கட்டுரைகள்
Published:Updated:

எம்.ஜி.ஆர் சிவாஜி; ரஜினி கமல்; நான்... நடிகர் சிவகுமார்

சிவகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
சிவகுமார்

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி... கிராமத்துலருந்து மெட்ராஸுக்கு வந்து, ஓவியக் கல்லூரியில சேர்ந்து படிச்சேன்.

1965-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நுழைந்த நடிகர் சிவகுமார், 2005-ம் ஆண்டுடன் தன்னுடைய சினிமா பயணத்தை முடித்துக்கொண்டார். அதற்கான காரணத்தையும், தன் காலத்தின் உச்ச நட்சத்திரங்களுடனான தன் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்கிறார்...

‘‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட மாதிரி... கிராமத்துலருந்து மெட்ராஸுக்கு வந்து, ஓவியக் கல்லூரியில சேர்ந்து படிச்சேன். என்னோட 22 வயசுலருந்து 24 வயசுக்குள்ளே இந்தியா பூரா வலம்வந்து நான் வரைஞ்ச ஓவியங்கள் நிறைய. அந்த மாதிரி ஓவியங்களை அகாடமிக்காக வரையறவங்க இன்னிக்கு 25 பேருக்கு மேல இருக்க மாட்டாங்க. ஆனா, ‘உன் ஓவியங்கள் பத்திரிகைகளில்தான் எடுபடும். இப்ப மாடர்ன் ஆர்ட்தான் டிரெண்டு. நீ இதுவரைக்கும் வரைஞ்சது செல்லுபடியாகாது’ என்கிற நிலை. அப்பதான்... ‘அடுத்து என்ன?’ என்கிற கேள்வி எழுந்தது.

எம்.ஜி.ஆர்  சிவாஜி; ரஜினி கமல்; நான்... நடிகர் சிவகுமார்

பிரஷ், பேப்பர் எல்லாத்தையும் மூட்டை கட்டிவெச்சுட்டு, நடிப்புத்துறைக்குள்ளே நாடகங்கள் மூலமா உள்ளே வர்றேன். அப்ப எம்.ஜி.ஆர்., சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் எல்லாரும் நாடகத்துறையில உச்சத்துல இருந்தாங்க. நானும் சொந்தமா நாடகங்கள் போட்டு, அது சரிப்பட்டு வரலைன்னதும் மேஜர் சுந்தர்ராஜனோட சேர்ந்து ஆயிரம் மேடைகள் ஏறினேன். நாடகத்துல நடிச்சதும் டயலாக் எப்படிப் பேசறது, பாடி லாங்குவேஜ் எப்படி இருக்கணும்னு பழகிடுச்சு. சினிமாத்துறைக்குள்ளே நுழையலாம்னு நினைச்சா... ‘இவனைப் போட்டா நடிச்சுடுவான் சார். அஞ்சு ரூபாய்க்கு நடிக்கச் சொன்னா ஐந்நூறு ரூபாய்க்கு நடிச்சுடுவான் சார்... வேணாம்’னு சொன்னாங்க.

கணக்குப்படி 192 படங்கள் நடிச்சிருந்தாலும்கூட, சிவாஜிக்குக் கிடைச்ச வேஷங்களோ, கமல் செய்த புதிய புதிய பரிசோதனை முயற்சிகளோ எனக்கு வாய்க்கலை. 175 படங்கள்ல ஹீரோவா நடிச்சிருந்தாலும் எல்லாமே பேருக்குத்தான். கணக்குக்குத்தான். நான் அத்தனை படங்கள் செய்து இத்தனை வருஷமா சம்பாதிச்சதை, இன்னிக்கு சூர்யா நடிக்கிற ஒரு படத்துக்கே கொடுத்துடறாங்க. நடிகனா இருந்த 40 வருஷத்துல... வீடு வாங்கிட்டோம், காரு வாங்கிட்டோம், கல்யாணம் பண்ணிக்கிட்டோம், பிள்ளைகுட்டி பெத்துக்கிட்டோம். என்னைப் பொறுத்தவரை... சிவாஜி - எம்.ஜி.ஆர்; கமல் - ரஜினி லிஸ்ட்ல என்னைச் சேர்த்துக்க முடியாது. நடிப்புல உச்சத்தைத் தொட்ட ஆள் இல்லை நான். ஒரு நடிகனா சாதனை செய்துட்டோம், இமயமலை ஏறி கொடி நாட்டிட்டோம்னு சொல்ல முடியாத நிலையில 2005, ஜனவரி மாசம் 19-ம் தேதி ‘இனிமே மேக்கப் போடறதில்லை, நடிக்கறதில்லை’ன்னு முடிவு பண்ணினேன். அப்ப எனக்கு 64 வயசு. வேலையிலருந்து ரிட்டயர்டு ஆனவங்க, அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சுப்போயிடுவாங்க. ரிட்டயர்டான பிறகு என்ன செய்யலாம் என்கிற பிளானே இல்லாமல் வாழ்ந்து கரைஞ்சுடுவாங்க. இதுக்கு நடிகர்களும் விதிவிலக்கில்லை.

எம்.ஜி.ஆர்  சிவாஜி; ரஜினி கமல்; நான்... நடிகர் சிவகுமார்

சிவாஜி... நடிப்புல இன்னொரு சிவாஜி பிறக்க வாய்ப்பில்லை. முறையா பள்ளிக்கூடம் போகாத மனுஷன். நாடகத்துறையில சேர்ந்து திரைத்துறைக்கு வந்து உச்சம் தொட்டு, இருநூத்துச் சொச்சம் படங்கள்ல, 40 வருஷம் தொடர்ந்து நடிச்சது யாருமே நெனச்சுப் பார்க்காத விஷயம். மூச்சுவிடக்கூட நேரமில்லாம ஸ்டூடியோவுல வாழ்ந்தவர். அப்படிப்பட்டவர்கூட 60, 65 வயசுக்குப் பிறகு அடுத்து என்ன செய்யறதுன்னு தெரியாம, கடைசி ஏழெட்டு வருஷங்கள் யாரோடவும் பழக முடியாம, பேச முடியாம தனிமையில இருந்து மறைஞ்சுட்டார்.

எம்.ஜி.ஆர் 19 வயசுல நடிக்க ஆரம்பிக்கறார். துண்டு துண்டு வேஷங்கள்ல நடிச்சு 10 வருஷங்கள் போயிடுது. 30 வயசுக்கு மேல ‘ராஜகுமாரி’ படம் ரிலீஸாகுது. அந்த வெற்றியை தக்கவெச்சுக்க ஏழெட்டு வருஷங்கள் போராடுறார். 40 வயசு நெருங்கும்போது ‘மலைக்கள்ளன்’ படம் வெளியாகுது. இளமைக்காலம் முடிஞ்சு வெள்ளை முடி வரும் நேரத்துல வெற்றியை ருசிக்கிறார். அதுக்கப்புறம் படிப்படியா மேல வந்து, அரசியல்ல உச்சத்துக்குப் போறார். இப்படி, புகழ்பெற்ற நடிகர்கள் தங்கள் வாழ்நாள்ல நேரெதிர் வாழ்க்கையைச் சந்திச்சிருக்காங்க. ஜெமினி கணேசனை எடுத்துக்கிட்டா 80 வயசுக்கு மேல வாழ்ந்தாலும், கடைசி 15 வருஷம் என்ன செய்தார்னு யாருக்கும் தெரியாது.

இன்னொரு பக்கம், தமிழ் சினிமாவுல உச்சத்துல இருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், கண்ணதாசன் ஆகியோர் சின்ன வயசுலேயே உலகை விட்டுப் போயிட்டாங்க. சினிமா உலகம்னு இல்லை, ஒட்டுமொத்தமா டாப் ஆட்களைப் பார்த்தோம்னா... ஆதிசங்கரர், விவேகானந்தர், பாரதியார் போன்றவங்களோட ஆயுசும் ரொம்பக் குறைவு. இவங்கள்லாம் முதுமையைப் பத்தி நெனச்சுப் பார்க்கறதுக்குள்ளேயே போய்ச் சேர்ந்துட்டாங்க.

எம்.ஜி.ஆர்  சிவாஜி; ரஜினி கமல்; நான்... நடிகர் சிவகுமார்

இளமையில லைம்லைட்டுல இருந்தவங்க 70 வயசுக்கு மேல வாழும்போது, பலரைத் தனிமை கொன்னுருக்கு. மனரீதியா, உடல்ரீதியா போராடியிருக்காங்க. இதுலருந்து நான் தப்பிக்கத் தேர்ந்தெடுத்த வழி இதுதான். ஓவியர் கோபுலு 90 வயசு வரைக்கும் வாழ்ந்தார். அவர், ‘ஒவ்வொரு பத்து வருஷத்துக்கும் ஒரு முறை லைஃப்ஸ்டைலை மாத்திக்கணும். இல்லேன்னா போர் அடிச்சுடும்’னு சொல்வார். அப்படி நான் மாறினபோது நிகழ்ந்ததுதான்... அடுத்தடுத்த மேடைப்பேச்சுகள். முதல்ல ‘தமிழ் சினிமாவில் தமிழ்’ என்கிற தலைப்புல பேசினேன். 67 வயசுல கம்ப ராமாயணத்தைக் கையில எடுத்தேன். அடுத்தது மகாபாரதம். இதையெல்லாம் முடிக்கும்போது ஏழெட்டு வருஷங்கள் ஓடிப்போச்சு. அதற்கடுத்து திருக்குறளைக் கையிலெடுத்தேன்.

இப்ப 81 வயசாச்சு. இனி அவ்வளவுதானா... இல்லை. 61 வருஷமா டைரி எழுதிவெச்சிருக்கேன். 1961-ல இருந்து திரையுலகில் நடந்த சம்பவங்களை, உண்மைகளைத் தொகுத்து, வீட்டிலேயே ஷூட் பண்ணி வீடியோ வெளியிடத் தயாராகிட்டேன்!’’

உற்சாகம், வளர்பிறை சிவகுமாரிடம்.