
என் மகளைச் சென்னையில்தான் கட்டிக்கொடுத்திருக்கேன். சாயந்திரத்துல மகளையும் சம்பந்தியையும் பார்த்துப் பேசிட்டு வருவேன்
தமிழ் சினிமாவில் 35வது ஆண்டைக் கொண்டாடுகிறார், நகைச்சுவையும் குணச்சித்திரமுமாக மிளிரும் எம்.எஸ்.பாஸ்கர். லாக்டௌனுக்கு முன்னரே இரண்டு படங்களில் தன் போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்ட திருப்தியில் இருந்தவரிடம் பேசினேன்.
‘‘நான் சினிமாவுக்கு வந்து 35 வருஷம் ஆனது உண்மைதான். ஆனா, இதுல கொண்டாட எதுவுமில்ல. ஏன்னா, நான் நடிக்க வராமல் எதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து வேலை செய்திருந்தால்கூட 58 வயசில ரிட்டயர்டு ஆகியிருப்பேன். அப்ப எனக்குப் பிரிவு உபசார விழா நடத்தியிருப்பாங்க. ஆனா, நடிகனுக்கு ரிட்டயர்மென்ட் கிடையாதே! எத்தனை வயசு வரைக்கும்னாலும் சினிமாவில் இருக்கலாம். இந்தத் தொழில் என்னையும் வாழ வைக்கும் தொழில். நாலு பேருக்கு உதவி பண்ற அளவுக்கு எனக்குப் பொருளாதாரத்தைக் கொடுத்திருக்கு. ஸோ, ஒவ்வொரு நாளுமே கொண்டாட்டமாகத்தான் நினைக்கறேன். விகடன் விருதுகளை இதுவரை நான் ஒரு படத்துக்குக்கூட வாங்கல. ஆனா, பெரிய சந்தோஷம். ஒரே படத்துல என் பையனுக்கு ‘96’ படத்துல நடிச்சதுக்காக விகடன் அவார்டு கிடைச்சுது. மகன் பாராட்டும்வகையில் நடிகர் ஆகியிருக்கார். மகள் நல்ல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆகியிருக்கா. இதெல்லாம் எனக்குக் கொண்டாட்டம்தான். இன்னும் சொல்லப் போனா, இந்தத் துறையில் இருப்பதே கொண்டாட்டமாகத்தான் இருக்கு...”
``லாக்டௌன்ல நீங்களும் சமையற்கட்டுப் பக்கம் போயிருப்பீங்க..?’’
‘‘நிச்சயமா! லாக்டௌனால அநாவசியமா வீட்டை விட்டு வெளிய எங்கேயுமே போகல. என் மகளைச் சென்னையில்தான் கட்டிக்கொடுத்திருக்கேன். சாயந்திரத்துல மகளையும் சம்பந்தியையும் பார்த்துப் பேசிட்டு வருவேன். சரித்திரம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் படிச்சேன். பாபாவைப் பத்திக் கவிதைகள் எழுதினேன். என் மனைவி அனுமதிக்கற நேரத்துல, சமையற்கட்டுக்குள்ள புகுந்து சமையல் பண்ணினேன். சின்ன வயசில இருந்து நல்லா சமைக்கத் தெரியும். சைவம், அசைவம் ரெண்டுமே பண்ணுவேன். மாங்காய்த் தொக்கு, வத்தக்குழம்பு, சிக்கன் குழம்பு, ஃபிஷ் ஃப்ரைன்னு எல்லாமே பண்ணுவேன். காலையில எழுந்ததும் பிளாக் காபி சாப்பிடப் பிடிக்கும்.
போன லாக்டௌனுக்குப் பிறகு கிடைச்ச வாய்ப்புலதான் ‘மலேசியா டு அம்னீஷியா’ பண்ணினேன். இதுக்கிடையே தம்பி சந்தானத்தின் ‘சபாபதி’ படத்தின் டப்பிங்கை முடிச்சேன். மத்தபடி எங்கேயுமே ஷூட்டிங்கோ, வேலையோ நடக்கலை. இந்தக் கொரோனா ஒழியணும், பழையபடி மக்கள் வேலைக்குப் போகணும். எனக்குத் தெரிஞ்சு, இந்த நுண்கிருமிகள் ஒன்றுகூட இந்த உலகத்தில் இல்லாமல் அற்றுப்போயிடும்னு சொல்லமுடியாது. தமிழக முதல்வரும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துப் பாதுகாக்குறாங்க. தளர்வுகள் அதிகரிக்கறதனால நோய் அடியோடு போயிடுச்சுன்னு அர்த்தமில்ல. மக்கள் எச்சரிக்கையா இருக்கணும்!”
``கமல் உங்கள்மீது அதிகம் பிரியம் காட்டுபவர். அவர் கட்சியில் சேர உங்களுக்கு அழைப்பு வந்ததா? பிக்பாஸுக்கு உங்களை அழைக்கவில்லையா?’’
`` ‘மொழி’ படத்தின் விழாவில் கலைஞர் அப்பா கையால விருது வாங்கினேன். அப்ப அவர், ‘என்னய்யா... எப்படிப் போயிட்டிருக்கு’ன்னு என்னை நலம் விசாரிச்சார். நானும் அவர்கிட்ட ‘நல்லபடியா போயிட்டிருக்கு அப்பா’ன்னு நெகிழ்ந்து சொன்னேன். உடனே அவர், ‘நீ என் புள்ள. கட்சி அரசியல்னு போயிடாத’ என்றவர், சிரிச்சுக்கிட்டே மெதுவான குரலில் ‘இந்தக் கலைஞர் எல்லாருக்கும் பொதுவானவன்’ன்னார். அவருடைய சிலேடையை ரசிச்சேன். அவர் சொன்னதை இப்ப வரை கடைப்பிடிக்கறேன். கமல் அண்ணா என்னை அரசியல்ல சேரச் சொல்லிக் கூப்பிடல. அப்படிக் கூப்பிட்டிருந்தால்கூட, ‘எனக்கு அரசியல்ல விருப்பமில்லை’ன்னு சொல்லியிருப்பேன்.
பிக்பாஸுக்கு என்னையும் கூப்பிட்டாங்க. உண்மையைச் சொல்லணும்னா நான் என் வீட்லேயே நூறு நாள்கள் அடைஞ்சு கிடக்க மாட்டேன். வேற ஒரு வீட்டுல என்னால எப்படி இருக்க முடியும்? நான் வரவே மாட்டேன்னு சொல்லிட்டேன். நான் அப்படிப் போயிருந்தாக்கூட கமல் அண்ணா என்னைக் கூப்பிட்டு ஒரு அறைவிட்டு, ‘வெளியில உள்ள வேலைகளை விட்டுட்டு ஏன் வந்தே?’ன்னு கேட்பாங்க. ரெண்டாவது, எனக்கு வயசாகிடுச்சுன்னு உணரவே மாட்டேன். கார் டிரைவ் பண்றதுல அலாதி பிரியம். ஆயிரம் கிலோமீட்டர் தூரம்னாலும் சளைக்காமல் நானே ஓட்டுவேன். ஹைவேஸ்ல போனாக்கூட, தூரத்துல தெரியுற டீக்கடையில் சூடா போண்டா பஜ்ஜி போட்டாக்கூட காரை நிப்பாட்டிட்டு டீ சாப்பிடுவேன். அப்படிப்பட்ட ஒருவனால, ஒரே இடத்துல நூறு நாள்கள் இருக்க முடியாதில்ல?”

``வடிவேலு இப்போ நடிக்கல. விவேக் மறைந்துவிட்டார். காமெடி நடிகர்கள் சூரி, யோகிபாபு, சதீஷ்னு பலரும் ஹீரோவாகிட்டாங்க. இப்ப காமெடிக்கு வெற்றிடம் ஆன மாதிரி தெரியுதே?’’
“அதெப்படி ஸ்பேஸ் இருக்குன்னு சொல்ல முடியும். இப்ப ஹீரோக்களே காமெடி பண்றாங்களே! கமல் அண்ணா பல்ராம் நாயுடுவா காமெடியில் அசத்தியிருப்பார். ரஜினி அண்ணாவும் நல்லா காமெடி பண்ணுவார். அப்படியிருக்கும்போது காமெடிக்கு வெற்றிடம் இருக்குன்னு நான் நினைக்கல. பங்காளி வடிவேலு நடிக்காமல் இருக்கறதுக்கு அவரோட பர்சனல் காரணங்கள் இருக்கு. மிகச்சிறந்த கலைஞன். அவர் ஒதுங்கி இருக்கறது எனக்கு மட்டுமல்ல, அவரோட ரசிகர்கள் பலருக்கும் வருத்தம்தான். தம்பி விவேக்கின் திடீர் மரணம் ஜீரணிக்க முடியாதது. ஷூட்டிங் இருக்கோ இல்லையோ, வாரத்துல ஒருமுறையாவது நாங்க பேசிக்குவோம். நாம இப்படித்தான் இருக்கணும். இப்படித்தான் வாழணும்னு நெறிப்படுத்துறது வேணா நம் கையில இருக்கலாம். ஆனா, உடலைத் துறந்து போறது இயற்கை கையிலதான் இருக்கு. அவர் இறப்பு வருத்தம்தான்.”
``உங்க மகன் என்ன பண்றார்..?’’
“ஆதித்யா இப்ப ‘ட்ரீம் கேர்ள்’னு ஒரு படத்துல ஹீரோவாகியிருக்கார். நான்கைந்து படங்கள்ல கமிட் ஆகியிருக்க வேண்டியவர். லாக்டௌன் சூழலால் கொஞ்சம் தாமதம். இந்தக் கொரோனா எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டிடுச்சே! இந்த டைமில் நிறைய படங்கள் பார்த்தார். ஒரு அப்பாவாக, நடிகராக அவருக்குச் சொன்ன அட்வைஸ், ‘இந்தத் தொழிலை உயர்வாக, உயிராக நினை’ என்பதுதான். ‘இயக்குநர்கள் கதை சொல்ல வரும்போது உன் செல்போனை அணைத்து வைத்துவிடு... அவங்க கதை சொல்லும்போது குறுக்கே பேசிடாதே.கடைசி வரை கவனித்துவிட்டு உன் சந்தேகங்களைக் கேள். செட்டுக்குப் போகும்போது சிவாஜி அப்பா மாதிரி நேரம் தவறாமையைக் கடைப்பிடி. கேரவனுக்குள் போய் உட்கார்ந்திடாதே’ இப்படிப் பல விஷயங்கள் சொல்லியிருக்கேன். அறிவார்த்தமான ஒருவர் கற்றுக்கொள்வார்; கடைப்பிடிப்பார்.”
புன்னகை ததும்பப் பேசுகிறார் எம்.எஸ்.பாஸ்கர்.