற்கும், ‘ஓகே கண்மணி’யின் ரயில்கள் காட்சி்ப்படுத்தப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியும்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

பச்சை நிறமே பாடலில் வண்ணங்களை கையாண்ட விதமும், ஓகே கண்மணியில் கலர் பேலட்களில் அவர் நிகழ்த்தியதும், ஸ்லோ ஷட்டர் ஸ்பீடு காட்சிகளும் உதாரணம். ஒற்றை போர்வைக்குள் ஊடல் கொள்ளும் நாயகன் - நாயகியை காதல் மொழியிலும், கடற்கரையில் அதே நாயகியை காதலன் பிரிந்து தவித்து தேடும்போது தவிப்பையும் காட்சிப்படுத்த அந்த ஒளியமைப்பும், காட்சிப்படுத்திய விதமும் முக்கிய பங்ககாக இருக்கும்.

பிலிம்களில் படம் எடுத்த காலத்தில் `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அவர் கமலை எப்படி குள்ளமாகக் காட்சிப்படுத்தினார் என்பதும், `பா' படத்தின் குட்டையான அமிதாப் பச்சனும் இன்று ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு பல விதமான யோசனைகளை பலரும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கலைஞனுக்கு அவனது கலை சார்ந்த மிகப்பெரிய வெகுமதி அல்லவா இது.

தொழில் சார்ந்த இந்த திறன்களை, வெற்றிகளைக் கடந்து தான் கற்ற, தனக்கு கைவந்த கலையை பலருக்குக் கற்றுக்கொடுத்து அவர்களையும் துறை சார்ந்த ஜாம்பவான்களாக்கியிருப்பதும், கலை குறித்தான பி.சி-யின் பார்வையும்தான் அவரை ஒரு மதிப்புமிக்க கலைஞனாக உன்னதமான இடத்தில் அமர்த்தி வைத்திருக்கின்றன.

சிறு வயதில் தாத்தா கொடுத்த யாஷிகா கேமராவில் படம் பிடித்தது. திரைப்படக் கல்லூரியில் படிக்கையில் தேர்வு 10 நாள்களுக்கு முன்பே ஒளிப்பதிவு செய்ய மணப்பாறைக்கு பஸ் ஏறியது என ஆர்வமும் தன் திறமையின் மீதான அளப்பரிய நம்பிக்கையுமே அவரின் பலம்.

‘மீண்டும் ஒரு காதல் கதை', ‘பூவே பூச்சூடவா’ என ஆரம்ப காலம் தொட்டே புதிய முயற்சிகளுக்குள் மட்டுமே தன்னைப் பொருத்திக்கொண்டவர். பி.சி. நகர சூழலில் வளர்ந்தவர், ‘தேவர் மகன்’ படத்தில் தமிழ் கிராமத்தை அபாரமாகக் காட்சிப்படுத்தியிருப்பார். படப்பிடிப்பிற்கு முன்னதாக அந்த கிராமம் பழக்க வழக்கங்கள் குறித்து தெளிவாகக் கேட்டறிந்த பிறகே கேமராவில் கைவைத்தேன் என ரகசியம் உடைப்பார்.

screenshot
screenshot
PA International - YouTube video

`எவனோ ஒருவன் வாசிக்கிறான்' பாடலோ, `மேற்கே மேற்கே பாட'லோ கடற்கரையும் கடலும் சார்ந்த ஒற்றை தளத்தில் பாடலின் உணர்வுகளுக்கு நியாயம் செய்திருப்பார். ஒவ்வொரு ப்ரேமிலும் ஓடியோடி லைட்டிங் செய்த அந்த மெனக்கெடலும், உழைப்பும், ஆர்வமும் தெரியும். திடீரென `யாவரும் நலம்' என்கிற ஹாரர் படத்தில் நமக்கு புதுவித அனுபவத்தை வழங்கியிருப்பார்.

இயக்குநர் அப்பாஸ் கியாரெஸ்தமி, “சினிமா என்பது கதை சொல்வதாக இல்லாமல், ஒரு கவிதையைப் போல இருக்க வேண்டும் . எனது நூலகத்தில் நாவல்கள் எல்லாம் புதிதாக இருக்கின்றன. ஏனெனில், அவற்றை நான் திரும்பத் திரும்பப் படிப்பதில்லை. ஒருமுறை படித்தவுடன் அதன் கதை எனக்குத் தெரிந்துவிடுகிறது. இதற்கு மாறாக, கவிதை நூல்களை நான் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். ஏனெனில், கவிதை என்பது ஒவ்வொருமுறை படிக்கும்போதும் உங்கள் மனநிலைக்கேற்ப அது தரும் உணர்வுகள் மாறுகின்றன." இந்த உணர்வுகளை கடத்தும் பணிசெய்யும் ஆளுமைகளுள் குறிப்பிடத்தக்கவராக இருக்கிறார் பி.சி.

புதுமைகளைக் கற்று பரிசோதிப்பதில் கவனமாக இருப்பார். `மீரா', குருதிப்புனல் படத்துக்குப் பிறகு அலர் இயக்கிய ஒளிப்பதிவு செய்த படம் `வானம் வசப்படும்' இந்தியாவின் முதல் டிஜிட்டல் படம் இவர் எடுத்த ‘வானம் வசப்படும்' தான். தொழில்நட்பத் தேடலிருந்தாலும் கலை மீதான அவரின் பார்வை தெளிவானது. ''என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் ஒளிப்பதிவில் சாதனங்களின் பங்கு ஒரு சதவிகிதம்தான். அந்தச் சாதனங்களை எப்படிப் பயன்படுத்துறோம்கிற வியூகம்தான் ஒரு கேமராமேனின் திறமை. ஒரு படத்தின் கதை, அதன் சூழல், அதற்கான மனநிலை, அதை எப்படி திரையில் கொண்டுவர்றோம்... இதெல்லாம் ஒரு ஒளிப்பதிவாளனின் அனுபவத்தில் இருந்துதானே வரும். வில்லும் அம்பும் எவ்வளவு நவீனமா இருந்தாலும், இலக்கை அடைவதில் எய்பவனின் குறிதானே முக்கியம்!'' - என்பார்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

இன்றும் நெட்பிளிக்ஸில் ஆந்தாலஜி எடுக்கும்போது உற்சாகத்தோடு வேலை செய்கிறார். சமகால அரசியலை கவனிக்கிறார். அதையொட்டி சில முடிவுகளை எடுக்கிறார். சிலரின் படங்களைத் தவிர்க்கிறார். நல்ல சினிமாக்களை சினிமாக்காரர்களை மனதாரப் பாராட்டுகிறார். உங்களோடு இணைந்து பணிசெய்ய விரும்பும்கிறேன் என இளம் இயக்குநர்களிடம் கேட்கிறார். இவையெல்லாம் மட்டும் அவரை ஒரு ஆசானாக, கலைஞனாக, ஒளிபதிவாளனாக வைத்திருப்பதில்லை. கலை மீதான நம் சமூகத்தின் மீதான அவரின் பார்வை கூர்மையானது.

பி.சி.யிடம் ஒரு நேர்காணலில் இப்படி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. `இன்று டிஜிட்டல் கேமரா வந்த பிறகு, எல்லோர் கைகளிலும் கேமரா இருக்கிறது. எல்லோரும் படமெடுக்க கிளம்பிவிடுகிறார்கள். எந்த கட்டுப்பாடுகளோ, வரைமுறையோ இருப்பதில்லை. ஒரு தேர்ந்த ஒளிப்பதிவாளனாக இதை எப்படி பார்க்கிறீர்கள்?' என்பது கேள்வி.

எந்த சலனமுமின்றி பதலளிக்கிறார் பி.சி.," இதை நான் வரவேற்கிறேன். இதுதான் நடக்க வேண்டும். கலை அனைவரும் கைகளுக்கும் சென்று சேரும்போதுதான் முழுமைபெறுகிறது. தடைகளற்ற இந்த சுதந்திரம் தேவை. குறிப்பிட்டவர்களின் கைகளில் எந்தக் கலையும் சுருங்கிவிடக்கூடாது. எல்லோருக்கும் கேமரா கிடைக்கவேண்டும். அனைவரும் கேமரா கொண்டு படம்பிடிக்கட்டும். எது சிறந்தது என்பதை காலம் முடிவுசெய்யும்" என்கிறார்.

பி.சி.ஸ்ரீராம்
பி.சி.ஸ்ரீராம்

இந்தப் பார்வைதான் புகழ் வெளிச்சத்தின் உச்சத்தில் திளைத்தபோதும், இந்திய சினிமாவின் ஸ்டார்கள் தனது நண்பர்களாக இருந்தாலும், சுனாமியில் தகப்பன்களை இழந்து நிற்கும் குழந்தைகளைத் தேடி சமுத்திர ஏரிக்கரைக்கு அவரை ஓடச்செய்கிறது. ஓடுங்கள் பி.சி., இங்குள்ள பலநூறு சமுத்திர ஏரிக்கரைகளுக்கு... உங்கள் கேமராவை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். வியூ பைண்டர் வழியே இந்த உலகத்தை அவர்களுக்குக் காட்டுங்கள்.

பிறந்தநாள் வாழ்த்துகள் பி.சி.!

In the total darkness,

poetry is still there, and it

is there for you...

- abbas kiarostami