
ராம் அண்ணே வேற விதம், வேற மாதிரி. நிவின் பாலி நடிக்கிறார். அவரை ஏன் மலையாளத்தில் கொண்டாடுறாங்கன்னு நல்லா புரியுது
`விடுதலை', ‘ஏழு கடல் ஏழு மலை' என வித்தியாசமான படங்களில் வெவ்வேறு பயணத்தில், நடிப்பு அனுபவத்தில் நல்ல நெருக்கத்தில் இருக்கிறார் சூரி. ‘வாழ்க்கை, கடந்து வந்த பாதை, சினிமா, வீடு, அடுத்த கட்டப் படங்கள்னு பேசுவோம் வர்றீங்களா...’ என்று விகடன் டீம் அழைத்தது. நேரம் ஒதுக்கி, உற்சாகமாக உரையாடலை ஆரம்பித்தார் சூரி.
``செம ஃபிட்டா ஆளே மாறிட்டீங்களே..?’’
‘‘சூரி எப்பவும் அதே சூரிதான். ‘விடுதலை'க்கு ஏத்த மாதிரி உடம்பைத் தயார் பண்ணியிருக்கேன். உடம்பை இறுக்கி மனதைத் தளர்த்தியிருக்கேன். இப்போல்லாம் யோசிச்சுப் பேச வேண்டியிருக்கு. வார்த்தைகளை விட்டுட்டா அள்ள முடியலை. அதனால் ஜாக்கிரதையா இருக்கேன். இந்த சினிமாவை இப்ப நல்லா புரிஞ்சிருக்கேன். சினிமா என்ன வேணும்னாலும் செய்யும். வருஷக்கணக்கில் காக்க வைக்கும். தாக்குப் பிடிச்சு நிக்கிறவனை தாய் மாதிரி அரவணைச்சுக்கும். ‘இதுக்குத்தானேடா போராடினே'ன்னு கேட்டு உலகத்து வெளிச்சத்தை எல்லாம் நம்ம மேலே பாய்ச்சும். இதெல்லாம் நம்ம குணத்தை மாத்தாமல் இருக்கணும். வெற்றிகூட சுலபம்தான். வெற்றியைத் தக்க வைக்கத்தான் வெறித்தனமா போராடணும். மக்களோட கைத்தட்டல்தான் நம்ம உயரத்துக்குக் காரணம்ங்கிற உண்மை நெஞ்சில உறைக்கணும். அவங்க நம்மளை மதிக்கிற மாதிரி நாமளும் அவர்களை மதிக்கணும். பழசை மறக்காம, வானத்தில் மிதக்காம இருந்தோம்னா சினிமா என்னைக்கும் நம்மைக் கைவிடாது.’’

``நீங்க சென்னைக்கு வந்த கதையைச் சொல்லுங்க...’’
‘‘அண்ணன், தம்பி ஆறு பேர் நாங்க. எங்க அப்பாதான் எங்களை நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்தார். சில தவறுகளால் அவரே கஷ்ட நிலைமைக்கும் கொண்டாந்து விட்டுட்டார். அம்மாதான் எதுக்கும் கலங்காமல் எங்களை ஆளாக்கி விட்டுச்சு. ஒருத்தரையும் விட்டுக்கொடுத்ததில்லை. டீக்கடை, ஸ்பின்னிங் மில், திருப்பூர் பனியன் கம்பெனின்னு போய் வேலை பார்த்தேன். மதுரை லித்தோ பிரஸ்ஸில் இருந்திருக்கேன். லாரி கிளீனரா வேலை செஞ்சிருக்கேன். இடிஞ்ச வீட்டுல மண் எடுத்திருக்கேன். பெயின்ட் அடிச்சிருக்கேன். செய்யாத வேலை கிடையாது. அப்புறமா, நண்பர்கள் கொஞ்ச பேரோட சென்னைக்கு வந்து சேர்ந்தேன். சினிமா ஏரியா பக்கமே போக முடியலை. ஆனா, பசிக்கிற வயித்தையும் ஏமாத்த முடியலை. நாலடி காம்பவுண்டிலிருந்து நானூறு அடி கட்டடம் வரைக்கும் நான் பெயின்ட் அடிக்காத பில்டிங்கே கிடையாது. நேரம் கிடைக்கும்போது நாடகம் போடுவேன். ஏ.வி.எம் ஸ்டூடியோவுக்கு எதிரே இருக்கிற தெருவில் ‘கள்வனைத் திருத்திய கணபதி', ‘பில்டப்', ‘விடுய்யா... டப்பிங்ல பார்த்துக்கலாம்'னு பல பெயர்கள்ல வரிசையா நாடகங்கள் போட்டிருக்கேன். செவத்துல பெயின்ட் அடிச்சுட்டிருந்த என்னை சினிமாவுல பெயின்ட் அடிக்கக் கூப்பிட்டாங்க. அப்படித்தான், ‘பொன்மனம்' படத்துல வேலை செஞ்சேன். அதுல செட் அசிஸ்டென்ட்னு பேர் வந்துச்சு. ஏதோ சினிமா என் பக்கத்துல வந்துருச்சுன்னு நினைக்க ஆரம்பிச்சிட்டேன்.’’

``சினிமாதான் சரின்னு எப்படி நினைப்பு வந்தது?’’
‘‘வேற... அப்புறம் ஐ.டி வேலைக்கா போக முடியும்? எட்டாவது பாதிக்கு மேல வண்டி ஓடலை. எங்க ஊர் ராஜாக்கூர்ல சொந்தக்காரங்க எல்லாம் நாடகக்காரங்க. மாமா ஆறுமுகம் நாரதராகப் பாடினால் எட்டுத்திக்கும் கேட்கும். செல்வம் மாமா முருக வேஷம் கட்டுவார். வர்றவங்க இரண்டு வருஷத்திற்கும் சேர்த்து புக் பண்ணிட்டுப் போவாங்க. எங்க சொந்த அத்தை இசைச்செல்வி சந்திரமதியாக மயானத்தில் நின்னு பாடினால் ஊரே கண்ணீர் வடிக்கும். அந்த அளவுக்கு பேமஸ். பிறகு, ‘ரணதினா...'ன்னு ஒரு டான்ஸ் குரூப் ஆரம்பிச்சேன். பாட்டும் நடிப்பும் ஆட்டமும் பாட்டமும் கொஞ்சம் ஊறி நின்ன பரம்பரைதான். இந்தக் கட்டத்தை எல்லாம் ஒரு திரைக்கதையாக வடித்து டைரக்டர் விக்ரம் சுகுமாரன் படமா எடுக்கப் போறாரு. அதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. அப்புறம்தான் சின்னச் சின்னதாகப் படங்களில் தலைகாட்டிட்டு ‘தீபாவளி'யில் நடிச்சப்போ சுசீந்திரன் அண்ணன் நட்பு கிடைத்தது. ‘வெண்ணிலா கபடி குழு' எனக்கு வெளிச்சம் போட்டது. அப்புறம் நடந்தது எல்லாம் ஊருக்குத் தெரியுமே!’’

``மதுரையில் ஹோட்டல் பிசினஸ் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?’’
‘‘ஆண்டவன் புண்ணியத்துல நல்லபடியா போய்க்கிட்டிருக்கு. ‘அம்மன் காபி பார்'னு முப்பது வருஷமா வச்சிருந்தோம். தம்பிதான் உட்கார்ந்து நடத்திக்கிட்டு இருந்தான். முன்னாடியெல்லாம் வீட்டில் பால் வியாபாரம்தான். இந்தத் தொழில்ல என் தம்பியுடைய உழைப்பு ரொம்பப் பெருசு. நல்ல காபி, டீ போட்டுக் கொடுத்ததால நல்ல வரவேற்பு இருந்தது. நான் சினிமாவுக்கெல்லாம் வந்த பிறகு என் அம்மாதான், ‘இந்த சூரிப்பய மெட்ராஸ் போய் சோத்துக்கு இல்லாமல் கஷ்டப்பட்டான். சாப்பாடுதான் புண்ணியம். வெளியே வாங்குகிற காசுல பாதிக்குப் பாதியா குறைப்போம். ஆனா, ருசியில ஒரு குறையும் இருக்கக் கூடாது'ன்னு சொன்னது. அம்மா சொன்னதைத் தட்டாமல் ‘அம்மன் மெஸ்' ஆரம்பிச்சோம். இப்போ ஒன்பது கிளையாக விரிஞ்சு நிக்குது. ஒட்டுமொத்தக் குடும்பமே இப்பவும் அங்கேயே கிடந்து பார்த்துக்கிறாங்க. ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரம் தூங்கினாலே பெரிய விஷயம். 600 பேருக்கு மேலே வேலை செய்றாங்க. ஜி.ஹெச்ல ஹோட்டல் போட்டு சுத்தமும், சுகாதாரமுமாக மக்கள் சாப்பிடுறாங்க. சீக்கிரமா சென்னைக்கும் கொண்டு வர்றோம்.’’

``வெற்றிமாறனின் ‘விடுதலை' படத்துல நடிக்கிறது உங்க இமேஜையே மாத்தியிருக்கு...’’
‘‘ஒரு கேரக்டர் தருவார்னு போனா, ‘நீங்கதான் கதை நாயகன்’னு சொல்றாரு. இங்க வெற்றிமாறன் அண்ணனுக்கு அவ்வளவு மரியாதை இருக்கு. படத்துக்குப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கு. காமெடியனா நடிக்கும்போது எங்கே வேண்டுமானாலும் எழுந்திருக்கலாம், உட்காரலாம், ரூல்ஸ் கிடையாது. ஆனா, வெற்றி அண்ணே வேற மாதிரி சொல்லிக் கொடுக்கிறார். இதெல்லாம் தெரியாமல் போக இருந்தமேன்னு தோணுச்சு. காமெடியைத் தாண்டி இப்படி ஒரு நடிப்பு வகையெல்லாம் இருக்கான்னு ஆச்சரியமா இருக்கு. இவங்களை மாதிரியானவர்களுக்கு சமூகத்து மேல, படைப்பு மேல தனி அக்கறை இருக்கு. எல்லாத்துக்கும் ஓர் அளவு வச்சிருக்கார். அதைத்தாண்டி போனால், பிரேக் போட்டு நிறுத்திடுறார். ‘விடுதலை' எப்போ சார் ரிலீஸ்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் அதுக்குத்தான் வெயிட்டிங்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். கௌதம் மேனன் சார் கூடவெல்லாம் நடிக்கிறேன். அவர் என்ன ஸ்டைலா இருக்கார் தெரியுமா! சிரிச்சா, பார்த்தா... அழகா அவர் கண்ணே பேசுது. ஹாலிவுட் ஆக்டர் மாதிரி இருக்கிறார். நமக்கெல்லாம் அவர் டைரக்ஷனில் நடிக்கணும்னு ஆசைதான். கூப்பிடுவாரான்னு வெயிட் பண்ணிப் பார்ப்போம்.’’

``இனிமேல் காமெடியைக் குறைச்சிடுவாங்களா?’’
‘‘காமெடிதான் நம்ம மெயின் அண்ணே. நடிச்சுக்கிட்டே இருக்கணும். கடைசி வரைக்கும் கேமிராவுக்கு முன்னாடி நின்னுக்கிட்டே இருக்கணும். சினிமாவுக்கு வேணும்னா என்ன வேணும்னாலும் செய்வேன். சிக்ஸ் பேக் வைக்கணும்னு சொன்னாங்க. நைட்ல தூங்கி காலையில எழுந்து பார்த்தால் சிக்ஸ் பேக் வந்துடாது. உட்காந்து அதற்குண்டான வேலை பார்த்துக்கிட்டு வந்தோம். ஊரு உலகமே ஆச்சரியப்பட்டுச்சு. என்ன ஒண்ணு, பிடிச்ச பழைய கஞ்சியும் சின்ன வெங்காயமும் சாப்பிட முடியலை. நடுவில் ஆரோக்கியமும் முக்கியமாகிடுச்சு. இப்போ உடம்பு காத்து மாதிரி கலகலன்னு இருக்கு. இறகு போல பறக்கிற மாதிரி வாகா இருக்கு. எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். இப்படியெல்லாம் ஒரு நல்ல படம் செய்றோம்னு பெருமை கிடையாது. நம்மளைப் போட்டு ஒருத்தர் எடுக்கத் தயாராக இருந்ததுதான் பெரிய விஷயம். ‘விடுதலை' பார்த்துட்டு கைத்தட்டல் எனக்குக் கிடைச்சால் அதை வெற்றி அண்ணன் எழுத்துக்கு, எண்ணத்துக்குன்னு புரிஞ்சிக்குவேன். யாராவது ஒரு ஆளுக்குதான் பெயர் நிக்கும்னா, நான் அதை வெற்றி அண்ணனுக்குக் கொடுத்திடுவேன்.’’

``ராம் இயக்கத்தில நடிக்கிறது எப்படி இருக்கு?’’
‘‘ராம் அண்ணே வேற விதம், வேற மாதிரி. நிவின் பாலி நடிக்கிறார். அவரை ஏன் மலையாளத்தில் கொண்டாடுறாங்கன்னு நல்லா புரியுது. ராம் அண்ணே டயலாக் டெலிவரியும் நடிப்பு சொல்லிக் கொடுக்கிறதும் அழுத்தம் திருத்தமாக இருக்கும். நிவின் பாலி பயங்கர சேட்டை புடிச்ச மனுஷன். நாங்க இரண்டு பேரும் உட்கார்ந்து அடுத்த காட்சிக்கு ரெடியாவோம். நான் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி ராமண்ணே முகத்தையே பார்த்துட்டு இருப்பேன். ஆனா, நிவின் இங்கே அங்கேன்னு பார்த்துட்டு இருப்பார். செல்போனில் ஒண்ணைத் தட்டிவிடுவார். என்னடா, பக்கம் பக்கமா பேசணும். ஆனா, இவர் இப்படி ஜாலியா இருக்கார்னு நினைச்சிட்டு ஷாட்டுக்குப் போனால் நிவின் பின்னிடுவார். ‘எப்படி சார் பண்றீங்க?'ன்னு கேட்டா, ‘அதெல்லாம் டேலன்ட் சார்'னு கேலியாகச் சொல்வார். அது கேலியில்லை, உண்மை.’’

``எப்பவும் சிவகார்த்திகேயன்னா அன்பு பெருகுதே...’’
‘‘என்னை எப்பவும் சொந்த அண்ணன் மாதிரி நினைக்கும் சிவா தம்பி. கூட வேலை செய்யும்போதே செட்டில் மட்டும் இல்லை, ஸ்கிரீன்லயும் அந்த அன்பு தெரியும். எங்ககிட்டே எழுதப்படாத ஒப்பந்தம் ஒண்ணு இருக்கு. இரண்டு படத்திற்கு ஒரு தடவை சேர்ந்து நடிக்கணும்னு ஒரு விஷயம் பேசி வச்சிருக்கோம். இப்பகூட ‘பிரின்ஸ்' படத்தில் ஒரு சீன் வந்துட்டுப் போகணும்னு சொன்னாங்க. ‘இதை நம்ம கணக்குல சேர்த்திடாதீங்க தம்பி'ன்னு சொல்லிட்டுத்தான் வந்தேன். அதே மாதிரி பாண்டிராஜ் அண்ணன் படத்தில் நடிக்கிறதெல்லாம் நம்ம வீட்டுக்குள்ள திரிகிற மாதிரிதான். சொந்த பந்தம், நல்லது கெட்டதுன்னு அவர் எடுத்திட்டுப் போனால் அதில் ஒரு பங்கை நமக்கு ஒதுக்கி வச்சிடுவார். பொன்ராம் அண்ணாச்சியும் அப்படித்தான். இம்ப்ரூவ்மென்ட் செய்துக்க அனுமதிச்சுக்கிட்டே இருப்பார். அதில் பெஸ்ட்டா வர்றதைத் தூக்கி ஸ்கிரீனில் வைப்பார் பாருங்க, தியேட்டரில் சிரிப்பு அள்ளும்.’’

``நடிகைகள்கூட ஒரு நல்ல ஃபிரண்ட்ஷிப் வச்சிருக்கீங்க...’’
‘‘கீர்த்தி சுரேஷ் தங்கச்சி எல்லாம் நம்மகிட்ட நல்ல பாசம். எது ஒண்ணுக்கும் அவங்ககிட்ட பேசுவேன். எங்க வீட்டம்மா வரைக்கும் அவங்கிட்டே பேசிட்டிருப்பாங்க. அதே மாதிரி, ஐஸ்வர்யா ராஜேஷ் நல்லா பேசுவாங்க. ஸ்ருதி ஹாசன் என்கிட்ட க்ளோஸ். பெரிய நடிகர் பொண்ணுன்னு எதையும் மனசுல அவங்க வச்சிக்கிறதே இல்லை. நல்ல ஆத்மா. எப்படி நாம் பழகுறோமோ, அந்த விதமா நமக்குத் திரும்பிக் கிடைக்கும்.’’
``சினிமாவுக்கு வந்த நாள்ல இருந்து உங்களுக்கு விஜய் சேதுபதி பழக்கம்ல...’’
‘‘சிவகார்த்திகேயன் என் தம்பின்னா, விஜய் சேதுபதி எனக்கு மாமா. அவர் எதார்த்தத்தோட உச்சம். அன்னைக்குப் பார்த்த மாதிரியே இன்னைக்கும் இருக்கார். குணத்தில் மாற்றமே இல்லை. யாருக்காகவும் எதற்காகவும் தன் கருத்தை மாத்திக்காத ஆளு. ஒருத்தன் பேசாமல் உட்கார்ந்திருந்தால் கூட, அவன் மனசில என்ன ஓடுதுன்னு சொல்லிடுவார். எல்லோரையும் சமமா நடத்துவார். ‘நீ காமெடியன் மட்டுமில்லை மாமா... அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டேங்கிற'ன்னு கேட்டுட்டே இருப்பார். அற்புதமான நடிகன். ‘நீதான்டா இந்தப் படத்துல ஹீரோ. உன் படத்துல நான் நடிக்கிறது ரொம்ப சந்தோஷம்'னு மனப்பூர்வமா சொல்வார். ‘வாத்தியார்'னா இனிமேல் விஜய் சேதுபதிதான்னு படம் பார்த்துட்டுச் சொல்லப் போறாங்க.’’