தொடர்கள்
Published:Updated:

“எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே வேண்டும்!”

சூர்யா
பிரீமியம் ஸ்டோரி
News
சூர்யா

புதிதாக ஒரு நல்ல இயக்குநர், சுதா கொங்கரா மாதிரி வந்திருக்கிறார் எனில், அவர் மேல் கவனம் பதிப்பேன். ‘விக்ரம்’ மாதிரி வர்த்தக வெற்றி தருகிற படம் வரும்போது அதன்மீதும் கவனம் போகும்.

- சமஸ்

``என்னுடைய முதல் ஏழெட்டுப் படங்களுக்குப் பின் எனக்கே என்னைப் பிடிக்காமல்போயிற்று. டப்பிங்கில் படங்களைப் பார்க்கும்போது, ‘என் வேலையை நான் சரியாகச் செய்யவில்லையே’ என்று தோன்றும். புதிய விஷயத்தைச் சொல்ல வேண்டும், புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க வேண்டும், சும்மா பொழுதுபோக்காளனாகப் போய்விடக் கூடாது என்ற எண்ணம் ஆழமாக எனக்குள் உண்டு. அதே நேரத்தில், சினிமா என்பது ஒரு பெரிய வியாபாரம். பல ஆயிரம் பேருக்கு வேலை அளிக்கும் ஒரு படம் அதன் முதலீட்டாளருக்கு லாபத்தைத் தர வேண்டும். இந்த இரண்டு விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிக்க வேண்டும். அதை விழுந்தும் எழுந்தும்தான் கற்றுக்கொள்ளவேண்டி இருக்கிறது'' என்று சொல்லி மென்மையாகச் சிரிக்கும் சூர்யாவுக்கு இது தமிழ் சினிமாவில் கால் நூற்றாண்டுத் தருணம்.

இந்த நேரத்தில் ‘ஜெய் பீம்’ திரைக்கதையை ‘அருஞ்சொல்’ பதிப்பகத்துடன் இணைந்து நூல் வடிவில் கொண்டுவருகிறது சூர்யாவின் ‘2டி’ நிறுவனம். வெறும் திரைக்கதை நூலாக அல்லாமல், படத்தின் உருவாக்கத்தில் பங்கெடுத்தவர்களின் உரையாடல்களையும் உள்ளடக்கி வரும் இந்த நூலில் சூர்யா பேசியிருக்கும் விஷயங்கள் அவருக்குள் நிகழ்ந்திருக்கும் உருமாற்றங்களை வெளிப்படுத்துகின்றன. அந்தப் பேட்டியிலிருந்து சில பகுதிகள் விகடன் வாசகர்களுக்காக...

சூர்யா
சூர்யா

‘‘ஒரு படத்தை நீங்கள் எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?''

‘‘கதை மிக முக்கியமான அம்சம். சொல்லப்படும் கதை தொய்வின்றி மனசுக்குள் இறங்கினால், தொடர்ந்து அதில் பயணிக்க விரும்புவேன். சில நேரம் நம்மைச் சுற்றி நடக்கும் சில அம்சங்களும் படத்தேர்வில் தாக்கம் செலுத்தும். நம் வீடு, சமூகம், சுற்றி நடக்கும் விஷயங்கள், நமக்குள் நடக்கும் உரையாடல்கள், நம்மை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள்... இந்த எல்லாமே! அந்தந்தக் காலகட்டத்தில், ‘இப்போ ஆடியன்ஸுக்கு என்ன பிடிக்குது?’ என்கிற பார்வையாளர்களின் ரசனையைக் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

25 வருட சினிமா கரியரில், நானே எவ்வளவோ மாறியிருக்கிறேன். வயது, அனுபவம், திருமணம், குடும்பம், அகரம் என வாழ்வின் முக்கியமான மாற்றங்களை எதிர்கொண்டே பயணிக்கிறேன். வீட்டில் மகன் என்கிற இடத்தில் இருந்து கணவன், தகப்பன் எனப் பொறுப்புகள் விரிவடைந்திருப்பது போலவே சமூகத்திலும் எனக்கான பொறுப்புகள் விரிவடைந்தி ருக்கின்றன. ‘அகரம் பவுண்டேஷன்’ போன்ற கல்வி உதவி இயக்கம் தற்செயலாக என் வாழ்வில் வந்திருக்கலாம். அது எனக்குக் காட்டிய உலகமும், அறிமுகப்படுத்திய உறவுகளும் அசாதாரணமானவை. இவை எல்லாமும் சேர்ந்துதான் நம் வேலையை, செயல்பாட்டைத் தீர்மானிக்கின்றன.

எங்கள் வீட்டில் ஜோதிகாவையே எடுத்துக்கொள்ளுங்கள். மிகக் கறாரான பார்வை அவருக்கு உண்டு. நான் நடித்த சில படங்களை அவர் பார்த்ததே இல்லை. ‘நான் இந்தப் படம் பார்க்க மாட்டேன்’ என்றே என்னிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடுவார். சில நேரங்களில், ‘ஏன் இந்த மாதிரியான வசனங்களை எல்லாம் நீ பேசுகிறாய்?’ என்று வருத்தப்படுவார். ஆரம்பக்கட்டத்தில் ஒரு தொழிலில் நாம் காலூன்றாதபோது அன்றைக்கான வேகத்தில் சில விஷயங்களைத் தெரிந்தும் தெரியாமலும் செய்துவிடுகிறோம். பிற்பாடும் அப்படியே இருக்க வேண்டிய தேவை இல்லை என்பது அவரது பார்வை. அவருடைய பார்வையை நான் மதிப்பேன்.

அதேபோல, புதிதாக ஒரு நல்ல இயக்குநர், சுதா கொங்கரா மாதிரி வந்திருக்கிறார் எனில், அவர் மேல் கவனம் பதிப்பேன். ‘விக்ரம்’ மாதிரி வர்த்தக வெற்றி தருகிற படம் வரும்போது அதன்மீதும் கவனம் போகும். புதிய முயற்சிகளை விட்டுவிடக் கூடாது என்பதை எனக்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன். சிலர் தங்கள் படைப்பின் வழியாக மனதில் நிற்பார்கள். இயக்குநர் செல்வராகவன் ஓர் உதாரணம். பரீட்சார்த்தமாக எதையாவது செய்வதையே வழக்கமாகக் கொண்டவர். அவருக்கு கம்ஃபர்ட் ஜோன் பிடிக்காது. எனக்கு இப்படியானவர்களைப் பார்க்கும்போது பெரிய மரியாதை வரும். இவர்களோடு நாம் கைகோத்து நிற்க வேண்டும் என்று நினைப்பேன். இது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட தேர்வு. எல்லாமும் சேர்ந்துதான் நம் வேலையைத் தீர்மானிக்கின்றன.''

“எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே வேண்டும்!”

‘‘இந்த விஷயத்தில் உங்களுக்கு யாரையும் முன்மாதிரியாக வைத்திருக்கிறீர்களா?''

‘‘கமல் சார். அவர் சந்தைக்கான படங்களையும் தருவார். பரிசோதனை முயற்சிகளையும் தொடர்வார். முக்கியமாக நான் அவரிடம் மதிக்கும் பெரிய விஷயம், ஒருபோதும் துவண்டுபோக மாட்டார். பெரிய தோல்விப் படத்தைக் கொடுத்திருப்பார்; அடுத்து வரும்போதும் இன்னும் பெரிய படத்துடன்தான் வருவார். அதுவும் பாதுகாப்பான ஒரு படமாக இருக்காது.

நான் யோசிப்பேன், ஒரு தோல்வியிலிருந்து அவர் நினைத்தால் மிக எளிதாக வெளியே வரலாம். ‘சகலகலா வல்லவன்’ எல்லாம் சினிமாவில் சக்சஸ் ஃபார்முலா படங்களில் ஒன்றாகப் பேசப்படுவது. அடுத்து ஏன் அவர் அதே மாதிரி ஒன்றோடு திரும்ப வருவதில்லை? திரும்பவும் ஒரு வணிக வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இருந்தால்கூட ஏன் அவர் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தைத்தான் யோசிக்கிறார்?

இது எனக்கு வாழ்நாள் பாடம் போலவே இருக்கிறது. எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே எனக்கு வேண்டும். ஜெயிக்க வேண்டும், ஆனால், அது பேசப்படும் நல்ல படமாகவும் இருக்க வேண்டும். ‘சிங்கம்’ போன்ற வெற்றிகள் தேவை. அதற்குப் பின் ‘ரத்த சரித்திரம்’ போன்ற படங்களையும் விரும்பித்தான் தேர்ந்தெடுக்கிறேன். நிச்சயமாக அது பரிசோதனை முயற்சிதான். எனக்கு நானே வைத்துக்கொள்கிற பரீட்சை.''

“எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே வேண்டும்!”

‘‘சரி, ‘ஜெய் பீம்’ கதையைத் தேர்ந்தெடுக்கும் முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?''

‘‘த.செ.ஞானவேல் அந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, நான் நடிப்பதற்காக அதைச் சொல்லவில்லை. நாங்கள் ‘2டி’ சார்பில் படங்கள் தயாரிப்பதற்கு அப்போது கதை கேட்டுக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு கதையாகத்தான் ஞானவேல் இதை என்னிடம் எடுத்து வந்தார். கதை என்னை உலுக்கிவிட்டது. அதுதான் அடிப்படைக் காரணம் என்று சொல்வேன். நம் மக்களில் ஒரு பகுதியினர் இன்னமும் இவ்வளவு வதைக்குள் இருக்கிறார்கள் என்பதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம் என்பதெல்லாம் இல்லை; இப்படி ஓர் அவலத்தைப் பொதுச் சமூகத்தின் முன் கொண்டுசெல்ல வேண்டும்; அதற்காகவே படத்தை நாம் தயாரிக்கிறோம் என்பதுதான் அன்று உருவான எண்ணமாக இருந்தது.

ஞானவேல் அப்போதே சில வசனங்களைக் கதைக்குள் வைத்திருந்தார். ‘இந்தப் பிஞ்சுக் கொடல தின்னா நம்ம பெருங்கொடலு பசியாறப்போதா?’ என்று ராஜாக்கண்ணுவிடம் செங்கேணி கேட்கும் கேள்வி என்னைத் தூங்கவிடாமல் ஆக்கிவிட்டது. ஒருவர் எலிக்கறி சாப்பிடுகிறார் என்பது ஒரு வரியில் கடந்து செல்லும் விஷயம் இல்லை. ஏன் இப்போதும் எலிக்கறி சாப்பிடும் நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்கிற கேள்வியிலிருந்தே அவர்கள் இந்தச் சமூகத்தில் எதிர்கொள்ளும் அவ்வளவு அழுத்தங்களுக்குமான காரணத்தை நம்மால் சென்றடைய முடியும்.

ஞானவேல் நான் அழைத்தேன் என்பதற்காக ‘அகரம்’ பணிகளுக்காகத் தன்னலம் பார்க்காமல், தான் உருவாக்கிக்கொண்டிருந்த வேறு நல்ல வேலைகளை விட்டுவிட்டு வந்தார். இன்றைக்கு எனக்கு ‘நல்ல நடிகன்’ என்று ஓர் அடையாளத்தை எப்படித் தமிழ் சினிமா உருவாக்கித் தந்திருக்கிறதோ அதற்கு இணையான செல்வாக்கு கொண்ட ‘சமூக அக்கறையாளன்’ என்று ஓர் இடத்தை ‘அகரம்’ உருவாக்கித் தந்திருக்கிறது. ஞானவேல் மூலமாக நான் அறிந்துகொண்ட விஷயங்கள் ஏராளம்.

அடுத்து, நீதிநாயகம் சந்துரு சார். என்ன மாதிரி மனுஷர் அவர் என்ற வியப்பு அவர்மீது எனக்கு உண்டு. எவ்வளவு பெரிய அமைப்பிலும் தனித்து ஒருவரால் செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பவர். சந்துரு சார் போன்றவர்களை நாம் கொண்டாட வேண்டும். இது அவர்களைப் பெருமைப்படுத்துவதற்காக இல்லை. அடுத்தடுத்த தலைமுறையினரில் இத்தகையோர் உருவாக இது உதவும். என் கவனம் சந்துரு பாத்திரத்திலேயே நிலைத்திருந்தது.

அடுத்து, என்னுடைய தனிப்பட்ட பயணம். இப்படி ஒரு படம் இந்தச் சமயத்தில் எனக்குத் தேவையாக இருந்தது. ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் பாத்திரத்தில் ஏன் நடித்தேன்? அத்தனை நெகட்டிவான பாத்திரம் அது. வெறும் நான்கு நிமிடங்கள் மட்டுமே திரையில் வந்து செல்லும் பாத்திரம். ஆனால், எத்தனை பேருக்கு அது பிடித்திருக்கிறது? சில சமயங்களில் பாத்திரங்கள் உங்களைச் சேதப்படுத்தக்கூட செய்யலாம். ஆனால், ஒரு கலைஞனாக அது தேவைப்படுகிறது.

உங்களுக்குத் தெரியும்... ‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ வரை ஒரு ஸ்தம்பிப்பில் நான் இருந்தேன். புதிதாகக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஒரு தாவல் வேண்டும் என்பது உறுதியாகத் தெரிந்தது. சுதா கொங்கரா ‘சூரரைப் போற்று’ மூலமாக அப்படி ஒரு தாவலைத் தந்தார். அந்தப் படம் நிச்சயம் அதிரடி வெற்றி பெறும் என்பது எனக்குத் தெரியும். அந்த ஷூட்டிங் முடித்துதான் இந்தக் கதையைக் கேட்க உட்கார்ந்தேன். அப்போது நிறைய புதிய இயக்குநர்களைச் சந்தித்துக் கதை கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரு சாமானியன் எப்படி எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு தொழிலில் ஜெயிக்கிறான் என்பதை ‘சூரரைப் போற்று’ பேசுவதாக இருந்தது. ஒரு சாமானியன் எப்படி எல்லாத் தடைகளையும் உடைத்துக்கொண்டு சமூகத்துக்காக அரசாங்கத்தையேகூட எதிர்த்து நின்று ஜெயிக்க முடியும் என்பதை ‘ஜெய் பீம்’ பேசுவதாக இருந்தது. அதனால் இதிலும் நான் நடிக்க எண்ணினேன்.''

`` ‘ஜெய் பீம்’ படத்துக்கு வந்த எதிர்வினைகளில் முக்கியமானவை?''

‘‘நான் யாரை என் முன்னோடி என்று சொன்னேனோ, அந்தக் கமல் சார் ‘ஜெய் பீம்’ பார்த்துவிட்டு அரை மணி நேரம் பேசினார். ‘இந்தப் படம் எங்கேயும் சினிமாவாகத் தெரியவில்லை. நான் இந்த மாதிரி படங்களைச் செய்யத்தான் ஆசைப்படுகிறேன். ஆனால், என்னிடம் யாரும் இப்படி ஒரு கதையை எடுத்து வரவே இல்லை. எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ‘சூரரைப் போற்று’வில்கூட சினிமா ட்ரீட்மென்ட் இருக்கிறது. ஒரே ஒரு டிரோன் ஷாட்டில் மட்டும்தான் சினிமாவாக ‘ஜெய் பீம்’ தெரிந்தது. மற்றபடி கேமரா கோணங்கள், கதாபாத்திர வடிவமைப்புகள், கதாபாத்திரங்களின் செயல்திறன், படத்தொகுப்பு எல்லாமே கூடி ஒரு இயல்பான வாழ்வைத் திரையில் கொண்டுவந்திருக்கின்றன' என்று சொன்னார். ‘இந்தத் திரைக்கதை அமைப்பின் மேல் எப்படி நம்பிக்கை வைத்து முடிவெடுத்தீர்கள்?' என்று அவர் கேட்டபோது, ‘பரவாயில்லை, நாமும் கொஞ்சம்போல ஏதோ செய்கிறோம்' என்று நினைத்துக்கொண்டேன்.

‘சூரரைப் போற்று’, ‘ஜெய் பீம்’ இரண்டு படங்களுமே ஓ.டி.டி வழியே வெளியானவை என்றாலும், திரையரங்கிலும் நாங்கள் சிறப்புக் காட்சிகளைப் பார்த்திருந்தோம். ‘சூரரைப் போற்று’ படம் முழுக்கக் கைத்தட்டல், விசில். ‘ஜெய் பீம்’ முழுக்க அமைதி. இடைவேளையில்கூட யாரும் பேசிக்கொள்ளவில்லை. ஜோதிகா ‘இது பெரிய தாக்கத்தை உருவாக்கும்’ என்றார். ‘அப்படியா?’ என்றேன். எனக்கு இரண்டு படங்களையுமே பிடித்திருந்தது. இது ஒரு ஜெம். அது ஒரு ஜெம் என்றே நினைத்தேன். ஜோதிகா, ‘ஜெய் பீம்’ இன்னும் ஒருபடி மேலே என்றார். 'ஜெய் பீம் ஒரு சுப்பீரியர் பிலிம். அதுல என் பேரும் புரொடியூஸரா வந்தது பெருமையா இருக்கு' என்றார்.

“எளிமையான வெற்றியைவிட அர்த்தமுள்ள வெற்றியே வேண்டும்!”

என் மகளுக்கு 15 வயது ஆகிறது. நாங்கள் கேலியும் கிண்டலுமாகப் பேசிக்கொள்வோமே தவிர, ரொம்பத் தீவிரமாகப் பேசிக்கொள்வதில்லை. அதுவும் நீண்ட நேர உரையாடல் எல்லாம் நடந்ததே இல்லை. ‘ஜெய் பீம்’ பார்த்துவிட்டு வந்த மகள், ‘எப்படிப்பா இந்தப் படத்த நீங்க பண்ணுனீங்க? போலீஸா படம் பண்ணிட்டு இருந்தீங்க... இப்போ அப்படியே நேர் எதிரா ஒரு படம். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா. இப்படியெல்லாம் மக்கள் கஷ்டப்படுறாங்களாப்பா? நாம இதையெல்லாம் பொருட்படுத்தாமதான் வாழ்றோமாப்பா? சச் அன் இம்பார்ட்டன்ட் பிலிம், ரியலி குட்பா… அம் வெரி ப்ரௌட் யூ மேட் திஸ் பிலிம்பா’ என்றாள். இந்தப் படம் அவள் வயதைச் சேர்ந்தவர்களைச் சென்றடைந்ததும், அவர்களை உலுக்கியதும் எனக்கு முக்கியமானதாகத் தோன்றியது.

நிறைய பேர், ‘இந்தப் படம் எங்களை எஜுகேட் செஞ்சுது. எங்களோட அறியாமையைச் சுட்டிக்காட்டுச்சு'ன்னு சொன்னாங்க. பல மொழிகளிலும் ஒரே உணர்வை இது கடத்தியிருக்கு. இவ்வளவையும்விட, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுக் கண் கலங்கியதும், பழங்குடி மக்களுக்கான சான்றிதழ்கள், அரசு நலத்திட்டங்கள் சென்றடைவதில் அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டதும் மிக முக்கியமான விஷயம். இருளர் சமூக மக்கள் படம் பார்த்துவிட்டு நெகிழ்ச்சியுடன் கையைப் பிடித்துக்கொண்டு கலங்கி நின்றார்கள். வார்த்தைகளே இல்லை. அந்த அமைதியில், தங்கள் துயரம் வெளிச்சத்துக்கு வந்துவிட்ட ஒரு நிம்மதி இருந்தது. ‘ஜெய் பீம்’ படத்தில் வரும் ஒரு வசனம்தான் ஞாபகம் வருகிறது, ‘நாம செஞ்சிட்டுருக்கிற தொழில் யாருக்கு எப்ப எப்படி உதவுதுங்கறதை வெச்சுதான் அதுக்கு மரியாதை!’ ''