
ராமராஜன் நெகிழ்ச்சி
‘‘இதுவரை 44 படங்கள் நடிச்சிருக்கேன். இப்ப நடிக்கற ‘சாமானியன்' என் 45-வது படம். இடையே நான் சொந்தப் படங்களும் தயாரிச்சிருக்கேன். ஆனா, இத்தனை வருஷமா எனக்குத் தோணாத ஒரு யோசனை இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷுக்கு வந்தது ஆச்சரியமா இருந்துச்சு'' - மகிழ்ச்சியில் பூரிக்கிறார் ‘மக்கள் நாயகன்' ராமராஜன்.

அப்படி என்ன யோசனை, இவ்ளோ உற்சாகமாகுறீங்க..?
‘‘நான் சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி மதுரை மேலூர் கணேஷ் தியேட்டர்ல டிக்கெட் கிழிக்கற வேலையில் இருந்தேன். அந்த தியேட்டர் முதலாளி அம்பலம் ஐயா மீனாட்சிசுந்தரம் சேர்த்துவிட்டதனால் தான் சினிமாவுக்குள்ளேயே வந்தேன். அந்தத் தியேட்டர்ல நான் நடிச்ச ‘கரகாட்டக்காரன்' 75 நாள்கள் ஓடி, மேலூர்லேயே அதிக நாள்கள் ஓடின படம்னு அந்த ஊர் மக்கள் எனக்குப் பெருமை தேடித் தந்திருக்காங்க. அப்படிப்பட்ட தியேட்டர்ல என்னோட படத்தின் படப்பிடிப்பை நடத்தணும்னு எனக்கு ஒருமுறைகூட எண்ணினதே இல்லை. ‘சாமானியன்' படத்துக்காக அழகர்கோவில்ல படப்பிடிப்புக்குப் போன போது டைரக்டர் ராகேஷ், ‘அப்படியே மேலூர் கணேஷ் தியேட்டர்லேயும் ஒரே ஒரு ஷாட் எடுத்துட்டு வந்திடுவோம் சார்'னு கேட்டார். எனக்கு ஆச்சரியம். நான் வேலை செய்த தியேட்டர்ல நான் படம் பார்க்கற மாதிரி ஒரு காட்சி படமாக்கினாங்க. எனக்கு நெசமாகவே கண்கள் கலங்கிடுச்சு. இப்ப அந்த முதலாளி அம்பலர் ஐயா தவறிட்டார். ஆனா, அவர் மகன்கள் முருகன், கணேஷ் ரெண்டு பேருமே அங்கே படமாக்கினதுல நெகிழ்ந்தாங்க. என் மனசு சந்தோஷத்துல நிறைஞ்சிருக்கு.
இந்தப் படத்துல கே.எஸ்.ரவிக்குமார் சார் பிரமாதமான ஒரு ரோல்ல நடிச்சிருக்கார். இன்னிக்கு அவர் இருக்கற உயரம் நமக்குத் தெரியும். ஆனா, அவர் எனக்குக் காட்டின மதிப்பும் மரியாதையும் மனசுக்குள்ள அப்படியே நிக்குது. என்னோட ‘பெத்தமனசு'ல அவர் வேலை செய்திருக்கார். அதன் பிறகு அவரை இப்பத்தான் பார்க்கறேன். ஸ்பாட்டுல அவர் என்கிட்ட காட்டின மதிப்பும் மரியாதையும் சிலிர்க்க வச்சிடுச்சு. சினிமாவுல நன்றி, விசுவாசம் செத்துப்போச்சுன்னு நினைச்சிருந்தேன். ‘இல்லை, அதெல்லாம் சாகலை’ன்னு நிரூபிச்சிருக்கார் அவர். இப்படி ஒரு நல்ல படத்துல ராமராஜன் நடிச்சிருக்கார்னு மக்கள் நினைக்கற அளவுக்கு இந்தப் படம் இருக்கும். இப்படி ஒரு படம் கொடுத்ததுக்காக தயாரிப்பாளர் மதியழகன் சாருக்கு நன்றி சொல்லிக்கறேன்.''

சினிமாவுல நீங்க அறிமுகமான காலகட்டத்துல விஜயகாந்த் படத்துல உங்கள நடிக்கக் கூப்பிட்டாங்களாமே.. நீங்க அதுல நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களாமே?
‘‘அப்படி சொன்னதுக்கு நியாயமான காரணமிருக்கு. இயக்குநர் வி.அழகப்பன் சார்தான் அவரோட ‘நம்ம ஊரு நல்ல ஊரு'ல என்னை ஹீரோவாக்கினார். அவர் என்னைக் கூப்பிட்டு, ‘அடுத்த படத்தோட ஷூட்டிங்கை சிங்கப்பூர்ல பண்ணப்போறேன்'னார். ஹீரோ யாரு சார்னு கேட்டேன். அவர் உடனே, ‘விஜயகாந்த், நீ, நதியா'ன்னார். அழகப்பன் சார், ‘நம்ம ஊரு நல்ல ஊரு' படப்பிடிப்பு சமயத்துல என்கிட்ட ஒரு விஷயம் சொன்னார். அதை அவருக்கு ஞாபகப்படுத்தினேன். ‘ராமராஜன், இந்தப் படத்துல மொத்தம் 80 சீன்கள். அதுல நீ 70 சீன்கள் வருவே. நீ இல்லாத பத்து சீன்களிலும் உன்னைப் பத்தித்தான் பேசுவாங்கன்னு சொல்லித்தான் என்னை நீங்க அறிமுகப்படுத்தினீங்க. யாருக்குமே கிடைக்காத ஒரு படமா எனக்குக் கொடுத்துட்டு, இப்ப நீங்களே சின்ன ரோல்ல நடிக்கக் கூப்பிட்டால் எப்படி சார்?’னு கேட்டேன். இண்டஸ்ட்ரீயில நம்மை அறிமுகப்படுத்தின இயக்குநர்கிட்ட யாரும் இப்படிச் சொல்லியிருக்க முடியாது. ஆனா, அழகப்பன் சார் நம்ம கருத்தையும் கேட்பார். நான் சொன்னதன் லாஜிக்கையும் புரிஞ்சுக்கிட்டார். எனக்கு பதிலாகத்தான் அதில் சுரேஷ் நடிச்சிருந்தார். அப்படி அழகப்பன் சார்கிட்ட நான் பார்த்த குணம், ‘சாமானியன்' இயக்குநர்கிட்டேயும் இருக்கு. இந்தப் படத்துக்குப் பிறகு அவர் உயரங்களைத் தொடுவார்'' என்கிறார் ராமராஜன்.