``பேஸிக்கா நான் ஒரு எடிட்டர். என்னோட உயரத்தையும் உருவத்தையும் பார்த்துட்டு ஆர்யாவோட `மீகாமன்’ படத்துல நடிக்க முடியுமானு கேட்டாங்க. அன்னைக்கு ஓ.கே சொன்னேன்; இன்னைக்கு வரைக்கும் நடிச்சிட்டு இருக்கேன். ஆனால், எடிட்டிங்கை விடாமல் பண்ணிட்டு இருக்கேன். இப்போவரைக்கும் கிட்டத்தட்ட 20 படங்கள் எடிட் பண்ணியிருக்கேன்...’’ என்று தான் நடிக்க வந்த கதையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆத்மா.
தமிழ், தெலுங்குனு மாறி மாறி படங்கள் பண்ணிட்டு இருக்கீங்களே..?

``தெலுங்கில்தான் எனக்கு பெரிய ப்ரேக் கிடைச்சிருக்கு. தமிழ்ல நான் பண்ணுன ’தப்பு தண்டா’ படத்தைப் பார்த்துட்டு, ஜூனியர் என்.டி.ஆரோடு படத்துக்குக் கூப்பிட்டாங்க. தெலுங்கில் முதல் படமே ஜூனியர் என்.டி.ஆர், மோகன்லால் நடிச்ச ’ஜனதா கேரேஜ்’. பெரிய ரோல் கொடுத்தாங்க. செம ரீச்சும் ஆச்சு. இப்போ நிறைய தெலுங்கு படங்கள் வாய்ப்பு வந்துட்டு இருக்கு. தமிழ்ல நான் நடிச்ச முதல் பெரிய படம், `என்னை அறிந்தால்.’ இந்தப் படத்துல `அதாரு அதாரு...’ பாட்டை விக்னேஷ் சிவன்தான் எழுதியிருந்தார். அந்த சாங் ஷூட் நடந்தப்போ அவரும் ஸ்பாட்டுக்கு வந்தார். அப்போ என்னைப் பார்த்து, `உங்களுக்கு என் படத்துல ஒரு ரோல் இருக்கு’னு சொல்லி, `நானும் ரெளடிதான்’ படத்துல நடிக்க வெச்சார். அந்த கேரக்டர் என்னை பரவலா பல பேருக்குத் தெரிய வெச்சது. அப்படியே பல படங்கள் தொடர்ந்து, இப்போ `பிகில்’ வரைக்கும் நடிச்சிருக்கேன்.’’
`பிகில்’ படத்துல கமிட்டான கதை..?
`` `தெறி’ படத்துல நான் நடிச்சிருந்தனால அட்லி சாருக்கு என்னை தெரியும். `பிகில்’ படத்தோட ஆரம்ப ஸ்டேஜ்ல அவர் ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் வந்துச்சு. நானும் போய் பார்த்தேன்; 100 நாள் கால்ஷீட் கேட்டாங்க. அப்போவே எனக்குத் தெரிஞ்சிடுச்சு, இது பெரிய ரோல்தான்னு. இந்தப் படத்துல எனக்கு வில்லன் ரோல் கிடையாது; விஜய் சாரோட ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். நான் நடிச்ச படங்களில் பெரும்பாலும் நெகட்டிவ் கேரக்டர்கள்தான் எனக்கு கிடைச்சது. இப்படி ஒரு பெரிய படத்துல, ஒரு பாசிட்டிவ் ரோல் கிடைச்சது எனக்கு செம ஹாப்பி. `தெறி’ படத்துல வில்லன் கேங்ல இருந்தேன். அதுனால அப்போ அவர்கிட்ட அதிகமா பேச வாய்ப்பு கிடைக்கலை. `பிகில்’ல விஜய் சாரோட கேங்ல இருந்தனால, நிறைய விஷயங்கள் அவர்கிட்ட பேசவும்; கத்துக்கவும் முடிஞ்சது.’’
`பிகில்ரிங்’கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனதுக்கு நீங்கதான் காரணம். அந்த ஐடியா எப்படி வந்துச்சு?
``கடைசி நாள் ஷூட்டப்போ விஜய் சார் எங்களுக்கு ரிங் கொடுத்தார். முதலில் அதை வீடியோவா எடுத்து வெச்சுக்கலாம்னு எங்கேயும் போஸ்ட் பண்ண வேணாம்னுதான் நினைச்சேன். ஆனால், அவர் கையால அந்த ரிங்கை வாங்கும்போது எனக்கு எதோ ஃபீல் ஆச்சு. சீரியஸா, என் கண்ணுல அப்போ தண்ணி இருந்துச்சு. மற்ற கலைஞர்களும் அவர் கையால ரிங் வாங்குனதை, விருது வாங்குன மாதிரி ஃபீல் பண்ணுனாங்க. இந்த மொமெண்ட்டைப் பற்றி கண்டிப்பா எல்லாருக்கும் சொல்லணும்னு ஆசைப்பட்டேன். அதனாலதான் அந்த வீடியோவுல நானும் பேசி, அதை போஸ்ட் பண்ணினேன். நான் அந்த வீடியோ போட்டதும் அது செம டிரெண்டிங்ல போக ஆரம்பிச்சிடுச்சு. விஜய் சாரோட ஃபேன்ஸ் நிறைய பேர் எனக்கு பர்ஷனலா மெசேஜ் பண்ணி, ’இன்னும் வீடியோஸ் இருந்தா எனக்கு அனுப்புங்க நண்பா’னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.’’
’பிகில்’ல விஜய்யோட கேங்ல வேற யாரெல்லாம் இருந்தாங்க..?
``கதிர், ஆனந்த் ராஜ், யோகி பாபு, ஸ்டன்ட் தீனானு எல்லாரும் ஒரு கேங்கா இருப்போம். தினமும் ஃபுட்பால் விளையாடுவோம். யோகி பாபு செமையா ஃபுட் பால் விளையாடுவார். அவர் டே அண்ட் நைட்னு பல படங்கள் ஷூட்டிங் போயிட்டு இருப்பார். ’பிகில்’ ஷூட்டிங் வந்துட்டாருனா ப்ரேக் டைம்ல ரெஸ்ட் எடுக்காம எங்ககூட விளையாடுவார். விஜய் சாரும் சூப்பரா விளையாடுவார். அப்பறம், ஜாக்கி ஷெராப் சார்கூட எனக்கு ஒரு சீன் இருக்கு. ப்பா... என்ன வாய்ஸ் தெரியுமா அவருக்கு. பயங்கர போல்டா இருக்கும். அவரை ஸ்கீரின்ல பார்க்கிறதுக்கும் பயங்கரமா இருக்கும். அவர்கூட நடிப்பேன்னு நான் நினைக்கவே இல்லை.’’
சிங்கப் பெண்களைப் பற்றிச் சொல்லுங்க..?

``பயங்கர டெடிகேஷனான டீம். இந்த ஃபுட்பால் டீம்ல நடிகைகளும் இருப்பாங்க, ரியல் ஃபுட்பால் ப்ளேயர்ஸும் இருப்பாங்க. நடிகைகள் எல்லாரும் ஃபுட் பால் கத்துக்கிட்டு விளையாடுறது சிரமம்னா, ரியல் ப்ளேயர்ஸுக்கு ஷூட் முடிஞ்சதும் அவங்களோட ரியல் மேட்சுக்காக ட்ரைனிங் எடுக்குறதும் சிரமம். எத்தனை மணி நேரம் ஷூட்டிங் எடுத்தாலும் அதை முடிச்சிட்டு, தனியா அவங்க எல்லாரும் ப்ராக்டீஸுக்குப் போயிடுவாங்க. நடிகைகளும் ரியல் பிளேயர்கள் மாதிரிதான் விளையாடியிருக்காங்க. அவங்கதான் படத்துக்கான முக்கியமான கருவே. கண்டிப்பா அவங்க போர்ஷன் செமையா ரீச்சாகும்.’’
அடுத்த படம்..?
``தமன்னா நடிக்கிற பெட்ரோமாக்ஸ்’ படத்துல நடிக்கிறேன். அப்புறம் மணிரத்னம் சாரோட `பொன்னியின் செல்வன்’ படத்துக்கு ஆடிஷன் போயிட்டு வந்தேன். நான் நடிச்ச ஆடிஷன் வீடியோவை மணிரத்னம் சார் பார்த்துட்டு, ஓகே பண்ணிட்டார்னு சொன்னாங்க. ஆனா, இன்னும் அதிகாரபூர்வமான தகவல் எனக்கு வரலை. கண்டிப்பா அந்தப் படத்துல நான் இருப்பேன்னு நினைக்கிறேன்.’’