கட்டுரைகள்
Published:Updated:

``ஸ்டோரி லைன் எனக்கு ரொம்பப் பிடிச்சது...'' - ஃபாதர் ஆஃப் ஃபர்ஹானா

ராஜா கிருஷ்ணமூர்த்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ராஜா கிருஷ்ணமூர்த்தி

பிறந்து வளர்ந்தது எல்லாம் பம்பாய். ஆரம்பக் கல்வி தமிழ் மீடியத்தில் படிச்சேன். என்னுடைய லட்சுமி டீச்சர்தான் தமிழை எனக்கு ஊட்டி வளர்த்தாங்க. தமிழ் மொழி மேல ஆழமான ஈடுபாடு அப்போதிலிருந்தே ஆரம்பமாயிடுச்சு.

`கிட்டி' என்று செல்லமாக அழைக்கப்படும் ராஜா கிருஷ்ணமூர்த்தி... 90-களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும், தொடங்கி இன்றளவிலும் கலக்கிவருபவர். `ஃபர்ஹானா' திரைப்படம் அதற்கு லேட்டஸ்ட் சாட்சி. அந்த சந்தோஷத்துடன், 40 ஆண்டுகளைத் தொடவிருக்கும் தன் திரையுலக வாழ்க்கை அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

``பிறந்து வளர்ந்தது எல்லாம் பம்பாய். ஆரம்பக் கல்வி தமிழ் மீடியத்தில் படிச்சேன். என்னுடைய லட்சுமி டீச்சர்தான் தமிழை எனக்கு ஊட்டி வளர்த்தாங்க. தமிழ் மொழி மேல ஆழமான ஈடுபாடு அப்போதிலிருந்தே ஆரம்பமாயிடுச்சு. சின்ன வயசுல இருந்தே எழுதுவேன். நாடக ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சேன். பதினான்கு வயதில் ஒரு முழு நாடகம் எழுதி நடிச்சேன். அந்தேரி பகுதியில் 600-க்கும் அதிகமான தமிழ் மக்கள் அதைப் பார்த்து ரசிச்சாங்க. நடிகர், எழுத்தாளர் சோ என்னுடைய இன்ஸ்பிரேஷன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்போதும் பிடித்தமானவர். அவருடைய குரல் மாதிரி எனக்கு இல்லையேன்னு வருந்தினேன். சினிமாவின் தாக்கம் எனக்குள்ளே இருந்தது. ஆனால், சினிமாவுக்குப் போகணும்னு நினைக்கல. பல தரப்பட்ட கண்ணோட்டங்கள் இருந்தது. காலேஜ் படிக்கும்போது, `அடுத்து என்ன பண்ணப் போறே?'ன்னு பிரின்ஸ்பால் கேட்டார். அப்போ, யூனியன் ஜெனரல் செக்கரட்டரி பதவியில் இருந்தேன். ஏதாவது கம்பெனியில் யூனியன் லீடர் ஆகிடுவேன்னு நினைச்சிட்டு இருந்தேன். `உனக்கு நல்ல திறமை இருக்கு. மேனேஜ்மென்ட் கோர்ஸ் பண்ணு'ன்னு பிரின்ஸ்பால் சொன்னார். எம்.பி.ஏ படிச்சேன். அப்போதான் பஜாஜ் இன்ஸ்டியூட்ல அப்ளை பண்ணினேன்... ஹெச்.ஆர் ஆகிட்டேன்.

 `ஃபர்ஹானா' படத்தில்
`ஃபர்ஹானா' படத்தில்

என்னோடது காதல் திருமணம். அப்போ, சென்னையில் சோழா ஹோட்டல்ல பர்சனல் மேனேஜர் வேலை கிடைக்கவே, சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டேன். சித்தப்பா வீடு சென்னையில் இருந்தது. இதனால், சின்ன வயசுல அதிகமாக சென்னை வந்துட்டுப் போவேன். சென்னை பரிட்சயமான ஊர். இந்த ஊரோட வாழ்வியல், எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்.

சென்னை வந்த பிறகு, நிறைய எழுத ஆரம்பிச்சேன். சாவி பத்திரிகைக்குக் குறுநாவல், கதைகள் எழுதி அனுப்புவேன். `மறுபடியும்'ங்கிற குறுநாவலுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. அதனால பல எழுத்தாளர்கள் அறிமுகம் ஏற்பட்டது. குறிப்பாக, பாலகுமாரன் நட்பு. அவர் மூலமாக, கமல் அவர்களின் அறிமுகம். மாலா, சுப்ரமண்ய ராஜூ எனத் தொடர்ந்தது. என் அலுவலக நண்பர்கள் மூலமாக சுப்ரமணியம்ங்கிற சுப்பு நண்பரானார். அவர்தான் நம்ம மணிரத்னம். அப்போ, எல்லோரும் ஒண்ணா சேர்ந்து சினிமா பார்ப்போம். படத்தை விவாதிப்போம்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

சுப்புவுக்கு ஸ்கிரிப்ட் நாலேஜ் நல்லா இருந்தது. என்னுடைய கதைகள் படிப்பார். `நானொரு ஸ்கிரிப்ட் வச்சிருக்கேன்'னு சொன்னார். அதை வெச்சு சில இயக்குநர்கள் சந்திப்பும் நடந்துச்சு. அந்தச் சமயத்தில் ஆபீஸ் வேலையில் நான் கொஞ்சம் பிஸி ஆகிட்டேன். அவர் முதல் படம் எடுத்து முடிச்சிட்டார். தொடர்ந்து படங்கள் பண்ணுற வேலையில் இருந்தார். திடீர்னு ஒரு நாள் என்னைப் பார்க்க வந்தார் சுப்பு. `கிட்டி, அடுத்த ஸ்கிரிப்ட் ரெடியாயிடுச்சு... படம் பண்ணப் போறேன்... நீ கூட வந்து வொர்க் பண்ணு' என்றார். எனக்கு சரின்னு பட்டுச்சு. ஆனா, டைமிங் சரிப்பட்டு வரலை. டைம் மேனேஜ்மென்ட்ல நான் ரொம்ப வீக்... அவரோடு வொர்க் பண்ண முடியல. கொஞ்சம் வருத்தப்பட்டேன். ஆனா, அவருடைய பெரிய மனசு, மறுபடியும் வீட்டுக்கு வந்தார். `இந்த முறை என்னை ஏமாத்தாம வொர்க் பண்ணு'ன்னு சொல்லிட்டு, `நாயகன்' படத்துல அசோசியேட் டைரக்டரா வேலை பார்க்க வைத்தார். படத்தில் ஒரு சின்ன ரோலும் கொடுத்தார். தொடர்ந்து `தளபதி', `அக்னி நட்சத்திரம்', `பம்பாய்' என என் நடிப்பு தொடர்ந்தது.

கமல் சார்கூட `சூரசம்ஹாரம்' பண்ணினேன். கமல் சார் என்னுடைய யூனியன் லீடர் ஸ்டோரி கேட்டுட்டு `குரு' படம் எடுத்த ஆர்.சி.பிரகாஷுக்கு ரெக்கமெண்ட் பண்ணினார். சில காரணங்களால அது நடக்கல. `நாயகன்' படம் முடிஞ்சப்ப, `சத்யா' படத்துக்கு சுரேஷ் கிருஷ்ணா கூப்பிட்டார். நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனா, பத்து நாளாகியும் போன் எதுவும் வரல. விசாரிச்சேன். வேற ஒருத்தரை நடிக்க வச்சிட்டதா சொன்னாங்க. சரின்னு விட்டுட்டேன். ஆனா, அடுத்த ரெண்டு நாள்ல சுரேஷ் கிருஷ்ணா போன் பண்ணினார். `கிட்டி, ஐ எம் ஸாரி'ன்னு சொல்லிட்டு வரச் சொன்னார். அப்புறம், அதே `சத்யா' படத்தில் வேறொரு `லுக்கு'க்காக மேக்கப் டெஸ்ட் நடந்தது. படம் வெளியாகி ஹிட்டானது. `புன்னகை வில்லனா' அதில் நடித்திருந்தேன். என்னுடைய ரோல் எல்லோருக்கும் பிடித்திருந்தது. அதுக்கப்புறம் நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தது. தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி
ராஜா கிருஷ்ணமூர்த்தி

இடையில், `தளபதி' படத்துல வேலை பார்த்துட்டிருந்தேன். அப்போ, ஒரு ஸ்டோரி சொன்னேன். மலையாளத்தில் இந்தக் கதையை எடுக்கணும். மோகன்லாலையும் திலகனையும் நடிக்க வைக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தமிழ்ல படம் பண்ணுன்னு சொன்னார். தமிழ்ல யார் தயாரிக்க ரெடின்னு கேட்டேன். மணி சார் வந்தார். ஆலயம் புரொடக்‌ஷன்ல `தசரதன்' எடுத்தேன். இந்தப் படம் போயிட்டு இருந்தப்போ மணி சார் `ரோஜா' படம் எடுத்துட்டிருந்தார். அப்போ, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளரா அறிமுகமானார். மணிரத்னம் எதையும் எதிர்விதமா பண்ணக் கூடியவர். இவருடைய டைட்டில்ல கூட வெளிப்படும். `பம்பாய்' படத்துல முஸ்லிமாக இருக்கக் கூடிய நாசரை இந்துவாகவும், இந்துவாக இருக்கும் என்னை முஸ்லிமாகவும் நடிக்க வைத்தார்.

இப்போ, பல வருடங்களுக்குப் பிறகு `ஃபர்ஹானா' படத்துல முஸ்லிம் கேரக்டர் பண்ணினேன். இந்தப் படத்தோட ஸ்டோரி லைன் எனக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சு. ஃபர்ஹானா அப்பாவா நிறைவா பண்ணினேன். முதல்ல நெல்சன் வெங்கடேசன் போனில் பேசினார். என்னை நேர்ல பார்த்து முடிவு பண்ணுங்கன்னு சொன்னேன். வீட்டுக்கு வந்தார். என்னுடைய லுக் பார்த்துட்டு `பெர்ஃபெக்ட்டா இருக்கீங்க'ன்னார். க்ளீன் ஷேவ் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டுப் போனார்.

ஷூட்டிங் ஸ்பாட்ல நெல்சன் எடுத்த விதம் பிடித்திருந்தது. திருவல்லிக்கேணி ஏரியாவில் ரொம்ப சின்ன வீட்டில் அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்தார். இன்னைக்கு ஸ்க்ரீன்ல படம் பார்த்துட்டு எல்லாரும் நல்லாருக்குன்னு சொல்றாங்க'' என குஷி பொங்கச் சொன்னார் கிட்டி.