Published:Updated:

``ஷங்கர், முருகதாஸ், அட்லி... !" சுவராஸ்யம் பகிரும் அல்லு அர்ஜுன் #VikatanExclusive

நடிகர் அல்லு அர்ஜுன்

ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு!

Published:Updated:

``ஷங்கர், முருகதாஸ், அட்லி... !" சுவராஸ்யம் பகிரும் அல்லு அர்ஜுன் #VikatanExclusive

ஹைதராபாத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு!

நடிகர் அல்லு அர்ஜுன்

டோலிவுட் பாக்ஸ் ஆபீஸின் கிங் அல்லு அர்ஜுன்... டான்ஸ், ஸ்டன்ட் என எதுவாக இருந்தாலும் செம ஸ்டைலாக கலக்கும் இவர்தான், டோலிவுட்டின் ஸ்டைலிஷ் ஸ்டார். அவரது ரசிகர்களால் செல்லமாக Bunny என்று அழைக்கப்படுகிறார் ஆனால், ’புஷ்பா’ பட அறிவிப்பு அதன் டிரைலர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பால் ஐகான் ஸ்டாராக மாறியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். பயங்கர எதிர்பார்ப்பில் உருவாகி வரும் ’புஷ்பா’ படத்தின் எந்தவொரு அறிவிப்பு வெளியானாலும் அதுதான் அன்றைய ஹாட் டாபிக். தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நாயகர்களில் ஒருவரரான அல்லு அர்ஜுனை சந்திக்க ஹைதராபாத் சென்றோம். ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் டப்பிங் வேலைகளில் இருந்தார். ``Bunny சார் டப்பிங்லோ பிஸிகா உன்னாரு. ப்ளீஸ் வெயிட் செய்யண்டி" என்று அங்கிருந்தவர்கள் சொல்ல, டப்பிங் ஸ்டூடியோவில் இருந்த தனி அறையில் காத்திருந்தோம். நிறைய தலைமுடி, தாடி... கேஷுவலாக டி ஷர்ட், ட்ராக் பேன்ட்டுடன் அவருக்கே உரிய ஸ்டைலில் வேகமாக என்ட்ரி கொடுத்தார். ''வணக்கம். இவ்ளோ தூரம் வந்ததுக்கு முதல்ல நன்றி'' என்று இன்முகத்துடன் வரவேற்றார்.

'அலா வைகுந்தபுரமுலோ' படத்துக்கு கிடைச்ச பிரமாண்ட வெற்றியை எப்படி பார்க்குறீங்க ?

''ரொம்ப ரொம்ப ஹேப்பி. இன்டஸ்ட்ரி ஹிட் அது. ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட்டானாலும் ப்ளாபானாலும் அடுத்தடுத்து நம்ம ஓடணும்ல. அது எங்க வேலை. இது ஒரு பயணம். எல்லை கிடையாது. ஒரு ப்ளாக்பஸ்டர் கொடுத்தா, அப்புறம் ரிட்டயராகிடலாம்னு இல்லை. என்னுடைய இந்தப் பயணத்துல ஒரு ஹை பாய்ன்ட், 'அலா வைகுந்தபுரமுலோ'. அதை என்ஜாய் பண்ணிட்டு, தூங்கி எழுந்து காலையில குளிச்சுட்டு வேலைக்கு போக வேண்டியதுதான்''

செம ஸ்டைலா இருக்கீங்க. அந்த ஸ்வாக் எங்கிருந்து வருது ?

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்

''நிச்சயமா சென்னையில இருந்துதான். பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையிலதான். ஒரு மனுஷன் 18 வருஷமா ஒரு ஊர்ல இருந்தா, அந்த ஊரை அந்த மனுஷன்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. 20 வயசுக்கு பிறகு, வந்த ஸ்வாக் இல்லை அது. சினிமா மட்டுமல்ல என் பர்சனல் விஷயங்களிலும் தமிழின் தாக்கம் இருக்கு. நிறைய பேர் அதை சொல்லிருக்காங்க. நானும் உணர்ந்திருக்கேன்''

கரியர் தொடக்கத்துல கதைகள் தேர்ந்தெடுக்கிறதுல அப்பா இருந்திருக்கலாம். எப்போதிலிருந்து நீங்களே கதை கேட்க ஆரம்பிச்சீங்க ?

'' என் முதல் படத்திலிருந்தே நான்தான் கதை கேட்பேன், முடிவு பண்ணுவேன். எனக்கு பிடிச்சதுனா, 'இப்படியொரு கதை கேட்டேன். எனக்குப் பிடிச்சிருக்கு. நீங்களும் ஒருமுறை கதை கேளுங்க. உங்களுக்கு ஏதாவது தோணுச்சுனா சொல்லுங்க'னு சொல்லிடுவேன். அப்பா, என் அண்ணன், எனக்கு தெரிஞ்ச ரைட்டர்கள்னு எனக்கு நெருக்கமானவங்க யாராவது கேட்பாங்க. கதை கேட்டதும், அவங்க கருத்தை தெரிஞ்சுக்குவேன். ஆனா, முடிவு என்னுடையதுதான்''

எவ்வளவு பிஸியா இருந்தாலும் குடும்பத்தோட நேரம் செலவழிக்க தவறமாட்டேன்னு சொல்லிருந்தீங்க. சினிமா - குடும்பம் எப்படி பேலன்ஸ் பண்றீங்க ?

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்

''குழந்தைகளுக்காக எவ்வளவு செலவு பண்றோம்னு முக்கியமில்லை. அவங்களுக்காக அவங்ககூட எவ்வளவு நேரத்தை கொடுக்கிறோம்னுதான் முக்கியம். இந்த பத்து வருஷம்தான் அவங்கக்கூட கண்டிப்பா இருக்கணும். அதுக்கு பிறகு, அவங்களை பெரிய பசங்களானா பக்குவம் வந்திடும். அவங்களை அவங்களே பார்த்துக்குவாங்க. இப்போ கூட பட வேலைகள் நிறைய போய்க்கிட்டிருக்கு. ஆனா, என் பொண்ணு அர்ஹா பிறந்தநாளுக்கு துபாய் போயிருந்தோம். வொர்க் லைஃப் பேலன்ஸ் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, பண்ணித்தான் ஆகணும்''

உங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்காங்க, டோலிவுட் முன்னணி ஹீரோக்கள்ல முக்கியமானவர்னு எல்லாம் கிடைச்சிடுச்சு. இருந்தும் உங்களுக்கு ஏதாவது ஆசை இருக்கா?

''என் ரசிகர்களுடைய அன்புதான் என்னை எப்போவும் பாசிட்டிவா வெச்சிருக்கு. நான் இன்னும் நிறைய ஜானர் எக்ஸ்ப்ளோர் பண்ணணும்னு நினைக்கிறேன். கமர்ஷியல் சினிமாவைவிட்டு வெளியே போகணும்னு நினைக்கலை. கமர்ஷியல் சினிமாவுக்குள்ளயே பர்ஃபாமென்ஸை எடுத்துட்டு வரணும். அது சாதாரண விஷயம் கிடையாது. அதை என்னால பண்ண முடியும்னு நம்புறேன். 'புஷ்பா' அதுக்கு உதாரணமா இருக்கும். எல்லா கமர்ஷியல் எலமென்ட்ஸும் இருக்கும். ஆனா, அதைத்தாண்டி பர்ஃபாமென்ஸ் நிற்கும். இனி வரும் என் படங்களும் அப்படிதான்''

தமிழ் படங்களைத் தொடர்ந்து கவனிக்கிறீங்களா ?

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்

''என்னங்க இப்படி கேட்டுட்டீங்க ? எல்லா படங்களையும் பார்த்திடுவேன். ஷூட்டிங், டப்பிங்னு கொஞ்சம் பிஸியா இருந்தாலும் என்னென்ன படங்கள் எல்லாம் பார்க்கணும்னு லிஸ்ட் போட்டு ஒவ்வொன்னா பார்த்திடுவேன்''

பயோபிக்கும் உண்மை சம்பவத்தை தழுவிய படமும்தான் இப்போ ட்ரெண்டா இருக்கு. அப்படி ஏதாவது ஐடியா இருக்கா ?

''அப்படியான கதைகள்மீது எனக்கு பர்சனலாவே ரொம்ப ஆர்வம். இதுவரை அப்படியான கதை அமையலை. அமைஞ்சா நிச்சயம் பண்ணுவேன். இந்தியில கமர்ஷியல் பயோபிக் நிறைய பண்ணியிருக்காங்க. அந்த மாதிரி ஒண்ணு பண்ணணும்''

அப்பாவே தயாரிப்பாளரா இருந்தாலும் உங்களுக்கான மார்கெட் சம்பளம் எவ்வளவோ அதை கொடுத்திடுவார்னு கேள்விபட்டோமே !

''ஆமா. அப்பா நிறைய ஹீரோக்கள் கூட வொர்க் பண்ணியிருக்கார். அனுபவம் ரொம்ப ரொம்ப அதிகம். ஒரு தயாரிப்பாளரா அவங்களை அவர் எப்படி அணுகுறாரோ அப்படிதான் என்னையும் பார்க்கிறார். அதுதான் பிசினஸையும் குடும்பத்தையும் குழப்பிக்காம இருக்குனு நினைக்கிறேன்''

வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்றால், எல்லோரும் ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு, நீங்க மட்டும் தனியா கொஞ்ச நாள் இருந்துட்டு வருவீங்களாமே !

நடிகர் அல்லு அர்ஜுன்
நடிகர் அல்லு அர்ஜுன்

''இந்த டீடெய்ல் எல்லாம் யார் உங்களுக்கு சொன்னது ? என்னை ரொம்ப க்ளோஸா ஃபாலோ பண்ணிருக்கீங்க போலயே ! ஆமா உண்மைதான். பெரும்பாலும் சாங் ஷூட்டுக்குதான் ஃபாரின் போவோம். ஷூட்டிங் டைம்ல எனக்கு அந்த ஊரை சுத்தி பார்க்கணும்னு தோணாது. என்ன பண்ணப்போறோம், எப்படி பண்ணப்போறோம்னு யோசனையிலே இருப்பேன். ஷூட்டிங் முடிஞ்சவுடன், வேலை பத்தி எதுவும் யோசிக்காமல் ஜாலியா ரெண்டு மூணு நாள் தங்கியிருந்து அந்த ஊரை சுத்திப்பார்த்துட்டு வருவேன்''

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் கூட வொர்க் பண்ணப்போறீங்கன்னு தகவல்கள் எல்லாம் வந்தது. அது எந்தளவுக்கு உண்மைனு தெரியலை. தமிழ்ல யார்கூட வொர்க் பண்ணணும்னு ஆசைப்படுறீங்க ?

'' சிரிக்கிறார்... எனக்கு கமர்ஷியல் இயக்குநர்கள் ரொம்பப் பிடிக்கும். நிறைய இயக்குநர்கள் இருக்காங்க தமிழ்ல. ஒரு பெயரை மட்டும் சொல்ல முடியாது. ஷங்கர் சார், முருகதாஸ் சார், அட்லி, சிவானு நிறைய பேர் இருக்காங்க. ஏதாவது சுவாரஸ்யமான ஒரு கதை அமைஞ்சதுனா, உடனே பண்ணிடுவேன்''

12 வருடங்களுக்குப் பிறகு, நீங்க - இயக்குநர் சுகுமார் - இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இணைஞ்சிருக்கீங்க. எவ்வளவு நாளா பிளான் பண்ணுனீங்க ?


'புஷ்பா' என்ன களம் ? உங்களை நாங்க எப்படி பார்க்கலாம் ?

இந்தப் படத்துல இருந்து ஸ்டைலிஷ் ஸ்டார், ஐகான் ஸ்டாரா மாறியிருக்கீங்க. இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன ?

ஒரு படம் நீங்க கமிட்டாகிட்டா, ஹேர் ஸ்டைலிஸ்ட் கூட மட்டும் நிறைய மீட்டிங் நடக்குமாமே !

சென்னை டைரீஸ் ?

உங்களுடைய 'ஆஹா' ஓடிடி தளம் அறிமுகமாகி ஒரு வருடம் நிறைவடைஞ்சிருக்கு. எப்படி போய்க்கிட்டிருக்கு ?


டோலிவுட்னாலே மசாலா படங்கள்தான்னு இருந்த சூழல் மாறி, இப்போ நிறைய ரியாலிட்டி படங்கள் வருது. இந்த மாற்றத்தை ஒரு முன்னணி ஹீரோவா எப்படி பார்க்குறீங்க ?

ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மைக்கேல் ஜாக்சன்... இவங்க நாலு பேருடைய தீவிரமான ரசிகன்னு கேள்விப்பட்டோம். இவங்கக்கிட்ட நீங்க கேட்கணும்னு நினைக்கிற கேள்வி என்ன ? ... உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார், நடிகர் அல்லு அர்ஜுன். இந்த வார ஆனந்த விகடனில் அவருடைய முழு பேட்டி இடம்பெற்றிருக்கிறது. அதைப் படிக்க க்ளிக் செய்யவும்