Published:Updated:

கிடுகு பட ஷூட்டிங்ல நடந்த விஷயம் ஹெச்.ராஜாவுக்குத் தெரியுமா? நிறைய விஷயம் சொல்ல முடில - பிர்லா போஸ்

பிர்லா போஸ்

``முதல்லயே கதையைச் சொன்னா யாரும் நடிக்க வரமாட்டாங்கன்னு கதையை யாருக்கும் சொல்லல!"

Published:Updated:

கிடுகு பட ஷூட்டிங்ல நடந்த விஷயம் ஹெச்.ராஜாவுக்குத் தெரியுமா? நிறைய விஷயம் சொல்ல முடில - பிர்லா போஸ்

``முதல்லயே கதையைச் சொன்னா யாரும் நடிக்க வரமாட்டாங்கன்னு கதையை யாருக்கும் சொல்லல!"

பிர்லா போஸ்
'கிடுகு' என்றொரு திரைப்படம்.  இரு தினங்களுக்கு முன் தாமரை டி.வி யூ டியூப் சேனலில் ஒளிபரப்பானது.

'வேளாங்கண்ணி மாதா கோயில், முன்பு இந்துக் கோயிலாக இருந்தது; தற்போதும் அங்கு மதமாற்றம் தீவிரமாக நடக்கிறது' எனத் தொடங்கும் படத்தில் 'சங்கி', 'நீட்', 'காடுவெட்டி', 'கௌரவக்கொலை', 'திராவிட மாடல்' 'விடுதலை' 'சிறுத்தை' 'சாத்தான்குளம்' என எக்கச்சக்கமான குறியீடுகள் காட்டப்படுகின்றன.'இந்து அறநிலையத்துறை அரசிடம் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்' என்கிற படம், நீதிக்கட்சி அதற்குப் பிந்தைய திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளை நேரடியாக விமர்சிக்கிறது.

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பிர்லா போஸ் படம் தொடர்பாக சில விஷயங்களை நம்மிடம் கொள்ள விரும்புவதாகச் சொல்லவே, அவரைச் சந்தித்தோம்.''படத்துல நீங்கதான் ஹீரோன்னுதான் என்கிட்ட முதல்ல சொன்னாங்க. ஆனா கதையை முழுசா எங்கிட்ட சொல்லல. ஒரு கிரைம் நடக்கும், அதை நீங்க இன்வஸ்டிகேட் பண்ணுவீங்கன்னு மட்டும் சொன்னாங்க. கேரக்டர் ரோல் பண்றவங்களுக்கு சினிமாவுல இந்த மாதிரியெல்லாம் நடக்கும்கிறதை என்னுடைய 20 வருஷ சினிமா அனுபவத்துல பார்த்திருக்கறதால, பெரிசா எடுத்துக்கல. அவங்களும் புதுசா படம் எடுக்க வந்தவங்கதான். அதனால சரின்னு கிளம்பி வேளாங்கண்ணிக்கு ஷூட் போனேன். அங்க போனா எதுவுமே ப்ளான் பண்ணி நடக்கல. படத்தின் டயலாக்னு ஏதேதோ பேசிட்டிருந்தாங்க. அந்தச் சூழல் ஒரு மாதிரியா இருந்தது.

கிடுகு பட போஸ்டர்
கிடுகு பட போஸ்டர்

ரொம்ப நாளா டிவியில நடிச்சிட்டிருக்கேன். நடிப்புனு வந்துட்டா, 'இப்படி நடிக்க மாட்டேன், அப்படி நடிக்க மாட்டேனு சொல்ல மாட்டேன் நான். அதேநேரம் ஒரு சித்தாந்தம் பத்தி உயர்வா பேசிட்டுப் போகலாம். ஆனா இன்னொரு சித்தாந்தம் பத்தி எதிர்மறையா பேசறதுல எனக்கு உடன்பாடில்லை. அப்படி யாரையும், எதையும் குறிப்பிட்டுத் தாக்கி எடுக்கப்படுகிற சினிமா வெகுஜனங்களுக்கான சினிமாவா இருக்காது.அதனால படக்குழுவுடன் எனக்கு செட் ஆகாமலேயே இருந்தது. ஆனாலும் அவங்க கேட்ட தேதியில நடிச்சுக் கொடுத்தேன். டயலாக்னு அரைகுறையா எதையோ தந்தாங்க.

எனக்குப் பேசிய சம்பளத்தையும் அவங்க முழுசா தரல. `நீங்க கிளம்புங்க, நாங்க அக்கவுன்ட்ல போட்டுடுறோம்னு சொன்னாங்க. இப்பவரைக்கும் மீதிச் சம்பளம் வரவில்லை. லீட் ரோல்னு சொல்லிக் கூப்பிட்ட என் நிலைமையே இப்படின்னா மத்தவங்களுக்கு என்ன நடந்திருக்கும்னு நீங்களே புரிஞ்சுக்கலாம். ஷூட் முடிஞ்சு கிளம்பி வந்துட்டேன். ஆனா அதன்பிறகு டப்பிங் பேசக் கூப்பிடவே இல்லை. எனக்குப் பதிலா வேற யாரையோ பேச வச்சிருக்காங்க. இன்னைக்கு ஆளுகிற கட்சியைப் பத்தியெல்லாம் நேரடியா திட்டி டயலாக் இருக்கு. முதல்லயே இப்படித்தான் இருக்கும்னு சொல்லி என்னை கமிட் செய்திருந்தா அது நியாயம். ஆனா என்கிட்ட ஒரு மாதிரி சொல்லிட்டு வேற எதையோ எடுத்து வச்சிருக்காங்க. கிளைமாக்ஸ்ல எனக்குப் பதிலா இன்னொரு ஆளை டூப் போட்டு வேற எடுத்திருக்காங்க. 

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

இதுக்கிடையில் 'துணிவு' படத்துல என் முகம் நல்ல ரீச் ஆனதால திடீர்னு ஒருநாள் படக்குழுவுல இருந்து கூப்பிட்டாங்க. 'படத்துக்கு நீங்க புரொமோஷன் பண்ணனும்'னு கேட்டாங்க. 'முதல்ல என் சம்பளப் பாக்கியைக் கொடுங்க'னு கேட்டேன். அவங்களுடைய பதில் வேற தொணியில இருந்தது. அதனால 'தொலைஞ்சு போறாங்க'னு விட்டுட்டேன்'' என்றவர், 'இந்தப் பேட்டி மூலம் ஒரேயொரு விஷயத்தை நான் பதிவு பண்ணணும்னு நினைக்கிறேன்' என அதையும் சொன்னார்..

'நான் எந்தக் கட்சியையும் சேராதவன். இப்ப கலைஞர் டிவியில  நான் நடிக்கிற சீரியல் ஒளிபரப்பாகிட்டிருக்கு. இந்தச் சூழலில் இப்போதைய ஆட்சியாளர்களையெல்லாம் அவதூறா நான் பேசற மாதிரிக் காட்சிகளை வச்சிருக்காங்க. 'முதல்லயே கதையைச் சொன்னா யாரும் நடிக்க வரமாட்டாங்கன்னு கதையை யாருக்கும் சொல்லலை'னு படத்தின் இயக்குநரே ஒரு பேட்டியும் கொடுத்திருக்கார். அதுதான் உண்மை. படத்துல என் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு நான் உடன்படவே இல்லை. படம் வெளியானதும் எனக்கு நிறையப் பேர் பேசினாங்க. 'என்னங்க இந்த மாதிரி ஒரு படத்துல நடிச்சிருக்கீங்க'னு கேக்கறாங்க. எல்லார்கிட்டயும் நான் இவ்ளோ கதையையும் சொல்ல வேண்டியிருக்கு. ரொம்பவே மன உளைச்சல்ல இருக்கேன்'' என்கிறார்.

'படத்தை வெளியிட்ட ஹெச்.ராஜாவுக்கு இந்த விவகாரமெல்லாம் தெரியுமா' எனக் கேட்டோம்.

'படத்தை திரையரங்குல போய்ப் பார்த்து ஆதரவு கொடுங்க'னு அவர் ட்வீட் போட்டார். ஆனா அவருடைய யூ டியூப் சேனலில்தான் படம் வெளியாச்சு. படத்தின் பின்னாடி இவ்ளோ நடந்திருப்பது அவருக்குத் தெரியுமான்னு தெரியலை. ஆனா, இப்போ நான் பேசற விஷயங்கள் எல்லாருக்கும் தெரியறப்போ, படத்தை வெளியிட்ட சேனலுக்கும் கெட்ட பெயர்தானே? சில விஷயங்களை நாகரிகம் கருதி நான் பேச விரும்பலை. ஒண்ணே ஒண்ணு கேக்கணும்னா, இந்தப் பாவத்தையெல்லாம் எங்க போய்க் கழுவப் போறீங்கனுதான் கேக்கத் தோணுது'' எனக் கேட்கிறார்.

இந்தப் பிரச்னை குறித்து குறித்துக் கேட்க 'கிடுகு' படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான வீரமுருகனிடம் கேட்கலாமெனத் தொடர்பு கொண்டோம். பெரிய கும்பிடு போட்டு பேச மறுத்து விட்டார்.