சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இது நந்தனின் கதை இல்லை... நந்தன்களின் கதை!”

நந்தன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தன் படத்தில்...

திடீர்னு ஸ்பாட்டில் போய் நான் நின்னப்ப, சரவணனோட நண்பரா வந்திருக்கேன்னு நினைச்சாங்க. நான்தான் ஹீரோன்னு சொன்ன உடனே அவங்களுக்குக் கண்ணு முழுக்க ஆச்சர்யம். நம்பவே முடியலை.

ஏற்ற இறக்கமாகக் கட்டிய லுங்கி, ஒரு வார அழுக்குச் சட்டை, சீவாத தலைமுடி, பழைய ரப்பர் செருப்பு என மொத்தமாக மாறி நிற்கிறார் சசிகுமார். கூட்டத்தில் நின்றால், அருகில் இருப்பவருக்குக்கூட அடையாளம் தெரியாது. இரா.சரவணன் இயக்கத்தில் ‘நந்தன்’ படத்துக்காகத்தான் இந்த அநியாய உருமாற்றம். கெட்டப்பில்தான் மாற்றம்… கேரக்டரில் அப்படியேதான்! ‘சுப்ரமணியபுரம்’ படத்துக்காகப் பேட்டி எடுத்தபோது எப்படி இருந்தாரோ, அதே அன்பும் வாஞ்சையுமாய் இருக்கிறார்.

“தலைப்பு ‘நந்தன்’… என்ன சொல்ல வர்றீங்க?”

“இது நந்தனின் கதை இல்லை… நந்தன்களின் கதை. கலகலப்பும் துயரமும் கலந்தவங்களோட வாழ்க்கை. அதில் ஒருத்தன்தான் கதாநாயகன். அவனுக்குத் தெரிஞ்சதெல்லாம் விசுவாசமும் உண்மையும்தான். ரகளையும் சிரிப்புமா போற அவன் வாழ்க்கையில், அரசியல் விளையாடத் தொடங்குது. அவனைக் குனிய வச்சுக் கும்மியடிக்குது. திருப்பி அடிக்கிற ஹீரோவா இந்தப் படத்தில் நான் இல்லை. உண்மையைச் சொல்லணும்னா, ஏன்டா இந்தக் கதைய ஒத்துக்கிட்டோம்னுகூட நான் ஒரு நாள் வருத்தப்பட்டேன். இந்தக் கதை அவ்வளவு வலியானது; கொடுமையானது.

சரவணன் முதல்ல கதையைச் சொன்னப்ப, கருணாஸ் நடிச்சா கலங்கடிச்சிடுவார்னு நினைச்சேன். அவருக்கும் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. கருணாஸ், சூரின்னு மாறிய கதை, மறுபடியும் காலைச் சுத்துன பாம்பா என்கிட்டயே வந்தது. சரவணன் 15 வருஷ நண்பன். எந்தக் கட்டத்துலயும் ஓடிப்போகாமல் கூட நிற்கிற நம்பிக்கை. உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இதயத்தை எடுத்திட்டுப் போற மாதிரி ஒரு கதையோட அவர் நிற்க, துணிஞ்சு இறங்கிட்டேன். அதான் இந்தத் தலைகீழ் மாற்றம்.”

“இது நந்தனின் கதை இல்லை... நந்தன்களின் கதை!”

“கெட்டப் சேஞ்ச், வட்டார வழக்கு, பாடி லாங்குவேஜ் எனக் கஷ்டப்பட்டீங்களா?”

“இதையெல்லாம்விட கதை நாயகனா அந்தப் பாத்திரத்தை உள்வாங்கத்தான் ரொம்ப கஷ்டப்பட்டேன். முதல் நாள் ஒரு நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கிற காட்சி. மெனக்கெட்டு நடிச்சேன். மொத்த யூனிட்டும் கைதட்டினாங்க. ஆனால், அந்தப் பாத்திரம் அதை மீறி எதையோ கேட்கிற மாதிரி தோன்றியது. மற்ற காட்சிகளை எடுங்கன்னு சொல்லிட்டு, ஒரு வாரம் அமைதியா ஒதுங்கிட்டேன். சரவணன் எழுதிக் கொடுத்த கதையில் இருந்த உயிர், கொஞ்சம் கொஞ்சமாத்தான் எனக்குள்ளே வந்தது. தோப்புக்குடி, குடிக்கூலிகளா காலாகாலமா அல்லாடுற ஒரு கூட்டத்தோட கதை இது. வளைஞ்சு நெளிஞ்சு போற வாழ்க்கையை அவங்க பழகிட்டாங்க. ஏச்சுப் பேச்சோ அவமானமோ இழப்போ அவங்களை ஒண்ணும் பண்ணாது. சந்ததி சந்ததியா முதலாளிகளை அண்டி வாழ்ற குடிக்கூலிகளைப் பற்றி இதுவரைக்கும் யாரும் சொன்னது இல்லைன்னு நினைக்கிறேன். செத்தாக்கூட சிவனேன்னு கடந்து போற அவங்களோட ஆத்மாவை எனக்குள்ள கொண்டு வரத்தான் பெரிய போராட்டமாப்போயிடுச்சு…”

“அறிமுக ஹீரோயின் சுருதி பெரியசாமி… பயப்படாமல் நடிச்சாங்களா?”

“இந்தப் படத்தில் நான் கமிட்டாகிறதுக்கு முன்னாலேயே சுருதி பெரியசாமி கமிட்டாயிட்டாங்க. புதுமுக ஹீரோன்னு சொல்லி அவரை கமிட் பண்ணிட்டாங்க. திடீர்னு ஸ்பாட்டில் போய் நான் நின்னப்ப, சரவணனோட நண்பரா வந்திருக்கேன்னு நினைச்சாங்க. நான்தான் ஹீரோன்னு சொன்ன உடனே அவங்களுக்குக் கண்ணு முழுக்க ஆச்சர்யம். நம்பவே முடியலை. கெட்டப் சேஞ்ச் பண்ணிய பிறகுதான் அசந்துபோய் சிரிச்சாங்க. பிக் பாஸ் பொண்ணு, பக்கா கிராமத்துப் பொண்ணா மாறிவந்து நின்னது பெரிய விஷயம். அவங்க மட்டுமல்ல, நடுரோடு தொடங்கி சுடுகாடு வரைக்கும் மொத்தப் படக்குழுவும் ஆத்மார்த்தமா உழைச்சாங்க. இயக்குநர் பாலாஜி சக்திவேல் காலத்துக்கும் பேர் சொல்லக்கூடிய ஒரு பாத்திரத்தில் வர்றார். பெயர் கோப்புலிங்கம். வெளுத்துவாங்கியிருக்கார். ‘கட்டெறும்பு’ ஸ்டாலினுக்கு முக்கிய பாத்திரம். கதையாவும் களமாவும் இந்தப் படம் நிச்சயம் உங்களை உலுக்கி எடுக்கும்…”

“நிலம், சாதி, அரசியல் விஷயங்களை வைத்துப் படம் பண்ணினால் இப்போ பெரிய சர்ச்சைகள் ஆகிடுதே..?”

“இந்தக் கதை நிச்சயம் சர்ச்சைகளைக் கிளப்பாது. உங்க மனசுக்குள்ள குற்ற உணர்வை உருவாக்கும். சாதி பற்றி மட்டுமல்ல, சகலவிதமான அரசியலையும் இந்தப் படம் பேசுது. எல்லாப் பிரச்னைக்கும் மையப்புள்ளி பாரபட்சமும் ஏற்றத்தாழ்வும்தான்... மனுஷனை மனுஷனா பார்த்தா போதும். எனக்குத் தெரிஞ்ச அரசியல் மனிதம்தான். தேவையற்ற எந்தச் சர்ச்சையும் வந்திடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா பண்ணியிருக்கோம். எந்த அடையாளமும் என் மேல் விழக்கூடாது என்பதில் நான் கவனமா இருப்பேன். ஒரு மனுஷனா, ஒரு கலைஞனா மட்டும்தான் இருக்க விரும்புறேன். அதனால் சர்ச்சைகளுக்கு நிச்சயம் இடம் இருக்காது. தவறு பண்றவங்களை நோக்கி விரலை நீட்டுற நாங்க, வேடிக்கை பார்க்கிறவங்களைத்தான் சட்டையைப் பிடிச்சு உலுக்கியிருக்கோம். எதையும் கடந்து போறவங்க, குற்றவாளிகளைவிட மோசமானவங்க...”

“இது நந்தனின் கதை இல்லை... நந்தன்களின் கதை!”

“புகைப்படங்களையும் களத்தையும் பார்க்கிறப்ப நிச்சயம் அவார்டு அள்ளும் போலிருக்கே?”

“கதை கேட்டப்ப இந்தப் படம் நிச்சயம் அவார்டு வாங்கும்னு உறுதியா நினைக்கத் தோன்றியது. ஆனால், சரவணன் இதை ஒரு கமர்ஷியல் படம் மாதிரிதான் எடுத்தார். அவார்டு படங்களுக்கு ஒரு நிதானம் வேணும். சரவணன் சில ஏரியாக்களை மட்டும்தான் அப்படி ஹேண்டில் பண்ணினார். மற்ற காட்சிகளில் கலகலப்பும் கொண்டாட்டமுமா விளையாடினார். அரசியல் பகடிகளில் வயிறு குலுங்கச் சிரிக்க வச்சிருக்கார். ஒரு படைப்பாளனுக்கு இந்தத் துணிவும் தெளிவும் தேவை. நிச்சயம் இந்தக் கதைக்குப் பல அங்கீகாரங்கள் கிடைக்கும். ஆனால், அதை இலக்கா வச்சு இந்தப் படம் பண்ணலை. நாங்க எதிர்பார்க்கிறது விருது இல்லை... மாற்றம்!”

“நிறைய படங்கள் பண்ணுறீங்க... பட்ட கடனை எல்லாம் அடைத்துவிட்டீர்களா?”

“அதிலிருந்து விடுபடத்தான் இத்தனை வருஷமா ஓடிக்கிட்டு இருந்தேன். பணம் எல்லாமே பேப்பர் டு பேப்பரா மாறிடும். கையெழுத்து போடுறது மட்டும்தான் நம்ம தலையெழுத்து. கையில காசைப் பார்த்ததே கிடையாது. உடம்பு சரியில்லாமல் இருந்தப்பகூட ஷூட்டிங் போயிருக்கேன். நம்மளால ஷூட்டிங் தடைபடக் கூடாதுன்னு நினைப்பேன். வீட்டுக்கு எதையும் எடுத்துட்டுப் போகாமல், உழைச்சது கைக்கு வராமல்... அதெல்லாம் பெரிய வேதனை. பணத்தை மதிக்காமல் படத்தை மாத்திரம் பார்த்துச் செய்துகிட்டிருந்தேன். அதனால, பணத்துக்கு என் மேல கோபம் வந்துடுச்சு போல... ‘என்னை மதிக்கலையே, பாரு உன்னை என்ன பன்றேன்’னு பரமனுக்கு பயத்தைக் காட்டின மாதிரி எனக்குக் காட்டி விட்டுடுச்சு. இப்ப பணத்தோட அருமையும், படத்தோட அருமையும் சேர்ந்து தெரியுது. வட்டியும் முதலுமா வாங்குன கடனைத் திருப்பிக் கொடுத்துட்டேன். அடகு வச்ச நகைய திருப்புற மாதிரி, அவமானங்களையும் இழப்புகளையும் சரி பண்ணிட வாய்ப்பிருக்கா என்ன?”

``கம்பெனி புரொடக்‌ஷன்ஸ் மூலமா பல இயக்குநர்களை அறிமுகப்படுத்தியவர் நீங்கள். நிறைய சிரமப்பட்டப்ப, நீங்கள் உருவாக்கிய இயக்குநர்கள் உதவிக்கு வந்து நின்னாங்களா?’’

“அவங்களோட திறமைக்கு மரியாதை கொடுத்துப் படம் பண்ணினோம். பதிலுக்கு அவங்க திருப்பிச் செய்யணும்ங்கிற அவசியம் இல்லை. அவங்க ஜெயிச்சப்ப, ‘மறுபடியும் நம்ம கம்பெனிக்கு அவங்களைப் படம் பண்ணக் கேளுங்க’ன்னு பல பேர் சொன்னாங்க. அதை அந்த இயக்குநர்களாகத்தான் செய்யணுமே தவிர, நான் கேட்டுச் செய்யக் கூடாதுன்னு தெளிவா இருந்தேன். இதுவரை நான் அப்படி யார்கிட்டயும் எதையும் கேட்டதில்லை. ஒருவேளை நான் கேட்டு, அவங்களும் செய்திருந்தால், காலம் நம்மை இப்படிக் கொண்டுவந்து விட்டிருக்குதேன்னு கவலைப்பட்டிருப்பேன். பணக் கடனை அடைச்சிடலாம்... நன்றிக்கடனை? எங்க கம்பெனியில் அறிமுகமாகி நல்ல அடையாளத்தோட இருக்கிற எல்லா இயக்குநர்களுமே எங்களுக்குப் பெருமை சேர்க்கிறவங்கதான். இது தந்தை மகன் உறவு மாதிரி. மகன்கிட்டே ஒரு அப்பன் போய் எதையும் கேட்கிறது கஷ்டம். புதுமுகமாக 11 இயக்குநர்களுக்கு என் படத்தில் இடம் கொடுத்திருக்கேன். ஜெயிச்ச பிறகு ‘அடுத்து நாம படம் பண்ணலாமா’ன்னு என்னைய கேட்ட ஒரே மனுஷன்... சமுத்திரக்கனி மட்டும்தான்!”

“தொடர்ந்து கேட்கிற கேள்விதான்... எப்போ இயக்குநர் அவதாரம்?”

“ரொம்ப நாளா தூக்கிச் சுமந்த பாரத்தை இறக்கி வச்ச மாதிரி பல பிரச்னைகளில் இருந்து விடுபட்டிருக்கேன். டைரக்‌ஷன் பக்கம் திரும்பணும்னா வேற எந்தப் பக்கமும் கவனம் சிதறாமல் இருக்கணும். சமீபத்தில் வந்த என்னோட ‘காரி’ படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ். இப்போ பன்ற ‘நந்தன்’ படமும் உரத்த குரலா ஒலிக்கும். ஏற்கெனவே பேசி வைத்த விஷயங்கள் ரெடியா இருக்கு. அடுத்த வருடம் நிச்சயம் டைரக்‌ஷன்தான்...”

“இத்தனை கால சினிமாவில் ‘ஏண்டா இந்தத் துறைக்கு வந்தோம்’ என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா?”

“மறைக்காமல் சொல்லணும்னா, நினைச்சிருக்கேன். ஆனா, சினிமாவுக்கு நான் விரும்பித்தானே வந்தேன். மதுரையில இருந்து கெளம்பி வந்து ‘சுப்ரமணியபுரம்’ பண்ணினப்ப, உச்சந்தலையில தூக்கி வச்சுக் கொண்டாடினாங்க. ஒரு இயக்குநரா, தயாரிப்பாளரா, நடிகரா எல்லாவிதத்திலும் வெற்றியை அள்ளிக் கொடுத்தாங்க. இப்படிப்பட்ட வெற்றி கிடைக்கும்னு கனவிலும் நினைக்கலை. அதே மாதிரி இப்பேர்ப்பட்ட இழப்பும் வலியும் வரும்னும் நாங்க நினைக்கலை. பூவும் தலையுமா இந்த சினிமா என்னைய சிரிக்கவும் வச்சது, அழவும் வச்சது.

என் பிரச்னை என்னன்னா, நான் இங்க வந்த உடனே ஜெயிச்சிட்டேன். அதுவும் பெரிசா ஜெயிச்சிட்டேன். நின்னு நிதானமா போராடி ஜெயிச்சிருக்கணும். வெயில்ல அலைஞ்சவனுக்குக் கிடைக்கிற நீராகாரம் மாதிரி எனக்கு வெற்றி கிடைச்சிருக்கணும். ஆனா, தாகம் எடுக்கிறதுக்கு முன்னாலேயே தண்ணி கிடைச்ச மாதிரி இறங்குன முதல் பந்தே சிக்ஸ்... அதான் சிக்கல். ‘இந்திய சினிமாவே என்னைய திரும்பிப் பார்க்கணும்’னு நினைச்சவனை, ‘கடனை அடைச்சா போதும்டா சாமி’ன்னு காலம் நிற்க வச்சது பாருங்க... எப்பேர்ப்பட்ட ட்விஸ்டு. இதான் சார் அனுபவம். வலின்னா என்னன்னு தெரியாம வாழ்ந்துட்டுப் போயிடக்கூடாதில்ல. இப்போ எந்த ஒரு வெற்றியாலும் என்னை ஆட வைக்க முடியாது. எப்பேர்ப்பட்ட தோல்வியாலும் என்னை அழ வைக்க முடியாது. எதற்கும் என் தராசு ஆடாமல் அப்படியே நிற்கும். இங்க எல்லாமே புத்திக்கொள்முதல்!”