
எப்பவும் சிம்ரனுடனான என் காம்பினேஷன் தமிழ் சினிமாவில் பேசப்பட்டிருக்கு. ஹீரோவுக்கு இணையாக வந்து நிற்கிற கேரக்டர்.
“ஒரு காலத்தில் பாடல்களுக்காகப் படம் ஓடுச்சு. ஒரு சமயம் ஆக்ஷன்னு ஓடுச்சு. கொஞ்சம் முன்னாடி பிரமாண்டம்னு ஓடுச்சு. ஒரு காலகட்டத்தில் எதுவுமே இல்லாமல் சிம்பிளாக இருந்ததால்தான் நல்லா ஓடுச்சு. இது ஒரு வட்டம். ஒரு காலத்தில் நடிகர் மட்டுமே போதும் என்ற நிலை இருந்தது. இன்னிக்கான காலகட்டத்தில் யார் ஹீரோன்னா, அது ஸ்கிரிப்ட்தான். திரைக்கதை சும்மா விறுவிறுன்னு போகணும்னு வந்து நிக்குது. இது எல்லோருக்கும் தெரிஞ்ச உண்மைதான். இதற்கு ‘அந்தகன்’ அருமையான உதாரணம்” வார்த்தைகளைக் கோத்துப் பேசுகிறார் பிரசாந்த்.
“ ‘அந்தாதுன்’ இந்தியில் பெரும் வெற்றி பெற்ற படம். இதை எடுக்க நினைக்க உங்களை எது தூண்டியது?”
“ஒரு சினிமாவில் கண் பார்வை அற்றவராக நடிப்பது கஷ்டம். இன்னொன்று, ஹீரோ கண் பார்வை அற்றவரா இல்லையா என்பது ஒரு கேள்வி. இது ஒருபக்கம். இன்னொரு பக்கம் அவன் பியானோ வாசிக்கறவன். இசை கற்றவன். நான் முறைப்படி பியானோ கற்றவன். அப்படியே பியானோ வாசிக்கிற உணர்வைக் காட்டமுடியும். இந்தப் படத்தைப் பார்த்ததும் அப்பா ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார். `அந்தாதுன்’ முழுக்க நினைச்சுப் பார்க்க முடியாத திருப்பங்களும், டார்க் காமெடியும், வாய்விட்டுச் சிரிக்கிற மாதிரி இடங்களும், பரபரப்புமாகப் போனது. அதோட நல்ல வசூலும் மூன்று தேசிய விருதுகளும் வேற கிடைச்சது.
படத்தில் ஹீரோ ஒரு கொலையைக் கண்ணால பார்த்துவிடுகிறார். பிறகு அடுத்தடுத்தும் கொலைகள் நடக்குது. அதிலிருந்து தப்பிச்சுப் போவதற்கான இடத்தில்தான் கதை போகும். இந்தப் படம் பெரிய பட்ஜெட். இந்தியை விடவும் பெரிய நட்சத்திரக் கூட்டம். என்னுடைய கரியரில் அந்தகன் முக்கியமான படம்னு கண்டிப்பாகச் சொல்லணும்.”

“தபு அந்த கேரக்டரில் வேற லெவலுக்குப் போயிருப்பாங்க. இதில் சிம்ரன் எப்படி?”
“எப்பவும் சிம்ரனுடனான என் காம்பினேஷன் தமிழ் சினிமாவில் பேசப்பட்டிருக்கு. ஹீரோவுக்கு இணையாக வந்து நிற்கிற கேரக்டர். நாங்க இரண்டு பேரும் இதில் எதிரும் புதிருமாக நிற்கிற போது அது பார்க்க இன்னும் நல்லாருக்கும். எப்பவும் நாங்க நடிக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் ரொம்ப உதவியாக இருப்போம். இது எங்களுக்கு ஆறாவது படம்னு நினைக்கிறேன். பிரியா ஆனந்திற்கும் நல்ல இடம் இருக்கு. ஊர்வசி எல்லாம் வேடிக்கையில்லை. கேமிரா அவங்க பக்கம் திரும்பிட்டால் அவங்களே வேற உருவம் எடுக்கிறாங்க. போலீஸும் மனிதர்கள்தான். அவங்க பிரச்னை, பணிபுரிகிற இடம், ஒரு குற்றம் நடந்ததைப் பார்க்கும்போது அவங்க மனநிலை என்ன, ப்ரஷர் வரும்போது என்ன செய்வாங்கன்னு அவங்களோட நடைமுறைகளும் வந்திருக்கு. அந்தகன் த்ரில்லர் மட்டுமல்ல. எமோஷனும் இணைந்தது. இதில் ரொம்பவும் முக்கியமான ரோலில் சமுத்திரக்கனி வர்றார். என்கூட நடிக்கணும்னு பிரியப்பட்டு வந்து நின்னார். இப்படி ஓரு நல்ல கூட்டணி அமைஞ்சிருக்கு.”
“கார்த்திக் வந்துட்டாரே...”
“உள்ளே வந்து நுழையும்போதே ‘நான் உனக்கு சித்தப்பாடா'ன்னு அன்பு பாராட்டிக்கிட்டு வந்தார். அருமையாக தோளில் கைபோட்டுப் பேசி சிநேகத்தோடு நடிச்சுக் கொடுத்தார். சில சினிமாவில்தான் எல்லார் நடிப்பும் பிரமாதமாக இருக்கும். இதைப் படம் பண்ணும்போதே அனுபவிக்க முடிஞ்சது நல்ல விஷயமாகப் படுது. கார்த்திக், கே.எஸ்.ரவிக்குமார் ரெண்டு பேரையும் நல்ல திரைக்கதையில் கொண்டு வந்து நிறுத்திட்டோம்னு மனதில் பட்டுட்டால், அவங்க டோட்டல் சரண்டர். யோகி பாபு முதல் நாள் ஷூட் வந்ததும் ‘சார் நான் உங்க ரசிகன். எங்க அண்ணன் உங்க மிகப்பெரிய ரசிகன்'னு சொல்லிட்டு, போன் போட்டுக் கொடுத்துட்டார். அவரோட உற்சாகக் குரலில் போனே அதிருது. இந்த அன்புதான் என்னைக் காலம் காலமாகத் தொடர்ந்துகிட்டே வருது.”
“உங்களுக்கு ஒரு குறையும் இருந்ததில்லை... அவ்வப்போது சட்டுனு இடைவெளி விட்டுவிடுகிறீர்கள்...”
“இன்னிக்கு டிரெண்டாக ஆகியிருக்கிற பேய்ப்படங்களுக்கு முன்னமே ‘ஷாக்'னு ஒரு படம் கொடுத்தோம். ‘பொன்னர் சங்கர்’ கலைஞர் ஐயா கைவண்ணத்தில் வந்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அதுக்கு ஒதுக்கியிருக்கேன். அவர் ஷூட்டிங் ஸ்பாட் வரைக்கும் வந்து பார்த்த படம். இன்னிக்கு இருக்கிற மாதிரி கிராபிக்ஸ் எதுவும் இல்லாமல் போர்க்காட்சிகளோடு எடுத்த படம். பாகுபலிக்கெல்லாம் முன்னால் நடந்த படம் அது. சில திட்டங்கள் போட்டபடி நடக்கலை. அதை நேரம்னு சொல்ல வேண்டியிருக்கும். எனக்கு சினிமாவைத் தவிர ஒண்ணும் தெரியாது. ‘மம்பட்டியான்’ இரண்டு வருஷம் எடுத்த படம். இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லணும்னா, கேட்ட கதைகள் அவ்வளவு பொருத்தமா இல்லை. சரி இனிமே சரிபண்ணிக்குவோம். கேரக்டரை நம்ம லெவலுக்குக் கொண்டு வரணும்னு நினைச்சது போய், கேரக்டருக்குள்ளே நாம் எந்த அளவுக்கு இறங்கணும்னு நினைக்க ஆரம்பிச்சிருக்கேன்.”
“உங்கள் அப்பா உங்களின் வாய்ப்புகளைத் தடுத்திட்டார்னு ஒரு செய்தி இருந்துகிட்டே இருக்கே?”
“நான் மருத்துவக்கல்வியில் சேர நுழைவுத்தேர்வுக்குப் படிச்சிட்டிருந்தேன். சத்யராஜ் சார் அவங்க தங்கை கல்யாணத்திற்குப் பத்திரிகை கொடுக்க வந்தவர் என்னைப் பார்த்திட்டு ‘தியாகராஜன் சார் பையன் பிரமாதமாக இருக்கான்’னு எல்லோரிடமும் சொல்லிட்டார். உடனே பிரதாப் போத்தன் என்னை ‘டெய்ஸி' படத்திற்குக் கூப்பிட்டார். ராமாநாயுடு அழைத்தார். அப்பா `பையன் படிக்கணும்’னு சொல்லிட்டார். அப்புறம் அன்பாலயா பிரபாகரன் `ஒரு படத்தில் நடிக்கட்டும்’னு என்னை வற்புறுத்திக் கூப்பிட்டு, பதினெட்டு நாளில் ஷூட்டிங் முடிச்சு அனுப்புறேன்னு சொன்னார். அதுதான் ‘வைகாசி பொறந்தாச்சு.' அதன் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எம்.டி.வாசுதேவன் ஐயா வந்து ‘பெருந்தச்ச’னுக்குக் கூட்டிட்டுப்போனார். அப்புறம் பாலுமகேந்திராவின் ‘வண்ண வண்ணப் பூக்கள்.' அப்படி சூழ்நிலையால் நடிகன் ஆனவன் நான்.
‘ஐ லவ் யூ’ ஷூட்டிங் ஆரம்ப தினத்தில் எனக்குப் பதினேழு வயதுதான் ஆகியிருந்தது. முதல் நாள் ஷூட்டிங்கிற்கு தர்மேந்திராவும், அமிதாப்பும் வந்திருந்து ஆசீர்வாதம் செய்ததெல்லாம் நடந்திருக்கு. நடிகர் திலகம் சிவாஜி அழைத்து ‘நல்லா வருவே, ஷூட்டிங்கிற்கு அரை மணி நேரத்திற்கு முன்னாடி போ, டைரக்டர் சொன்னதைக் கேளு, கூட நடிக்கிற நடிகைகிட்டே எந்தப் பிரச்னையும் வச்சுக்காதே’ன்னு சொன்னார். அதை இன்னிக்கு வரைக்கும் கேட்டு நடந்திருக்கேன். அப்பா பணத்தைப் பார்க்காமல் என்னோட எத்தனையோ படங்களை ரிலீஸ் பண்ண உதவியிருக்கார். என்னுடைய வெற்றிகள் அனைத்திற்கும் அவர்தான் பின்னணியில் இருந்திருக்கார். என்னை அப்படியே புரிஞ்சுக்கிட்டவர். நான் நடிக்கத் தொடங்கியபோது அவர் நடிப்பதை நிறுத்திட்டு முழுக்க என் வாழ்க்கையை அவர் தான் வடிவமைச்சார். ஊர் ஆயிரம் பேசினாலும் எனக்குக் கவலையே இல்லை. இந்த மாதிரி அப்பா கிடைத்தது என் பாக்கியம்னு சொல்லணும்.”