சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

“கேப்டன்கிட்ட யாரும் சிண்டு முடிஞ்சுவிட முடியாது!”

ஜெயபிரகாஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயபிரகாஷ்

இப்ப உள்ள சினிமாச் சூழல்ல ஒரு படத்தைத் தயாரிக்கிறது எளிது. அதிலும் நிறைய படங்கள்ல ஒர்க் பண்றதால, புரொடக்‌ஷன் பத்தி நிறையவே தெரியும்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தயாரிப்பாளராக அசத்தியவர் ஜெயபிரகாஷ். விஜயகாந்தின் ‘தவசி', ‘நெறஞ்ச மனசு', முரளியின் ‘பொற்காலம்', விஷாலின் முதல் படமான ‘செல்லமே' உட்பட பதினொரு படங்களைத் தயாரித்தவர். சேரனின் ‘மாயக்கண்ணாடி'யில் இருந்து நடிகராகக் களம் இறங்கியவர், இப்போது தெலுங்குப் படவுலகிலும்கூட பிஸியான குணச்சித்திர கதாபாத்திரங்களில் செம ஸ்கோர் எடுத்துவருகிறார். ஷங்கரின் ‘இந்தியன் 2'-லும் இருக்கும் ஜெ.பி-யிடம் பேசினேன்.

``ஸ்டீரியோ டைப் ரோல்கள் பண்ணாமல், ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கேரக்டர்ல கலக்குறீங்க... படங்களை எப்படித் தேர்வு செய்றீங்க?’’

‘‘ஒரு நல்ல படம், அடுத்து பத்துப் படங்களை நமக்குக் கொடுக்கும்னு சொல்வாங்க. அது என் விஷயத்துல உண்மை. முதல் படம் ‘மாயக்கண்ணாடி', அதன்பிறகு ‘பசங்க', ‘நாடோடிகள்'னு என் ஆரம்பக்கால படங்கள் ஒவ்வொன்றுமே எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்துச்சு. அதன்பிறகு வந்த படங்களிலும் நல்ல கதாபாத்திரங்கள் அமைஞ்சது. நாங்க தயாரிச்ச ‘பொற்காலம்'ல சேரன் சார் என்னை கவனிச்சிருக்கார். அதனாலதான் அவர் ‘மாயக்கண்ணாடி' பண்றப்ப என்னை நடிக்கக் கேட்டார். நான் தயங்கினேன். நான் நடிப்பேன் என்று என்னைவிட அவருக்கு நம்பிக்கை வந்து நடிகராக்கினார். ‘நான் மகான் அல்ல' படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். அங்கே அது சூப்பர் டூப்பர் ஹிட். அதுதான் என்னைத் தெலுங்கிற்கு அழைச்சிட்டுப் போச்சு.

ரொம்ப மோசமான படங்கள் மட்டுமே இதுவரை தவிர்த்திருக்கேன். மத்தபடி நல்ல இயக்குநர்கள், நல்ல ரோல்கள் அதுவா தேடி வந்திடுது. ஒரு கதாபாத்திரம் பிரமாதமா பண்ணியிருக்கீங்கன்னு எனக்குப் பெயர் வந்தால், அது அந்தப் படத்தின் இயக்குநருக்குத்தான் போய்ச் சேரும். எழுதின எழுத்தும், அந்தக் காட்சியும், சக நடிகர்களும்தான் என் கேரக்டரைச் சிறப்பாக்கியிருக்காங்கன்னு கருதுறேன்.''

``பெட்ரோல் பங்க் தொழிலாளியாக இருந்து, பல பெட்ரோல் பங்குகளுக்கு உரிமையாளராக இருந்த உங்களுக்கு தயாரிப்பாளர் ஆகணும்னு ஆர்வம் எப்படி வந்துச்சு? இப்ப ஏன் படம் தயாரிக்கறதில்ல?’’

‘‘அப்ப சினிமாவை ஒரு பொழுது போக்காகத்தான் பார்த்திருக்கேன். படம் தயாரிப்பேன், இதுவே என் தொழிலாகும், இதில் நான் நடிகராவேன், இப்படி எப்பவும் நினைச்சுப் பார்த்ததில்ல. ‘படம் தயாரிக்கலாம்'னு என் நண்பர்கள் கூப்பிட்டாங்க. அவங்களோட சேர்ந்துதான் ‘ரோஜா கம்பைன்ஸ்' ஆரம்பிச்சோம். சினிமாவை நானாகத் தேடிப் போகலைன்னாலும் இதுல இறங்கின பிறகு முழுமையாவும் உண்மையாவும் ஈடுபாடு காட்டினேன். விஜயகாந்த் சார் மாதிரி தயாரிப்பாளர்களின் சிரமங்கள் உணர்ந்த ஹீரோக்கள் அமைந்ததால, தொடர்ந்து படங்கள் பண்ணினோம்.

இப்ப உள்ள சினிமாச் சூழல்ல ஒரு படத்தைத் தயாரிக்கிறது எளிது. அதிலும் நிறைய படங்கள்ல ஒர்க் பண்றதால, புரொடக்‌ஷன் பத்தி நிறையவே தெரியும். ஆனா, தயாரிப்பு ஒரு உலகம்னா, மார்க்கெட்டிங் வேறொரு உலகமா இருக்கு. மார்க்கெட்டிங் எனக்குத் தெரியாத ஒரு துறை. முறையா அலசி ஆராய்ந்து அதைக் கத்துக்கிட்டாதான் இங்கே படத்தை சுலபமா ரிலீஸ் பண்ணமுடியும். இல்லேன்னா, படங்களைத் தயாரிச்சு தயாரிச்சு எண்ணிக்கை பெருகுமே தவிர, அதையெல்லாம் ரிலீஸ் பண்ண முடியாமல் இருக்க நேரிடும். அதனால நடிப்பில முழுக்கவனமும் செலுத்த ஆரம்பிச்சிட்டேன்.''

“கேப்டன்கிட்ட யாரும் சிண்டு முடிஞ்சுவிட முடியாது!”

``விஜயகாந்தை வச்சு ரெண்டு படங்கள் தயாரிச்சிருக்கீங்க.. அவரோடு பழகின அனுபவம்..?’’

‘‘நல்ல குணநலன்கள் உள்ள மனிதர். அவரோட முரட்டுத்தனமும் கோபமும் கண்களில் தெரியும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு தயாரிப்பாளராக நாங்க போகும்போதெல்லாம் மரியாதையா எழுந்து நின்னு வரவேற்பார். அப்படியெல்லாம் நிற்காதீங்கன்னு சொல்லியிருக்கோம். ஒளிவுமறைவு இல்லாதவர். நான் தப்பு பண்ணியிருந்தாலும் சரி, வேற யாராவது நல்லது செய்திருந்தாலும் சரி, வெளிப்படையா கூப்பிட்டுச் சொல்லிடுவார்.

கேப்டன்கிட்ட யாரும் சிண்டு முடிஞ்சுவிட முடியாது. ஞாபகம் வச்சிருப்பார். அந்த கேரக்டர்களை நேர்ல அவர் சந்திக்கிறப்ப ‘அப்படிச் சொன்னீயாமே?’ன்னு கேட்டுடுவார். அவர்கிட்ட பொய்யா சொல்லியிருந்தால் அவ்ளோதான். விளாசிடுவார். அப்படி ஒரு இயல்பு. தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதிச்சாங்களா, இல்லை யான்னு எல்லாம் தெரிஞ்சு வச்சு, தேவையை அறிஞ்சு உதவுவார். அவர் அரசியல்ல சக்சஸ் ஆன சமயத்துல அவர் ஆபீஸுக்குப் போய் அங்குள்ளவங்ககிட்ட அவரைச் சந்திக்கறதுக்காக அப்பாயின்மென்ட் கேட்டி ருந்தேன். ரெண்டு நாளில் கூப்பிட்டு விடுவாங்கன்னு நினைச்சேன். ஆனா, நான் வீட்டுக்கு வந்து சேருறதுக்குள் எனக்கு அவர்கிட்ட இருந்து போன் வந்திடுச்சு. ‘அப்பாயின்மென்ட் கேட்டீங் களாமே... ஆபீஸுக்கு வாங்க’ன்னு சொல்லி போனை கட் பண்ணிட் டார். உடனே நானும் ஆபீஸ் போயிட்டேன். என்னைப் பார்த்ததும், ‘இது உங்க ஆபீஸ்.. நீங்க எப்போ வேணா வரலாம், உங்களுக்கு அப்பாயின்மென்ட் தேவையில்லை சார்’னார். அப்படி ஒரு அருமையான மனிதர் கேப்டன்.’’

``உங்களோட ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் வெங்கட்பிரபு நடிச்சிருந்தார்... பின்னாளில் அவர் இயக்குநர் ஆகி, உங்களை நடிக்க வைப்பார்னு நினைச்சதுண்டா?’’

‘‘எங்களோட ‘நெறஞ்ச மனசு’ படத்திலும் அவர் நடிச்சிருந்தார். அதை இயக்கிய சமுத்திரகனியும் அவருமே நல்ல நண்பர்கள். அதனால கனி அவரை நடிக்க வச்சிருந்தார். நான் வெங்கட்பிரபுவோட படங்கள்ல நடிக்கும் போது அவரே, ‘சார், உங்க படங்கள்ல நான் நடிச்சிருக்கேன்’னு சொல்லியிருக்கார். அருமையான மனிதர். எதையும் மறக்காதவர். அதே மாதிரிதான் கனியும். அவங்க ரெண்டு பேருமே இப்பவும் அதே நட்போடு இருக்காங்க. இந்தப் பட்டியல்ல இளவரசு சாரையும் சேர்த்துக்கலாம்.’’