
ஒல்லியா இருந்தால்தான் ஆரோக்கியம் அப்படிங்கிற கான்செப்டே அவங்ககிட்ட இல்லை. அதனால, இந்தப் படத்துக்காக நல்லா சாப்பிட்டு பத்துக் கிலோ வெயிட் போட்டேன்.
’அஞ்சலி’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு, ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் கிருஷ்ணா. ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என எல்லா மாதிரியான கேரக்டர்களிலும் நடித்துவருகிறார். தற்போது, தமிழ், மலையாளம் என பிஸியாக இருக்கிறார். இவர் நடித்த ‘பெல்பாட்டம்’ என்ற படம் திரைக்கு வரத் தயாராக இருக்கிறது. அந்தப் படம் மட்டுமல்லாது பல விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
``கன்னடத்தில் வெளியான ‘பெல்பாட்டம்’ திரைப்படத்தைத் தமிழில் ரீமேக் பண்ணலாம்னு எப்போ முடிவாச்சு?’’
‘‘நானும் என் தயாரிப்பாளர் சார்ல்ஸும் ஒரு படம் பண்ணலாம்னு பிளான் பண்ணிட்டிருந்தோம். நான் வேற ஒரு படத்துடைய ஷூட்டிங்கிற்காக கேரளாவுல இருந்தேன். அப்போ திடீர்னு வந்து இந்தப் படத்தைப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. 1970 - 80கள்ல நடக்கிற இன்வஸ்டிகேட்டிவ் த்ரில்லர்தான் படம். ஹீரோ ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட். நிறைய டிடெக்டிவ் படங்கள் பார்த்துப் பார்த்து இன்ஸ்பயரானவன். எப்படி டிடெக்டிவ் ஏஜென்டாகுறான், அவனுக்கு வர்ற புராஜெக்ட்ஸை எப்படிக் கையாளுறான் அப்படிங்கிறதுதான் படம். ஒரு பக்கம் த்ரில்லரா போயிட்டிருந்தாலும் இன்னொரு பக்கம் டார்க் ஹியூமர் இருந்துக்கிட்டே இருக்கும். இதெல்லாம்தான் எனக்கு இந்தப் படத்துல நடிக்கணும்னு ஆசை வரக் காரணமா இருந்தது.’’
``முதல்முறை பீரியட் படத்துல நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?’’
‘‘இப்போதான் ‘ஒல்லியா இருந்தால்தான் ஃபிட்’னு எல்லோரும் ஓடிக்கிட்டிருக்கோம். ஆனா, ரெட்ரோ காலத்துல நல்லா சாப்பிட்டுட்டு ஆரோக்கியமா இருக்கணும்னுதான் நினைச்சிருக்காங்க. ஒல்லியா இருந்தால்தான் ஆரோக்கியம் அப்படிங்கிற கான்செப்டே அவங்ககிட்ட இல்லை. அதனால, இந்தப் படத்துக்காக நல்லா சாப்பிட்டு பத்துக் கிலோ வெயிட் போட்டேன். விக் வைக்க வேண்டாம்னு நிறைய முடி வளர்த்தேன். இந்தப் படம் பண்ணும்போது எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன் சிரஞ்சீவி சார்தான். ‘சன்டாபாய்’னு ஒரு படத்துல டிடெக்டிவா நடிச்சிருப்பார். ஹியூமர் கலந்து சூப்பரா பண்ணிருப்பார். ‘பெல்பாட்டம்’ ஷூட்டிங் முடியுற வரை எனக்குள்ள சிரஞ்சீவி சார்தான் இருந்தார்.”
``ஹீரோவாக நடிக்கத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்தப் படம் எந்த அளவுக்கு உங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்னு நம்புறீங்க?’’
‘`நான் நடிச்ச எல்லாப் படங்களுமே என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கிட்டேதான் இருக்கு. ஆனா, அதனுடைய வேகம் கொஞ்சம் குறைவா இருக்கு, அவ்ளோதான். ‘கழுகு’ படத்துக்கு என்னுடைய நூறு சதவிகித உழைப்பைப் போட்டு வேலை செஞ்சேன். அந்தப் படம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திட்டுப் போச்சு. அதே உழைப்பைத்தான் நான் ஒவ்வொரு படத்துக்கும் போடுறேன். சிலது எனக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது, தயாரிப்பாளருக்கு லாபத்தை வாங்கிக் கொடுத்தது. சில படங்கள் ரெண்டுமில்லை. ஆனா, போடுற உழைப்பு ஒண்ணுதான்.’’

``ஹீரோ, டூயல் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம்னு எல்லாமே பண்றீங்க. கிருஷ்ணாவுக்கான இமேஜ் என்ன?’’
“என்னைப் பொறுத்தவரை இமேஜ்ங்கிறது ஒரு மாயை. எந்த ஹீரோ நடிச்சாலும் மக்களுக்குப் பிடிக்கிற படம்தான் ஜெயிக்கும். இது உலகம் அறிந்த உண்மை. ஹீரோவாதான் பண்ணுவேன்னு நான் நினைச்சதில்லை. எனக்கு தனுஷ் சார்கூட நடிக்கணும்னு ஆசை. ‘மாரி 2’ படத்துல அவருடைய நண்பனா நடிக்கணும்னு சொன்னப்போ ஓகே சொல்லிட்டேன். ரொம்ப நாளா வில்லன் பண்ணணும்னு ஆசை. ‘நிபுணன்’ படத்துக்குக் கேட்டாங்க. உடனே ஓகே சொல்லிட்டேன். போட்டிங்கிறது நம்முடைய முந்தைய படத்துக்கும் அடுத்த படத்துக்கும் இருக்கணுமே தவிர, இன்னொரு ஆர்ட்டிஸ்ட்கூட இருக்கக்கூடாது. விஜய் சேதுபதி அதுக்குப் பெரிய உதாரணம்.”
``உங்களுடைய படங்கள் சரியா போகலைன்னு வருத்தப்பட்டதுண்டா?’’
“பயங்கரமா வருத்தப்பட்டிருக்கேன். ‘பண்டிகை’ ரொம்ப நல்லாப் போகும்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, ரிசல்ட் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஆனா, இப்போ வரை அந்தப் படத்தைப் பத்திப் பேசுறாங்க. அதுவே வெற்றியா மாறிடுச்சு. அதுக்குன்னு வருத்தப்பட்டுக்கிட்டே இருந்தால், அடுத்த படத்துக்கான வேலைகள்ல கவனம் செலுத்த முடியாமல்போயிடும்.”
``ஷூட்டிங் இல்லாத சமயத்தில், யுவனுடைய ஸ்டூடியோவில்தான் இருப்பீங்கன்னு கேள்விப்பட்டோம். சினிமாவைத் தாண்டி வேறு என்னெல்லாம் பேசுவீங்க?’’
“யுவனும் நானும் ஸ்கூல்ல இருந்து நண்பர்கள். சினிமாவைத் தாண்டின்னா, கார்கள், போன்களைப் பத்திப் பேசுவோம். மத்த இசையமைப்பாளர்களுடைய வொர்க் பத்தி நிறைய நிறைய பேசுவோம். யார் என்ன வொர்க் பண்றாங்கன்னு அப்டேட்டா இருப்பார். தவிர, வெட்டியா நிறைய பேசுவோம். எங்க சுத்தினாலும் கடைசியா சினிமா பத்தி டாபிக் வந்திடும்.”