சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“ஹீரோ ஆக ஆசைப்படும் என் மகன்! - பிரபுதேவா சொன்ன ரகசியம்

பிரபுதேவா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரபுதேவா

ஹீரோக்கள்ல விஜய், தனுஷ், ஜெயம்ரவி, சிம்புனு நிறைய பேர் இருக்காங்க. நக்மா, மீனா, சிம்ரன், ரோஜா எல்லாருமே நல்லா ஆடுவாங்க.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எப்போதும் நம் பிரபுதேவாதான். ஹீரோ, இயக்குநர் என கெத்து காட்டினாலும் கொரியோகிராபிலும் அசத்தும் ரவுடி பேபி. படப்பிடிப்பை விட்டால் வீடு என்றிருக்கும் அவரிடம், ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் இருக்கிறது... புறப்பட்டு வந்திருக்கும் புதிய படையுடன் கலந்துரையாட ரெடியா?’ எனக் கேட்டு வாட்ஸப் அனுப்பினேன். ‘`எப்போ? எங்கே?’’ எனக் கேட்டு, புன்னகையோடு பதில் வந்தது. அப்புறமென்ன, கனமழை விடாத ஒரு மதிய வேளையில் சர்ப்ரைஸ் கெஸ்ட்டாக நம் அலுவலகம் வந்து, மாணவ நிருபர்களின் கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்தார்.

‘‘ஆனந்த விகடன் ஆபீஸ் ரொம்ப சூப்பரா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. பொதுவா, நிறைய பேட்டிகள் கொடுக்கறதில்ல. ஏன்னா, நிறைய பொய் சொல்லணும். நீங்க உண்மை சொல்றது மாதிரியான கேள்விகளா கேளுங்க’’ என்றபடி நம் மாணவ நிருபர்களின் கேள்விகளுக்குத் தயாரானார்.


``இந்தியாவின் மோஸ்ட் வான்டட் டான்ஸரா இருந்துட்டு... சட்டுனு நடிகரா மாறீட்டீங்க. எப்படி இப்படி ஒரு ரிஸ்க்கை எடுத்தீங்க?’

‘‘நடிக்கணும் என்கிற ஆசை அப்பாவுக்கு இருந்துச்சு. எனக்கு இருந்ததில்ல. டான்ஸ் மாஸ்டரா இருந்தபோது ஒரு இடத்துல மூணு அல்லது நாலு நாள்கள் இருப்போம். அதுக்கு மேல இருந்தா எனக்கு ஹோம் சிக் வந்துடும். இதனாலேயே ஒரே நேரத்துல ரெண்டு பாடல்களுக்கு நடனம் அமைச்சதில்ல. நான் பண்ணின ‘சிக்கு புக்கு’, ‘ராசாவே சித்தெறும்பு கடிக்குதா’, ‘லாலாக்கு டோல் டப்பிம்மா’ எல்லாம் பெரிய ஹிட் ஆகிடுச்சு. ஜனங்ககிட்ட கிரேஸ் வந்துடுச்சு. அதனால இவர் நடிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சு, என்னை ஹீரோவாக்கினாங்க. நானும் ஹீரோ ஆகிட்டேன்.’’

“ஹீரோ ஆக ஆசைப்படும் என் மகன்! - பிரபுதேவா சொன்ன ரகசியம்

``தமிழ், இந்தி ரெண்டிலும் படங்கள் இயக்கியிருக்கீங்க. தமிழ் ஆடியன்ஸ் படங்களை வரவேற்பதற்கும் இந்தி ஆடியன்ஸ் வரவேற்புக்கும் உள்ள வித்தியாசம் என்ன?’’

‘`உண்மையைச் சொல்லணும்னா அங்கே உள்ள ஆடியன்ஸ் படங்களை பெட்டரா ஏத்துக்குறாங்க. ‘ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்’ (ஏபிசிடி 1), `ஏபிசிடி 2’ எல்லாம் அங்கே நல்லா ஓடுச்சு. இங்கே சரியா போகல.’’

``மறைந்த இயக்குநர் மகேந்திரனுடன் ‘பொன்மாணிக்க வேல்’ படத்தில் பணியாற்றிய அனுபவம்..?’’

‘`மகேந்திரன் சார் ‘பொன் மாணிக்கவேல்‘ பண்ணும்போது, அவருக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிடுச்சு. இயக்குநரைக் கூப்பிட்டு, ‘தம்பி, என்னோட டப்பிங்கை வேகமா முடிச்சிடுங்க’ன்னார். அவ்வளவு அர்ப்பணிப்பு உள்ளவர். அதைப்போல படப்பிடிப்பு வந்தாலும் புது ஆர்ட்டிஸ்ட் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார். இதுதான் அவரோட முதல் படம், இதுதான் முதல் ஷூட்டிங் என்பது போல ஒர்க் பண்ணுவார். அவர்கிட்ட நிறைய கத்துக்க முடியும். கிரேட் மேன்.’’

``உங்க ஸ்கூல் டேஸ் நினைவுகளைப் பகிர்ந்துக்கங்களேன்...’’

‘‘பள்ளி நாள்கள் ஜாலியா இருந்துச்சு. என்னைத் தவிர எல்லாரும் நல்லாப் படிப்பாங்க. ஆனா, நான் சரியாக கத்துக்கல. பரவாயில்ல.’’

``ஹீரோவா உங்க தொடக்கக்கால சினிமாவுக்கும், இப்ப உள்ள சினிமாவுக்குமான வித்தியாசம் எப்படி இருக்கு?’’

‘‘ஆரம்பத்துல நடிப்பு சரியா வராது. இப்ப கொஞ்சம் பரவாயில்லன்னு நினைக்கறேன்’’ (சிரிக்கிறார்).

`` ‘சல்மார்’ பாடல்ல ஒரு டயலாக் வரும். ‘அப்போ கவுதமி, இப்போ எமியா’னு... அந்த மாதிரி, நீங்க ஒர்க் பண்ணின ஹீரோயின்கள் பத்திச் சொல்லுங்க...’’

‘`எல்லாருக்குமே நல்லா ஆர்வம் இருந்துச்சு. ராதா, அமலா, ராதிகா மேடம்னு நிறைய பேருடன் ஒர்க் பண்ணியிருக்கேன். எல்லாருமே அவ்வளவு மரியாதை தருவாங்க. Too good.’’

``உங்க நடனங்களை நுணுக்கமா கத்துக்கற நடிகர், நடிகைகள்னு யாரையெல்லாம் சொல்வீங்க?’’

‘‘ஹீரோக்கள்ல விஜய், தனுஷ், ஜெயம்ரவி, சிம்புனு நிறைய பேர் இருக்காங்க. நக்மா, மீனா, சிம்ரன், ரோஜா எல்லாருமே நல்லா ஆடுவாங்க. எங்க அப்பா டான்ஸ் மாஸ்டர்னால நானும் இந்தத் துறைக்கு வந்தேன். ஆனா, அவங்க அப்படியில்லையே? ஆனாலும் நல்லா ஆடறாங்க. வெரிகுட்!”

“ஹீரோ ஆக ஆசைப்படும் என் மகன்! - பிரபுதேவா சொன்ன ரகசியம்

``நீங்க நடனம் அமைச்ச ‘ரவுடி பேபி’ பாடல் மில்லியன் கணக்கான வியூஸ் போயிருக்கு... அதுக்கான காரணம் எதுவா இருக்கும்னு நினைக்குறீங்க?’’

‘‘இந்த மாதிரி மேஜிக் எப்பவாவதுதான் நிகழும். நமக்கே தெரியாது. அந்த மாதிரி, மறுபடியும் பண்ணினால்கூட, அதே மேஜிக் நிகழுமான்னு தெரியாது. எல்லாப் பாடல்களுக்குமே ஒரே விதமான உழைப்பைத்தான் கொடுக்கறோம். இதுல பாட்டு நல்லா இருக்கு. நடிகர்கள், இசை, பாடகர்கள்னு எல்லாமே நல்லா இருந்துச்சு. செட் ஒர்க், கேமரா ஒர்க்னு எல்லாம் அமைஞ்சது. மூணு நாள் ஒர்க் பண்ணினோம். அவ்ளோ வேகமா போச்சு. தனுஷ், சாய்பல்லவி ரெண்டு பேருமே கடின உழைப்பாளிகள். சூப்பரான அனுபவமா இருந்துச்சு.”

``விஜய்யுடன் ‘போக்கிரி’, ‘வில்லு’ படங்களில் ஒர்க் பண்ணின அனுபவம்..?’’

‘‘விஜய் சார் ரொம்ப அமைதியா இருப்பார். அவர் இயக்குநர்களின் நடிகர். டைரக்டர் என்ன சொல்றாரோ அதைப் பண்ணிடுவார். அப்புறம், பங்ச்சுவாலிட்டில கரெக்ட்டா இருப்பார்.’’

`` ‘ஜென்டில்மேன்’ சிக்குபுக்கு ரயிலே பாடல்ல பார்த்தது மாதிரியே இன்னமும் இருக்கீங்க.. ஃபிட்னஸ் சீக்ரெட் சொல்லுங்க?’’

‘‘டான்ஸ்தான். ஆடணும் என்பதாலே, சாப்பாட்டு விஷயத்துலேயும் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். ஜிம்முக்குப் போக மாட்டேன். ஆனா, வீட்ல ரெகுலரா உடற்பயிற்சிகள் பண்ணுவேன். ஜிம்முக்குப் போனதே இல்ல.’’

``இந்தியில் சல்மான்கான், அக்ஷய்குமாருடன் ஒர்க் பண்ணினது எப்படி இருந்துச்சு?’’

‘‘ரெண்டு பேருமே வித்தியாசமானவங்கதான். அக்ஷய் சார் அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழுந்திடுவார். சல்மான் சார் வேற டைப். ரெண்டு பேருமே ஸ்வீட். மத்த நடிகர்களெல்லாம் குடும்பத்தோடு ஹாலிடே போனாங்கன்னு கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா, சல்மான் சார் பத்திக் கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க. ஏன்னா, குடும்பத்தோடு அவர் எங்கும் வெளியே போனதில்ல. ஷூட்டிங்லேயே இருப்பார். ஒரு படம் முடிச்சதும் அடுத்த படம்னு ஒர்க்லேயே இருப்பார். ரெண்டு பேருக்குமே சினிமான்னா ரொம்ப இஷ்டம்.’’

``பிஸியா நடிச்சிட்டிருக்கும்போது, இயக்குநரா மாறினது ஏன்?’’

‘‘எனக்கு ஆசை. ஏன்னா, கொரியோகிராப் பண்ணிட்டிருக்கும்போது நான் டெக்னீஷியன்தானே! தெரியாத்தனமா நடிகராகிட்டோம். அப்புறம், டைரக்‌ஷன் பண்றதுக்கு ரொம்ப நாளாவே ஒரு ஆசை இருந்துச்சு. பொறுப்பு எடுத்துக்கறது, டென்ஷன் எல்லாம் பிடிக்கும். ‘நீங்க டைரக்ட் பண்றீங்களா?’ன்னு கேட்டதும் ஓகே சொல்லிட்டேன்.’’

`` ‘பஹிரா’ல பெண் வேடம்., மொட்டைத்தலைன்னு நிறைய கெட்டப்புகளில் நடிச்சிருக்கீங்களே?’’

‘‘அது அந்தப் பட இயக்குநரோட ஆசை. அவர்கிட்ட இருக்கற ஆசையெல்லாம் என்மேல வச்சி தீர்த்துக்கிட்டார்னு நினைக்கறேன். பெண் வேடம் போட்டதும், ‘நல்லா இருக்கே மாஸ்டர்’ன்னாங்க. சரின்னு பண்ணிட்டேன். மொட்டை கெட்டப்னதும் தயங்கினேன். ஏன்னா, மொட்டை அடிச்சிட்டா முடி வளர்றதுக்கு நாலு மாசமாவது ஆகும். ஆனாலும் மொட்டை அடிச்சேன். கஷ்டமாதான் இருந்துச்சு. ரிசல்ட் நல்லா இருக்கறதால, சந்தோஷமாகிடுச்சு.’’

``வடிவேலும் நீங்களும் கூட்டணி போட்ட படங்கள் செம வரவேற்பை அள்ளியிருக்கு. மறுபடியும் அவருடன் சேர்ந்து நடிப்பீங்களா?’’

‘`வடிவேலுவோட பயங்கரமான ரசிகன் நான். அவரோடு ஸ்கிரிப்டே இல்லேன்னாக்கூட சும்மாவே பண்ணச் சொன்னாலும்கூட பண்ணுவேன்.’’

``நடிகரா இருந்துதான் இயக்குநரானீங்க... ஒரு டைரக்டரா நடிகர் பிரபுதேவாவைப் பத்தி என்ன சொல்வீங்க?’’

‘‘ என்ன பண்றோம்னு தெரிஞ்சுக்கறதைவிட, என்ன பண்ணக்கூடாதுன்னு தெரிஞ்சுக்கறது முக்கியம். டைரக்டரா ஆனதும் அதைத் தெரிஞ்சுகிட்டேன். நான் என்னை இயக்கினதில்ல. அதனால நீங்க கேட்டது மாதிரி பார்த்ததில்லையே!’’

``வளர்ந்து வரும் கொரியோகிராபர்களுக்கு நீங்க சொல்லும் அட்வைஸ் என்ன?’’

‘‘எல்லாரும் நல்லா பண்றாங்க. ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. எல்லாருமே புத்திசாலிங்க. ’’

``இளைஞர்கள் நிறைய பேர் சோஷியல் மீடியாவுல தங்களோட திறமைகளை நிரூபிக்கப் போராடிட்டே இருக்காங்க... அவங்களுக்கு என்ன சொல்ல விரும்புவீங்க?’’

“இதுக்கு உதாரணம் என் பையனை வச்சுச் சொல்றேன். என் பையனுக்கு முன்னாடியெல்லாம் சினிமான்னா பிடிக்கவே பிடிக்காது. டான்ஸ் ரிகர்சலுக்கு வாடான்னு கூப்பிட்டால்கூட, ‘டான்ஸெல்லாம் போர்... நீங்க ஆடி நான் என்ன பார்க்கறது?’ன்னு கூலா சொல்லிடுவான். ஆனா, ஒரு வருஷத்துக்கு முன்னாடி என்கிட்ட, ‘அப்பா நான் ஹீரோவாகணும்’னு சொல்லிட்டான். இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததால, பயங்கர ஷாக் ஆகிட்டேன். அதிர்ச்சியில என் முகமெல்லாம் வியர்த்து விறுவிறுத்திடுச்சு. ஏன்னா, சினிமா ரொம்ப கஷ்டம். அவனுக்கு என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியல. அவனோட இஷ்டம். அவன் கடினமா உழைச்சு வரணும்.’’

``பிரபுதேவான்னாலே தாடியோடதான் பார்க்கறோம்.. தாடின்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா?’’

‘`அப்பா தாடியோட இருப்பார். நான் சின்ன வயசிலேயே மாஸ்டர் ஆகிட்டேன். கொஞ்சம் தாடி இருந்தால் மதிப்பாங்கன்னு நினைச்சு, அப்பவே தாடி வச்சுக்க ஆரம்பிச்சிட்டேன். ‘உனக்கு தாடி நல்லா இருக்குடா... வைடா’ன்னு அம்மாவும் சொன்னாங்க. வச்சிட்டேன்.’’

`` `விஜய் 66’ படத்துக்கு உங்களை நடனம் அமைக்கச் சொல்லிக் கேட்டாங்களாமே?’’

‘`உண்மையில்லை. வதந்தி.’’

``சினிமாவுல உங்க கனவு ரோல் எது?’’

“அந்த மாதிரி குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்ல. ஆனா, ஹாரர், பீரியட் படங்கள் இயக்கணும்னு ஆசை இருக்கு. எனக்குப் பதினாலு வயசு இருக்கும்போது எங்க அப்பா என்னைக் கூப்பிட்டு ‘ஸாங் எடிட்டிங் போயிட்டிருக்கு. நீ போய்ப் பண்ணு’ன்னு அனுப்பிட்டார். அப்ப எடிட்டிங்னா என்னன்னு கூட எனக்குத் தெரியாது. ஆனா, அங்கே போய், அந்தப் பாடலை நான்தான் எடிட் பண்ணினேன். பாடலோட விஷுவலே, நமக்கு வழிகாட்டும். அப்படித்தான் எடிட்டிங்கைக் கத்துக்கிட்டேன். எல்லாமே ஆர்வம் இருந்தால் சாத்தியம்தான்.”

``நீங்க நடிக்காத, இயக்காத படங்களில் பிடிச்ச படம் எது?’’

‘` ‘காதலிக்க நேரமில்லை’ ரொம்பப் பிடிச்ச படம்.’’

“ஹீரோ ஆக ஆசைப்படும் என் மகன்! - பிரபுதேவா சொன்ன ரகசியம்

``உங்க ப்ளே லிஸ்ட்ல உள்ள பாடல்களைச் சொல்லுங்களேன்..?’’

‘`பொதுவா நான் பாடல்களே கேட்குறதில்ல. எங்க வீட்டுல மியூசிக் செட்டே கிடையாது. பாடல்கள் கேட்டால், வேலை மைண்ட்ல வந்திடும். அதனாலேயே பாடல்கள் கேட்கறதில்ல.’’

``நீங்க கொரியோகிராப் பண்றப்ப, ‘இப்படி கஷ்டமான ஸ்டெப்ஸ் கொடுத்து பெண்டை நிமிர்த்துறீங்களே மாஸ்டர்’னு யாரெல்லாம் சொல்லியிருக்காங்க?”

‘`எல்லாருமே சொல்லியிருப்பாங்க. சிரஞ்சீவி சாரைக்கூட ரொம்ப பெண்ட் எடுத்திருப்பேன். பாவம். ஆனாலும் அவர் சூப்பரா பண்ணிடுவார்.’’

``நீங்க நடித்த கதாபாத்திரங்களில் ‘நானும் இப்படித்தான் இருப்பேன்’னு சொல்ற பாத்திரம்னு எதைச் சொல்லலாம்?’’

‘` ‘காதலன்’ல நடிச்ச கேரக்டர். ஆனா, அப்பாகூட உட்கார்ந்து தண்ணியெல்லாம் அடிக்க மாட்டேன்.’’

``எல்லா மொழியிலும் படங்கள் பண்றீங்க... எல்லா மொழிகளையும் கத்துக்கணுமா?’’

‘`நிச்சயமா. கத்துக்கிட்டா நல்லதுதான். ஆனா, எனக்கு இந்தி தெரியாது. கன்னடம் என் தாய்மொழின்னால தெரியும், தெலுங்கு, தமிழ் நல்லாத் தெரியும். மொழி எதுவாக இருந்தாலும் நான் என்னோட வேலைகளை கரெக்ட்டா பண்ணிடணும்னு நினைப்பேன். பண்றேன்.’’

``அரசியல் சார்ந்த படங்கள் பண்ணணும்னு ஆர்வம் இருக்குதா?’’

‘`வந்தால் பண்ணுவேன்.’’

``விஜய், அஜித் மாதிரி நடிகர்கள் கொரியோகிராப் பண்ண வந்திருந்தா நமக்குக் கஷ்டமாப்போயிருக்குமேன்னு யாரையாவது அப்படி நினைச்சதுண்டா?’’

‘`இல்லவே இல்ல!’’ என்றவர், இந்தத் துறையில் நான் கிங்குடா என்பதுபோல கைகளில் சைகை காட்ட, அரங்கில் கைத்தட்டல் மழை.