கட்டுரைகள்
Published:Updated:

தயாரிப்பாளர் ஷாம் comeback

ஷாம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷாம்

நான் கீழே விழுந்தாலும் சோர்ந்துபோயிடல. இங்கே விழறதும் எழுவதும் சகஜம், விழுந்தால் எழுந்து ஓடணும்னு கத்துக்கிட்டேன். பிரச்னைகளை எதிர்கொண்டேன்

விஜய்யின் ‘வாரிசு'க்குப் பிறகு தமிழில் தனது இரண்டாவது ஆட்டத்தை உற்சாகமாக ஆரம்பித்திருக்கிறார் ஷாம். இப்போது விஜய் மில்டனின் ‘கோலிசோடா-3' வெப்சீரிஸ் படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசினேன்.

சினிமாவில் எந்தப் பின்னணியும் இல்லாமல் ஹீரோ ஆனீங்க... நிறைவா இருக்குதா உங்க பயணம்?

‘‘திருப்தியா போகுது! சினிமாவில் நடிக்கணும்னு விரும்பினேன். ஜீவா சார்னால, ‘12பி' மூலமா அந்தக் கனவு நனவானது. அந்தப் படம் வெளியானதும் என் நண்பர்கள் பலரும், ‘ஷாம், நீ ஒரு அதிர்ஷ்டக்காரன்'னு பாராட்டினாங்க. அது அதிர்ஷ்டம் இல்லைன்னு எனக்குத் தெரியும். ஏன்னா, அதுக்கு முன்னாடி நாலு வருஷமா போராடினதுக்கு பலனா அந்த வாய்ப்பு அமைஞ்சது. அப்புறம் சில படங்கள் பண்ணினேன். சில சரியா அமையல. நூறு சதவிகிதம் உழைப்பைக் கொடுக்கறது மட்டும்தான் என் வேலை... அப்படிக் கொடுத்தாலும் வெற்றி என் கையில இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

தயாரிப்பாளர் ஷாம் comeback

நான் கீழே விழுந்தாலும் சோர்ந்துபோயிடல. இங்கே விழறதும் எழுவதும் சகஜம், விழுந்தால் எழுந்து ஓடணும்னு கத்துக்கிட்டேன். பிரச்னைகளை எதிர்கொண்டேன். எல்லாருக்குமே ரெண்டு விதமான பிரச்னைகள் இருக்கு. ‘இவன் ஏதாவது கேட்டுடுவானோ? இல்ல, இவனுக்கு ஏதாவது பதில் சொல்லியாகணுமோ?’ன்னு அந்தப் பிரச்னைகளை நினைச்சே பலருக்கு பயம் வருது. இந்த பயம் தேவையே இல்லைன்னு புரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கு என்ன தோணுதோ, அதைச் சரியா பண்ணணும் என்பதுதான் என் பாலிசி. இந்த உலகம் நாம நெகட்டிவா இருக்கறதை விரும்புது. சோகத்துல குளிர்காயணும்னு சிலர் விரும்புவாங்க. ஆனா, எல்லாத்தையுமே நான் பாசிட்டிவ்வா எடுத்துக்குவேன்! ‘என்ன ஷாம், நீ சும்மாதான் இருக்கியா?’ன்னு யாராவது என்னை வம்பிழுத்தால்கூட, கோபப்பட மாட்டேன். ‘ஆமா! சும்மாதான் இருக்கேன். வாங்க, படத்துக்குப் போகலாமா’ன்னு சொல்லுவேன். கிண்டல் பண்ணுனவங்க ஜெர்க் ஆகிடுவாங்க. இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாதுன்னு தப்பிச்சிடுவாங்க. வாழ்க்கையை தைரியமா எப்பவும் எதிர்கொள்ள எனக்குப் பிடிக்கும். என்கிட்ட இருக்கற நல்ல தகுதிகள்ல இதுவும் ஒண்ணு.''

‘வாரிசு' முதல் நாள் முதல் ஷோவை நீங்களும் இசையமைப்பாளர் தமனும் சேர்ந்து பார்த்து ரசிச்சீங்க... என்ன சொல்றார் தமன்?

‘‘சந்தோஷமா இருக்கார். ‘வாரிசு'ல அவரோட இசை என்னைக் கண்கலங்க வச்சிடுச்சு. வம்சி எமோஷனலா சீன்கள் கொடுத்திருந்தார். இவர் இசையால் அந்த எமோஷனலை இன்னும் தூக்கலா கொண்டு சேர்த்திருக்கார். ‘வாரிசு' ரிலீஸுக்குக் கடைசி ரெண்டு வாரம் வரைக்குமே அவர் ராத்திரியும் பகலுமா தூங்காமல் வேலை செய்தார். அந்தச் சமயத்துல இந்தப் படம் தவிர, தெலுங்கில் பாலகிருஷ்ணா சாரோட படத்தின் வேலைகளையும் சேர்ந்தே கவனிச்சிக்கிட்டிருந்தார். அப்படி ஒரு கடின உழைப்பாளி. இப்ப அந்த உழைப்புக்கு சரியான பலன் கிடைச்சிருக்கு. நான், ‘வாரிசு' நாலு தடவை பார்த்தேன். நாலு முறையுமே தமனை உணர்ந்தேன். ஏன்னா எமோஷனல் சீன்கள்ல கண் கலங்கிட்டிருந்தேன். நான் மட்டுமல்ல, தியேட்டர்கள்ல ஆம்பளைங்களே கண் கலங்கினதைப் பார்த்தேன். ஸ்பாட்டுல விஜய் அண்ணா கொடுத்த அன்பு மறக்க முடியாத தருணங்களாகிடுச்சு.''

தயாரிப்பாளர் ஷாம் comeback

நீங்க சோர்வா இருந்த சமயங்களில்கூட, ஃபிட்னஸ்ல கவனம் செலுத்துவீங்கன்னு சொல்றாங்க...

‘‘உண்மைதான். கல்லூரி நாள்களிலேயே ஜிம் போறதுக்குன்னு ஒரு நட்பு வட்டம் உண்டு. உடம்பைக் கட்டுக்கோப்பா வச்சுக்கத்தான் ஃபிட்னஸ் பக்கம் போவாங்கன்னு இல்ல. மனசையும் அது கண்ட்ரோலா வச்சுக்கும். சில நேரம் நமக்குக் கோபம் வரும்போது அதைக் வெளிக்காட்டுறதுக்கு சரியான இடம் ஜிம்தான். உடற்பயிற்சிகள் மூலமா, நெகட்டிவ் எனர்ஜியை வெளியே தூக்கிப் போட்டுட முடியும். வீட்ல இருந்தாலும் சரி, வெளியூர் படப்பிடிப்பு போனாலும் சரி, காலையில உடற்பயிற்சி கண்டிப்பா பண்ணிடுவேன். நானும் ஆர்யாவும் தினமும் சந்திச்சிக்குவோம். காலையில நாங்க ரன்னிங்ல இருப்போம். இல்லனா, சாயந்திரம் பாக்ஸிங் கிளாஸ்ல இருப்போம். என்னை மாதிரியே ஆர்யாவுக்கும் உடற்பயிற்சியில ஆர்வம் அதிகம்!''

‘ 6 மெழுகுவத்திகள்'னு ஒரு படம் தயாரிச்சீங்க.. அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டீங்க.. தயாரிப்பாளர் ஷாம் எப்படி இருக்கார்?

‘‘மறுபடியும் படம் பண்ணணும்னு ஆர்வமா இருக்கார். ‘6 மெழுகுவத்திகள்'க்குப் பிறகு கொஞ்சம் இடைவெளி ஆகிடுச்சு. அடுத்து என் நடிப்பில் கண்டிப்பா ஒரு படம் தயாரிச்சிடணும்னு நினைச்சிருக்கேன். அதுக்கான வேலைகள் இந்த ஏப்ரல் மாசத்துல தொடங்கும்னு நினைக்கறேன்.''