சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

உடலே மொழியாக... - ரங்காராவ் 100

ரங்காராவ்
பிரீமியம் ஸ்டோரி
News
ரங்காராவ்

சமீபத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் தன்வரலாற்றுப் படம் வெளியாகி மக்களின் பேராதரவைப் பெற்றது. அந்தத் திரைப்படத்தில் சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ், `மாயா பஜார்’ படத்தில் சாவித்திரி நடித்த காட்சியைப் பிரதி செய்து நடித்திருப்பார்.

ந்தக் காட்சி அவரை சாவித்திரியம்மாவாகவே ஆக்கிவிட்டது என்ற பெரும் பாராட்டைப் பெற்றது. ஆனால் இதில் சிறப்பான செய்தி என்னவென்றால், மாயா பஜார் படத்தில் சாவித்திரி அவர்களே ரங்காராவ் `போல’தான் அந்தக் காட்சியில் நடித்திருப்பார். அதாவது கதைப்படி நாயகியாக உருமாறிய கடோத்கஜன் நடை அது. கடோத்கஜனாக நடித்தவர் ரங்காராவ். பாராட்டப்பட்ட உடலசைவு ரங்காராவின் அசலான அசைவு. ஆம், ரங்காராவ் எனும் நடிகரின் உடலே அவரது நடிக ஆளுமை ஆனது என்பதுதான் அபூர்வம்.

எஸ்.வி. ரங்காராவ் எனும் நடிகர் குறித்த விவரணைகள் அவரை குணச்சித்திர நடிகர் எனவே பலவேளைகளில் பதிவு செய்கிறது. ஆனால், அவரது அறிமுகம் முதலே அவர் எதிர்மறைப் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார். தமிழில் 1973ஆம் ஆண்டில் வெளிவந்த எம்ஜிஆரின் ‘நம் நாடு’ படம் வரை அவர் பல படங்களில் பிரதான வில்லன். பொதுவாக எதிர்மறைப் பாத்திரங்களை ஏற்றவர்களை ’குணச்சித்திர’ என்ற அடையில் அடைப்பதில்லை. இந்தவித பலவிதமான பாத்திரம் ஏற்கும் நடிகர்களை ஆங்கிலத்தில் ‘கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்’ (Character Artist) என்ற சொல்லால் விளிப்பதே தமிழில் ‘குணச்சித்திரம்’ ஆனது. இந்தக் குணச்சித்திர நடிகர்களின் சிறப்பு என்னவெனில், பாத்திரத்திற்கேற்ப தங்கள் உடல் மொழியையும் மாற்றுவார்கள். ஆனால் ரங்காராவ் அவர்களின் ஆஜானுபாகுவான உடலமைப்பே அவருக்கான பாத்திரத் தன்மையைத் தீர்மானித்தது. அதனால்தான் அவரது உடலே மொழியானது என்பேன். அதன் அசைவுகள் விறைத்து நின்ற உருத் தோரணைகளாகவும், அது நெகிழும்போது இரக்கத்தைக் கோருவதாகவும் மாறி நிற்கும்.

உடலே மொழியாக... - ரங்காராவ் 100

ரங்காராவ் ஒருவகையில் நம் அவ்வைப் பிராட்டி போல இளமையில் முதுமையை ஏற்ற உடல். அவர் நடிக்கத் தொடங்கியபோது வயது முப்பதுதான்; ஆனால் ஏற்றது நடுவயது கடந்த பாத்திரம். பின்னர் அந்த வயதே அவருக்கான நிரந்தரமான வயதானது. அவர் 1974ஆம் ஆண்டு சென்னையில் மாரடைப்பால் மரணமடைந்த போதும் அவரது அசலான வயது ஐம்பத்தாறுதான்.

ரங்காராவ் குறித்த நடிப்பாய்வுத் தரவுகள் அவரை ‘முறைமை நடிகர்’ (Method Actor) எனக் குறிக்கின்றன. இந்த முறைமை நடிப்பு, விரிவான பொருள் விளங்கங்கள் கொண்டவை, ஆனால் எளிதான புரிதலுக்கு இயல்பான நடிப்பு என அதைப் புரிந்து கொள்ளலாம். மீண்டும் அதே விடைதான். அவரது உடலே அவருடைய பாத்தி ரங்களையும், அவற்றின் தன்மைகளையும் தீர்மானித்தன. அவரது மாறாத முதுமை அவரைத் தமிழ் சினிமாவின் ஆகப்பெரிய கனவானும் ஆக்கியது.

சாமர்லா வெங்கட ரங்காராவ் (1918 – 1974) என்ற எஸ்.வி.ரங்காராவ், தமிழ், தெலுங்கு சினிமாக்களின் கம்பீர ஆளுமை. கம்பீரம் என்ற சொல்லின் விளக்க மாதிரியாகக் கொள்ளத் தக்கவர் ரங்காராவ். தெலுங்கில் 1949-ல் நடிக்கத் தொடங்கியவர், தமிழ், தெலுங்கு இருமொழிப் படமான பாதாள பைரவி (1951 ) வழியாகத் தமிழில் அறிமுகமானார். அவரது நடிப்பில் வெளியான படங்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 90 என்கிறது விக்கிப்பீடியா தகவல். ஆரம்பக்காலப் படங்கள் இருமொழிப் படங்களாகவும், பின்னர் தனித்த தமிழ்ப்படங்களாகவும் உள்ளன. அவற்றில் அவரது நடிப்பாளுமையைக் காண நான்கைந்து படங்களைத் தேர்வதானால் எனது பட்டியல் பாதாள பைரவி(1951), மாயா பஜார்(1957), படிக்காத மேதை(1960), படித்தால் மட்டும் போதுமா (1962 ) என்பதாகவே இருக்கும். முன்னது இரண்டும் கற்பனை மாயாஜால ராஜா ராணி வகைகள் (Costume Drama). பின்னவை இரண்டும் ஐம்பதுகளின் பண்ணைக் குடும்பங்களின் தன்னலப் பொருளாதார நலன் தேட்டையால், குடும்ப உறவுகள் சிதைந்து, கூட்டுக்குடும்பங்களின் வீழ்ச்சியை நெகிழ்வாகச் சித்திரித்த இயக்குநர் பீம்சிங் அவர்களின் உன்னத சித்திரங்கள்.

உடலே மொழியாக... - ரங்காராவ் 100

முதலிரண்டு படங்களிலும் அவர் ஏற்றது கற்பனை ராஜா ராணிக் கதை பாத்திரங்கள். போதாக்குறைக்கு அவற்றில் மாயாஜாலம் செய்யும் பாத்திர வார்ப்பு. அவரது ஓங்கு தாங்கான உடலை அதன் இயல்பான அசைவிற்குள் இருத்தினாலே அவை காட்சியாகிவிடும். கூடுதல் பலம் அவரது கனத்த குரல். அந்தப் பாத்திரங்களின் கற்பனையைக் காட்சியாக்க இதைவிடப் பொருத்தமான உடல் அரிது. இந்தப் புள்ளியில் ஒன்றைத் தெளிவு செய்துகொள்ள வேண்டும், உடலின் பிரதானத்தை வலியுறுத்துவது அவரது முகபாவ சாத்தியங்களை மறந்ததாகவோ, மறுத்ததாகவோ கருதக்கூடாது. அவரது இந்தவகைப் பாத்திரங்களுக்கான பாவத்தில் `இயல்பு’ அறவே இருக்காது என்பதுதான் இங்கு அழுத்தம் பெறும் செய்தி. நடையில் ஓர் அலங்கார அசைவு (Stylisation), முக பாவங்களின் அகம்பாவம், ஆணவ அல்லது அகங்கார கேலிச் சிரிப்பு தொடர்ந்தபடியே இருக்கும். இதன் முற்றிலுமான மாற்றையே அவரது அறுபதுகளின் சமூகப் படங்களான `படிக்காத மேதை’, `படித்தால் மட்டும் போதுமா’ திரைப்படங்களில் காண்கிறோம். இந்தப் படங்கள் சிவாஜி, கண்ணாம்பா, சாவித்திரி போன்ற நடிப்புப் பேராளுமைகளால் நிறைக்கப்பட்டிருக்கும். இந்தப் படங்களில் இந்த நடிப்பு ஆளுமைகளுக்குள்ளான ஒப்பீடு ஒரு பெரும் ஆய்வுத்தொகுப்பு. கண்ணாம்பாவின் காட்சியைத் தன்பால் ஈர்க்கும் அதீத பிரசன்னத்தின் முன் தன் `இயல்பில்’ தனித்து உயர்ந்து நிற்பார் ரங்காராவ். சிவாஜியுடனான காட்சிகளிலும் இயல்பான அல்லது மெல்லிய முகபாவ மாற்றங்களாலேயே அதை நிரல் செய்வார் ரங்காராவ்.

இரண்டாம் வகை சமூகப்படங்களின் தேர்வும் காரணம் கருதியே. ‘படிக்காத மேதை’யில், வளமான வாழ்வு வாழும் ராவ் பகதூர், ஆனால் அவரது பாத்திரப் படைப்பு சிறுநகரத்துப் பெரிய மனிதர் என்பதுதான். பொருளாதார வீழ்ச்சியோடு குடும்பமும் சிதைவுற, தனது மனசாட்சியாக நடமாடும் விசுவாச/வளர்ப்புப் பிள்ளை ரெங்கனை, அவனுக்குத் தெரியாத உலகில் வாழ அனுப்பும் ஏழைத் தந்தையாக அவரது உடல் மொழி இயல்பானதும், அபாரமானது மாகும். தார்ப்பாச்சு வேட்டி (தெலுங்குக் கொடை) வெள்ளை அரைக்கைச் சட்டை , மேல்துண்டு, ஒரு குடை ஆகியவைதான் உடையலங்காரம். அவை வெண்மை கூடி விறைப்பாய் இருந்தால் உடலசைவும் அதனியல்பில். அந்த உடையே சற்று மங்கலாய் லேசான கசங்கலோடு என்றால் உடலும் தளர்ந்திருக்கும். இருக்கையில் அமர்ந்து வலது காலை எடுத்து இடது காலின் மீது அமர்த்தி, இருக்கையின் பின் சரிந்தால் பாவம் மாறும். இருக்கையின் கைப்பிடியை அழுத்தியபடி தளர்ந்து அமர்ந்தால் வேறு பாவம். சினம்கூட நடையில் வேகம் கொள்ளாது. அதே ராவ் பகதூர் நகரத்து சீமான் எனில் (படித்தால் மட்டும் போதுமா) கோட் சூட்டுடன், வாயில் பற்ற வைத்த பைப் இருக்கும். இப்போதும் இருக்கை உடலசைவை, பாவத்தை வெளிப்படுத்தும், ஆனால் இருக்கை சோபாவாகியிருக்குமாதலால் அசைவும் முற்றிலுமாக மாறும். பேசும் மொழி ஆங்கிலம் கலந்த தமிழானால் அதற்கொப்ப அசைவுகள் இசைவுறும்.

நூற்றாண்டு நினைவின் அடியாழத்தில் `அந்த கம்பீர அப்பா’ இன்னும் தமிழ்கூறு நல்லுலகின் நினைவகலவில்லை என்பதே மெய்யான அஞ்சலி.