
‘‘நான் தெலுங்குல படங்கள் நடிச்சுக்கிட்டிருந்தாலும் என் படங்கள் டப் ஆகி தமிழ்ல ரிலீஸாகிட்டுதான் இருந்தது. ‘ஜெர்ஸி', ‘ஷியாம் சிங்க ராய்'னு என் படங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட அவ்வளவு ஆதரவு இருந்தது.
நேச்சுரல் ஸ்டார் நானி... எந்த சினிமாப் பின்புலமும் இல்லாமல் வந்து டோலிவுட்டில் தனக்கான இடத்தைப் பிடித்து சாதித்துக் காட்டிய அசாத்திய இளைஞன். ஆர்.ஜே, உதவி இயக்குநர் என வளர்ந்து இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். 15 வருடங்களில் 30 படங்கள்... நானியின் பயணம் அவ்வளவு எளிதானதல்ல. நானியைத் திரையில் பார்க்கும்போது நம்மையோ அல்லது நாம் தினமும் சந்திக்கும் நபரையோ நிச்சயம் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். மசாலாக்கள் நிறைந்த தெலுங்கு சினிமாக்களின் மத்தியில் நானியின் படங்கள் எப்போதும் ஸ்பெஷல்தான். அதனால்தான், அவர் நேச்சுரல் ஸ்டார். ‘ஜெர்ஸி', ‘ஷியாம் சிங்க ராய்', ‘அன்டே சுந்தரானிக்கி' என நானியின் சமீபத்திய படங்கள் எல்லாமே சென்சேஷனல் ஹிட். ‘தசரா' படத்தில் பயங்கரமான சேஞ்ச் ஓவரில் களமிறங்கக் காத்திருக்கும் நானியைச் சந்தித்தேன்.
``சினிமாப் பயணத்தில் 15 வருடங்கள் நிறைவடையுது. திரும்பிப் பார்க்கும்போது எப்படியிருக்கு?’’
‘‘நான் இந்த அளவுக்கு சினிமாவில் வருவேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கலை. உதவி இயக்குநரா வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். நடிகனான பிறகு, ‘ரெண்டு மூணு படம் பண்ணுவேன்’னுதான் நினைச்சேன். ஆனா, என் படங்களுக்கு மக்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. என் மேலயும் அன்பு காட்ட ஆரம்பிச்சாங்க. அதெல்லாம்தான், என்னை இன்னும் நல்லா பண்ணணும்னு ஓட வெச்சுது. 15 வருடங்கள்ல வெற்றி, தோல்வின்னு எல்லாமே பார்த்துட்டேன். நான் நடிச்ச படம் சரியா போகலைன்னாகூட, மக்களின் அன்பு கிடைச்சுக்கிட்டேதான் இருந்தது. நிறைய கத்துக்கிட்டே இருக்கேன்; இருக்கணும்னு நினைக்கிறேன்.’’

`` ‘வெப்பம்', ‘ஆஹா கல்யாணம்'னு நேரடி தமிழ்ப் படங்கள்ல நடிச்சுட்டிருந்தீங்க. இப்போ ஏன் பண்ணுறதில்லை?’’
‘‘நான் தெலுங்குல படங்கள் நடிச்சுக்கிட்டிருந்தாலும் என் படங்கள் டப் ஆகி தமிழ்ல ரிலீஸாகிட்டுதான் இருந்தது. ‘ஜெர்ஸி', ‘ஷியாம் சிங்க ராய்'னு என் படங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள்கிட்ட அவ்வளவு ஆதரவு இருந்தது. சோஷியல் மீடியால எனக்கு தமிழ்ல அத்தனை மெசேஜ்கள் இருக்கும். எனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. அதனால, தமிழ் நண்பர்கள்கிட்ட கொடுத்துப் படிக்கச் சொல்வேன். ரொம்ப சந்தோஷமா இருக்கும். நான் நடிக்கிற கதைகள் தமிழ் மக்களுக்கும் ஏத்த மாதிரி அமையுது. ‘தசரா'வும் அப்படிப்பட்ட படம்தான்.’’
`` ‘தசரா' - புழுதி பறக்க ரஸ்டிக்கான கிராமத்துப் படமா இருக்குமா?’’
‘‘இதை ஷூட் பண்ணுற ப்ராசஸ் அவ்வளவு ஈஸி கிடையாது. நிலக்கரிச் சுரங்கம்தான் களம். ஒவ்வொரு நாளும் புழுதிக்கு இடையில ஒட்டுமொத்த யூனிட்டும் செயல்படும். நாலு லேயர் மேக்கப் போடணும். ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் முடிஞ்சு மேக்கப்பை எடுக்கவே ரெண்டு மணி நேரமாகும். ரொம்ப சவாலா இருந்தது. ஆனா, இந்தக் கதைக்கு நாம என்ன பண்ணினாலும் தகும்.
இந்தக் கதை தெலுங்கானால ஒரு சின்ன கிராமத்துல நடக்குது. அந்த நிலம், அங்க இருக்கிற மக்கள், அவங்க பேசுற வட்டார வழக்குன்னு அவங்க உலகத்துக்குள் பயணிக்க வெச்சு ஒரு புதுவிதமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்தப் படத்துடைய இயக்குநர் காந்த் ஒடலா அந்த ஊரைச் சேர்ந்தவர். முழுப் பொறுப்பை எடுத்துக்கிட்டு, அந்த உலகத்தைப் பத்தி சின்னச்சின்ன விஷயங்களையும் எனக்கு அறிமுகப்படுத்தி, அந்த வட்டார வழக்கை சொல்லிக்கொடுத்து அந்த ஊர் இளைஞனாகவே மாத்திட்டார். படத்துல வர்ற ஒவ்வொரு கேரக்டரும் பேப்பர்ல உருவாக்கப்பட்டதில்லை. அந்த கிராமத்தின் யதார்த்த மனிதர்கள்தான்.
இந்தக் கதையில என் கேரக்டர் பெயர் தரணி. அவன் நல்லவனும் இல்ல; கெட்டவனும் இல்லை. ஹீரோனா நல்லது மட்டும்தான் பண்ணுவான், வில்லன் கெட்டது மட்டும்தான் பண்ணுவான்னு நிறைய படங்கள் பார்த்துட்டோம், பார்த்துட்டு இருக்கோம். ஆனா, இது அப்படியில்லை. தரணிகிட்ட நிறைய பிரச்னைகள் இருக்கு. ஆனா, ஒரு சூழல் வரும்போது அவனுடைய எழுச்சி பயங்கரமா இருக்கும். ஊரைச் சுத்திக்கிட்டு பொறுப்பற்ற வனாக இருந்தாலும் ஒரு சமயத்துல அவனுடைய விருப்பங்கள் நிறைவேறணும்னு நீங்க நினைக்க ஆரம்பிச்சிடுவீங்க.’’
``படத்தின் ஃபர்ஸ்ட் லுக்ல இருந்து புரமோஷனுக்குப் பயன்படுத்துற சட்டை வரை சில்க் ஸ்மிதா இருக்காங்க, அவங்களுக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்?’’
‘‘ரொம்ப சுவாரஸ்யமான தொடர்பு இருக்கு. படத்துல ஒரு பார் வரும். அதுக்கு பெயர் ‘சில்க் பார்.' அந்த இடம் ஒரு கேரக்டர்னே சொல்லலாம். அந்த பார், அது வெச்சிருக்கிற அதிகாரம், அதைச் சுத்தி நடக்கிற விஷயங்கள்னு கதையில முக்கியப் பங்கு அதுக்கு இருக்கு. நிறைய பேர் இந்தப் படத்துல நான் சில்க் ஸ்மிதா ரசிகனா நடிச்சிருக்கேனான்னு கேக்குறாங்க. அப்படியில்லை. படம் முடிஞ்சு வந்த பிறகும், சில்க் போட்டோவும் அந்த பாரும் உங்க மனசிலேயே இருக்கும்.’’
``இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்னு ரெண்டு பேருமே தமிழ் டெக்னீஷியன்கள்...’’
‘‘ஏற்கெனவே சொன்ன மாதிரி இது தெலங்கானால ஒரு குக்கிராமத்துல நடக்கிற கதை. அதனால, அந்த நிலத்துக்கான கிராமிய இசைதான் வேணும். ஒரு மண்ணின் உணர்வைப் புரிஞ்சு, அவங்க வேர்களுக்குப் போய் அந்த மண்ணுக்கான இசையை ஆத்மார்த்தமா கொடுக்க, இந்தியா முழுக்கப் பார்த்தாலும் சந்தோஷ் நாராயணன்தான் பெஸ்ட் சாய்ஸ். ‘கர்ணன்’, ‘வடசென்னை’, ‘சார்பட்டா பரம்பரை’ன்னு அவர் இசையில எனக்குப் பிடிச்ச படங்கள் நிறைய இருக்கு. சந்தோஷ் சார் பாடல்கள்னு தனி ப்ளே லிஸ்டே வெச்சிருக்கேன். ‘சார்பட்டா பரம்பரை’ படத்துல வர்ற ‘நீயே ஒளி...’ மாதிரி ‘தசரா’ல ஒரு பாட்டு வேணும்னு கேட்டிருக்கேன். அவர் படத்துக்குள் வந்தது மிகப்பெரிய பலம். இந்தப் படம் 60 சதவிகிதம் இரவுலதான் நடக்கும். நைட் போர்ஷன் ஷூட் பண்ணுறதுல சத்யன் சூரியன் மாஸ்டர். இந்தக் கதை தனக்கான நபர்களை அதுவே படத்துக்குள் கூட்டிட்டு வந்தது.’’
`` `நேனு லோக்கல்' படத்துக்குப் பிறகு, நீங்களும் கீர்த்தி சுரேஷும் சேர்ந்து நடிக்கிறீங்க. உங்க நட்பு பற்றி?’’
‘‘நானும் கீர்த்தியும் நெருங்கிய நண்பர்கள். அடிக்கடி வீட்டுக்கு வருவாங்க. நான் வீட்ல இல்லைன்னாகூட, என் மனைவிக்கு போன் பண்ணிட்டு வீட்டுக்குப் போவாங்க. என் மனைவி அஞ்சுவும் கீர்த்தியும் நல்ல நண்பர்கள். ‘நேனு லோக்கல்' எங்க ரெண்டு பேருக்கும் வெற்றியைக் கொடுத்தது. இதுக்குப் பிறகு, நம்ம எப்போ சேர்ந்து படம் பண்ணினாலும் அது ‘நேனு லோக்கல்' வெற்றியை மிஞ்சுற அளவுக்கு இருக்கணும்னு பேசியிருக்கோம். இப்போ ‘தசரா' அமைஞ்சிருக்கு. இந்தப் படத்துல ஊர் மக்கள், அவங்க கடைப்பிடிக்கும் சடங்குகள், சில்க் பார், ஆக்ஷன், டிராமான்னு பல விஷயங்கள் இருந்தாலும் படத்தின் மையமே வெண்ணிலாதான் (கீர்த்தி). இந்தப் படம் முடியும்போது ரெண்டு பேரும் இதுல நடிக்கக் கொடுத்து வெச்சிருக்கணும்னு உணர்ந்தோம். நாங்க ரெண்டு பேரும் அடுத்து சேர்ந்து நடிச்சாலும் இதைவிட ஒண்ணு அமையுமான்னு தெரியலை.’’
``சமுத்திரக்கனியைத் தெலுங்கு சினிமாவுல நீங்க தத்தெடுத்துக்கிட்டீங்க. அவர் இயக்கத்துல நடிச்சுட்டு இந்தப் படத்துல சேர்ந்து நடிச்சது எப்படி இருந்தது?’’
‘‘ஆமா, கனி அண்ணா இப்போ எங்க ஊர்க்காரர் ஆகிட்டார். அவர் இயக்கத்துல ‘ஜண்ட பை கப்பராஜு' நடிச்சேன். அதுதான் இங்க ஜெயம் ரவி நடிச்ச ‘நிமிர்ந்து நில்.' கனி அண்ணா ரொம்ப ஸ்வீட். அவர் என்னோட நலன் விரும்பி. அவர்கூட வொர்க் பண்ணுறது எனக்கு அவ்வளவு பிடிக்கும். ரொம்ப ரொம்ப திறமைசாலி. இப்போ நிறைய தெலுங்குப் படங்கள்ல நடிக்கிறார். ஒரு நடிகரா அவர் எப்படின்னு எல்லோரும் சொல்வாங்க. ஆனா, இயக்குநரா எனக்கு அவர் மேல பெரிய மரியாதை இருக்கு. இந்தப் படத்துல கனி அண்ணனை இதுவரை பார்க்காத லுக்ல பார்ப்பீங்க. பல் செட்டெல்லாம் வெச்சு வேற மாதிரி இருப்பார்.’’
``மணிரத்னம், கமல்ஹாசன் இவங்க ரெண்டு பேரும்தான் நீங்க சினிமாவுக்கு வரக் காரணம்னு நிறைய இடங்கள்ல சொல்லிருக்கீங்க. ரெண்டு பேருடனும் உங்க முதல் சந்திப்பு பத்திச் சொல்லுங்க?’’
‘‘வாழ்க்கையில ரொம்ப ரொம்ப ஆசைப்படுற விஷயம் மணிரத்னம் சார் இயக்கத்துல நடிக்கணும்ங்கிறதுதான். ‘ஓகே கண்மணி' படத்துடைய தெலுங்கு வெர்ஷனுக்கு துல்கர் சல்மானுக்கு டப் பண்ண முடியுமான்னு அவர் இணை இயக்குநர் கேட்டார். ‘மணி சார் டப்பிங்கின்போது இருப்பாரா? அப்படி சார் இருந்தா பண்ணுறேன்'னு சொன்னேன். ஏன்னா, அவர்கூட வொர்க் பண்ணினேன்னு சொல்லிக்கலாம் இல்லையா? சார் கூட டப்பிங்ல இருந்த நேரங்கள் மறக்கவே முடியாது. நான் அவருக்கு எப்படியான ரசிகன்னு புரிஞ்சுக்கிட்டார். அவர் படங்களின் ஹீரோக்கள் எப்படிப் பேசுவாங்களோ அதை அப்படியே பிடிச்சுப் பண்ணிட்டேன். ஒவ்வொரு டயலாக் பேசி ஓகேயானதும் அவர் ஒரு ஸ்மைல் பண்ணுவார். அதுக்குப் பிறகு, நிறைய முறை சார்கிட்ட பேசியிருக்கேன். நானும் கார்த்தியும் சேர்ந்து அவர் இயக்கத்துல நடிக்கிறதா இருந்தது. அது நடக்கலை. அவர்கிட்ட இருந்து நடிக்க அழைப்பு வருமான்னு காத்துக்கிட்டு இருக்கேன்.

கமல் சாருடைய முதல் மீட்டிங் சொல்றேன். என்னோட ‘ஆஹா கல்யாணம்' படத்துடைய ஷூட்டிங் சென்னையில நடந்துட்டிருந்தது. அப்போ பக்கத்துல இன்னொரு பட ஷூட்டிங் போயிட்டிருந்தது. அதுல வொர்க் பண்ணுற ஒளிப்பதிவாளர் ஷாம்தத் என்னைப் பார்க்க வந்தார். யார் படம் போய்க்கிட்டிருக்குன்னு கேட்டா ‘விஸ்வரூபம்'னு சொன்னார். கமல் சார் பக்கத்துல இருக்கார்னு தெரிஞ்சதும் ரொம்ப ஆர்வமாகிடுச்சு. ‘வாங்க, சார்கிட்ட உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்'னு சொன்னார். அந்த செட்டுக்குள்ள போனவுடனே என் கண்கள் அவரைத் தேட ஆரம்பிச்சது. ஒருத்தர் பைக்ல ரிக் மாட்டிக்கிட்டு இருந்தார்.அந்த இடத்துல நின்னோம். அவர் முகம் எங்க தெரியுதுன்னு என் கண்கள் தேடிக்கிட்டே இருக்கு. ‘நானி... உன் எதிர்ல பைக்ல ரிக் மாட்டிக்கிட்டு இருக்கிறது கமல் சார்தான்'னு ஷாம்தத் சொன்னார். எனக்கு செம ஷாக். வாழ்க்கையிலேயே மறக்க முடியாத மொமன்ட் அது. அந்தப் பையனுக்கு ரிக் மாட்டுறதுதான் வேலையே. ஆனா, அந்தப் பையனுக்கு எப்படி ஈஸியா ரிக் மாட்டுறதுன்னு சொல்லிக் கொடுத்துட்டிருந்தார். கமல் சார் ஏன் கமல் சாரா இருக்கார்னு கண்ணால பார்த்தேன். எல்லா கிராஃப்டையும் எப்படிக் கத்துக்கிறார், அவர் புரிஞ்சுக்கிற விதம், அதை மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறது எல்லாமே ஆச்சர்யம்தான். எத்தனை திறமைசாலிகளும் ஜாம்பவான்களும் இருந்தாலும் ஒரே ஒருத்தர்னா அது கமல் சார்தான்.''
``தமிழ்ப் படங்கள ஆரம்பத்துல இருந்தே கவனிச்சுட்டு வர்றீங்க. சமீபமா உங்களைக் கவர்ந்த இயக்குநர்?’’
‘‘மாரி செல்வராஜ். ‘கர்ணன்' பார்த்து அசந்துபோயிட்டேன். நிச்சயமா லோகேஷ் கனகராஜை சொல்லியே ஆகணும். அவருடைய வொர்க் அமேஸிங்கா இருக்கு. ‘விக்ரம்' படத்தை அவ்வளவு ரசிச்சேன். என்னை மாதிரி கமல் சார் ரசிகர்களுக்கு ‘விக்ரம்' சூப்பரான ட்ரீட். எனக்கு எப்போல்லாம் எனர்ஜி தேவைப்படுதோ அப்போல்லாம் ‘விக்ரம்'ல சில சீன்கள் பார்த்து என்னை மோட்டிவேட் பண்ணிக்குவேன்.
நிறைய தமிழ் இயக்குநர்கள் எனக்குக் கதை சொல்றாங்க. தமிழ் சினிமா, தமிழ் இயக்குநர்களுக்கு என் மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்குன்னு நினைக்கிறேன். சீக்கிரமா சூப்பரான தமிழ்ப் படம் பண்ணுவேன்.''