சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

என் கண்ணுல உன் முகம்!

ஜான் விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜான் விஜய்

சினிமா

சின்னக்குறும்பும் உற்சாக உடல்மொழியுமாக திரையில் இவர் வந்தாலே நமக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொள்ளும். நட்பாகச் சிரிக்கும் கண்களை சட்டென்று வில்லத்தனமாக மாற்றும் வித்தகர்... தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் ஜான் விஜய். அவரும் அவர் காதல் மனைவி மாதவியும் உரையாட, அவர்கள் மகன் பரிதியோடு நானும் அவர்கள் காதலை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்...

ஜான் விஜய்: “நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சமாப் பேச ஆரம்பிச்சோம். அந்த நேரத்துல `எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு'ன்னு சொன்னேன். இவங்க எதுவுமே சொல்லாம ரெண்டு மாசம் காணமாப்போயிட்டாங்க. அதுக்கப்புறம் ஒருநாள் வந்து `உங்களைப் பத்தி விசாரிச்சேன். நல்ல பையனாத் தெரியுது'ன்னு சொன்னாங்க. அப்படியே காதலிக்க ஆரம்பிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இன்னைக்கு ஜான் விஜய் இவ்வளவு நல்ல பொறுப்பான ஆளா இருக்கிறதுக்கு, எங்க அம்மாவுக்கு அப்புறம் என் மனைவி மாதவிதான் காரணம்.''

என் கண்ணுல உன் முகம்!

மாதவி: “இவர் என்னைக் காதலிச்ச காலத்துல என்னோட குடும்பம் பற்றி இவருக்கு எதுவுமே தெரியாது. பூ வைக்குற நிகழ்ச்சிக்காக எங்க வீட்டுக்கு வந்தாங்க. அப்போதான் இவருக்கு எங்க அப்பாவைப் பத்தித் தெரிஞ்சிருக்கு.”

ஜான் விஜய்: “தி.மு.க ராஜ்யசபா எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் சார்தான் இவங்க அப்பா. கொஞ்சம் அல்லுவிட்டது உண்மைதான். ஆனா, என் மாமனார் எளிமையான மனிதர். அரசியல்வாதின்னு சொன்னா நாலு கிரவுண்டில் வீடு, பென்ஸ் கார் இருக்கும்னு நினைப்போம். ஆனா, அவர் சாதாரண வீட்டில்தான் இருக்கார். இன்னைக்கு இருக்கிற அரசியல்வாதிகளில் அவர் சிறந்த மனிதர். அவர் என் மாமனார்னு சொல்லிக்கறதுல பெருமைப்படுறேன்.''

மாதவி: ``ஒருநாள் இவர் போட்டோவை எங்க அப்பாகிட்ட காட்டி, `இவரைப் பத்தி என்ன நினைக்குறீங்க'ன்னு கேட்டேன். `ஏம்மா'ன்னு கேட்டார். `இவரைக் காதலிக்கிறேன்... கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்'னு சொன்னேன். அப்பா, அப்போ எதுவுமே சொல்லலை. எங்க அம்மாதான் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. பிறகு, `அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சிட்டேன். ரொம்பக் கஷ்டப்பட்டு வந்த, சொந்தக்காலில் நிக்குற ஒருத்தர். நம்ம பொண்ணுக்கு சரியா இருப்பார்'னு அப்பா சர்ட்டிஃபிகேட் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நிம்மதியானாங்க. இப்ப இவரும் எங்க அப்பாவும் ரொம்ப க்ளோஸ்.''

என் கண்ணுல உன் முகம்!

ஜான் விஜய்: “எனக்கு வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய கிஃப்ட் மாதவி. என் மாமனார் தங்கமானவர். அவரும் எனக்கு ஏதாவது கிஃப்ட் கொடுத்துக்கிட்டே இருப்பார். சமீபத்தில்கூட வாட்ச் வாங்கிக் கொடுத்தார். எங்க திருமணம்கூட எங்க மாமனார் விருப்பப்படி சுயமரியாதைத் திருமணமாதான் நடந்தது.''

மாதவி: “என் வீட்டுக்காரர் ரொம்ப நல்லா சமைப்பார். ஆனா, அவர் சமைச்சதுக்கு அப்புறம் கிச்சனை க்ளீன் பண்ண ஒரு வாரம் ஆகும். அதே மாதிரி இன்னொண்ணு... எப்பவுமே ஒரு கூலிங்கிளாஸ் போட்டுட்டுதான் சுத்துவார். அதுதான் நமக்கு எரிச்சலா இருக்கும்.''

ஜான் விஜய்: “நமக்குக் கண்ணாடி இல்லாம மட்டும் இருக்க முடியாது. எல்லாப் படத்துலயும் என்னை கூலிங்கிளாஸோட பார்க்கலாம். நான் போடுற எல்லா டிரெஸ்ஸும் மாதவிதான் செலக்ட் பண்ணுவாங்க. ஆனா, அவங்க செலக்ட் பண்ற டிரெஸ்ஸை நான் மிஸ்மேட்ச் பண்ணிப் போட்டுட்டு வந்து நிப்பேன். அப்போ அவங்களுக்கு ரொம்பக் கோபம் வரும். கோபத்துல அவங்களைப் பார்க்க அவ்ளோ அழகா இருக்கும். அதனால அடிக்கடி கோபப்படுத்துவேன்.”

என் கண்ணுல உன் முகம்!

மாதவி: “எங்க ரெண்டு பேர் காதலும் உச்சத்துல இருந்த நேரத்துல இவருக்கு மணிரத்னம் சாரின் `ராவணன்' ஷூட்டிங் இருந்தது. ஷூட்டிங்குக்கு ஃப்ளைட் டிக்கெட்லாம் போட்டுக் கொடுப்பாங்க. என்கூட பேசிட்டே ஃப்ளைட்டை மிஸ் பண்ணிடுவாரு. எங்க கல்யாணத்துக்கு மணி சார், சுஹாசினி மேடம் எல்லாரும் வந்திருந்தாங்க. இன்னைக்கு வரைக்கும் எங்க குடும்ப வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாப் போயிட்டிருக்கு. எங்களுக்கு நாலு வயசுல பையன் இருக்கான். பரிதி ஈஸா. ரொம்பச் சுட்டி''

என் கண்ணுல உன் முகம்!

ஜான் விஜய்: “கல்யாணத்துக்கு அப்புறம் நிறைய மாறியிருக்கேன். ஊதாரியா நிறைய காசு செலவு பண்ணுவேன். இப்போ என்னை கட்டுக்கோப்பாவெச்சிருக்கிறது மாதவிதான். எல்லா வரவுசெலவுக் கணக்கும் அவங்கதான் பார்த்துக்குறாங்க. மாதவி எல்லா விஷயத்துலயும் ரொம்ப ஷார்ப். நான் ஏதாவது பொய் சொன்னா கண்டுபிடிச்சிருவாங்க. நான் எந்த இடத்துக்குப் போனாலும் இவங்களுக்குத் தகவல் வந்துரும். என்னோட கூகுள் என் பொண்டாட்டிதான்.''