Published:Updated:

அச்சமில்லை அச்சமில்லை: பணநாயகமான ஜனநாயகம்; தற்கால அரசியல் பிரச்னைகளை இடித்துரைத்த கே.பாலசந்தர்!

அச்சமில்லை அச்சமில்லை

ஒரு லட்சியவாத இளைஞனின் பிம்பம், பணம் மற்றும் அதிகார ருசியின் காரணமாக எவ்வாறு வீழ்ச்சியடைகிறது என்கிற சித்திரத்தை நல்லதொரு அரசியல் டிராமாவாகத் தந்திருக்கிறார் பாலசந்தர்.

Published:Updated:

அச்சமில்லை அச்சமில்லை: பணநாயகமான ஜனநாயகம்; தற்கால அரசியல் பிரச்னைகளை இடித்துரைத்த கே.பாலசந்தர்!

ஒரு லட்சியவாத இளைஞனின் பிம்பம், பணம் மற்றும் அதிகார ருசியின் காரணமாக எவ்வாறு வீழ்ச்சியடைகிறது என்கிற சித்திரத்தை நல்லதொரு அரசியல் டிராமாவாகத் தந்திருக்கிறார் பாலசந்தர்.

அச்சமில்லை அச்சமில்லை
‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாரதியாரின் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்டு, 1984-ல் வெளியான இந்த அரசியல் டிராமா, இன்றைக்கும் கூட பொருந்தக்கூடிய அளவுக்குச் சமகாலத்தன்மையைக் கொண்டிருக்கிறது. சமூக விழிப்புணர்வு படங்களை ஜனரஞ்சகமான அம்சங்களோடு வழங்கக்கூடிய கே.பாலசந்தரின் இந்தப் படைப்பை ஒருவகையில் ‘Political Satire’ என்று கூடச் சொல்லலாம்.

பிரிட்டிஷிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெறுவதற்காகப் பட்ட பாடுகளின் வரலாறு நாம் அறிவோம். அந்த இலக்கை அடைந்தவுடன் இந்த தேசம் பொன்னுலகமாக மாறியதா என்றால் இல்லை. அதிகார அரசியல் என்பது பெருவணிகமாக மாறிவிட்டது. சில லட்சங்களை முதலீடு செய்து பல கோடிகளை எடுக்கும் சூதாட்டமாக ஆகிவிட்டது. விளைவு நேர்மையாளர்களும் லட்சியவாதிகளும் கசப்புணர்ச்சியுடன் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். தன்னலமற்ற தலைவர்கள் மறைந்து போனார்கள். மக்களும் அவர்களை நிராகரித்தனர். ஊழல்வாதிகள், சுயலாபத்திற்காக எளிதில் கட்சி மாறும் பச்சோந்திகள், ரவுடிகள் போன்றவர்களால் நிறைந்து அரசியல் சூழல் என்பது சகதியாகிவிட்டது.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

ஒரு லட்சியவாதி இளைஞன், அதிகார அரசியலின் ருசியையும் அதன் மூலம் ஈட்டக்கூடிய லாபத்தையும் கண்டபிறகு எவ்வாறு அந்த மீள முடியாத சகதியில் சிக்கிக் கொள்கிறான் என்பதைத்தான் இந்தத் திரைப்படம் உணர்ச்சிகரமாகவும் சுவாரஸ்யமாகவும் விளக்குகிறது.

அரசியல் சகதியில் சிக்கிய ஒரு லட்சியவாத இளைஞன்

குற்றாலத்தின் அருகிலுள்ள ஒரு கிராமம் ஊசிமலை. ஊர் மக்களுக்கு உதவ வேண்டும் என்கிற நல்லெண்ணத்துடன் இருக்கிறான் ஒரு லட்சியவாத இளைஞன், உலகநாதன். தன்னலமற்ற சேவை காரணமாக ஊர் மக்களின் மரியாதையையும் பிரியத்தையும் சம்பாதித்து வைத்திருக்கிறான். அவனது நேர்மையான பிம்பத்தைக் கண்டு பிரமித்து காதலில் விழுகிறாள் தேன்மொழி. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. ஊரில் செல்வாக்கு பெற்றிருக்கும் அந்த இளைஞனை வளைத்துப் போட அரசியல் கட்சிகள் போட்டிப் போடுகின்றன.

‘எந்தவொரு கட்சியிலும் இணைய மாட்டேன்’ என்று கறாராகச் சொல்லும் உலகநாதனுக்குப் பொருளாசையும் அதிகார ஆசையும் காட்டப்படுகிறது. மெல்ல மனம் மாறுகிறான். அவனுக்குள் கள்ளத்தனம் புகுகிறது. பொய் சொல்ல ஆரம்பிக்கிறான். லஞ்சம் வாங்குகிறான். வாக்குகளைக் கைப்பற்றுவதற்காக பல்வேறு கீழ்மைகளில் இறங்குகிறான். அரசியல் கொலைகள் நிகழக் காரணமாக இருக்கிறான். சாதிக்கலவரத்தை ஏற்படுத்துகிறான். அவற்றை நியாயப்படுத்துகிறான். மொத்தத்தில் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக மாறிவிடுகிறான்.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

தன் கணவனின் லட்சியவாத பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிவதைக் கண்டு முதலில் அதிர்ச்சியடையும் தேன்மொழி பிறகு கோபத்துடன் எச்சரிக்கிறாள். அவள் சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள். காவல்துறை தாக்குதலால் அவளுடைய அப்பாவிற்குப் பார்வை பறிபோகிறது. இப்படி எண்ணற்ற தியாகிகள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை வணிகமாக ஆக்கிப் பிழைக்கும் வரிசையில் தன் கணவனும் இணைந்துவிட்டானே என்று மனம் புழுங்குகிறாள். இருவருக்கும் தகராறு முற்றுகிறது. பல்வேறு அவமதிப்புகளுக்கு ஆளாகும் தேன்மொழி, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். உலகநாதனின் அரசியல் அட்டூழியம் அபாயகரமான எல்லையை எட்டுகிறது. இதன் உச்சக்கட்டமாகத் தேன்மொழியின் ரௌத்திரம் பெருகி வழியும் கிளைமாக்ஸ் காட்சியுடன் படம் நிறைகிறது.

‘உலகநாதன்’ ராஜேஷ், ‘தேன்மொழி’ சரிதா – சிறப்பான காம்பினேஷன்

உலகநாதனாக ராஜேஷ். திராவிடக் களையுடன் லட்சணமான முகத்துடன் இருக்கும் ராஜேஷ், இயல்பாக நடிக்கும் திறமையான நடிகர்களில் ஒருவர். பல திரைப்படங்களில் இவர் தோன்றியிருந்தாலும் தமிழ் சினிமா இவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. லட்சியவாத இளைஞனாக, இவர் அறிமுகமாகும் காட்சியே அத்தனை அழகு. வேலைக்குச் செல்லாமல் வீணாகச் சுற்றித் திரிபவர்களுக்குப் புத்திமதி சொல்வது, தனது வீட்டின் முன்புறம் உள்ள கரும்பலகையில் தினமும் ஒரு பொன்மொழியை எழுதுவது என்று ஒரு நல்ல குடிமகனுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார். “இதுவரைக்கும் ஏதாச்சும் நல்லது செய்திருக்கியா... தினமும் ஏதாவது நல்லது செய்யப்பா... பத்து நிமிஷமாவது அதுக்கு ஒதுக்கு” என்று ஓர் இளைஞனுக்கு இவர் அறிவுரை சொல்வது பாசிட்டிவ்வான அணுகுமுறையில் இருக்கிறது.

“ச்சே... என்னா மனுஷம்ப்பா...’ என்று பார்வையாளர்களின் மனங்களை மட்டுமல்லாது நாயகி தேன்மொழி மனதையும் கொள்ளை கொண்டு விடும் உலகநாதன், கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக் கொண்டே செல்வது, ஒரு கட்டத்தில் தன் கீழ்மைகளை மூர்க்கமாக நியாயப்படுத்துவது, அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வது என்று மாறுகிறான். இப்படி அந்தப் பாத்திரத்தின் ஆளுமை தலைகீழாக மாறும் காட்சிகளில் ராஜேஷின் நடிப்பு அருமையாக அமைந்துள்ளது.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

தேன்மொழியாக அசத்தியிருக்கும் சரிதா

பாலசந்தரின் திரைப்படங்களில் பெண் பாத்திரங்கள் பொதுவாக வலிமையாகவும் அழுத்தமாகவும் சித்திரிக்கப்படும். இந்த வரிசையில், இந்தத் திரைப்படத்தில் வரும் ‘தேன்மொழி’ பாத்திரம், சரிதாவின் கலைப்பயணத்தில் ‘சிறந்தவற்றில் முக்கியமானதொன்றாக’ அமைந்துள்ளது. ஒரு தமிழ்நாட்டுப் பெண்ணின் அகச்சித்திரத்தை தன் அற்புதமான முகபாவங்களால் தந்து அசத்தியுள்ளார் சரிதா. அகன்ற விழிகள் இதற்குக் கச்சிதமாகத் துணை புரிவதால், கலைடாஸ்கோப் போல இவரது முகபாவங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.

உலகநாதனின் நல்லியல்புகளை ஒளிந்து ஒளிந்து பார்த்துப் பிரமிப்பதும், பிறகு மெல்லக் காதலில் விழுவதும், அதை வெளிப்படுத்துவதும், அவன் சறுக்கி விழும் போதெல்லாம் மனசாட்சியைப் போலத் தொடர்ந்து எச்சரிப்பதும், அதனால் ஏற்படும் அவமதிப்புகளைக் கண்ணீருடன் மென்று விழுங்குவதும், தண்ணீரை முகத்தில் வாரி வாரி இறைத்து தன் துயரத்தைக் களைய முயல்வதும்... எனப் படம் முழுவதும் சரிதாவின் ராஜாங்கம்தான். ஓர் உதாரணக் காட்சியை மட்டும் சொல்கிறேன்.
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

ஆலை சத்தம், அருவியின் சத்தம் போன்றவற்றைப் பயன்படுத்திக் கொண்டு ராஜேஷை செல்லமான வார்த்தைகளால் முணுமுணுத்தபடி வர்ணிப்பார் சரிதா. அவர் என்ன சொல்கிறார் என்பது ராஜேஷூக்கு கேட்காது. ஓடும் ஆலையை திடீரென ஒரு நாள் சட்டென்று நிறுத்தி, சரிதா என்ன சொல்கிறார் என்பதை ராஜேஷ் அம்பலப்படுத்தி விடுவார். தனது குட்டு வெளிப்பட்டவுடன் சிரிப்பும் அழுகையுமாக சரிதா தந்திருக்கும் ஒரு நடிப்பு, இதுவரை தமிழ்த் திரை காணாதது எனலாம். ஒண்ட வந்த பிடாரி போல இவரது வீட்டுக்குள் சாமர்த்தியமாக வந்து விடும் ராஜேஷின் ஆசைநாயகி மற்றும் அவரது அம்மாவை, ஒரு கட்டத்திற்குப் பின்னான பொறுமை உடைந்தவுடன் ஆங்காரம் பொங்கும் வார்த்தைகளால் சரிதா பின்னியெடுப்பார், பாருங்கள். அப்பப்பா..! தீபாவளி வாண வேடிக்கை போல இருக்கும். சில இடங்களில் சரிதாவின் நடிப்பு ஓவர்டோஸாக மாறிவிட்டதையும் சொல்ல வேண்டும். இதைக் கட்டுப்படுத்தத் தவறியதற்கு இயக்குநர்தான் பொறுப்பேற்க வேண்டும்.

பட்டாசாக வெடிக்கும் அரசியல் நையாண்டி வசனங்கள்

பிரதான பாத்திரங்களைத் தாண்டி படத்தில் வரும் சின்ன சின்ன கேரக்ட்டர்களும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும் மாயத்தை பாலசந்தர் எப்போதும் நிகழ்த்துவார். இந்தப் படத்தில் ‘டெல்லி நாயக்கர்’ என்றொரு கேரக்ட்டர் வருகிறது. காரசாரமான அரசியல் விமர்சனங்களை, நையாண்டியான மொழியில் சொல்லி விட்டு ‘நமக்கு எதுக்குப்பா பொல்லாப்பு?’ என்கிற பாவனையுடன் பிறகு விலகிச் சென்று விடும். டெல்லி நாயக்கர் வரும் காட்சிகள் எல்லாம் ரகளையான அரசியல் கிண்டல்கள் வசனங்களாகவும், காட்சிகளாகவும் வெளிப்படுகின்றன. ‘அரசியல் ஞானி அடுத்த தலைமுறையைப் பத்தி கவலைப்படுவான், அரசியல்வாதி அடுத்த தேர்தலைப் பத்தி மட்டும்தான் கவலைப்படுவான்’ என்பது போன்ற ‘சுளீர்’ வசனங்கள் படம் முழுவதும் தெறித்துக் கொண்டே இருக்கின்றன. பொங்கி வழியும் நரைத்த முடி, பெரிய மீசை, ஜிப்பா, சோடா புட்டி கண்ணாடி என்று அறிவுஜீவியாக வலம்வரும் இந்தப் பாத்திரத்தை பிரபாகர் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

இன்னொரு சுவாரஸ்யமான கேரக்ட்டர் ‘சுதந்திரம்’. ஆம், இந்தப் பாத்திரத்தின் பெயர் அது. இப்படியொரு வில்லங்கமான பெயரை ஒரு பாத்திரத்திற்குச் சூட்டி விட்டு அதை வைத்து படம் முழுவதும் ரகளையாகக் கிண்டடிலத்திருக்கிறார்கள். உயரம் குறைவான இந்தப் பாத்திரத்தைச் சுட்டிக் காட்டி, "சுதந்திரம்... நீ இன்னமும் வளரவேயில்லையே?” என்று நாட்டு நிலைமையைச் சூசகமாகச் சுட்டிக் காட்டுவார் டெல்லி நாயக்கர். வீரைய்யா என்கிற நடிகர் இந்தப் பாத்திரத்தைச் சுவாரஸ்யமாகக் கையாண்டுள்ளார். சமகால அரசியல் கொடுமைகளைக் கண்டு மனம் வருந்தும் சுதந்திரப் போராட்ட தியாகியாக வைரம் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாக நடித்துள்ளார்.

ராஜேஷின் தந்தையாக வரும் டெல்லி கணேஷின் நடிப்பும் வழக்கம் போல் அருமை. மகனின் மீதுள்ள கரிசனத்தால் வீட்டின் சமையல்காரர் போலவே செயல்படுவதும், மகனின் அரசியல் கீழ்மைகளை மௌனமான கோபத்தால் எதிர்ப்பதும், மகனால் மிரட்டப்பட்டு சோற்றை அள்ளி பரிதாபமாக விழுங்குவதும் என்று ஒரு பரிதாப தகப்பனின் கேரக்கட்டரை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

ராதாரவியும் ரவீந்திரனும் அரசியல் அடியாட்களாக வந்து போகிறார்கள். இளம் காதலர்களாக ஜெயகோபாலும் அகல்யாவும் நடித்துள்ளார்கள். புதிர்களாகப் போட்டு இம்சை செய்யும் காதலி பாத்திரம் சுவாரஸ்யமானது. கவர்ச்சி அம்சத்திற்காக பவித்ரா படத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். ‘பாலசந்தரின் படத்திலா இப்படி?’ என்று ஆச்சரியப்படும்படியாக ஒரு கவர்ச்சியான பாடல் காட்சியும் இருக்கிறது.

மலையருவியும் ‘தென்காசி’ கலாசாரமும்

இதுதவிர ‘மலையருவி’ என்று டைட்டில் கார்டில் தனியாகப் பெயர்ப் போடும் அளவிற்கு இந்தப் படத்தில் அருவியும் ஸ்பெஷலாக நடித்துள்ளது. பல காட்சிகளின் பின்னணியில் அருவி வருகிறது. சரிதாவின் பிளாஷ்பேக் காட்சி விரியும் போது அருவி பின்னால் பயணிப்பது போல் காட்டப்படும் ஒரு ‘ரிவர்ஸ் ஷாட்’ சுவாரஸ்யமான உத்தி. குற்றாலத்திற்குப் பக்கத்திலுள்ள ஊரின் பின்னணி என்பதால் படம் முழுவதும் ‘திருநவேலி’யின் கலாசார வாசனை வருகிறது. வட்டார மொழி, பாத்திரங்களின் தோற்றம் என்று தென்காசி மாவட்டத்தின் மண்வாசனை கமகமக்கிறது. பிரம்ம நாயகம், உமையொரு பாகன், வண்டி மலை என்று பெயர்களிலும் மண்வாசம். எழுத்தாளர் கி.ரா. தொகுத்த ‘வட்டார வழக்குச் சொல்லகராதி’யிலிருந்து வட்டாரச் சொற்களைப் பயன்படுத்தி டைட்டிலில் கிரெடிட் தந்திருக்கிறார்கள்.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

வி.எஸ்.நரசிம்ஹன் என்கிற இசையமைப்பாளரை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தினார் பாலசந்தர். ஓர் இசைக்கச்சேரியில் தனக்கு வாசித்த கலைஞர்களை அறிமுகப்படுத்தும் போது "இவர் ரொம்ப திறமையான கலைஞர். தமிழ் சினிமாவில் இவரை யாராவது பயன்படுத்திக் கொண்டால் மகிழ்ச்சியடைவேன்" என்று இளையராஜா மேடையில் சொல்ல, பார்வையாளர் வரிசையிலிருந்த பாலசந்தர், அடுத்த நாளே நரசிம்ஹனைச் சந்தித்து இந்தப் படத்தில் பணியாற்ற அழைத்ததாக ஒரு தகவல் இருக்கிறது. ‘ஆவாரம்பூவு ஆறேழு நாளா...’, ‘ஓடுகிற தண்ணியல உரசி விட்டேன் சந்தனத்தை’ என்கிற இரண்டு அருமையான பாடல்களைத் தந்திருந்தார் நரசிம்ஹன். நாட்டுப்புற மணம் கமழும் வகையில் பாடல் வரிகளை எழுதியிருந்தார் வைரமுத்து.

ஒரு லட்சியவாத இளைஞனின் பிம்பம், பணம் மற்றும் அதிகார ருசியின் காரணமாக எவ்வாறு வீழ்ச்சியடைகிறது என்கிற சித்திரத்தை நல்லதொரு அரசியல் டிராமாவாகத் தந்திருக்கிறார் பாலசந்தர். இந்தியாவின் ‘ஜனநாயகம்’ என்பது எவ்வாறு ‘பணநாயகமாக’ மாறியிருக்கிறது என்கிற வேதனை படம் முழுவதும் பதிவாகியுள்ளது. பச்சோந்திகள் போல கட்சி மாறும் அரசியல்வாதிகளின் ஆட்டம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கீழ்மைகளைச் செய்து விட்டு "எனக்கு ஊருல செல்வாக்கு இருக்கு. என் கட்சி எனக்குப் பக்கபலமா நிக்கும். உன்னால என்னை எதுவுமே செய்ய முடியாது" என்று இறுமாப்புடன் ராஜேஷ் கூறும் காட்சியில் குறுநில மன்னர்கள் போல வாழும் பல அரசியல்வாதிகள் நினைவிற்கு வந்து போகிறார்கள். தற்கால அரசியல் கலாசாரத்தையும் ஆங்காங்கே இடித்துரைக்கிறார் இயக்குநர்.

அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை
ஓர் அரசியல்வாதியின் வீழ்ச்சியின் மூலம் இந்திய ஜனநாயகம் சீர்குலைந்து போயிருப்பதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் பாலசந்தர், அதற்கான தீர்வு என்ன என்பதையும் கோடிட்டுக் காட்டியிருக்கலாம். ஒருவனை அழித்துவிட்டால் முடியப் போகிற நாடகமா இது? சமகாலத்திற்கு மட்டுமல்லாமல், வருங்காலத்திற்குக் கூட பொருந்தப் போகிற இந்த அரசியல் டிராமாவை இப்போதைய தலைமுறையினர் நிச்சயம் காண வேண்டும்.