கருணாநிதி செய்த உதவி! - கமல் கேட்ட மன்னிப்பு! - ஸ்டாலினின் ஆட்சி! - மனம் திறக்கும் வடிவேலு!

ஓவியம்: கோபி ஓவியன்
திரும்பி வருகிறார் வடிவேலு. தமிழ் சினிமா காத்திருக்கிறது. சினிமாவின் வெற்றி பார்முலா லிஸ்டில் தன் காமெடியைக் கட்டாயமாக்கியதுதான் வடிவேலுவின் வெற்றி. கொரோனா கலவரத்திலும் அவர் தூக்கியடிக்கும் காமெடிப் பறையில் அதிர்ந்து சிரிக்கிறது தமிழகம். நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு பேட்டிக்குச் சம்மதிக்கிறார் வடிவேலு. காரணம், அவருக்கான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு வழி திறக்கப்பட்டிருக்கிறது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’தான் இப்போ டிரெண்டிங்.
“அண்ணே... எல்லா விதமான ஆட்களோட வாழ்ந்து பார்த்தவன் நானு. அத்தனை கேரக்டர்களையும் கண்ணால பார்த்து கிரகிச்சு, அதை அங்கேயே ரிகர்சல் பார்த்து, நண்பர்கள்கிட்டே அடிச்சு நொறுக்கி கிளாப்ஸ் வாங்கினேன். ‘ஏண்டா இங்க இருக்க, போய்த் தொலைடா’ன்னு கூட்டாளிகள் தொரத்திவிட்டு மெட்ராஸுக்கு வந்தேன். அப்புறம் சிக்கி முக்கி கஷ்டப்பட்டு ஒரு நிலைக்கு வந்ததெல்லாம் உங்களுக்குத் தெரிஞ்ச சமாச்சாரம். அப்புறம் இந்த வாழ்க்கை விளையாட்டு காட்டி கொஞ்சநாள் சினிமாவை விட்டு இருந்துட்டேன். ஒரு சினிமாவில் நடிக்கப் போயி சரிப்பட்டு வராம, இப்பதான் எல்லாம் சரியாகி அடுத்த ரவுண்டுக்கு வந்திருக்கேன். எப்பவும் மனசு சொல்றதைக் கேட்கிறவன் நானு. சரி ‘ஆனந்த விகட’னிலிருந்து அண்ணன் கேட்டதும் கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம்னு நினைச்சேன், அதுதான்” நட்புடன் சிரிக்கிறார் வடிவேலு.

“எப்படி இந்தத் தடையிலிருந்து வெளியே வந்தீங்க...”
“எல்லாம் சரியாகும்போது இந்தக் கொரானா வந்துச்சு. ஆள் நடமாட்டம் ஒண்ணுமில்லாம வீட்டைப் பூட்டிக்கிட்டுக் கிடந்தோம். படம் எடுக்கிற நேரத்தில் பாம்பெல்லாம் நடுரோட்டில் படம் எடுத்து சாவகாசமாத் திரியுது. நாயெல்லாம் ஃப்ரீயா புரண்டு படுத்திட்டு புரிபடாம நிக்குது. மனுசப் பசங்க எங்க போயிட்டாய்ங்கன்னு மிருகங்களுக்கே யோசனை வந்துருச்சு. உலகமே மிரண்டு கிடக்கும்போது நம்ம பிரச்னை சின்னதாகிப்போச்சு. அப்பதான் லண்டனில் இருக்கிற சுபாஷ்கரன் சாருக்குப் போனைப் போட்டேன். ‘கொரோனா விலகட்டும், ஊருக்கு வர்றேன்... விளக்கமாப் பேசிடுவோம் வடிவேலு’ன்னார். சொன்னபடியே வந்துட்டு ‘பெங்களூரு வந்திடுங்க’ன்னு சொன்னார். அங்கே ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ஆசிரமத்தில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
சுபாஷ்கரன் எம்புட்டுப் பெரிய ஆளு. இன்னிக்கும் அவரு நிமிர்ந்தா நியூஸு. குனிஞ்சா ஸ்கூப்புதானண்ணே! ஆனா பழக்க வழக்கத்துல தங்கம்ணே! ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சாமி ‘எல்லாம் நல்லா நடக்கும். உன் கஷ்டம் எல்லாம் தீரும்’ன்னு ஆசீர்வாதம் பண்ணினார். அவரே நம்ம ரசிகர்ணே! நான் பேசுறதையும் பாடுறதையும் ரசிச்சு ரசிச்சுக் கேட்பார் பாருங்க... அதுவே அழகா இருக்கும். ஊர் உலகத்துக்கே ஆசி வழங்குறவரு நம்ம பேச்சையும் ரசிச்சுக் கேட்கிறது கொடுப்பினை இல்லையாண்ணே! அங்கேயிருந்தே சுபாஷ்கரன் முதலாளி ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’னு அறிவிச்சாரு. எனக்கு அந்தச் சமயம் அவரைப் பார்க்க குலதெய்வம் ஐயனார் மாதிரியே தெரிஞ்சது.
அதுவரைக்கும் ஆத்தாவும் மனைவியும்தான் என்னை உள்ளங்கையில வச்சுத் தாங்குனாங்க. இப்பக்கூட மதுரைக்குப் போய் ஆத்தாவைப் பார்த்து, ‘மறுபடியும் நடிக்கப்போறேன்’னு சொல்லிட்டு வந்தேன். நான் அதுக்கு எப்போதும் பழைய வடிவேலு பயதான். ‘இந்தப் பயபுள்ள எப்படி நடிச்சிருக்கான் பாரு’ன்னு விழுந்து விழுந்து சிரிக்கும். கண்ணுல தண்ணி வரச் சிரிச்சிட்டு அப்படியே அழுவும். இப்பவும் எப்பவாச்சும் மனசு ஒரு மாதிரியா இருந்தால் அப்படியே பிளைட்டைப் பிடிச்சுப் போய் ஆத்தாகிட்ட பேசிட்டு கால்ல விழுந்து துண்ணூறு வாங்கி அப்பிட்டு நிம்மதியா கிளம்பி வந்திடுவேன்.”


“எப்படி இருக்கும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’... தமிழ் உலகமே காத்திட்டு இருக்கு...”
“நம்ம பங்காளி சுராஜ் அனுபவிச்சு காமெடி பண்ணியிருக்கார். நானும் அவரும் சேர்ந்து ராவடி பண்ணியிருக்கோம். சுராஜ் இந்தப் படத்துக்கு உழைச்ச உழைப்பிருக்கே, அதைத் தனியாக் குறிப்பிட்டுச் சொல்லணும். கொரோனா சமயத்தில கூடிப்பேசினதில் நிறைய அயிட்டங்கள் காமெடியில் செமத்தியா வந்திருக்கு. இங்கேயிருக்கிற ‘லைக்கா’ நிர்வாகி தமிழ்க்குமரன் எள்ளுன்னா எண்ணெயா நிக்கிற மனுஷன். நிர்வாகத்தில் மன்னன்.
சினிமாவைப் புரிஞ்சுக்கிறதைவிட சினிமா ரசிகனைப் புரிஞ்சுக்கிறது சிறந்தது. அவனோட எப்பவும் தொடர்புல இருக்கிறதுதான் நம்ம வெற்றிக்கு அடிப்படை. எல்லாத்தையும் காமெடியோடு பிசைஞ்சு கொடுத்தால் மக்களுக்குப் போய்ச் சேரும். எல்லாத்தையும் காமெடியாப் பாத்தா இந்த உலகமே அழகாய் இருக்கும். அப்படி ஒரு படம்தான் இது.”


“கமல், `காமெடியை விடுங்க... தலைசிறந்த நடிகன் அவர்’னு உங்களைப் பாராட்டியிருக்காரே!”
“அப்படிப்பட்ட நல்ல மனசு அவருக்கு. சந்தோஷம். இப்பகூட டாக்டர் அன்புமணி ராமதாஸ் மகள் கல்யாணத்தில் கமல் சாரைப் பார்த்தேன். ‘மறுபடியும் நீ வர்றது எனக்கு மகிழ்ச்சிதான். இன்னும் நீ பெருசா வருவாய். இந்தப் பிரச்னையை நானே எடுத்துக்கிட்டு சரி பண்ணியிருக்கணும். நான் பேசாம இருந்திட்டேன். என்னை மன்னிச்சிடுப்பா’ன்னு சொன்னார். ‘சார் இதையெல்லாம் நீங்க சொல்லலாமா’ன்னு அவர் கையைப் பிடிச்சுக்கிட்டேன். ‘சீக்கிரம் நம்ம படத்துக்கும் வந்துடுங்க. காத்துட்டிருக்கேன்’னு சொல்லிட்டுப் போனார். இப்ப எல்லாமே நல்ல விஷயமா நடந்துக்கிட்டிருக்குண்ணே!”
“நகைச்சுவையில் எப்படி இவ்வளவு உணர்ச்சி பாவங்களை ஆவணப்படுத்துறீங்க..?”
“மதுர மதுரன்னு பெருமை அடிக்கிறதா நினைக்காதீங்க. இப்ப நடிப்பை இன்ஸ்டிட்யூட்டில் படிக்கிறாங்க. நம்ம வாழ்க்கையே எனக்கு இன்ஸ்டிட்யூட்தான். ஒரு கவர்மென்ட் ஸ்கூல்... பக்கத்துல சலூன்... டீ குடிச்சுட்டு அரசியல் பேசுற சனங்க. சீரியல் செட்டும் திருவிழாவும் அள்ளும்ணே! கரகாட்டம், நாதஸ்வரம், மேளம் கிழிபடும். மொத நாள் வள்ளித் திருமணம் பாத்திட்டு, அடுத்த நாளு அரிச்சந்திரன் மயானத்தில் நிற்கிறதைக் கண்கலங்கி பார்த்துட்டுப் படுத்திருப்போம். பெரிய ரசனைக்கார ஆளுங்கண்ணே! மதுரையே பெரிய கிராமம்தான். மதுரையைச் சுத்தியிருக்கிறது சின்னக் கிராமம். திட்டுவதைக்கூட ராகம் போட்டுத் தான் திட்டுவாய்ங்க. எப்ப பார்த்தாலும் திருவிழா, நாடகம், பாட்டுக் கச்சேரின்னு ரொம்ப டேஸ்ட்டு உள்ளவய்ங்க. இப்பவும் பாருங்க, ஒரு படம் மதுரைல நல்லா ஓடுனால் தான் அது பெரிய ஹிட்டு. போலீஸ்கிட்ட எகிர்றதும், ‘பேசுறது குத்தமாயா’ன்னு கேட்டு அடி வாங்குறதும் அழகுய்யா. கண்ணு சிவக்க வைகை ஆத்துல குளிச்சுட்டுத் திரும்பினால் டவுசர் காணாமப்போயிருக்கும். ஒரு பெருசு தூக்கிட்டுப் போயிருக்கும். அடுத்த பையன் வர வரைக்கும் காத்துட்டு அவன் டவுசரைப் போட்டுட்டு ஓடினதெல்லாம் சேர்ந்துதான் சினிமாவா வருது. ‘பள்ளிப் படிப்பு புட்டிப் பாலு, அனுபவப் படிப்பு தாய்ப்பாலு’ன்னு எங்க அப்பத்தா சொல்லும். மதுரையில் பாடித் திரிஞ்சதும் வைகை ஆத்துல ஓடித்திரிஞ்சதும் இல்லாட்டி இந்த வடிவேலு ஏதுண்ணே!”


“கலைஞருடனான உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்...”
“நம்மைப் பேச விட்டு அப்படி ரசிப்பார் பாருங்க... அவ்வளவு சந்தோஷமா இருக்கும். எப்பவும் பேசணும்னு தோணுனா கூப்பிட்டு விடுவார். இந்தியாவே அவர் பேச்சைக் கேட்டு நடக்கிற காலத்துல, நம்ம பேச்சையும், காமெடியையும் ரசிப்பார். ஒரு விஷயம் சொன்னதே இல்லை. இப்பச் சொல்றேன். ‘புலிகேசி’ எடுத்து முடிச்சதும் புளூ கிராஸ் பிரச்னை பண்ணிடுச்சு. சர்ட்டிபிகேட் தாமதம் ஆகுது. நான் எஸ் பிலிம்ஸ் ஓனரையும், டைரக்டரையும் கூட்டிட்டு கலைஞரைப் பார்க்கப்போனேன். ‘என்னய்யா வடிவேலு இந்தப் பக்கம்’னு கூப்பிட்டாரு. ‘அய்யா புளூகிராஸ் பிரச்னை. ராஜா குதிரையில போகக் கூடாதுன்னு சொல்றாங்க. குதிரைப் பயன்பாடு அதிகமா இருக்கேன்னு குத்தம் சொல்றாங்க’ன்னு சொன்னேன். ‘ராஜா குதிரையில போகாமல் குவாலிஸ்லயா போவாரு’ன்னு சொல்லிட்டு, டெல்லி ஆ.ராசாவுக்குப் போன் பண்ணி ‘இதைச் சரி பண்ணுய்யா’ன்னு சொன்னார். ஒரு போனில் ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய்தார். படம் எடுக்கிறது பெருசு இல்லை. ரிலீஸ் பண்றது பெருசுன்னு உதவி செய்தவர் அவர். ‘புலிகேசி’ வெளிவரக் காரணம் கலைஞர்தான். இதைப் பதிவு செய்வது என் கடமை.’’
“இப்போ டிரெண்ட் மாறியிருக்கே, அதை உள்வாங்கியிருக்கீங்களா?”
“என்ன டிரெண்ட்? டிரெண்ட்னா எனக்கு என்னன்னே தெரியாது. அப்படி ஒண்ணு எங்கேயிருக்கு? இங்கே என்ன மாறிப்போச்சு. செல்போன், லேப்டாப்பு எல்லாம் வந்து நீங்க புழங்கிட்டா எல்லாம் மாறிடுச்சா? பெத்த ஆத்தாவ அத்தைன்னா கூப்பிடறீங்க? பசின்னு மூணு வேளை சாப்பிடல. டெக்னாலஜி மாறியிருக்கு. அப்படி மாறி என்ன புண்ணியம்! நல்லதைவிட கெட்டது வந்து கொட்டுது. புள்ள குட்டிகளை நம்ம கையில் வச்சிக்க முடியாமத் திணறுறோம். சரி சினிமாவில் இப்ப பிலிம் இல்லை. அதனால அங்கிட்டு ஒரு ஷாட், இங்கிட்டு ஒரு ஷாட், மேலே ஒரு ஷாட், கீழே ஒரு ஷாட், அடியில ஒரு ஷாட்னு எடுத்துப் போறாங்க. இவ்வளவு நாள் கேப்பில் கிடந்து என்கிட்ட காமெடி ஊறிப் போய்க் கிடக்கு. சும்மா டிரெண்ட்னு ஒரு வார்த்தையை வச்சுக்கிட்டுப் பேசாதீங்க. எல்லாமே பழசுதான் திரும்புது. போங்கண்ணே!”


“உங்க நண்பர் விவேக் இறந்துட்டாரே...”
“அன்னிக்குப் போக முடியல. நாலஞ்சு நாள் கழிச்சு விவேக் வீட்டுக்குப் போனேன். அந்தத் தங்கச்சி பிள்ளைகளை வச்சிக்கிட்டு நிக்கிறது மனசு வேதனையாப் போச்சு. ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. எது சொன்னாலும் அவன் இழப்பைச் சொல்ல முடியாதுன்னு தோணுது. துக்கம் கேட்கப்போறது இவ்வளவு கஷ்டமான்னு தோணுச்சு. கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த பொண்ணுகளைக் கல்யாணம், காட்சின்னு பண்ணிப் பார்க்காமல் போயிட்டான். ‘அவன் எங்கேயும் போகலை. இங்கேதான் இருக்கான்’னு சொல்லிட்டு வந்தேன். புள்ளைங்க வரிசையா நிற்கிறதைப் பார்த்து மனசு வெடிச்சுப்போச்சு. பணம் இருக்கலாம்... வீடு, வாசல் இருக்கலாம்... நல்லா வளர்க்க அந்தத் தங்கச்சி இருக்கலாம்... ஆனால் விவேக் கூட இருக்கிற மாதிரி வருமா! நானே எவ்வளவோ கவலைப்பட்ட மனசுகளை ஆத்திவிட்டிருக்கேன். என்னாலே அவங்கள தேத்த முடியல.”
“அடுத்தடுத்த படங்கள் என்ன செய்யறீங்க..?”
“ரை... ரைட்டுன்னு ஆரம்பிச்சாச்சு. நல்ல தயாரிப்பாளர், நல்ல கதை, நல்ல இயக்குநர்தான் பாக்குறேன். கே.எஸ். ரவிக்குமார், கௌதம் மேனன், மாரி செல்வராஜ், லாரன்ஸ், ‘காக்கா முட்டை’ மணிகண்டன்னு கதை சொல்லிட்டுப் போயிருக்காங்க. நலன் குமாரசாமி ‘ஒரு படத்தை முடிச்சிட்டு வர்றேன், அடுத்து பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார். இன்னும் பேச்சுவார்த்தைகள் தொடருது. பாத்து கவனம் வெச்சு நிதானமா நடக்குறேன்.”


“ஸ்டாலின் ஆட்சியை எப்படிப் பார்க்கிறீங்க..?”
“அண்ணே... கவனத்துல வைங்க. நான் அரசியல் பேசல. மக்கள் கிட்டே ஒரு சந்தோசம் இருக்கு, சனங்களுக்கு நம்பிக்கை வருது. மக்கள் அவங்களை ஈஸியா அணுக முடியுது. ஸ்டாலின் அய்யா நடைப்பயிற்சி செய்யும்போதுகூட மக்களைச் சந்திச்சுப் பேசுறார். தேவையில்லாம ஒரு வார்த்த பேசுறது கிடையாது. வந்ததும், உட்கார்ந்து கொரோனாவைப் பெருமளவு ஒழிச்சது பெரும் சாதனை. மக்கள் எதைப் பேசினாலும் காது கொடுத்து அக்கறையாக் கேட்டு ஆவன செய்யறார். சட்டுனு கையை ஆட்டிட்டுப் போயிடலை. சுகாதாரத் துறையை வச்சிருக்கிற மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை சேகர் பாபுவெல்லாம் அநியாயங்க, நேரத்திற்கு சாப்பிடுவாங்களான்னு தெரியல. எப்ப போனைப் போட்டாலும் அவங்களே எடுக்கிறாங்க. அவங்க பி.ஏ-க்கள் கவலையா இருக்கிறதா கேள்வி. ஒருநாள் சேகர்பாபு அண்ணனுக்குப் போனைப் போட்டு ‘எங்க ஊர் காட்டுப்பரமக்குடி ஐயனார் கோயில் நிலங்கள் இப்ப சாமி கைவசம் இல்லை. மீட்டுக் கொடுங்க’ன்னு சொன்னேன். ‘புள்ளிவிவரங்களோடு வாங்க’ன்னு சொன்னார். ஊர்ல ஆட்கள் விழுந்தடிச்சு வந்து, இப்ப நில மீட்பு நடந்தாச்சு. நன்றி தெரிவிக்கப் போகணும். மக்களோட சேந்து சாமியே சந்தோசமாயிருக்கு. இந்த உதயநிதி தம்பி தொகுதியெங்கும் இண்டு இடுக்கெலாம் சுத்திட்டுத் திரியுறாங்க. இனிமேல் அந்தத் தொகுதி மட்டுமல்ல, எந்தத் தொகுதிலயும் தம்பி அன்னப்போஸ்டாதான் வரும்போல இருக்கு. அதிகாரிகள் எல்லாம் நல்ல மனுசங்களா போட்டு ஆட்சி நடக்குது. பெரிய செயலாளராக இறைவனும் அன்பு சேர்ந்த மாதிரி இறையன்பு சார் இருக்காங்க. அவரே பெரிய பேச்சாளர். சைலேந்திரபாபுன்னு கம்பீரமாக அவரும் நல்ல ஆபீசர். எல்லோரையும் அரவணைச்சுப் போறதில் ஸ்டாலின் அய்யா முதல்ல நிக்கிறார். தாழ்மையா கேட்டுக்கிறேன். இந்த நல்லாட்சியை அப்படியே நல்லபடியா நடக்க விடுங்க. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ பார்த்து நல்லா வயிறுகுலுங்கச் சிரிக்கத் தயாரா இருங்க!”