சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

“நான் எப்பவுமே இப்படித்தாங்க!” - நடிகர் சரவணன்

நடிகர் சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
நடிகர் சரவணன்

சினிமா

‘வைதேகி வந்தாச்சு’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சரவணன். ‘லேசா விஜயகாந்த் சாயல் தெரியுதுல்ல...’ எனக் கிளம்பிய பேச்சுகளால், அடுத்தடுத்தும் சில படங்கள் கமிட் ஆகின. ஆனாலும் ஹீரோவாக நீடிக்க முடியவில்லை. பிறகு ‘நந்தா’வின் நெகட்டிவ் ரோல் பரவலாக கவனிக்கப்பட்டும், வில்லன் வாய்ப்புகளும் வரிசைகட்டவில்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு ‘பருத்தி வீரன்’ படத்தின் ‘சித்தப்பா செவ்வாழை’ கேரக்டர் பேசப்பட்டதில், இப்போதுவரை குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்திவருகிறார். சினிமாப் புகழ், பிரபலமான ‘பிக் பாஸ்’ ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பைத் தந்தது. நிகழ்ச்சியில் இவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையாக, நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். சேலம் சரவணன், ‘பிக் பாஸ்’ சரவணன் ஆனதுவரை திறந்த மனதுடன் பேசுகிறார்...

 “நான் எப்பவுமே இப்படித்தாங்க!” - நடிகர் சரவணன்

``பத்தாவது படிக்கிறப்போ என் ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர், `தம்பி சினிமாவுல நடிப்பார்'னு சொன்னார். அன்னிக்கு அப்பா சத்தமாச் சிரிச்சது இப்பவும் காதுல கேக்குது. `கறுப்பா, நோஞ்சானா இருக்கான். சினிமாவுக்கெல்லாம் ஒரு லட்சணம் வேண்டாமா?'ன்னு கேட்டார். `பரீட்சையை மட்டும் எழுது... செலக்‌ஷன்ல மத்த விஷயங்களை நான் பார்த்துக்கறேன்; பேசாம போலீஸ் ஆகப்பாரு'ங்கிறதே அவரோட அட்வைஸா இருந்தது. மகனும் தன்னைப்போலவே போலீஸ் யூனிஃபார்ம் போடணும்னு ஆசைப்பட்டார். நான் கேட்கலை. ரயில்ல டிக்கெட் எடுக்காம சென்னைக்கு வந்து பிலிம் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்துட்டேன். அதுக்குப் பிறகும் முறைச்சிட்டிருக்க முடியுமா, அப்பா என் வழிக்கு வந்தார்.

சேலம் பக்கம் எந்த ஷூட்டிங் நடந்தாலும், அவருக்குத் தெரிஞ்சிடும். அப்படித்தான் ஒருநாள், `லட்சுமி நடிக்கிற பட ஷூட்டிங் பக்கத்துல நடக்குது, யாரையாச்சும் பார்க்கணும்னா அவனைப் போகச் சொல்லு'ன்னு அம்மாகிட்ட சொன்னார். ஸ்பாட்டுக்குப் போய் லட்சுமி அம்மாவைச் சந்திச்சேன். நடிப்பு சொல்லித் தந்த அவங்கதான் என் சினிமா வழிகாட்டி.

1990-ம் வருஷம். `வைகாசி பொறந்தாச்சு' ஹிட் ஆனதுல அதே சென்டிமென்ட்ல அடுத்த படத்துக்கும் `வை'ல ஆரம்பிச்சு `சு'வில் முடியற மாதிரி, `வைதேகி வந்தாச்சு'ன்னு டைட்டில்வெச்சார் இயக்குநர் ராதா பாரதி. அந்தப் படத்துக்கு ஹீரோ நான்தான். ஆனா அறிமுகப்படம் எனக்கு வெற்றி தரலை. இருந்தாலும் `விஜயகாந்த் சாயல்'ங்கிற பேச்சா அல்லது என்ன காரணம்னே தெரியலை. வரிசையா சில படங்கள் வந்துச்சு. ஃபீல்டுக்குப் புதுசுங்கிறதால, `எதை ஏத்துக்கணும்', `எது வேண்டாம்'னு யோசிச்சு முடிவெடுக்கறதுக்குள்ளேயே காலம் ஓடிடுச்சு.

இதுக்கிடையில, `ஊருக்கு `சரவணன்’னு நூறு பேர் இருப்பான்; பெயரை மாத்துங்கப்பா'ன்னு விநியோகஸ்தர்கள் சைடுல இருந்து ஏக நெருக்கடி. ஸ்கூல் படிக்கிறப்ப, வைரமுத்துவைப் பிடிக்கும்னு `வைரக்கண்ணன்'ங்கிற புனைபெயர்ல கவிதை எழுதிட்டேன். `ஆசையா முருகன் பேரை வெச்சா, யாரைக் கேட்டுடா மாத்தினே'ன்னு பளார்னு அறை விட்டார் அப்பா. இந்த சென்டிமென்டைச் சொல்லியே இன்னைக்குவரைக்கும் பேரை மாத்த விடலையே!

 “நான் எப்பவுமே இப்படித்தாங்க!” - நடிகர் சரவணன்

ஹீரோவா, வில்லனா, குணச்சித்திர வேடமா எது எனக்கான இடம்னு தெரியாமலேயே நகர்ந்திடுச்சு நாள்கள். அப்பா இன்னைக்கு இல்லை. ஆனா, சொந்த ஊர்ல அவருக்குச் சிலை வெச்சிருக்கேன். அஞ்சு பேரோட பிறந்தும் துரதிர்ஷ்டம். யாருடனும் ஒட்டும் உறவும் இல்லாமப்போச்சு. பிலிம் இன்ஸ்டிட்யூட்ல காதலிச்ச சூர்யஸ்ரீ முதல் மனைவி. அவங்க சம்மதத்துடனேயே இரண்டாவதா ஸ்ரீதேவியைக் கல்யாணம் பண்ணினேன். இரண்டு மனைவிகளுடனும் பையனுடனும் ஒரே வீட்டுல சந்தோஷமாகவே போயிட்டிருக்கு வாழ்க்கை'' என்றவரிடம்,

`` `டிக்கெட் எடுக்காம ரயிலேறி வந்தேன்', `போலீஸ் வேலைக்குக் குறுக்குவழியில போகலாம்னு அப்பா சொன்னார்', `கல்லூரி நாள்கள்ல பெண்களை உரசறதுக்குன்னே பஸ்ல போவேன்’ இப்படி எல்லாவற்றையும் அப்படியே பேசுவது, `படிப்பை விடு’, `வேலையை விடு' என மனைவிகளை வற்புறுத்தியது, குழந்தை இல்லாததைக் காரணம் காட்டி இரண்டாம் திருமணம் செய்ததாகச் சொல்வது... இப்படியான பேச்சுகள் மதிப்பைச் சிதைக்கும் என நினைப்பதில்லையா'' எனக் கேட்டேன்.

``என் வாழ்க்கையில நடந்ததைத்தானே சொல்றேன்... கூட்டியோ குறைச்சோ எதையும் சொன்னதில்லை. நான் கேஷுவலான சில தப்புகளைத்தான் பண்ணியிருக்கேன். இழிவான செயல்களைச் செஞ்சதில்லை. ஒருவேளை, மோசமான தப்புகள் ஏதாச்சும் செஞ்சிருந்தாக்கூட அதையும் இப்ப ஒப்புக்கிட்டுச் சொல்லியிருப்பேன்னுதான் நினைக்கிறேன். என்ன செய்யறது, இது என்னோட இயல்பா அமைஞ்சிடுச்சு. அதனால இதைச் சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கறதெல்லாம் கிடையாது. யார் எப்படி எடுத்துக்கிட்டாலும் எனக்குக் கவலை இல்லை.

ஒருவேளை, ரஜினி ரசிகனான என்னால ரஜினி மாதிரியோ, அல்லது, விஜயகாந்த் மாதிரியோகூட சினிமாவுல பேர் எடுக்க முடியாமப்போனதுக்கு என்னோட இந்த இயல்புதான் காரணமோ என்னவோ... ஆனா நான் இப்படித்தாங்க.''

படபடவெனப் பேசிமுடிக்கிறார் சரவணன்.