கஞ்சா கருப்பு இப்போது அமீரின் 'நாற்காலி', ஜி.வி.பிரகாஷின் 'இடி முழக்கம்' உள்பட ஆறெழு படங்களில் நடித்து வருகிறார். அவரின் சென்ற வார பேட்டியின் நிறைவுப் பகுதி இது.
பிக்பாஸின் முதல் சீஸனில் நீங்க இருந்திருக்கீங்க.. மறுபடியும் கூப்பிட்டாங்களா?
''பிக்பாஸ்ங்கிறது பாடம் கத்துக்கொடுக்கற இடம். அதுக்கொரு ஹெட்மாஸ்டரா உலக நாயகன் கமல் இருக்கார். அங்கே நடிக்கறதை விட இயல்பா இருந்தாலே அவங்கள கமல் ஐயா உயரத்துக்கு கொண்டு போவார். கமல் ஐயாவோட உடன் இருக்கற பிக்பாஸ் ஐயாவும் அதை கவனிச்சு மார்க் போடுவார். இங்கிருந்து அங்கே போனதுல சில பேர் அங்கே ஓவரா நடிச்சிடுறாங்க. கமல் ஐயாவுக்கு அது பிடிக்காது. நேர்மையா இருந்தால் எதிர்காலம் உண்டு. நான் முதன்முதலா அங்கே போனதும் அவ்ளோ கேமராக்கள் இருந்ததை பார்த்து ஆச்சரியமானேன். ஆனா ஒண்ணு. அந்த வீட்டுல இருந்துட்டோம்னா, வேற எந்த சூழலையும் சமாளிச்சு வந்திடலாம். நான் இருந்த சீசன்ல என்கூட இருந்த அத்தனை பேரோடவும் இன்னமும் தொடர்ப்பில் இருக்கேன். நேரம் கிடைக்கறப்ப ஒருத்தரை ஒருத்தர் சந்திச்சுப் பேசிக்கறோம். அந்த சீஸன்ல சினேகனுக்கு அவார்டு கிடைச்சிருக்கணும். ஆனா, ஆரவ்விற்கு கிடைச்சிருக்கு. கமல் சார் நடத்தினால்தான் பிக்பாஸ் நல்லா இருக்கும். மத்த யார் நடத்தினாலும் அது சரி இருக்காது.
மறுபடியும் கூப்பிட்டா கூட, போக மாட்டேன். ஏன்னா, என்னுடைய தொழில் நடிப்பு. அதுல கவனம் செலுத்தணும்னுதான் விரும்புறேன். சினிமாவுல நடிக்கணும்தான் சென்னை வந்தேன். பிக்பாஸ்ல போகணும்னு வரலியே! சினிமாவுல இருக்கறதால ஒரு விஷயத்தை கவனத்துல வச்சிருக்கேன். நான் ஓடுற குதிரையா இருக்க விரும்புறேன். ஓடுறப்ப திரும்பிப் பார்த்தால் பின்னாடி வர்றவங்க நம்மள கவுத்திட்டு போயிடுவாங்க. இப்ப என்னை நம்பி, நாலஞ்சு படங்கள் இருக்கு. திடீர்னு லோகேஷ் கனகராஜ் சார் ஆபீஸுல இருந்து கூட போன் வரும். அந்த நேரத்துல நான் பிக்பாஸ்ல இருந்தால், என்னாவாகும்? நல்ல வாய்ப்பு கை நழுவிடுமே!''
டாக்டர் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. எப்படி போகுது வாழ்க்கை?
''மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். டாக்டர் பொண்ணை கட்டலாம். ஆனா, அவங்க கோபப்பட்டா ஊசி போட்டுடுவாங்க. நல்ல வாழ்க்கை எனக்கு அமைஞ்சிருக்கு. என் மனைவி எனக்கு கிடைக்கறதுக்கு காரணமே பாலாண்ணே.. அமீரண்ணே தான். ஏன்னா, எனக்கு பொண்ணு கிடைச்சிடக்கூடாதுனு நிறைய பேர் தடுக்க நினைச்சாங்க. அதை முறியடிச்சது பாலாண்னே.. அமீரண்ணே தான். 'உன்னையும் கேள்விக் கேட்கறதுக்கு ஒரு ஆள் வேணும்டா'னு சொன்னதோடு அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு, சென்னைக்கு கூட்டியாந்து குடும்பம் நடத்தவும் எனக்கு வழிகாட்டினாங்க..''
இந்த தீபாவளி எப்படி போச்சு..? என்ன ஸ்பெஷல்..?
''எனக்கு மறக்க முடியாத பண்டிகைனா அது தீபாவளிதான். என்னுடைய தீபாவளி அனுபவத்தை இதுவரை நான் வெளியே சொன்னதில்ல. ஏன்னா, யாருக்குமே நடக்காத ஒரு விஷயம் எனக்கு நடந்தது. அப்ப எனக்கு மூணு வயசு இருக்கும். நாளைக்கு தீபாவளினா.. இன்னிக்கு எங்க அப்பா இறந்துட்டார். இதைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாமல், எங்க அம்மாகிட்ட நான், 'அம்மா எல்லாரும் புது டிரெஸ் போட்டிருக்காங்கம்மா.. வெடி வெடிக்கிறாங்கம்மா.. அதிரசம் தின்னுறாங்கம்மா.. எனக்கு எங்கம்மா புது டிரெஸு?"னு ஆசை ஆசையா கேட்டேன். அப்ப எங்க அம்மா, கண்ணு கலங்கினபடி 'அப்பா செத்துப் போயிட்டாருப்பா.. நமக்கு தீபாவளி இல்லப்பா'ன்னாங்க. அன்னில இருந்து இன்னிக்கு வரைக்கும் நான் என் கூட இருக்கறவங்களுக்கு புதுத்துணி எடுத்துக் கொடுப்பேனே தவிர, நான் உடுத்துறதில்ல. தீபாவளியையும் கொண்டாடுறதில்ல.. '' குரல் உடைந்து கண் கலங்குகுறார் கஞ்சா கருப்பு.