
அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழ்நாடு அளவுக்கு இங்கு அதிகம் பேர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லை.
"வணக்கம் சார்... நல்லா இருக்கீங்களா? சென்னையில் மழைநீரெல்லாம் போயிருச்சா?”
தமிழில் சரளமாகப் பேசுகிறார் ‘கிச்சா’ சுதீப். கன்னட சினிமாவின் தவிர்க்க முடியாத மாஸ் ஹீரோ. 50 வயது என்றால் நம்ப முடியவில்லை. நடிக்கவந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. தமிழில் கமல் போல் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஹிட் தொகுப்பாளர். பெரிய ஸ்டார் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் ரொம்ப எளிமையாக உரையாடுகிறார்...
“ `நான் ஈ’-க்குப் பிறகு தமிழ் சினிமாவில் உங்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கு?”
“உண்மையச் சொல்லணும்னா ‘நான் ஈ’ வெற்றியால் தமிழ்நாட்டுல எனக்குக் கிடைச்ச மரியாதை ரொம்பப் பெருசு. நான் சத்தியமா எதிர்பார்க்கவே இல்லை. இவ்வளவுக்கும் தெலுங்குல எடுக்கப்பட்ட படம். ஒரு வில்லன் ரோல்தான் பண்ணியிருக்கோம். அதனால நமக்கு இங்கே வரவேற்பு இருக்காதுன்னு நினைச்சேன். ஆனால், என்னை சென்னையில எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் விடமாட்டாங்க. அவ்ளோ அன்பு. அதேபோல நமக்கான பேஸ் கர்நாடகாதான்னு நினைக்க முடியாத அளவுக்கு பொறுப்பையும் அந்தப்படம் கொடுத்திருச்சு. ராஜமௌலி கதைய பெருசா சொல்லவே இல்லை. ஒரு வரில ‘ஒரு லவ்வர்ஸ். அதுல பொண்ணை அடையுறதுக்காக பையனைக் கொன்னுடுவீங்க. அந்தப் பையன் ஈயா மாறி உங்களைக் கொன்னு ரிவெஞ்ச் எடுப்பான்’னு கதை சொன்ன உடனே நான் கேட்ட ஒரே கேள்வி, ‘ஈ எப்போ படத்துல வரும்?’கிறதுதான். ஆரம்பத்துலயே வந்துடும்னா நான்தான் படத்துல மெய்ன். அதிகம் நடிப்பேன்னு புரிஞ்சு தயக்கம் இல்லாம ஓகே சொன்னேன். ஈ இருக்குறதா நினைச்சு கற்பனைல படம்பூரா கேமரா முன்னாடி கைய வீசி நடிக்கிறதைவிட சவால் என்னவா இருக்க முடியும்? வீட்டுல உட்கார்ந்து ஈ அடிக்கிற கதையை அழகா ஸ்கிரிப்ட்ல கொண்டு வந்து கிராஃபிக்ஸ்லயும் கொண்டு வந்து ஸ்பீடுல பின்னிட்டார் ராஜமௌலி! அதன்பிறகு விஜய்கூட புலி போன்ற வாய்ப்புகள் வந்தன. கே.எஸ்.ரவிக்குமார் சாரோட ‘முடிஞ்சா இவனைப்புடி’ பைலிங்குவலா வந்தது. ஆனாலும், அடுத்தடுத்து சாண்டல்வுட்டில் பிஸியாகிட்டேன்!”

“புலி சரியாப் போகாதது வருத்தமா?’’
“சின்னதா வருத்தம் இருக்கு. செம டேலண்ட் டீம். வித்தியாசமான ஃபேன்டசி கதை. விஜய்க்கும் எனக்கும் பெரிய ஓப்பனிங்கா இருந்திருக்கணும். ஏன்னா சினிமாவா ஜெயிக்கலைனாலும் ஒர்க் பண்ணின அனுபவம் செமையா இருந்தது. எங்கோ சறுக்கிடுச்சு. விஜய் அவ்ளோ அன்பா கவனிச்சிக்கிட்டார். படம் ஓடியிருந்தா செம ஹேப்பியா இருந்திருக்கும். எதுவுமே நம்ம கையில இல்லையே!”
“சாண்டல்வுட்டின் பிஸி ஸ்டார்னாலும் டோலிவுட், பாலிவுட், மல்லுவுட்டில் கேமியோ பண்ணிட்டுதானே இருக்கீங்க? உங்க ரசிகர்கள் கோவி்ச்சுக்க மாட்டாங்களா?”
“கேமியோவா நினைச்சு பண்ணலை. பாலிவுட்டில் 2008-ல ராம்கோபால் வர்மா என்னை எங்கோ பார்த்து ‘பூங்’ படத்துல கமிட் பண்ணினார். படம் ஹிட். அடுத்தும் அவர் இயக்கத்துல ‘ரான்’ படத்துல அமிதாப் பச்சனோடு நடிச்சேன்.
ரெண்டுலயும் எனக்கு ஸ்கோப் உள்ள முக்கியமான கேரக்டர்ஸ். சொல்லப் போனா ‘நான் ஈ’ல என்னை கமிட் பண்ணக் காரணமா இருந்ததே இந்தப் படங்கள்தான். ஆர்ஜிவி-கூட தொடர்ந்து ‘பூங்-2’, ‘ரக்த சரித்ரா’ல்லாம் பண்ண முடிஞ்சது. நான் கேமியோல்லாம் பண்றதா நினைச்சு ரோலை அக்செப்ட் பண்ண மாட்டேன். ரெண்டு சீன்னாலும் மனசுல நிக்கிற மாதிரி இருந்தா போதும். ‘பாகுபலி’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’, ‘மரைக்கார்’னு அப்படித்தான் பண்ணினேன். முதல்ல எனக்கு அந்த ரோல் பிடிக்கணும். ‘புலி’ படத்துக்காக டைரக்டர் என்னை அந்த ரோலில் காஸ்ட் பண்ண விரும்பினார். எனக்காகக் காத்திருந்து நேரில் வந்து என்னை ஃபிக்ஸ் செய்தார். விஜய்கூட ஒரு நல்ல நட்பு கிடைத்தது. ஏதோ ஒண்ணு எனக்குப் பிடித்தால்தான் நான் ஒரு படத்தில் கமிட் ஆவேன். என்னோட ரசிகர்களும் எதையும் எதிர்பார்ப்பா திணிச்சுக்க மாட்டாங்க. கர்நாடகால நான் அவர்களுக்காக மட்டும்தானே படம் பண்றேன்! ஒரு படம் முடிஞ்சதும் அடுத்த படத்துக்குள்ள டக்குனு போக மாட்டேன். என்னை ரெஃப்ரெஷ் பண்ண கிரிக்கெட், லாங் டிராவல், மூவி வாட்சிங், சமையல்னு ஏதாச்சும் பண்ணிட்டே இருப்பேன்! ஒரு மொமண்ட்ல திரும்பி வந்து அடுத்த படத்துக்குக் கதை கேட்பேன். அடுத்தநாளே ஷூட்டிங் போவேன்.”

“நிறைய தமிழில் இருந்து ரீமேக் படங்களில் நடிச்சிருக்கீங்க இல்ல...?”
“நம்பர்ல கம்மிதான். ஆரம்பக்காலத்துல அது என்னோட கரியருக்கு உதவுச்சு. சேது, வாலி, ஆட்டோகிராப், சிங்கம்லாம் என்னை எல்லா சென்டர்களுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்த படங்கள். இப்போதெல்லாம் நிறைய ஒரிஜினல் கதைகளில் நடிக்கிறேன்..!”
“நடிகர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றி...”
“அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தமிழ்நாடு அளவுக்கு இங்கு அதிகம் பேர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரவில்லை. அப்படியே அம்பரீஷ் போல மெகா ஸ்டார்கள் வந்தாலும் தனிக்கட்சியாக வரவில்லை. என்னைப் பொறுத்தவரை அரசியல் தெளிவு இந்தியக் குடிமகனாக நம் எல்லோருக்கும் இருக்கணும். அதுக்காக சோஷியல் மீடியாக்களில் எல்லா விஷயத்துக்கும் ரியாக்ட் பண்ணணும்னு கட்டாயம் இல்லை. ரியாக்ஷனும் ஒரு எமோஷன் தான். சோஷியல் மீடியால கருத்து சொல்லலைங்கிறதுக்காக எனக்கு அரசியல் அறிவு இல்லைன்னு அர்த்தமில்லை. என்னோட அரசியல் நிலைப்பாடு என் ரசிகர்களைப் பிரிச்சிடக்கூடாது. அதுல நான் தெளிவா இருக்கேன்!”
“புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு...”
“இன்னும் ஜீரணிக்க முடியலை. நடந்து போய் கார்ல ஏறி ஹாஸ்பிட்டல் போனவர் ஃப்ரீசர் பாக்ஸ்ல வருவார்னு யாராச்சும் நினைச்சுப் பார்த்தாங்களா? பல கனவுகளோட இருந்த நல்ல நண்பன். எங்களுக்குள்ள ஆரோக்கியமான போட்டி இருந்தது. அவரோட டான்ஸுக்கு நான் வெறித்தனமான ரசிகன். இனி அவரோட போன்கால் வராதுங்கிறதையே என்னால இன்னும் ஏத்துக்க முடியலை. நாங்க எல்லோருமே நல்ல ஃப்ரெண்ட்ஸ். எங்க ரசிகர்கள் ட்ரோல்ஸ் பண்ணிக்குவாங்க. ஆனா, எல்லா ஹீரோக்களோட ரசிகர்களும் புனித் இறுதி ஊர்வலத்துல ஒண்ணா நின்னு அழுதாங்க. அதான் புனித்தோட நல்ல மனசுக்கு அடையாளம். கன்னட சினிமாவை உலகத்தரத்துக்குக் கொண்டு போகப் பல திட்டங்கள் வச்சிருந்தார். அந்தக் கனவை ‘பான் இந்தியா’ படங்கள் மூலமா நாங்க அடைய உழைப்போம். அப்போதான் அவரோட ஆன்மா சாந்தியடையும்!”

“தமிழ் சினிமாவைக் கவனிக்கிறீங்களா?”
“ரொம்பவே கவனிக்கிறேன். விரைவில் சென்னைக்கு வருவேன். ஓடிடி இப்போ எல்லோரையும் ஒண்ணாக்கியிருக்கு. தென்னிந்தியா இப்போ ஒரே சினிமாவா மாறியிருக்கு. கன்னடப் படங்களைத் தமிழ் ரசிகர்கள் பாராட்டுறாங்க. என்னோட பயில்வானுக்கு பலபேர் சென்னைல இருந்து போன் பண்ணினாங்க. சமீபத்துல நண்பர் சூர்யாவின் ‘ஜெய்பீம்’ பார்த்தேன். பெரிய அதிர்வை உண்டு பண்ணியிருக்கார். சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ செம எண்டர்டெய்னர். என் நண்பர் விக்ரமின் ‘கோப்ரா’வைப் பார்க்க ஆர்வமா இருக்கேன். அப்புறம் உங்களைப்போலவே ‘வலிமை’, ‘பீஸ்ட்’டுக்காக வெய்ட் பண்றேன். அஜித்தை ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். இப்போ பார்த்துக்க முடியலைன்னாலும் அவரோட டிராவலை ரசிப்பேன். எப்படி இருக்காரோ அப்படியே வெளில வர்ற அந்த கட்ஸ் ரொம்பவே புடிக்கும். நல்ல ஸ்கிரிப்ட் வந்தா அஜித், விஜய் கூட நடிக்க நான் எப்பவும் ரெடி!”