சினிமா
Published:Updated:

“டாக்டரா, ஆக்டரா என்ற குழப்பத்தில் இருந்தேன்!”

அஜ்மல்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜ்மல்

நான் அறிமுகமான ‘அஞ்சாதே’வில் நடிக்கும்போது எனக்குப் பெரிசா எதுவும் தெரியாது. மிஷ்கின் சார் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைப் பண்ணினேன்.

மற்ற நடிகர்களுக்கு இல்லாத சிறப்பு அஜ்மலுக்கு உண்டு. ‘கோ’வில் போட்ட பிள்ளையார் சுழியோ என்னவோ... நான்கு முறை முதல்வராக நடித்துவிட்டார். அதில் ரொம்பவே ஹைலைட் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் ‘அம்மா ராஜ்யம் லோ கடபா பிட்டலு’வில் ஜெகன்மோகன் ரெட்டியாக அசத்தியது. சமீபத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ணுக்குப் பிறகு, மீண்டும் நயன்தாராவுடன் நடிக்கப்போகும் உற்சாகத்தில் சிலிர்க்கிறார்.

``தொடர்ந்து வில்லனாகவே நடிக்கும் முடிவா?’’

“சத்தியமா இல்லீங்க. நான் அறிமுகமான ‘அஞ்சாதே’வில் நடிக்கும்போது எனக்குப் பெரிசா எதுவும் தெரியாது. மிஷ்கின் சார் என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைப் பண்ணினேன். அடுத்த படம் ‘திருதிரு துறுதுறு’ ஒரு காமெடி படம். அதுல என் கேரக்டர் பெயர் அர்ஜுன். அந்த கேரக்டர்தான் என் உண்மையான கேரக்டரும்கூட! அவ்வளவு கலகலப்பான ஆளு நான். இதைப் பார்த்துதான் ‘கோ’ வாய்ப்பு வந்துச்சு. `நான் முதல்வரா நடிச்சா மக்கள் நம்புவாங்களா?’ன்னு கே.வி.ஆனந்த் சார்கிட்ட கேட்டேன். ‘அந்தக் கவலை உங்களுக்கு எதுக்கு? சொல்றதைப் பண்ணுங்க. பெயர் கிடைக்கும்’ன்னார். அவர் சொன்னது மாதிரியே எனக்கு ஒரு நல்ல ரீச் கிடைச்சுது.

நான் ஒரு டாக்டர். அப்புறம்தான் ஆக்டர் ஆனேன். நான் கரியரின் உச்சத்துல இருக்கற நேரத்துல எங்க வீட்ல ‘நீ மருத்துவத்தில் கவனம் செலுத்து, நடிப்புல கவனம் செலுத்தப் போயிடாதே’ன்னு கவலையா சொன்னாங்க. குடும்பத்தினருடைய சந்தோஷத்துக்காக டாக்டருக்கான போஸ்ட் டிகிரி படிக்க வெளிநாடு போயிட்டேன். அங்கே போயும் படிப்பு மைண்ட்ல இல்ல. நடிப்புலதான் கவனம்போச்சு. டாக்டரா, ஆக்டராங்கிற குழப்பம் இருந்துச்சு. இப்படிப்பட்ட குழப்பமான சூழலால் படிப்பும் போச்சு. நடிப்பும் போச்சு’’ ஏக்கப்பெருமுச்சு விடும் அஜ்மல், தொடர்கிறார்.

“டாக்டரா, ஆக்டரா என்ற குழப்பத்தில் இருந்தேன்!”

“என்னோட கரியரை மறுபடியும் முதல்ல இருந்து தொடங்க வேண்டியதாகிடுச்சு. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ல நடிச்சேன். நல்ல டீம், சரியான படமாகவும் அமைஞ்சது. ‘தேவி2’ல பிரபுதேவா சார், இயக்குநர் விஜய் சார்னு நல்ல டீம் கிடைச்சது. அதன்பிறகு தேடி வந்த பட வாய்ப்புகள் எதையும் ஏத்துக்கலை. ‘நெற்றிக்கண்’ இயக்குநர் மிலிந்த் இதுக்கு முன்னாடி ‘அவள்’னு ஒரு ஹாரர் படம் பண்ணியிருந்தார். அப்ப அவர் ‘உங்கள ஒரு கரெக்ட்டான டைம்ல கூப்பிடுறேன்’ன்னார். அவர் சொன்னது மாதிரியே ‘நெற்றிக்கண்’ல வில்லனா நடிக்கக் கேட்டார். ‘வில்லனா?’ன்னு நான் தயங்கினேன். உடனே மிலிந்த், ‘உங்க எதிர் ரோல்ல நடிக்கறது நயன்தாரா. இது எலியும் பூனையுமா துரத்திப் பிடிக்கற கதை’ன்னு சொன்னார். ஆனாலும் மனசுக்குள்ள இப்படி ஒரு கேரக்டர் பண்ணினா, பெண்களுக்கு என்னைப் பிடிக்காமல் போகும்னு ஒரு நினைப்பு வந்துச்சு. ஹீரோவாகவும் படங்கள் பண்ணப் போறதால, கொஞ்சம் தயக்கம் இருந்துச்சு. நடிக்க செம ஸ்கோப் இருக்குனு புரிஞ்சதும் தயக்கம் உடைஞ்சுது. நான் இந்தப் படம் பண்ணக் காரணம் நயன் மேம். அடுத்து மலையாளத்துல அவங்க நடிக்கும் படத்துலயும் நடிக்கிறேன்.’’

``நீங்க நடிக்க வந்து 15 வருஷம் நெருங்கிடுச்சு... எப்படி இருக்கு இந்தப் பயணம்..?’’

``டாக்டரை விட்டுட்டு நடிக்க வந்ததுக்குக் காரணமே நடிப்புமீது எனக்கு இருந்த வேட்கை. இந்தத் துறைன்னு இல்ல. நம்மை மாதிரியே வேட்கை உள்ளவங்கள அடையாளம் கண்டு அவங்களோடு நாமும் பயணிச்சா, நாம நினைக்கற குறிக்கோளை அடையமுடியும். அப்படி இல்லேன்னா அந்த முயற்சி வீணாகும்னு இத்தனை வருஷ அனுபவம் உணர்த்தியிருக்கு. நாலு மொழிகள்ல நடிச்சதால, சில நுணுக்கங்கள் புரிஞ்சிருக்கு. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இப்ப தெரியுது. நிறைய மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்திருக்கு.’’