Published:Updated:

“நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நியாயம் செய்யணும்!”

கவின்
பிரீமியம் ஸ்டோரி
News
கவின்

நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது, ‘நான் இதுல ஜெயிச்சாலும் தோத்தாலும் அதுக்கு நான் மட்டும்தான் காரணமா இருக்க முடியும்'னு சொல்லிட்டுத்தான் போனேன்

விஜய் டி.வி-யின் முக்கிய முகமாக இருந்த கவின், இப்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகன். ‘நட்புனா என்னானு தெரியுமா', ‘லிப்ட்' ஆகிய இரண்டு படங்களைத் தொடர்ந்து, ‘டாடா' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். எப்போதும் ஜாலியாக, ரகளையாக திரையிலும் பிக்பாஸ் வீட்டிலும் வைப் செய்துகொண்டிருந்த கவினுக்கு இந்தப் படத்தில் அப்பா கேரக்டர். ஷாக்காக வேண்டாம். ஹீரோதான். ஆனால், ஒரு குழந்தைக்கு அப்பா. அதுதான் ‘டாடா.' படம் குறித்து இன்னும் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என கவினைச் சந்தித்துப் பேசினேன்.

“நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நியாயம் செய்யணும்!”

‘‘சினிமா கரியர் எப்படி போய்க்கிட்டிருக்கு?’’

‘‘நல்லாப் போய்க்கிட்டிருக்கு. ஒரு முழுப் படத்தைத் தாங்கிப் பிடிச்சு பர்ஃபாம் பண்ணக்கூடிய கதை, ‘லிப்ட்.' இந்தப் பையன் நல்லா பண்ணுறான் அப்படிங்கிற பெயர் கிடைச்சா போதும்னு நினைச்சுட்டுதான் அந்தப் படத்தை ஆரம்பிச்சேன். ஆனா, நான் நினைச்சதைவிடவும் நல்ல வரவேற்பு. ஒரு சில முக்கியமான தயாரிப்பு நிறுவனங்கள்ல இருந்து நமக்கு அழைப்பு வராதான்னு ஏங்கிக்கிட்டு இருந்திருப்போம். அதெல்லாம் ‘லிப்ட்' படத்துக்குப் பிறகு நடந்தது. அப்படி அமைஞ்ச நல்ல ஸ்கிரிப்ட்தான் ‘டாடா.' ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நல்ல நல்ல அனுபவங்களும் கொடுத்தது. இப்போ ரிலீஸுக்கு ரெடி. நீங்க எல்லோரும்தான் பார்த்துட்டுச் சொல்லணும்.’’

`` `டாடா' டீசர் நல்லா இருந்தது. நாங்க என்ன எதிர்பார்க்கலாம்? ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிச்சிருக்கீங்க..?!’’

‘‘ ‘டாடா' பட இயக்குநர் கணேஷ் பாபுவும் நானும் ஒரே காலேஜ். அதனால எங்களுக்குள்ள அறிமுகம் முன்னாடியே இருந்தது. இந்தப் படத்தின் கதையை நான் பிக்பாஸ் வீட்டுக்குள் போறதுக்கு முன்னாடியே சொல்லியிருந்தார். ரொம்ப நல்லாருந்தது. நிறைய பேசிப் பேசி நாங்க நினைச்ச ஒரு வடிவத்துக்குக் கதை வந்திடுச்சு. அதுக்குள்ள நான் பிக்பாஸ் போயிட்டு வந்துட்டேன். ஒலிம்பியா மூவீஸ் பேனர்ல நான் முன்னாடியே ஒரு படம் பண்ணுறதா இருந்தது. ஆனா, அப்போ நடக்கலை. இந்தக் கதை அவங்களுக்கும் பிடிச்சு, அவங்களே தயாரிப்பாளரா வந்துட்டாங்க. காலேஜ் படிக்கும்போதே ஒரு பையன் அப்பாவாகிடுறான். எல்லோரும் புத்தகத்தைத் தூக்கிட்டுப் போனா, இவன் குழந்தையைத் தூக்கிட்டுப் போறான். அதுதான் ‘டாடா', அப்பான்னு அர்த்தம். நிறைய பேர் ‘தாதா'ன்னு நினைச்சுக்கிறாங்க. மணிகண்டன்ங்கிற பையன் எப்படி ஒரு ஆணா, மனுஷனா மாறுறாங்கிறதுதான் கதை. ஒரு வயசுல சில விஷயங்கள் பிடிக்கும், அதுமேல ஈர்ப்பு வரும். அட்வைஸுங்கிற பேர்ல யார் என்ன சொன்னாலும், அதைக் கேட்கவே கூடாதுன்னு தோணும். நம்மளா அடிபட்ட பிறகுதான், வாழ்க்கைன்னா என்னன்னு புரியும். இதுதான் படத்தின் ஐடியா. இது ஒரு ரொமான்டிக் காமெடி ஜானர் படம்தான். ஆனா, நிறைய எமோஷனலான விஷயங்களும் இருக்கு. என்டர் டெயின்மென்ட்டைத் தாண்டி குடும்பத்துக்கான படமாவும் ‘டாடா' இருக்கும்.’’

‘‘உங்களுக்கு வர்ற கதைகள் அதிகமா என்ன ஜானர்ல இருக்கு?’’

‘‘த்ரில்லர், ரொமான்டிக் காமெடி ஜானர்ல கதைகள் நிறைய வருது. நாம நிறைய ரொமான்டிக் காமெடி ஜானர் படங்களைப் பார்த்துட்டோம். அதுல இருந்து ஏதாவது வித்தியாசமா இருந்தா, ஓகே சொல்லிடுறேன். ‘ஓ மை கடவுளே' சூப்பரா இருந்தது. அதுல ஒரு பேன்டஸியை வெச்சு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தாங்க. அது மாதிரி, இந்தப் படத்துல அந்தக் குழந்தைதான் சுவாரஸ்யம். ஜாலியா சுத்திட்டு இருந்த பையன்கிட்ட, ‘நீ அப்பாவாகிட்ட. இந்தக் குழந்தைக்கு நீதான் பொறுப்பு'ன்னு சொல்லும்போது அவன் என்ன பண்ணுவான், அதுக்குப் பிறகு அவன் வாழ்க்கையைப் பார்க்கிற விதம், இதெல்லாம்தான் படம். எனக்கு ஜோடியா அபர்ணா தாஸ் சூப்பரா நடிச்சிருக்காங்க. தவிர, பாக்யராஜ் சார், விடிவி கணேஷ் சார், ‘அருவி', ‘வாழ்'ல நடிச்ச பிரதீப், ‘முதல் நீ முடிவும் நீ' ஹரீஷ்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க. ஜென் மார்ட்டின்னு ஒரு பையன் மியூசிக் பண்ணியிருக்கார். அவர் இந்தப் படத்தின் மூலமா கவனிக்கப்படுவார். யுவன் சார் ‘போகாதே'ன்னு ஒரு பாட்டு பாடியிருக்கார். அது கதைக்குப் பெரிய பலமா இருக்கும்.’’

‘‘விக்னேஷ் சிவன் தயாரிப்புல நீங்க நடிக்கிற ‘ஊர்க்குருவி' படம் எந்த அளவுல இருக்கு?’’

‘‘ ‘லிப்ட்' படம் ரிலீஸாகுறதுக்கு முன்னாடியே, நாம ஒரு படம் பண்ணலாம்னு விக்னேஷ் சிவன் அண்ணன் சொன்னார். அப்படிதான் ‘ஊர்க்குருவி' அமைஞ்சது. ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் இன்னும் நிறைய இருக்கு.''

‘‘நெல்சன்கிட்ட உதவி இயக்குநராகவும் இருக்கீங்கன்னு கேள்விப்பட்டோமே?’’

‘‘எனக்கு அவர் அண்ணன், குரு, மென்டார், ஃபேமிலி எல்லாம். எனக்கு ஷூட்டிங் இல்லாத சமயத்துல நெல்சன் அண்ணன்கூடத்தான் இருப்பேன். அவர்கூட கதை டிஸ்கஷன்ல இருப்பேன், ஷூட்டிங்ல அசிஸ்டென்ட் டைரக்டரா வேலை செய்வேன். என்னுடைய முதல் படம் வெளியாகாமல் இருந்தபோது, நான் ரொம்ப அப்செட்ல இருந்தேன். அப்போ அவர் ‘கோலமாவு கோகிலா' முடிச்சு, ‘டாக்டர்' டிஸ்கஷன்ல இருந்தார். அசிஸ்டென்ட் டைரக்டரா உங்ககூடவே இருந்திடுறேன்னு சொன்னேன். என்னால அவருக்கு ஒரு பயனும் இல்லை. இருந்தாலும், இவன் இங்க இருந்தா கொஞ்சம் பாசிட்டிவா இருப்பான்னு நினைச்சு, அவர்கூட வெச்சுக்கிட்டார். அவர் எல்லா சீனையும் நடிச்சுக் காட்டுவார். அதெல்லாம் கவனிப்பேன். அவர் ஒரு சீனை எப்படி அணுகுறார்னு பார்ப்பேன், அப்படிக் கத்துக்கிட்ட விஷயங்களை நான் பண்ணுற கேரக்டர்களுக்குள் பொருத்திப் பார்ப்பேன். ஒரு அசிஸ்டென்ட் டைரக்டரா அவருக்கு சப்போர்ட் பண்ணினேனாங்கிறதைவிட, நான் ஒரு நடிகனா அவர்கிட்ட இருந்து எடுத்துக்கிட்ட விஷயங்கள் நிறைய. என்னை நம்பிப் பணம் போடுற தயாரிப்பாளரை சந்தோஷப்படுத்துறதைத் தாண்டி எனக்கு நெல்சன் அண்ணனை சந்தோஷப்படுத்தணும். ‘டாடா' பார்த்துட்டு அவர் ரொம்ப சந்தோஷப்பட்டார்.’’

“நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நியாயம் செய்யணும்!”

‘‘பிக்பாஸ் உங்க கரியர்ல திருப்புமுனையை ஏற்படுத்துச்சுன்னு நினைக்கிறீங்களா?’’

‘‘நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள போகும்போது, ‘நான் இதுல ஜெயிச்சாலும் தோத்தாலும் அதுக்கு நான் மட்டும்தான் காரணமா இருக்க முடியும்'னு சொல்லிட்டுத்தான் போனேன். நான் ஒரு படம் நடிச்சேன். அதுக்கு முன்னாடி சீரியல் பண்ணும்போது கொஞ்சம் பாப்புலாரிட்டி இருந்தது. படம் வெளியாகத் தாமதமானதால அந்த பாப்புலாரிட்டி கொஞ்சம் கம்மியான மாதிரி தோணுச்சு. அதனாலதான் போனேன். எல்லோரும் அப்படித்தானே... அதுக்கு ஒரு வருமானம் வருது. இதுதான் நிதர்சனம். இதைத்தாண்டி நாம ஏதாவது உருட்டலாம். ஆனா, இதுதான் உண்மை. நான் என்ன நினைச்சேனோ அதைவிட நல்லாவே அமைஞ்சது. இந்தப் பையனைப் பிடிச்சிருக்குன்னு நமக்கு ஓட்டு போட்டவங்களுக்கு நியாயம் சேர்க்கும்படி வெளிய வந்து வேலை செய்யணும்னு நினைச்சேன். அதை ‘லிப்ட்'ல ஓரளவு சரியா பண்ணினேன்னு நம்புறேன். அதைவிட ஒரு படி அதிகமா இந்தப் படமும் இருக்கும். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு சதவிகிதமாவது நம்ம கிராஃப் மேல ஏறணும். அதுக்குதான் முயற்சி பண்ணுறேன்.''