"என்னைச் சுத்தியிருக்குற குடும்ப நண்பர்களுக்கும், சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும்தான் நானொரு `சிங்கிள் பேரன்ட்' அப்படிங்கிற விஷயம் தெரியும். என் பையன் பேர் கவின். பதினொரு வயசு ஆகுது. நானும் என் மனைவியும் நாலரை வருஷத்துக்கு முன்னாடி குடும்ப வாழ்க்கையிலிருந்து பிரிஞ்சிட்டோம். இப்போ கவின் அவங்க அம்மாகிட்டதான் வளர்றான். நானும், கவினும் அடிக்கடி சந்திப்போம். அதுக்கு கவினோட அம்மா எதுவும் சொல்ல மாட்டாங்க. அவங்க ரொம்ப தைரியமான பொண்ணு. ரொம்ப நல்ல குணம் கொண்டவங்க. என்னோட பையனையும் நல்ல முறையில் வளர்த்துக்கிட்டு வளர்றாங்க'' என்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர். கே. சுரேஷ். குடும்ப உறவுகள் குறித்து அவரிடம் பேசினேன்.

"ஒரு குடும்ப உறவு நல்ல முறையில் இருக்கிறதுக்கு கண்டிப்பா கணவன், மனைவி ரெண்டு பேரும் விட்டுகொடுத்து போகணும். சினிமாத் துறையை வெளியே இருந்து பாக்குறவங்க தப்பான கண்ணோட்டத்தில் பாக்குறாங்க. சினிமாவுல இருந்தாலே கெட்ட சகவாசம் இருக்கும்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. அதை நூறு சதவிகிதம் எதிர்ப்பவன் நான். ஒரு குடும்ப வாழ்க்கையில் பிரச்னை வர்றப்போ அதை ரெண்டு பேருமே சரியா பேலன்ஸ் பண்ணிட்டா போதும் குடும்ப வாழ்க்கையை சக்ஸஸ்ஃபுல்லா கொண்டு போயிரலாம். என்னைப் பொறுத்தவரை, ஒழுக்கமான இடம்னா அது ஷூட்டிங் ஸ்பாட்னு நான் நினைப்பேன். ஏன்னா, காலை ஆறு மணிக்கு எந்திரிச்சு ஏழு மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட் போயிட்டு மூணு வேளையும் சரியான அளவுல சாப்பிட்டு, ஜிம் வொர்க் அவுட் முடிச்சிட்டு இருக்கிற களம். ஷூட்டிங் முடியுற வரைக்கும் நம்ம கவனமெல்லாம் ஷாட் மேலேதான் இருக்கும். எந்தவொரு தவறான சிந்தனைக்கும் மனசும் எண்ணமும் போகாது. இதுதான் உண்மை. ஆனா, வெளியே இருந்து பாக்குறவங்க தப்பா நினைச்சிக்கிட்டு இருக்காங்க.
சினிமாவுல இருக்கிற கணவன், மனைவி என்றால் அவர்களிடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் குணம் ரொம்பவே முக்கியம். சத்யராஜ் சார் பேமிலி, சூர்யா - ஜோதிகா, அஜித்- ஷாலினி, விஜய் - சங்கீதா மேடம் இவங்க எல்லாரும் குடும்ப வாழ்க்கையைச் சரியா பேலன்ஸ் பண்ணி நல்ல முறையில் கொண்டு போறாங்க. சினிமா துறையில் இருக்குற தம்பதிகள் சரியா இருந்துட்டாங்கனா புகழ், பணம், ஆசீர்வாதம் எல்லாமே சம்பாதிக்கலாம். அஜித் சார் குடும்பத்தை பார்க்கிறப்போ பொறாமையா இருக்கும். மனைவிக்குச் சரியான மரியாதை கொடுத்து வாழ்றார். காரிலிருந்து ஷாலினி மேடம் இறங்கும் போதாகட்டும் ரெஸ்ட்டாரான்ட்டில் முதலில் மனைவியை உட்கார வெச்சுட்டு இவர் உட்கார்றதுனு அவர் நிறைய பேருக்கு ரோல் மாடலா இருக்கார். அதனாலதான் அவரால `நேர்கொண்ட பார்வை' மாதிரியான படத்துல நடிச்சு ஹிட் கொடுக்க முடியுது. கணவன், மனைவி ரெண்டு பேருமே விட்டுக்கொடுத்து போறதுதான் முக்கியம். ஏன்னா, என்னோட வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் நானும் சரி கவினோட அம்மாவும் சரி குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணுவோம்.

இப்போ இருக்கிற மாடர்ன் வாழ்க்கையில் பசங்களும் கொஞ்சம் பெற்றோர்களை புரிஞ்சிக்கிறாங்க. கண்டிப்பா பையனோட மனசுல சில வலிகள் இருக்கும். ஆனா, கவின் அம்மா அவனை ரொம்ப நல்லா பார்த்துக்குறாங்க. ரெண்டு பேருமே அன்பா, பாசமா இருப்போம். எங்களுடைய விவாகரத்துக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களா இருக்கோம். அவங்களுக்கு ஏதாவது பிரச்னைனா நான் அங்கே முதல் ஆளா இருப்பேன். அவங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டாகூட நான் பண்ணுவேன். நாங்க ரெண்டு பேருமே வேற ஒரு திருமணம் பண்ணிக்கிட்டாலும் எங்க நட்பு அப்படியேதான் இருக்கும். நாகர்ஜூனா சார், விஜயகுமார் சாரோட குடும்பங்களெல்லாம் நல்ல தெளிவுடன் அன்பாக இருக்காங்க. இந்தத் தெளிவு வந்துட்டா குடும்ப வாழ்க்கை நல்ல முறையில் டிராவல் ஆகும். குடும்ப வாழ்க்கையில் எனக்கு பிரச்னையா இருந்தப்போ, சினிமாதான் நான் அதிலிருந்து வெளியே வரவும் உதவியா இருந்தது. அந்தச் சமயத்தில் `தாரை தப்பட்டை' படத்துல நடிச்சிக்கிட்டு இருந்தேன். படம் ரிலீஸுக்குப் பிறகு நிறைய பேர் எப்படி இப்படி நடிச்சீங்கனு கேட்டாங்க. அந்தளவுக்கு நடிச்சதுக்கு காரணம் எனக்குள்ளே இருந்த வலிதான்.
என்னோட பையனை எப்போதுமே நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். எங்க ரெண்டு பேரோட பிறந்தநாளும் ஒரே நாள்தான். ரெண்டு பேரும் ஒண்ணா கொண்டாடுவோம். குழந்தைகள் எப்போதுமே அம்மா, அப்பா ரெண்டு பேர் கூடவும் நேரம் செலவழிக்கணும்னு நினைப்பாங்க. முக்கியமா பிரிஞ்சு இருக்கிற பெற்றோர்களும் பசங்க மேலே போட்டி போட்டுக்கிட்டு அன்பை காட்டுவாங்க. வெளியே என்னைப் பத்தி என்ன பேசிக்கிறாங்க அப்படிங்கிறது எனக்கு முக்கியம் இல்லை.
என்னைச் சுத்தியிருக்குறவங்களுக்கு மட்டும் நல்லவனா இருந்தா போதும்னு நினைக்கிறேன். எல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னு அவசியம் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் குடும்ப வாழ்க்கையில் எந்தவொரு ஈகோவும் இல்லாமல் இருந்துட்டா வாழ்க்கையைச் சந்தோஷமா கொண்டு போகலாம்; விவாகரத்தைத் தவிர்க்கலாம்'' என்றார் ஆர்.கே.சுரேஷ்.