
பாரதிராஜா சாரை பல முறை பார்த்திருந்தாலும் ஸ்பாட்ல பார்க்கும்போது பிரமிப்பா இருந்தது. அவர்கூட சேர்ந்து நடிக்கும்போது கொஞ்சம் பயமாவும் பதற்றமாவும் இருந்தது.
கைவசம் ஏழெட்டுப் படங்கள் வைத்திருக்கும் ஜெய், இயக்குநர் சுசீந்திரனுடன் மூன்றாவது முறையாக இணைகிறார். படத்தின் போட்டோஷூட்டில் பிஸியாக இருந்தவரைச் சந்தித்தேன்.
‘‘எனக்கு சுசீந்திரன் சார் மேக்கிங் ரொம்பப் பிடிக்கும். ‘நான் மகான் அல்ல' பார்த்துட்டு, நிச்சயமா இவர் படத்துல நடிக்கணும்னு நினைச்சேன். 2020 லாக்டெளன்ல சுசி சார் என்னை நடிக்கக் கேட்டார். கதைகூட கேட்கலை. அவர் கூப்பிட்டதும் திண்டுக்கல்லுக்குப் போய் நின்னுட்டேன். கதை சொன்னதும் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே, ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. அந்தப் படத்துக்குப் பெயர், ‘குற்றம் குற்றமே.' லாக்டெளன்ல ஷூட் பண்ணினோம். ஷூட்டிங், வீடுன்னு எல்லா நேரமும் அவர்கூடதான். பர்சனலாவும் தொழில் ரீதியாவும் நிறைய கத்துக்கிட்டேன். ராவான படமா இருக்கும். இந்தப் படம் முடிச்சவுடன், அடுத்தும் ஒரு படம் சேர்ந்து வொர்க் பண்ணலாம்னு பேசி அதுக்கான வேலைகளையும் தொடங்கினோம். அதுதான் ‘சிவசிவா.' பைலிங்குவல் படம். தமிழ்ல நானும் மீனாட்சி கோவிந்தராஜனும் நடிச்சிருக்கோம். தெலுங்குல ஆதி பிரதரும் நிக்கி கல்ராணியும் நடிச்சிருக்காங்க. இது பக்கா கமர்ஷியல் படம். திண்டுக்கல் டவுன்ல நடக்கிற கதை. ஷூட்டிங் ஆரம்பிச்சதும் தெரியலை; முடிஞ்சதும் தெரியலை. விறுவிறுன்னு போயிடுச்சு. படம் பார்க்கும்போதும் அப்படித்தான் இருக்கும். தொடர்ந்து, ரெண்டு படங்கள் சேர்ந்து பயணிச்சதால எங்களுக்குள்ள நல்லா செட்டாகிடுச்சு. ‘சிவசிவா'வுடைய ஸ்பாட்லேயே அடுத்த படத்துக்கான ஐடியாவைச் சொன்னார். அப்படியே வேற மாதிரி இருந்தது. திரைப்பட விழாக்களுக்கு போகுற மாதிரியான படம். அடுத்தடுத்து மூணு படங்கள். ஆனா, ஒவ்வொன்னும் வேற மாதிரியான அனுபவத்தைக் கொடுத்தது.''

`` ‘சிவசிவா’ படத்துல இசையமைப்பாளராகவும் வேலை செஞ்சிருக்கீங்க. எப்படி நடந்தது?’’
‘‘நான் ‘ட்ரிபிள்ஸ்’க்கு ஒரு பாடல் பண்ணியிருந்தேன். அது ரஹ்மான் சார் ஸ்டூடியோவுல இருந்து மிக்ஸாகி வந்திருந்தது. அதை ஸ்பாட்ல கேட்டுட்டு இருந்தேன். அதை சுசி சாரும் கேட்டுட்டு, ‘சூப்பரா இருக்கே... யார் மியூசிக் டைரக்டர்’னு கேட்டு ஒரு பெரிய பெயரைச் சொன்னார். ‘இல்லை சார், நான்தான் பண்ணினேன்’னு சொன்னேன். அவருக்கு ஒரே ஷாக். ‘எப்படி பிரதர் மியூசிக்?’னு கேட்டார். ‘தேவா அப்பா ஸ்டூடியோவுல இருக்கும்போது அப்படியே நிறைய கத்துக்கிட்டிருக்கேன்’னு சொன்னேன். ‘ஓ ஆமால்ல, நீங்க தேவா சார் ஃபேமிலிங்கிறதையே மறந்துட்டேன் பிரதர்’னு சொன்னார். அப்போவே, ‘அடுத்த படத்துக்கு நீங்களே மியூசிக் பண்ணுங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு ரொம்ப தயக்கமா இருந்தது. அவர்தான் ஊக்கப்படுத்தி, பண்ண வெச்சார். மொத்தம் ஆறு பாடல்கள். ஒரு கமர்ஷியல் படத்துக்கு எப்படியெல்லாம் இருக்குமோ, அப்படி இருக்கும். திண்டுக்கல்ல இருக்கும்போதே மாட்டுக்கொட்டகையில உட்கார்ந்து போன்ல இருக்கிற பியானோவை வெச்சு ட்யூன் போட்டுக்கிட்டு இருந்தேன். நான் லண்டன்ல ட்ரினிடி காலேஜ் ஆஃப் மியூசிக்ல ஐந்தாவது கிரேடு வரைக்கும் படிச்சிருக்கேன். தேவா அப்பாகூட, ஸ்ரீகாந்த் அண்ணாகூட ஸ்டூடியோவுல இருந்தப்போ அவங்க வொர்க் பண்றதைப் பார்த்திருக்கேன். நடிக்க வந்த பிறகும்கூட, வீட்ல அப்பப்போ கீ போர்டு வெச்சு ஜாமிங் பண்றதுண்டு. அப்போ நான் கத்துக்கிட்ட விஷயங்கள் எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தன. இனி, நடிப்பு மட்டுமல்லாமல் மியூசிக்லயும் கவனம் செல்லுத்தலாம்னு இருக்கேன். தேவா அப்பா, சபேஷ் - முரளி அப்பான்னு எல்லோரும் நான் கம்போஸ் பண்ணின பாடல்கள் கேட்டுட்டுப் பாராட்டினாங்க. சின்னச்சின்ன கரெக்ஷன்கள் சொன்னாங்க. அதையெல்லாம் மாத்திக்கிட்டேன்.’’
`` ‘குற்றம் குற்றமே’ படத்துல பாரதிராஜாகூட நடிச்சிருக்கீங்களே?’’
‘‘முதல்ல ‘குற்றம் குற்றமே’ எடுத்தாங்க. அப்புறம்தான், ‘ஈஸ்வரன்’ எடுத்தாங்க. சிம்பு என்கிட்ட ‘ஸ்பாட் எப்படி இருக்கு, பாரதிராஜா சார் எப்படி’ன்னு முழுக்க என்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டார். பாரதிராஜா சாரை பல முறை பார்த்திருந்தாலும் ஸ்பாட்ல பார்க்கும்போது பிரமிப்பா இருந்தது. அவர்கூட சேர்ந்து நடிக்கும்போது கொஞ்சம் பயமாவும் பதற்றமாவும் இருந்தது. அவர்கிட்ட நான் டயலாக் பேசி நடிக்கும்போது, ‘இந்தப் பையன் நல்லா நடிக்கிறானா இல்லையா?’ன்னு பார்க்குற மாதிரியே இருக்கும். முதல் நாளே அவர் கண்டுபிடிச்சுட்டார். என்கிட்ட ‘நம்ம ரெண்டு பேரும் ஃபிரேம்ல இருக்கும்போது மக்கள் பார்வை என் மேல இருக்கணுமா, உங்க மேல இருக்கணுமான்னு முடிவு பண்ணிக்கோங்க’ன்னு என்னை மைண்ட் செட் பண்ணிட்டார்.”

`` ‘மாநாடு’ படத்துல கேமியோ ரோல்ல வருவீங்கன்னு எதிர்பார்த்தோம். வெங்கட் பிரபு கூப்பிட்டாரா?’’
‘‘நானும் ரொம்ப எதிர்பார்த்தேன். வெங்கட் பிரபு என்னைக் கூப்பிட்டார். பாண்டிச்சேரியில ஷூட் நடக்கும்போது ஒரு நாள் என் போர்ஷன் இருந்தது. சரியா, அன்னைக்குதான் புயல் வந்ததனால சென்னை கிளம்பி வந்துட்டாங்க. அப்புறம், மீதம் இருக்கிற போர்ஷன் எல்லாம் இங்கேயே எடுத்துப் படத்தையே முடிச்சிட்டாங்க. என்னை மறந்துட்டாங்க. ‘நடுவுல எனக்கு ஒரு சீன் இருக்குன்னு சொன்னீங்களே’ன்னு வெங்கட் பிரபுகிட்ட கேட்டேன். ‘இல்லைடா, இதுவே சரியா அமைஞ்சிடுச்சு’ன்னு சொல்லிட்டார். ‘மாநாடு’ செம சக்சஸ்ல! அடுத்து ‘பார்ட்டி’ ரெடியா இருக்கு. படம் பார்த்துட்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. இதுதான் பக்கா வெங்கட் பிரபு படம். சிவா, சத்யராஜ் சார்னு எல்லோரும் கலக்கியிருக்காங்க. எனக்கும் வித்தியாசமான கேரக்டர். அதன் ரிலீஸுக்குத்தான் நான் வெயிட்டிங்!’’
``இடையில மம்மூட்டியுடன் ‘மதுர ராஜா’ன்னு ஒரு மலையாளப் படத்துல நடிச்சிருந்தீங்க. அந்த அனுபவம் எப்படியிருந்தது?’’
‘‘ ‘மதுர ராஜா’ ஒரு சீக்வெல் படம்தான். அதன் முதல் பாகத்தில் க்ளைமாக்ஸ்ல மம்மூட்டி சார் மதுரைக்கு வர்ற மாதிரி முடிச்சிருப்பாங்க. அதனால, இந்தப் படத்துல மதுரையில இருந்து ஒரு பையனை அவர் கேரளாவுக்குக் கூட்டிட்டுப் போற மாதிரி இருக்கும். அந்தக் கேரக்டர் ஒரு தமிழ் ஹீரோதான் பண்ணணும்னு ப்ளான் பண்ணி வெச்சிருந்திருக்காங்க. ‘ராஜா ராணி’ பார்த்துட்டு என்னை இந்தப் படத்துல நடிக்கக் கூப்பிட்டதா இயக்குநர் சொன்னார். மம்மூட்டி சார் கூட இருந்தது மறக்க முடியாத அனுபவம். முதல் நாள் ஷூட்டிங்ல மம்மூட்டி சார் என்கிட்ட ‘உன்னை ‘சுப்ரமணியபுரம்’ பார்த்துட்டு, எனக்குப் பிடிச்சுப்போச்சு. ‘எங்கடா அதுக்கு அப்புறம் எந்தப் படத்திலயும் இந்தப் பையனைக் காணோமே’ன்னு நினைச்சுட்டிருந்தேன். அப்புறம் விசாரிக்கும்போதுதான் சொன்னாங்க, நீ நிறைய படங்கள் நடிச்சிருக்கன்னு. தாடி எடுத்ததனால அடையாளமே தெரியலை’ன்னு சொல்லிச் சிரிச்சார். என்னை ‘ஜெய் மோனே’ன்னுதான் கூப்பிடுவார்.’’
``சமீபமா எந்தக் கிசுகிசுவும் உங்களைப் பத்தி வர்றதில்லையே?’’
‘‘எல்லோரும் கோவிட் பத்திப் பேசுறதுல பிஸியாகிட்டாங்க. இல்லைனா, நிச்சயமா வந்திருக்கும். சில கிசுகிசுக்கள் உண்மைதான். சில உண்மையில்லை. ‘நம்மளை மறக்காமல் இருக்காங்களே’ன்னு சந்தோஷப்பட்டுக்குவேன்.’’
``ஏன் பேட்டிகள் கொடுக்கமாட்டேங்கிறீங்க?’’
‘‘உண்மை பேசணுமா, பொய் சொல்லணுமான்னு குழப்பம் வந்திடும். அதுதான் காரணம். மத்தபடி ஒண்ணுமில்லை.’’
``அடுத்து வழக்கமான டெம்ப்ளேட் கேள்விதான். புரிஞ்சிருக்கும், நீங்களே பதில் சொல்லிடுங்க...’’
‘‘எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னு கேட்குறீங்க... அதானே? இவ்வளவு நாளா ‘ஆர்யா எப்போ கல்யாணம் பண்ணிக்கிறாரோ அடுத்து நான் பண்ணிக்கிறேன்’னு சொல்லிக்கிட்டிருந்தேன். ஏன்னா, ஆர்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டார்னு நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருந்தேன். அப்புறம் பார்த்தா, திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டார். இப்போ என்ன பதில்னா, ‘சிலம்பரசன் எப்போ கல்யாணம் பண்ணிக்கிறாரோ அடுத்து நான் பண்ணிக்கிறேன்’ என்பதுதான்.”