
என் நண்பர்களில் முதன்மையானவரா வெற்றிமாறன் இருக்கார். ஜல்லிக்கட்டுல எனக்கும் ஆர்வம் இருக்கறதால ‘வாடிவாசல்'ல அவரோடு வேலை செய்யணும்னு விரும்பினேன்.
கொஞ்சம் காமெடி, நிறைய குணச்சித்திரம் எனப் புதுப் பாலிசியுடன் வலம் வருவதால், இப்போது அரை டஜன் படங்களில் நடித்துவருகிறார் கருணாஸ். சமீபத்திய ‘விருமன்', ‘ஆதார்', ‘கட்டா குஸ்தி' படங்கள் கொடுத்த வரவேற்புகளினால் மகிழ்கிறார் மனிதர்.
புதுசா கம்பெனி ஒண்ணு ஆரம்பிச்சிருக்கீங்க. வாழ்த்துகள்...
‘‘நன்றி. நானும் என் தம்பி கரிகாலனும் சேர்ந்து ‘ஐ.சி.டபிள்யூ' என்ற பெயரில் ஒரு கம்பெனி ஆரம்பிச்சிருக்கோம். அதோட முதல் தயாரிப்புதான் ‘சல்லியர்கள்' படம். எங்க கம்பெனியோட நோக்கம் படத் தயாரிப்பு மட்டுமல்ல... இளம் திறமைசாலிகளை அடையாளம் காண்பதும், அவங்களுக்கு சரியான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுக்கறதும் தான். ஏன்னா நான் காலேஜ் படிக்கறதுக்கு முன்னாடியே நாடகங்கள்ல பாடியிருக்கேன். அதுக்காக தமிழ்நாடு முழுக்கச் சுத்தியிருக்கேன். அப்ப எங்க அம்மா பயங்கர கோபத்தில் என்னைக் கூப்பிட்டு ‘கூத்தாடுறவங்ககூடச் சேர்ந்து சுத்துறீயா நீ?’ன்னு கடுமையா திட்டியிருக்காங்க. அதெல்லாம் ஒரு காலம். ஆனா, இன்னிக்கு அப்படியில்ல. சினிமாவுக்கு எவ்வளவு மதிப்பு இருக்குதுன்னு நான் சொல்லித் தெரியவேண்டியதில்ல.

நானும் தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம்னு எல்லா சங்கங்களையும் பார்த்துட்டேன். அங்கெல்லாம் பஜ்ஜி, வடை சாப்பிடுற வேலைகள்தான் நடக்கும். ஆக்கபூர்வமான வேலைகள் எதுவும் நடக்காது. செல்போன்கள் வச்சிருக்கற அத்தனை பேருமே இப்ப மீடியாதான். செல்போன்களால நடிகர்களாகவும் திறமையை நிரூபிக்கிறாங்க. அப்ப சரியா படிக்கலைன்னா, ‘ஹோட்டல்ல டேபிள் க்ளீன் பன்ற வேலைக்குப் போ’ன்னு சொல்வாங்க. ஆனா, இப்ப அதுக்கும் படிப்பு வந்திடுச்சு. விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு பலரும் இயக்குநர்களா, நடிகர்களா, சினிமாவின் பல துறைகளிலும் ஜொலிக்கணும்னு கனவுகளோடு வர்றாங்க. ஆனா, அவங்களுக்கு ஒரு சரியான பிளாட்பாரம் இதுவரை இல்லை. அந்தக் குறையைப் போக்கவே இப்படி ஒரு கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேன்.''
நீங்க வெற்றிமாறன்கிட்ட ஒர்க் பன்றீங்க... உங்க மகன் கென், தனுஷ்கிட்ட ஒர்க் பன்றார்... உதவி இயக்குநர்களாக உங்க ரெண்டு பேரோட பயணம் எப்படி இருக்கு?
‘‘ரெண்டுமே சிறப்பு. என் நண்பர்களில் முதன்மையானவரா வெற்றிமாறன் இருக்கார். ஜல்லிக்கட்டுல எனக்கும் ஆர்வம் இருக்கறதால ‘வாடிவாசல்'ல அவரோடு வேலை செய்யணும்னு விரும்பினேன். அவர்கிட்ட என் ஆசையைச் சொன்னதும் அவரும் சந்தோஷமானார். வெற்றியோட `அசுரன்' படத்துல என் மகன் கென் நடிச்சிருந்தார். கென் பழகுற தன்மை, உழைப்பு தனுஷ் சாருக்குப் பிடிச்சிருந்தது. அதனால `திருச்சிற்றம்பலம்' படத்துல உதவி இயக்குநரா ஒர்க் பண்ணவச்சார். ‘வாத்தி' படத்திற்கும் கூப்பிட்டுக்கிட்டார். அதில் கென், நடிப்பு சொல்லிக்கொடுக்கற விதத்தை மானிட்டர்ல கவனிச்ச படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சார், உடனே தனுஷ்கிட்ட கென்னைப் பத்தி வியந்து சொன்னதோடு, ‘வாத்தி'யிலும் ஒரு நல்ல ரோல்ல நடிக்கவும் வச்சிருக்கார். நான் சினிமாவுல இருக்கேன் என்பதற்காக என் பையனைக் கொண்டு வரல. இயல்பாவே அவனுக்கு சினிமாவுக்கான தகுதி, திறமை இருக்கு. ஒரு தகப்பனா சினிமாவில் அவனுக்கு நல்ல பாதையை ஏற்படுத்திக் கொடுக்கறதும் என் கடமை. நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடியே பாடகர். என் மனைவியும் பாடகி. ஆனா, என் மகன் நடிப்பில் பெயரெடுக்கணும்னு ஆசைப்படுறேன். ஒரு நல்ல நடிகனா அவன் வருவான்னு நம்புறேன்.''

‘கட்டா குஸ்தி'க்கு அடுத்து நீங்க நடிக்கிற படங்கள்?
‘‘நிறைய இருக்கு. திருப்தியான கதைகளில்தான் நடிக்கறேன். இப்ப விமலுடன் ‘போகும் இடம் வெகுதூரமில்லை', ஹரீஷ் கல்யாணுடன் ‘டீசல்', ‘சுந்தரா டிராவல்ஸ் 2’, ‘பிரசிடென்ட்', ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படம்... இப்படி நிறைய போயிட்டிருக்கு. வரும் 2023ம் பிரகாசமா இருக்குது..!''