
விஷ்ணு சசிசங்கர் அழகா, உணர்வுபூர்வமா எடுத்திருந்தார். சத்தியமா இவ்வளவு ஹிட் ஆகும்னு நாங்க நினைக்கலை. ஒட்டுமொத்த டீமும் விரதம் இருந்து மாலைபோட்டுத்தான் அந்தப் படத்துல வேலை செஞ்சோம்
“210 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன். ‘சார், சூப்பரா நடிக்கிறீங்க...' என்று செல்ஃபியெல்லாம் எடுப்பாங்க. கிளம்புறப்போ, ‘சார், உங்க பேர் என்ன?'ன்னு தலையைச் சொறிவாங்க. அப்பல்லாம் அவ்ளோ கஷ்டமா இருக்கும். ‘விக்ரம்’ படத்துல வேட்டி வகையறாவா நடிச்ச பிறகு பலருக்கு என் பெயர் தெரிந்தது. இப்ப மலையாளத்தில் ‘மாளிகப்புரம்’ வந்தபிறகு, ‘சூப்பர் சார்... இவ்ளோ திறமையை வெச்சுக்கிட்டு இவ்ளோ நாளா எங்கே இருந்தீங்க'ன்னு கேட்குறாங்க. விக்ரமும் மாளிகப்புரமும் என்னை உலகிற்குப் பெரிய அளவில் அடையாளம் காட்டியிருக்கின்றன!’’
நீண்ட மாரத்தானில் பினிஷிங் லைனை அடைந்ததும் வரும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் பேசுகிறார் சம்பத் ராம்.

“நிறைய படங்களில் உங்களைப் பார்த்திருக்கோம். யார் சார் நீங்க? எப்போ நடிக்க வந்தீங்க?’’
“பிறந்து வளர்ந்தது சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில். பூர்வீகம் கும்மிடிப்பூண்டி பக்கம் மாநெல்லூர் கிராமம். அப்பா ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழிற்சாலை நடத்திவந்தார். மூன்று ஆண் குழந்தைகளும் மூன்று பெண்களும் கொண்ட குடும்பத்தில் நான்காவதாக நான் பிறந்தேன். அப்பா மறைவுக்குப் பிறகு அந்த ஆலை மூடப்பட்டது. வேலை செய்ய வேண்டிய சூழல். பள்ளிக்கூடம் படிக்கும்போதே சென்னை மாவட்ட அளவில் கூடைப்பந்து வீரராகத் தேர்வானேன். கல்லூரியில் படிக்கும்போது ஸ்டேட் பிளேயர். உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் விளையாட்டுக்கு உதவியாக இருந்ததால் எப்படியாவது ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் ஐ.சி.எஃப், ரயில்வே அல்லது வங்கி வேலை வாங்கிவிடலாம் என நினைத்தேன். ஆனா கிடைக்கவில்லை. அதனால் சோகமாக இருந்தபோதுதான் நண்பர்களோடு ஆனைமலை டூர் போயிருந்தேன். அங்கு ஒரு சாமியார், ‘நீங்க நடிகரா' என்று கேட்டார். ‘இல்லை' என்றதும், ‘நீங்க நடிங்க தம்பி... அந்த அம்சம் உங்ககிட்ட இருக்கு' என்றார். நண்பர்களும் உசுப்பேத்திவிட, முதல் வேலையாக போட்டோ ஆல்பம் ரெடி பண்ணினேன். அதைவைத்து ‘எத்தனை மனிதர்கள்' என்ற டி.டி-யில் வந்த சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது.
குமரவேல் என்ற என் நண்பன் அப்போது இயக்குநர் வசந்தபாலனுக்கும் நண்பனாக இருந்தார். வசந்தபாலன் அப்போது ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தார். அவர் மூலம் கிடைத்ததுதான் ‘முதல்வன்’ பட வாய்ப்பு. ஆயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் முதல்வராக நடித்த ரகுவரன் சாருக்குப் பாதுகாப்பு அளித்த பத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் கேரக்டரில் நானும் ஒருவன். அப்போது அது பெரிய வலியாக இருந்தது. ‘அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்' என்ற கான்செப்டே அப்போதுதான் புரிந்தது. அதன்பிறகு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நிறைய படங்கள் பண்ணினேன். ‘தீனா’ படத்தில் அஜித் சாரோடு பளிச்செனத் தெரியும் ஒரு பாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு அவருடன் 11 படங்கள், விஜய் சாரோடு 8 படங்கள். வில்லனின் அடியாளாக, போலீஸாக, வாத்தியாராக, கூட்டத்தில் ஒருவனாக என நடித்து, திரும்பிப் பார்த்தால் 210 படங்கள் தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்றன.
மலையாளத்திலும் மம்மூட்டி, மோகன் லாலோடு நிறைய படங்கள். அப்படியே குஞ்சாக்கோ போபன், ஆசிப் அலி, உன்னி முகுந்தன் என நிறைய பேருக்கு வில்லனாக நடிக்க ஆரம்பித்து அங்கு ஒரு ரவுண்ட் வந்து கொண்டிருக்கிறேன். தெலுங்கில் ‘எவரைனா எப்புடைனா' படத்தில் ஆரம்பித்து, ‘வால்டர் வீரய்யா' வரை பத்துப் படங்கள் தாண்டி ரிலீஸ் ஆகியிருக்கு. கன்னடத்திலும் நடிச்சிருக்கேன்.
ஏ.எம்.ஆர்.ரமேஷ் ‘குப்பி' படத்தில் நடிக்க வைத்தார். வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து அவர் எடுத்த ‘அட்டகாசா' படத்தில் சேத்துக்குளி கோவிந்தனாக நடித்தேன். இப்போது வீரப்பன் வாழ்க்கையை வெப் சீரிஸாக எடுக்கிறார். அதிலும் நான் சேத்துக்குளி கோவிந்தன் பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘விக்ரம்’ படத்தைப் பார்த்து எல்லா மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. இத்தனை வருட உழைப்புக்கு இப்போது கைமேல் பலன் கிடைக்க ஆரம்பித்து விட்டது.’’
‘‘அஜித்தின் நண்பர்களில் ஒருவராக ‘தீனா’வில் நடித்திருந்தீர்கள்...’’
‘‘அவருடன் ‘விஸ்வாசம்' வரை 11 படங்களில் நடித்துவிட்டேன். ‘தீனா’வில் பார்த்த அதே அன்போடுதான் பழகுகிறார். ‘தீனா’ வாய்ப்பு வந்தபோது ‘ஸ்டன்ட் தெரியும்’ எனப் பொய் சொல்லி ஒரு சண்டைக் காட்சியில் அவரோடு நடித்தேன். அந்த மழை ஃபைட்டில் நான் கீழே விழுந்தபோது என் தலை வேகமாகத் தரையில் மோதிவிட்டது. சத்தத்தைக் கேட்ட அஜித் பதறிவிட்டார். ஷூட்டிங்கை நிறுத்தி, என் தலையை அவரே சோதித்தார். ‘சண்டை பழகிக்கங்க சம்பத்! நமக்கும் நல்லது, எதிராளிக்கும் நல்லது. அடிபடாம சண்டை போடப் பழகிட்டா நம்ம கரியருக்கும் நல்லது’ என அட்வைஸ் கொடுத்தார். அதன்பிறகு ஸ்டன்ட் ஓரளவு கற்றுக்கொண்டேன். இன்னும் அதே அன்போடும் அக்கறையோடும் குடும்பம் பற்றி விசாரிப்பார். ரஜினி சாரும் அப்படித்தான். நான் நடிக்கும் படங்கள் வரை கேட்டுத் தெரிந்துகொள்வார்.’’

‘‘உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க..!’’
‘‘மனைவி பெயர் பாக்கியலெட்சுமி. கஷ்டப்படும் காலத்துலயே என்னைக் கைப் பிடிச்சவங்க. எத்தனையோ நாள் வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்திருக்கேன். ஆனாலும் ஏதும் நெகட்டிவா சொல்லிக்காட்டாம என்னை ஏத்துக்கிட்டவங்க. ஒரே பொண்ணு பிரியதர்ஷினி சைக்காலஜி படிக்கிறாங்க. என்மேல நம்பிக்கை வெச்சிருக்குற இந்த ரெண்டு ஜீவன்களுக்காக பெருசா சாதிக்கணும்னு நினைக்கிறேன்.
இப்பவும் என் மனைவி வேலை பார்க்குறாங்க. நானும் ஒரு சினிமா சி.ஜி நிறுவனத்துல மார்க்கெட்டிங் வேலை பார்க்குறேன். அதுக்காக பா.இரஞ்சித் சாரையும், லோகேஷ் சாரையும் மீட் பண்ணினப்போதான் கபாலி, விக்ரம் படங்கள் கிடைத்தன. நடிக்கணும்னு சான்ஸ் கேட்டாதான் தயங்குவாங்க. ஆனால், நாம வேற வேலைக்காகப் போறப்போ பொறுமையா உட்கார்ந்து கேட்குறாங்க. கிளம்புறப்போ ‘வாய்ப்பிருந்தா சொல்லுங்க சார்’னு நாம சொல்ற வார்த்தையை ரொம்பவே மதிக்கிறாங்க.’’
``மாளிகப்புரம் அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க..!’’
‘‘விஷ்ணு சசிசங்கர் அழகா, உணர்வுபூர்வமா எடுத்திருந்தார். சத்தியமா இவ்வளவு ஹிட் ஆகும்னு நாங்க நினைக்கலை. ஒட்டுமொத்த டீமும் விரதம் இருந்து மாலைபோட்டுத்தான் அந்தப் படத்துல வேலை செஞ்சோம். கடவுள் எங்களை ஆசீர்வதிச்சிருக்கார்.
கொடூர வில்லனா நான் நடிச்சதைப் பார்த்து ஹீரோவா நடிச்ச உன்னி முகுந்தனோட அம்மா எனக்கு கால் பண்ணியிருந்தாங்க. ‘உன் கண்கள் பவர்ஃபுல்லா இருக்குப்பா. உன் கேரக்டரைப் பார்த்து, பயமும் கோபமும் வருதுன்னா நீ அவ்ளோ சிறப்பா உள்வாங்கி நடிச்சிருக் கேன்னுதான் அர்த்தம். இன்னும் நல்லா வருவே'ன்னு வாழ்த்தினாங்க. நிறைய தமிழ் ரசிகர்கள், ‘வேட்டி வகையறாவுக்குப் பிறகு பேர் சொல்றமாதிரி பண்ணிட்டீங்க தல'ன்னு கைகொடுக்குறாங்க. பொறுப்புகள் கூடுது. இனி வரும் படங்களில் மாறுபட்ட சம்பத் ராமை நீங்கள் பார்ப்பீர்கள்.’’