சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“மறுபடியும் பேன் இந்தியா படத்தில் நடிக்கிறேன்!”

மைம் கோபி
பிரீமியம் ஸ்டோரி
News
மைம் கோபி

தெலுங்கில `சலோ' தான் என் முதல் படம். அதன்பிறகு அங்கே 13 படங்கள் பண்ணியிருந்தாலும் `புஷ்பா' மறக்க முடியாத படமாகிடுச்சு

உருட்டும் பார்வை, மிரட்டும் டெரர் வில்லனாக... மொழிகள் கடந்தும் அசத்திவருகிறார் மைம் கோபி. தெலுங்கில் மட்டுமே இரண்டு டஜன் படங்களுக்கு மேல் நடித்து முடித்திருக்கிறார் அவர். `ஃபேமிலி மேன்', `புஷ்பா' என பேன் இந்தியா நடிகராகிவிட்டவர். அடுத்து, `கே.ஜி.எஃப்' பிரசாந்த் நீல் இயக்கும் பிரபாஸ் படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் மனிதர்.

``ரொம்ப சந்தோஷமா இருக்கு. பக்கத்து மாநிலங்களுக்குப் போனாலும், அமெரிக்கா, லண்டன்னு பறந்தாலும் எல்லா மக்களுக்கும் அடையாளம் தெரியுது. ‘நல்லா இருக்கீங்களா?'ன்னு நலம் விசாரிக்கறாங்க. `உங்க கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’ன்னு மக்கள் கேட்கறப்ப சினிமாவுக்கு நன்றி சொல்லத் தோணும்.

“மறுபடியும் பேன் இந்தியா படத்தில் நடிக்கிறேன்!”

தெலுங்கில `சலோ' தான் என் முதல் படம். அதன்பிறகு அங்கே 13 படங்கள் பண்ணியிருந்தாலும் `புஷ்பா' மறக்க முடியாத படமாகிடுச்சு. `புஷ்பா'வுல சென்னை முருகன் கேரக்டருக்கு யாரை நடிக்க வைக்கலாம்னு இயக்குநர் சுகுமார் கேட்கும் போதுதான் அவரது டீம்ல உள்ள பிரபா என்னைப் பத்திச் சொல்லியிருக்கார். சுகுமார் சார் என்னைக் கூப்பிட்டு, பார்த்தார். `மொட்டை போட்டுக்கணும்'னார். உடனே ஓகே சொன்னேன். `புஷ்பா' கிடைச்சது. டக்குனு ஷூட் போனோம். அதே வேகத்துல படமும் வெளியாகி பெரிய ஹிட் ஆச்சு. எனக்கு இவ்ளோ பெரிய கதாபாத்திரம் கிடைக்கும்னு தெரியாது. அல்லு அர்ஜுன் சார், ஸ்பாட்ல ரொம்ப சீரியஸா ஒர்க் பண்ணுவார். அவர் ஒர்க் பண்றதைப் பார்த்தால், நமக்கும் நடிக்க ஆசை வந்திடும். ஒரு சீனை அவர்கிட்ட கொண்டு வர்றதுக்குள்ள நிறைய பிராசஸ் பண்ணிடுவார். `புஷ்பா 2'-ல் இருக்கேனான்னு அந்தக் கதாபாத்திரம், இயக்குநர், காலம் எல்லாம் சேர்ந்து முடிவு பண்ணணும். ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடிக்கிறேன். சின்ன ரோலா, பெரிய ரோலான்னு தெரியாது. ஆனா, அது ஒரு பேன் இந்தியா படம்.''

“மறுபடியும் பேன் இந்தியா படத்தில் நடிக்கிறேன்!”

`` `மெட்ராஸ்', `கபாலி'ன்னு இரஞ்சித் படங்களில் தொடர்ந்து நடிச்சீங்க. உங்களுக்கும் இரஞ்சித்துக்குமான உறவு பத்தி..?’’

``நான் நடிக்க வர்றதுக்கு முன்னாடியிருந்து ரஞ்சித் தம்பியைத் தெரியும். அப்ப நான் வீதி நாடகங்கள் நிறைய பண்ணுவேன். அப்ப தம்பி ஓவியக்கல்லூரியில் படிச்சிட்டிருந்தாங்க. சாயந்திரம் இருட்டின பிறகு தீப்பந்தங்களை வச்சு ஒரு ஸ்ட்ரீட் ப்ளே நடந்துட்டு இருந்துச்சு. அதை ரஞ்சித் தம்பிதான் பண்ணிட்டிருந்தார். எங்களுக்கு ரொம்பப் புதுமையா இருந்துச்சு. என் மைம் ஸ்டூடியோவில் உள்ள தம்பிகளை அவருக்கு அறிமுகப்படுத்தி, நாடகங்கள்ல நடிக்க வைத்தேன். இப்படித்தான் எங்களுக்குள் நட்பாச்சு. `இந்தப் படத்துல உங்களுக்கு பெரிய ரோல் இல்ல. அடுத்த படத்துல பண்ணலாம் அண்ணா'னு அவர் சொல்லிடுவார். அவரை நாம ஃபாலோ பண்ண வேணாம். கண்டிப்பா அடுத்த படத்துல கூப்பிட்டுக் குடுத்துடுவார்.

நான் ஒரு களிமண். என்னை அழகா வெளிக்கொண்டு வந்தது என் இயக்குநர்கள் தான். ஏன்னா, ஆரம்பக்காலங்கள்ல `மைம்' பண்ணிப் பழகினவன். `கண்ணும் கண்ணும்'ல நடிக்கக் கூப்பிட்டதும், கொஞ்சம் திணறலாகிடுச்சு. ஏன்னா மைம்ல டயலாக் கிடையாது. ஆனா, சினிமாவுல டயலாக் பேசணும். `மெட்ராஸ்' படத்திலிருந்துதான் வில்லனா அங்கீகாரம் கிடைச்சது.''

“மறுபடியும் பேன் இந்தியா படத்தில் நடிக்கிறேன்!”

``உங்க மைம் ஸ்டூடியோவில் முகமூடிகள் (face mask) நிறைய சேகரிச்சு வச்சிருக்கீங்களே..?’’

``ஆரம்பத்துல எந்த ஊருக்குப் போனாலும் ஒரு கடிகாரம் வாங்கிட்டு வந்து மாட்டிடுவேன். நிறைய கடிகாரங்கள் சேர்ந்திடுச்சு. ஒரே இடத்துல அத்தனை கடிகாரங்கள் இருந்ததும், அது பக்கத்துல போனாலே அதோட சத்தம் நம்மள மிரட்டும். அப்புறம், அதையெல்லாம் எடுத்துட்டு ஒரே ஒரு புதுச் செருப்பை மாட்டி வச்சேன். செருப்பை மதிக்காதவன் மனுஷனையும் மதிக்கமாட்டான் என்பது என்னுடைய எண்ணம். `செருப்பை ஏன் தலைமேல மாட்டி வச்சிருக்கே?'ன்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சாங்க. அதன்பிறகு, இப்ப முகமூடிகள் மாட்டி வச்சிருக்கேன். ஏன்னா, ஒவ்வொரு முகமூடியும் ஒவ்வொரு கதை சொல்லும். அந்த முகமூடிகள்ல நம்ம முகத்தைத் தேடுவோம். அதுல நம்ம முகம் இல்லைனா, அதை நாம பதிவு பண்ண ஆரம்பிச்சிடுவோம்.''