Published:Updated:

"ஒரே டேக் உதை, பேசாம இருந்த தனுஷ், விஜய் சேதுபதி கொடுத்த பரிசு!" - `அசுரன்' நித்தீஷ் வீரா

நித்தீஷ் வீரா

நடிகர் நித்தீஷ் வீரா பேட்டி...

Published:Updated:

"ஒரே டேக் உதை, பேசாம இருந்த தனுஷ், விஜய் சேதுபதி கொடுத்த பரிசு!" - `அசுரன்' நித்தீஷ் வீரா

நடிகர் நித்தீஷ் வீரா பேட்டி...

நித்தீஷ் வீரா

`புதுப்பேட்டை' படத்தில் அறிமுகமாகி, அடுத்தடுத்து சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர் நித்தீஷ் வீராவுக்கு, `அசுரன்' மிகப்பெரிய ஜாக்பாட். இந்தப் படத்தில் பாண்டியன் எனும் இவரது வில்லத்தனக் கேரக்டரும், அதை இவர் வெளிப்படுத்திய விதமும் அத்தனை நேர்த்தி.

மக்களுக்கு உண்மையாகவே இவர் மீது கோபம் வரும் அளவுக்கு நடிப்பால் அசத்தியிருந்தார். `அசுரன்' அனுபவத்தையும், தனது சினிமா பயணத்தைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், நித்தீஷ் வீரா.

`அசுரன்' படத்துல உங்க நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சிருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க?

"ரொம்ப சந்தோஷமா இருக்கு. `அசுரன்' ஷூட்டிங் ஸ்பாட்ல `கொஞ்ச நாளைக்கு ஊர் பக்கம் போகாதே, பத்திரமா இரு'ன்னு வெற்றி சார் சொன்னார். ஏன் அப்படிச் சொன்னார்னு அப்போ புரியல, இப்போதான் புரியுது. படம் பார்த்தவங்க எல்லோரும் என்மேல செம கோபத்துல இருக்காங்க. என் கையை தனுஷ் வெட்டும்போது, தியேட்டர்ல அவ்ளோ கைத்தட்டல், விசில் சத்தம் கேட்குது. ஒரு பையன் போன் பண்ணி, `படம் சூப்பரா இருந்தது. நீங்க செமயா நடிச்சிருந்தீங்க'ன்னு சொல்லிட்டு, `ஒண்ணு சொல்வேன், தப்பா எடுத்துக்கக் கூடாது. உங்க கையை வெட்டுன பிறகுதான் என் மனசு ஆறுதலாச்சு'ன்னு சொன்னான். எனக்கு செம ஷாக். இந்தளவுக்கு அந்தக் கேரக்டர் அவங்க மனசுக்குள்ள போயிருக்குன்னு நினைக்கும்போது, சந்தோஷமா இருக்கு. வெற்றி சாருக்குத்தான் நன்றி சொல்லணும்."

படத்துல உங்களோட சின்ன சின்ன ரியாக்‌ஷன்களும் கவனிக்கப்பட்டன. வெற்றி மாறன் உங்களை எப்படி வேலை வாங்கினார்?

வெற்றிமாறன் - நித்தீஷ் வீரா
வெற்றிமாறன் - நித்தீஷ் வீரா

"அவர் நடிகர்களை ரொம்ப நல்லாப் பார்த்துக்குவார். `உனக்கு இந்த டயலாக் வரல, இன்னொரு முறை பேசு'ன்னுகூட சொல்லமாட்டார். `இதுதான் சூழல். இந்த இடத்துல உங்க கேரக்டர் இந்த எமோஷனை வெளிப்படுத்தணும். உங்களுக்கு என்ன வருதோ, பேசுங்க'ன்னு சொல்வார். நடிப்புல சின்ன சின்ன கரெக்‌ஷன் பண்ணி, அதை சூப்பரான காட்சியா மாத்திடுவார். அவருடைய `விசாரணை' படம் பார்த்து அசந்திருக்கேன். எனக்கு செல்வராகவன் சார்மேல ஒரு பயம் இருக்கும். காரணம், அவர் மனசுக்குள்ளே இருக்கிற விஷயம் நம்மகிட்ட இருந்து வர்றவரை நம்மளை விடவேமாட்டார். இவரும் அப்படித்தானோன்னு நினைச்சு வந்தேன். ஆனா, வெற்றி மாறன் சார் ஸ்டைல் வேற!"

சத்யராஜின் அமாவாசை கேரக்டரையும், `அசுரன்'ல உங்க கேரக்டரையும் வெச்சு வந்த மீம்ஸ் பார்த்தீங்களா?

"பார்த்தேன், சந்தோஷமா இருந்தது. அதுக்குக் காரணம் வெற்றி சார்தான். `புதுப்பேட்டை'யில நடிக்கும்போது, `இந்த மாதிரி ஒரு படம் இதுக்கு முன்னாடி வந்ததில்ல, அதனால கொண்டாடப்படும்'னு நினைச்சோம். ரிலீஸானப்போ பெருசா ரெஸ்பான்ஸ் இல்லை. இப்போ அந்தப் படத்தைக் கொண்டாடித் தீர்க்குறாங்க. அதனால, இயக்குநருக்கோ, தயாரிப்பாளருக்கோ நடிகர்களுக்கோ எந்தப் பயனும் கிடையாது. `அசுரன்' படத்தைப் பொறுத்தவரை வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியாச்சே... நல்ல ஆதரவு கிடைக்கும்னு நினைச்சோம். ஆனா, இந்தளவுக்குக் கொண்டாடுவாங்கன்னு எதிர்பார்க்கல!"

`புதுப்பேட்டை' படத்துல நீங்க தனுஷை வேலைக்கு சேர்த்துவிடுவீங்க. இதுல தனுஷ் உங்களை வேலைக்கு சேர்த்துவிடுறார். இதை எப்படிப் பார்க்குறீங்க?

நித்தீஷ் வீரா
நித்தீஷ் வீரா

"நடிக்கும்போது எனக்கு அது தெரியல. படம் பார்த்துட்டு, `கர்மா இஸ் பூமராங்'னு மக்கள் சோஷியல் மீடியாவுல சொல்லும்போதுதான், `அட ஆமாம்!'னு நினைச்சேன். அப்போ, அவர் என் தங்கச்சிக்குத் தாலி கட்டி எனக்கு எதிரா இருப்பார். இதுல, அவர் கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணை அடிச்சு அவருக்கு எதிரா நான் இருக்கேன். அதேபோல, அபிராமியை நான் உதைக்கிற காட்சிக்குத் தியேட்டர்ல எல்லோரும் டென்ஷனாகிட்டாங்க. `நீ உதைக்கிறதுல அந்தப் பொண்ணு கீழே விழணும். ஆனா, கவனம்'னு சொன்னார் வெற்றி மாறன் சார். எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தது. ஆனா, அந்தப் பொண்ணு செம ஜாலியா `நீங்க உதைங்க சார். நான் விழுந்திடுறேன்'னு சொல்லிடுச்சு. டேக் ஓகே ஆகலைன்னா, மறுபடியும் உதைக்கணுமேனு பயந்து, ஒரே டேக்ல நல்லா உதைச்சுட்டேன். வெற்றி மாறன் சாரும் டேக் ௐகே சொல்லிட்டார்."

படம் பார்த்துட்டு யாரெல்லாம் பேசினாங்க?

"பா.ரஞ்சித் சார், கோபி நயினார் சார்னு பலபேர் பேசுனாங்க. `படம் பார்த்துட்டு உன்னை ரஜினி சார் பாராட்டினார். நீ போய் சாரைப் பாரு'ன்னு தாணு சார் சொன்னார். சீக்கிரமே ரஜினி சாரைப் பார்க்கணும். சூரி போன் பண்ணி, `அந்த சீன்ல உன்னை அரிவாளை எடுத்து வெட்டணும்னு தோணுச்சு மச்சான்'னு சொன்னார்."

உங்க முதல் படமான 'புதுப்பேட்டை' வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?

நித்தீஷ் வீரா
நித்தீஷ் வீரா

"என் சொந்த ஊர் மதுரை. எங்க குடும்பமே போலீஸ் குடும்பம்தான். அப்பாவும், ரெண்டு தம்பிகளும் போலீஸா இருக்காங்க. நான் டிகிரி முடிச்சதும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகணும்னு நினைச்சேன். ஆனா, என்னை சினிமாவுக்குக் கூட்டிக்கிட்டு வந்தது `வல்லரசு' இயக்குநர் மகாதேவன் சார். அந்தப் படத்துல நடிக்க வைக்கிறதா சொன்னார். ஆனா, நடக்கல. சும்மா இருக்க வேண்டாம்னு கூத்துப் பட்டறையில் சேர்ந்தேன். விஜய் சேதுபதி, நான் எல்லோரும் ஒரே டீம். சுனாமி வந்த சமயம் அது. நாங்க அப்போ சுனாமி பாதிப்பை நாடகமா போட்டதைப் பார்த்த செல்வராகவன் சார், தனுஷ்கூட `புதுப்பேட்டை'யில நடிக்க வெச்சார்."

தனுஷுக்கும், உங்களுக்குமான நட்பு பற்றி?

"அப்போ இருந்ததுக்கும், இப்போ இருக்கிறதுக்கும் தனுஷின் வளர்ச்சி அபாரம். இப்போ அவர் முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்னு பன்முகத் திறமையோடு கலக்கிக்கிட்டிருக்கார். ஆனா, `புதுப்பேட்டை' சமயத்துல எப்படிப் பழகினாரோ, அதேமாதிரிதான் இப்போவும் இருக்கார். `அசுரன்' படத்துல எனக்கும், தனுஷுக்குமான விரோதம் எங்க பார்வையிலேயே இருக்கணும்னு டைரக்டர் சொல்லிட்டார். அதனால, ஃப்ரெண்ட்லி ஃபீல் வந்திடுமோன்னு, ஷூட்டிங் ஸ்பாட்ல பேசிக்காமதான் இருந்தோம்."

தனுஷ், விஜய் சேதுபதினு உங்ககூட நடிச்சவங்க எல்லோரும் வளர்ந்துட்டாங்க. ஆனா, நமக்கு ஏதோ ஒண்ணு மிஸ் ஆகுதேன்னு நினைச்சதுண்டா?

நித்தீஷ் வீரா
நித்தீஷ் வீரா

" 'வெண்ணிலா கபடிக்குழு' படத்துல கபடி டீம் கேப்டனா நடிச்சிருந்தேன். இந்தப் படத்துக்குப் பிறகு, எல்லோரும் `அடுத்து ஹீரோவா'ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குத் தகுந்தமாதிரி எனக்கும் நாலு படங்கள்ல ஹீரோவா நடிக்கிற வாய்ப்பு வந்தது. நானும் ரெண்டு வருடம் சின்ன சின்ன கேரக்டர்களையெல்லாம் தவிர்த்துட்டு, ஹீரோவா நடிக்க தயாராகிட்டு இருந்தேன். ஆனா, நாலு படத்துல ஒரு படம்கூட ஆரம்பிக்கல. இடையில் கல்யாணம், குழந்தைன்னு ஆகிடுச்சு. ஹீரோ ஆசையில நாலு வருடத்தை இழந்துட்டேன். பிறகு, மறுபடியும் சின்ன சின்ன கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சேன். ஒருமுறை விஜய் சேதுபதி என்கிட்ட `மச்சான், நாமெல்லாம் நடிகர்கள்டா. நடிச்சுக்கிட்டே இருப்போம். நமக்கான இடத்தை மக்கள் முடிவு பண்ணுவாங்க'னு சொன்னார். அது ரொம்ப ரொம்ப உண்மை. அதனால, ஹீரோ, வில்லன்னு எதையும் பார்க்காம, எந்தக் கேரக்டரா இருந்தாலும் அதுல என்னை நிரூபிக்கணும்னு நடிச்சுக்கிட்டிருக்கேன்."

பட வாய்ப்பு இல்லாத சமயத்துல குடும்பத்துல என்ன சொன்னாங்க?

"ஹீரோவா நடிச்ச படம் ரிலீஸாகும்னு காத்துக்கிட்டே இருக்கிறது, பெரிய வலி. என் குழந்தைகளும் வளர ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க தேவைகளையும் பூர்த்தி செய்யவேண்டிய சமயம். அந்த நேரத்துல வந்த வாய்ப்புதான், `காலா'. வாய்ப்பில்லாம இருந்த சமயங்கள்ல என் தம்பிகள் உதவி பண்ணாங்க. என் மனைவியும் என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டு அவங்க தேவைகளைக் குறைச்சுக்கிட்டாங்க. ஒரு பால் பாக்கெட் வாங்கினா, அதை ரெண்டு நாளுக்கு வெச்சுக்குவோம். கோயம்பேடு மார்க்கெட்டுக்குப் போய் மொத்தமா காய்கறிகள் வாங்கிட்டு வந்து நாள்களை ஓட்டுவோம். கஷ்டப்படுறோம்னு நினைச்சதில்ல. எப்படியாவது ஒருநாள் ஜெயிச்சிடுவோம்னு நம்பிக்கை எப்போவும் இருந்தது, இருக்கு."

விஜய் சேதுபதிகூட 'லாபம்' படத்துல நடிக்கிற அனுபவம்?

நித்தீஷ் வீரா
நித்தீஷ் வீரா

"என் நண்பன் விஜய் சேதுபதிக்கு நண்பனா நடிக்கிறேன். ஜனநாதன் சார் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் படத்துல நடிக்கணுங்கிற ஆசை `லாபம்' மூலமா நிறைவேறிடுச்சு. என் நண்பன் சேது இப்போ பெரிய மாஸ் ஹீரோ ஆகிட்டார். இப்போ அவர்கூட நடிக்கிறது சந்தோஷம். என்னதான் இவ்ளோ பெரிய இடத்துல இருந்தாலும், அப்போ இருந்த அதே நட்பு இப்போவும் அவர்கிட்ட இருக்கு. இன்னும் மாமா, மச்சான்னுதான் கூப்பிட்டுக்கிறோம். இந்தப் பண்புதான் சேதுவுக்கு இவ்வளவு ரசிகர்களைப் பெற்றுத் தந்திருக்கு. `அசுரன்'ல சூப்பரா நடிச்சிருக்கனு எல்லோரும் சொல்றாங்க மச்சி. நான் இன்னும் படம் பார்க்கல, பார்த்துட்டு சொல்றேன்"னு சொல்லிட்டு, எனக்கு ஒரு குடையைப் பரிசா கொடுத்தார்."