சினிமா
தொடர்கள்
Published:Updated:

“என் முதல் சம்பளம் 1001 ரூபாய்!”

நிழல்கள் ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
நிழல்கள் ரவி

முதல்படமா டி.என்.பாலு சார் இயக்கத்துல ‘மேற்கில் உதிக்கும் சூரியன்'ல நடிச்சேன். அந்தப் படம் வளரும் சமயம் பாலு சார் இறந்துட்டார்.

தமிழ் சினிமாவில் 1980 காலகட்ட நடிகர்களில் ரொம்பவும் அப்டேட் ஆக அசத்துபவர் ‘நிழல்கள்' ரவி. பெரியதிரை, சின்னத்திரை, வெப்சீரீஸ், வாய்ஸ் ஓவர் எனப் பன்முகமாக கெத்து காட்டுபவர். அனிமேஷன் படங்களில் தொடங்கி அமிதாப் வரை தமிழில் பேச வைப்பவர்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்' படத்தில் கடம்பூர் சம்புவராயராக மிரட்டவுள்ள நிழல்கள் ரவியிடம் பேசினேன்.

``சினிமாவில் 42 வருஷமா பயணிக்கிறீங்க... இன்னிக்கு இருக்கிற நடிகர்களுக்கு இத்தனை வருட அனுபவத்தில் நீங்க சொல்ல வர்றது?’’

‘‘எந்தப் பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தேன். எப்பவும் இருக்கறத வச்சு சந்தோஷப்படுவேன். அதனால திருப்தியோட இருக்கேன். வாழ்க்கையில இன்னொருத்தரோட ஒப்பிட்டுப் பார்த்துக்கிட்டது இல்ல. வந்த வாய்ப்புகளை விட்டதும் இல்ல. இதனாலேயே என் சந்தோஷம் நிலைச்சு இருக்கு. என் குடும்பத்துல யாருக்கும் சினிமா அறிமுகம் கிடையாது. எங்க அப்பாவோட பூர்வீகம் திருவாரூர். அம்மாவோட பூர்வீகம் கும்பகோணம். பெரிய குடும்பம். வீட்டுல நான் கடைக்குட்டி சிங்கம். சின்ன வயசில இருந்தே என்னை சினிமாவுக்கு அனுப்ப மாட்டாங்க. எங்க அக்காக்கள் காலேஜ் படிக்கறப்ப சினிமாவுக்குப் போறதுண்டு. அவங்க துணைக்கு தியேட்டருக்குப் போவோம். அப்படித்தான் சினிமா பார்க்க ஆரம்பிச்சேன். ஆனா, எங்க மூத்த அண்ணன் சுந்தர்ராஜன் எல்லாப் படத்தையும் பார்த்துட்டு வந்து வீட்ல நடிச்சுக் காட்டுவார். நான், காலேஜ் படிக்கறப்ப டான்ஸ்ல ஆர்வம் வந்துச்சு. அங்கிருந்து சினிமா ஆசை பத்திக்கிச்சு.

“என் முதல் சம்பளம் 1001 ரூபாய்!”

எனக்கு முதல் படம் அமையற வரை, மாசமாசம் சாப்பாட்டுக்கு வச்சுக்கோன்னு அப்பா ஐந்நூறு ரூபா அனுப்பி வைப்பார். முதல்படமா டி.என்.பாலு சார் இயக்கத்துல ‘மேற்கில் உதிக்கும் சூரியன்'ல நடிச்சேன். அந்தப் படம் வளரும் சமயம் பாலு சார் இறந்துட்டார். அதன்பிறகு தான் ‘நிழல்கள்'ல அறிமுகமானேன். முதல் சம்பளமா ஆயிரத்தி ஒரு ரூபாய், பாரதிராஜா சார் கையால கொடுத்தார். ரொம்ப வருஷமா அதை பத்திரமா வச்சிருந்தேன். ‘நிழல்கள்' வெளியானதும் எங்க அப்பாவை அழைச்சிட்டுப் போயிருந்தேன். என்னைத் திரையில் பார்த்ததும் அவருக்கு அவ்ளோ சந்தோஷம். ‘சூரசம்ஹாரம்' படப்பிடிப்பு அப்ப எனக்குக் கல்யாணமாச்சு. கலைஞர் சார், சிவாஜி சார், கமல் சார்னு எல்லாரும் என் கல்யாணத்துக்கு வந்ததை எங்க அப்பா பெருமிதமா பார்த்து ரசிச்சது மறக்க முடியாத தருணம்.

கற்றதும் பெற்றதும் நிறைய இருக்கு. என் கால்ஷீட் டைட்னால சில நல்ல படங்களை இழக்கவும் செய் திருக்கேன். இடையிடையே படம் டைரக்ட் பண்ணலாம்னு தோணும். ஆனா, நடிப்பில பிசியாகிடுவேன். ஒருநாள் கண்டிப்பா நான் இயக்குநர் ஆவேன்!''

`` ‘கே.ஜி.எஃப்' முதல் பாகத்துக்கு வாய்ஸ் ஓவர் கொடுத்திருப்பீங்க... சமீபத்துல வந்த அதன் பார்ட் 2-க்கு நீங்க வாய்ஸ் கொடுக்கலைன்னாலும், இப்படி ஒரு மெட்டாலிக் வாய்ஸை எப்படி இன்னமும் பராமரிக்குறீங்க?’’

‘‘அமிதாப், ஜாக்கி ஷெராப் படங்கள் இங்க வந்தப்ப, எல்லாருக்கும் அவங்க பேசுற மாதிரி வாய்ஸ் கொடுத்தி ருப்பேன். ஆனா, கே.ஜி.எஃப்-ல என் குரல்லதான் பேசியிருப்பேன். அதோட டப்பிங் முடிச்சதும், படம் மிகப்பெரிய ஹிட் ஆகும்னு சொல்லிட்டு வந்தேன். படம் ஓடும்னு நினைச்சேனே தவிர, என்னோட வாய்ஸ் இந்த அளவுக்கு பாப்புலர் ஆகும்னு நினைக்கல. அமிதாப் படத்தைப் பார்த்துட்டு வந்து எனக்கு இந்தி தெரிய லைன்னாலும், இந்தியில அவர் மாதிரியே பேசி நடிப்பேன். பின்னாளில் அமிதாப்புக்கே டப்பிங் பேசுவேன்னு நினைச்சதில்ல. என் வாய்ஸைப் பராமரிக்க பெருசா எதுவும் மெனக்கெட்டதில்ல. நான் டீடோட்லரும் கிடையாது. எல்லாப் பழக்கமும் உண்டு. ஆனா, எல்லாமே லிமிட்டா வச்சுக்குவேன்.''

“என் முதல் சம்பளம் 1001 ரூபாய்!”

`` ‘பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது?’’

‘‘மணிரத்னத்தோட ‘பகல்நிலவு', ‘நாயகன்'ல நடிச்சிருக்கேன். இப்ப ‘பொன்னியின் செல்வன்' படத்துக்குக் கூப்பிட்டார். சம்புவராயர் கேரக்டர் பண்ணியிருக்கேன். படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், சரத்குமார், விக்ரம்பிரபு நடிகர்கள் எல்லாருமே ஒண்ணா உட்கார்ந்து பேசி மகிழ்ந்தோம். கொரோனா காலத்துக்குப் பிறகு இப்படி படப்பிடிப்பில் அத்தனை நடிகர்களும் சேர்ந்து உட்கார்ந்து பேசறது சந்தோஷமா இருந்துச்சு. அடுத்து விஜய் ஆண்டனியோட ‘ரத்தம்’ படத்தில் நடிக்கறேன். தெலுங்கிலும் படங்கள் பண்ணிட்டிருக்கேன்.''