கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் சேதுபதி

நமக்குத் தொழில் சார்ந்த நெறிமுறைகள் இருந்தால், இங்கு தொழில் நம்மைக் காப்பாத்தும். இங்கே நடிகன் தப்பு செய்தால் பதிவாகும்

`DSP' பாய்ச்சலுக்கு ரெடி. திருவிழா முடிந்த சாமி மாதிரி என்னிடம் வந்து அமர்ந்தார் விஜய் சேதுபதி. விறுவிறு துறுதுறு வளர்ச்சியில் சேதுபதி தொட்டிருப்பது பெரிய உயரம். தமிழ் சமூகமே ‘வித்தியாச நடிகன்' எனச் செல்லம் கொஞ்சுகிறது. ஷூட்டிங்கின் நெரிசலில் இருந்து விடுபட்ட அலுவலக நிம்மதியில் இந்த உரையாடல்.

‘‘வழக்கமாகவே விரும்பி ரசிச்சுத்தான் வேலை செய்வோம். காசைக் கொடுத்து டயத்தைச் செலவு பண்ணி மக்கள் படத்தைப் பார்க்கிறாங்க. அதுக்காக உழைக்கிறது மட்டுமே எனது பொறுப்பு. என் படம் சுவாரஸ்யமா இருக்கணும் என்பது மட்டும்தான் என் கவலை. மனசுக்குப் பிடிச்சதைப் பன்றேன். ஆடியன்ஸோட இணைவதுதான் எனக்கு முக்கியம்'' - மேலும் தன்மையாக ஆரம்பிக்கிறார் சேதுபதி.

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி

``கிட்டத்தட்ட 50 படங்களைத் தொட்டிருக்கீங்கபோல தெரியுதே?’’

‘‘இருக்கும். நான் வெகுஜன சினிமாவில் இருக்கேன். அதற்கென்று சில அளவுகோல்கள் இருக்கு. அந்த அளவுகோல்களின் எல்லைகளுக்குள்ளேதான் இருக்கேன். நான் இந்த வேலையைப் பணத்துக்காக மட்டுமே செய்யவில்லை. யாருக்கோ கட்டுப்பட்டும் செய்யவில்லை. வேறு எந்த வேலையும் இல்லை என்பதற்காகவும் செய்யவில்லை. இது உண்மையிலேயே அருமையான வேலை என நினைப்பதால் செய்கிறேன். படிப்படியாகத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். நான் என்னை சீரியஸான நடிகனாக நினைத்துக் கொள்வதில்லை. வணிக சினிமா அளவுகோல்களிலிருந்து கொஞ்சம்தான் மாறியிருக்கும். நான் அதிலேயே எதையாவது செய்துவிட முடியுமா என முயற்சி செய்கிறேன்.''

``எல்லோரும் ‘DSP'யை எதிர்பார்க்கிறாங்க, எப்படி வந்திருக்கு?’’

‘‘என்னோட முந்தைய ‘சேதுபதியி'ல அவன் போலீஸாக ஆனதற்கு எந்தக் காரணமும் இல்லை. ‘செக்கச் சிவந்த வானம்' இப்ராஹிமிற்கு சமூகத்தில் சிலரை களை எடுக்க வேண்டியிருந்தது. ‘DSP'-யில் ஒரு பகைதான் காரணம் ஆகுது. அந்தப் பகையை வெல்ல அதிகாரம் தேவைப்படுது. ஒரு விஷயம் துன்பப்படுத்தினால் அதிலிருந்து விலக முற்படுவோம். வெற்றிமாறன் சார்கிட்டே உங்க ‘பொல்லாதவன்' படம் டைட்டில்லேயே ஆரம்பிக்குதுன்னு சொன்னேன். ‘அவன் பொல்லாதவன், அவன்கிட்ட விளையாட்டை வச்சுக்காதீங்க'ன்னு படம் போகும். அதே மாதிரி இந்த ‘DSP'-யும் பொல்லாதவன். ரொம்ப லைவ்வான போலீஸ் ஆபீஸர். ஒரு பிரச்னைன்னா சிலர் தாண்டிப் போவாங்க. இன்னும் சிலர் கிளீன் பண்ணிப் பார்ப்பாங்க. இவன் கிளீன் பண்ணிப் பார்க்கிற ரகம். இவனுக்குப் பிரச்னைன்னா லட்டு சாப்பிடுவது மாதிரி. பிரச்னைகளை எதிர்கொள்ளப் பயப்படுவதோ, அதிர்ச்சியாகத் திகைக்கிறதோ பழக்கம் இல்லை. அப்படி வந்து ஒரு இடத்தில் நின்று எல்லாத்தையும் சரி செய்வான் ‘DSP'.''

``போலீஸ் கெட்டப்ல உங்களுக்குத் தனி கம்பீரம் வந்துடுது?’’

‘‘போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும். அதிகாரத்திற்கு ஒரு திமிர் இருக்கு. அது தன்னால் வரும். நீங்க சிம்மாசனத்தில் பவ்யமாக உட்கார முடியாது. ராஜா வேஷம் போட்டால் ‘உத்தரவிடுகிறேன்' எனச் சொல்லியாகணும். எங்கே என்னவாக இருக்கீங்களோ, அதற்கு ஏத்த மாதிரி நீங்க மாறிடுவீங்க. மாறலைன்னா நீங்க விலகி இன்னொரு ஆள் வரணும்னு அந்த இடம் சொல்லிடும். அந்தப் பவர் என்னவெல்லாம் செய்ய வைக்க முடியுமோ அதைச் செய்யும். இந்தக் கதையில் அந்த பவரோடு கொஞ்சம் கற்பனையும் சேர்கிறது. ‘தங்கப்பதக்கம்' நினைவுக்கு வருது. சிவாஜி சாரோட கெத்து அப்படியிருக்கும். விஜயகாந்த் சாரோட நிறைய போலீஸ் படங்கள் உதாரணமாக இருக்கு.''

``பொன்ராமோட டைரக்‌ஷனில் முதல் தடவையா இணைகிறீர்கள்...’’

‘‘அவர் ஏற்கெனவே சிவாவோட வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார். அவர்கிட்டே ஒரு எளிமை இருக்கும். அவர் படங்களில் ரசிக்கிற அளவுக்கு நல்ல நகைச்சுவை இருக்கும். இதில் எமோஷனல், காமெடி, ஆக்‌ஷன், பழி தீர்ப்பு என்று நல்ல கலவை இருக்கு. படம் பார்த்துவிட்ட நிலையில்தான் நம்பிக்கையா பேசுறேன். ஒரு புத்திசாலி போலீஸ்காரனோட எதிர்பார்க்காத நல்ல கணங்கள் இருக்கு. என் ஜோடி அனுகீர்த்தி, 2018-ன் இந்திய அழகி. ஏதோ மும்பை பக்கம்னு நினைச்சிடக் கூடாது. திருச்சிக்காரப் பொண்ணு. பாலுமகேந்திரா சாரோட ஹீரோயின் மாதிரி தேன் கலர். இங்கே போலீஸ் அதிகாரிகளோட வாழ்க்கையே வித்தியாசமானது. அவங்க சந்திக்கிற மனிதர்கள், அவங்களோட சூழ்நிலை எல்லாமே வித்தியாசமா இருக்கும். ‘DSP' கோபம், பாசம், காமெடி, வெறி, கெத்துன்னு சேர்ந்த மாஸ் படம்.''

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி

``நிறையவும் பயன்படுகிற மாதிரி பொது மேடையில் பேசுறீங்க...’’

‘‘திட்டமிட்டுப் பேசுவதில்லை. ஆனால் ஜாக்கிரதையாகப் பேசுவேன். அதில் யாருக்காவது பலன் கிடைத்தால் நல்லதென்று நினைப்பேன். எல்லாத்தையும் விமர்சனம் பன்ற, தப்பா பார்க்கிற கூட்டமும் இருக்கு. எங்கயோ பேசிக் கேட்டது, புத்தகம் படிச்சது, திரைப்படம் பார்த்த காட்சிதான் நம்மை பாதிச்சு இங்கே வந்து சேர்ந்திருக்கோம். ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே' பாடலின் சில வரிகள் என்னை இங்கே வரவழைச்சதுன்னு இளையராஜா ஒரு பேட்டியில் சொல்லிக் கேட்டிருக்கேன். எங்கே இருந்தாவது ஒரு ஒளி நம்ம மேல பட்டால் நல்லது. பொதுவா என் அனுபவத்திலிருந்துதான் பேசுவேன். தப்பானது பேசிடக்கூடாதுன்னு கவனமா இருப்பேன்.’’

``மியூசிக் கத்துக்கிறீங்கன்னு கேள்விப்பட்டோம்...’’

‘‘முன்னாடியே மிருதங்கம், கிடார், வாய்ப்பாட்டு ரெண்டு மூணு கிளாஸ் போயிருக்கேன். இப்பத்தான் அஞ்சு மாசமா தொடர்ந்து கிளாஸ் போறேன். இசை நம்மைப் பக்குவப்படுத்துது. சாந்தமாக்குது. நல்ல இசையைக் கேட்டால் புதுசாக வாழ்க்கையை அணுக முடியும்னு தோணுது. வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் படிச்சிட்டு, மீதி வாழ்க்கையிலும் அப்படியே போறோம். இப்போ பத்துப் பக்கமாவது படிக்கிறேன். மூளை சுறுசுறுப்பாகுது. இப்போ ஜெயமோகனோட ‘சோத்துக்கணக்கு' படிச்சேன். அதை ஒரு படமா எடுக்க முடியுமான்னு தெரியலை. அந்தக் கதையே மனசில பாடாப்படுத்தி எடுக்குது.

இனி நடிக்கிறது தவிரவும் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கிறதாக உணர்றேன். இன்னும் நுணுக்கமாக இசையை உணரவும், படிக்கவும் கொஞ்சம் உழைப்பைப் போடணும்னு தோணுது. காசோடு சேர்த்து இங்கே வேலையையும் மக்கள் கொடுக்கிறாங்க. அதற்கு நுணுக்கமாகத் தர நாமளும் கொஞ்சம் உழைப்பைப் போடணும்.

தேடல் ஒரு பக்கம் இசையில் இருக்கு. இன்னும் பக்கத்தில் இருக்கிற மனுஷங்க கிட்டேயும் தேடுறேன். நாம நடிக்கிறதுதான் நடிப்புன்னு இருந்திடக் கூடாது. பூஜா தேவரியா கூட எனக்கு ‘விக்ரம்' படம் பண்ணும் போது சில ரியல் லைஃப் உதாரணம் கொடுத்தாங்க. உங்களைக் கண்டுபிடிக்கறதுதான் மிகச்சிறந்த பாடம். வாழ்க்கை காடு மாதிரி. டார்ச் வெளிச்சம் படுகிற இடத்தோட காடு முடியாது. நடந்து போகப் போக விரிஞ்சுக்கிட்டே இருக்கும். அதனால் இங்கே நிற்காமல் நடந்து போவது நல்லது. எனக்கு இதெல்லாம் தெரியும்னு சினிமாவில் இருந்திட முடியாது. இங்கே கதை உங்களைவிட பிரமாண்டம்னு உணர வேண்டும்.

நான் பூனையாக இருந்துகிட்டு யானையை நினைக்கக் கூடாது. யானையாவது எப்படின்னு யோசிக்கணும். கேமராமேன் ஆகணும்னு ஆசைப்பட்டால் தெருவில் இருக்கிற நிழலை எல்லாம் படிச்சுக்கிட்டே போகணும். ஒரு ஆள் ஆவதற்கு இங்கே படிநிலைகள் இருக்கு. 100 படி ஏறிட்டால் அடுத்தடுத்து போயிடலாம். சிலை அழகுதான். ஆனால் மலை அதைவிட அழகு. சிந்திச்சா நல்லாருப்போம். அதுதான் கணக்கு. சிந்திக்கிறதுதான் நம்ம வேலையே. நாம சிந்திக்க மறந்துட்டா அப்புறம் நம்மை வண்டியில் கட்டி குதிரையா ஓட்டிடுவாங்க.''

``இந்தியில் நிறைய படங்கள் செய்ய ஆரம்பிச்சிட்டீங்க!’’

‘‘துபாயில் முன்னாடி சில வருஷங்கள் வேலை பார்த்தது நல்லதாப்போச்சு. ஐந்து படங்கள் பண்ணிட்டேன். ‘மாநகரம்' படத்தில் முனீஸ்காந்த் செய்த ரோலை ‘மும்பைகர்’ படத்தில் பன்றேன். ‘மெர்ரி கிறிஸ்துமஸ்' படத்தில் கத்ரீனாவோட நடிக்கிறேன். ஷாகித் கபூரோட ஒரு படம். ‘காந்தி டாக்ஸ்'னு ஒரு மௌனப் படம் வேற செய்யறேன். அப்புறம் ஷாருக் கூட ‘ஜவான்.' நம்ம மூளை தமிழில்தான் வேகமாகச் சிந்திக்கும். அப்படியே இந்தியிலும் சிந்திக்க முயற்சி எடுக்கிறேன். சென்னை மாதிரி பலதரப்பட்ட மனுஷங்க இருக்கிற இடம் மும்பை. எனக்கு அந்த நகரம் பிடிக்குது. இந்தி வசனத்தை 100 முறையாவது படிக்கிறேன். மொழியை ஆழமா உள்வாங்கப் பார்க்கிறேன். தடுமாறினால் மொத்தமும் ஏமாத்திடும். நல்லா செய்திருக்கேனான்னு நீங்க பார்த்துட்டுச் சொல்லணும்.''

``ஒரு படம் சிரமங்களோட செய்து அது போய்ச் சேரலைன்னா மனசு தளர்ந்துவிடாதா! ‘சீதக்காதி' வித்தியாசமான முயற்சி...’’

‘‘ரொம்பவும் வருத்தப்படுவேன். ஓடாத படங்களுக்குப் பின்னாடி பாராட்டுகள் வரும். சமீபத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன்' படம் நல்லா இருந்ததுன்னு பாராட்டுறாங்க. இது காலம் தள்ளி நடந்தது. வியர்வை காயுறதுக்கு முன்னாடி நல்லால்லைன்னு யாராவது சொன்னால் கோபம் வரும். ஆனால் அப்படியும் ரொம்ப கோபப்பட்டுட முடியாது. அடுத்த முறை படம் பண்ணும்போது இதைவிட வேறு ஃபிளேவரில் அதிகம் தேனைத் தடவிக் கொடுத்திட வேண்டியதுதான். அந்தத் தோல்வியையும் ஒப்புக்கொண்டு அதிலிருந்து மேம்பட்டதால்தான் இன்னிக்கும் இருக்கேன். எனக்குக் கிடைத்த எல்லோருமே விரல் கேட்காத வாத்தியார்கள். அத்தனை பேரும் எனக்குக் காசையும் கொடுத்து, கலையையும் கற்றுக் கொடுத்தாங்க.''

“போலீஸ் உடையை யார் மாட்டினாலுமே பவர் வந்திடும்!” - DSP விஜய் சேதுபதி

``இந்த வயது வரை கண்டுகொண்ட திரை வாழ்க்கை உங்களுக்குச் சொல்வதென்ன?’’

‘‘வாழ்க்கைக்கென்ன, அது பாட்டுக்கு என்னென்னவோ சொல்லுது. அனுபவம்னு சொன்னால், எல்லோரையும் நம்பிடக் கூடாது. உங்ககிட்ட இருக்கிற ரசனை எல்லோருக்கும் இருக்கும்னு எதிர்பார்க்கக் கூடாது. நிறைய பேர் வேஷம் போடுறாங்க. அதைச் தெரிஞ்சுக்கணும். பல பேருக்கு 50 முகமூடிகளுக்கு மேலே இருக்கு. எனக்கும் இருக்கு, உங்களுக்கும் இருக்கு. தெரிஞ்சே ஏமாத்துறவங்களை நிறைய பார்த்திட்டேன். நம்பிக்கையைக் கொடுத்து உடைக்கிறதைப் பார்க்கிறேன்.

நமக்குத் தொழில் சார்ந்த நெறிமுறைகள் இருந்தால், இங்கு தொழில் நம்மைக் காப்பாத்தும். இங்கே நடிகன் தப்பு செய்தால் பதிவாகும். சினிமாவில்கூட ஏமாத்தினால் பத்து வருஷம் கழிச்சுப் பார்த்தாலும் நம்மைக் கழுவி கழுவி ஊத்தும். சினிமாவுக்கு வந்து இத்தனை வருஷமாச்சு, எதுவும் சலிக்கலை. இந்த வாழ்க்கையே நிறைவும், தவறும், திருத்திக்கிறதுமா பேரனுபவமாகப் போய்க்கிட்டு இருக்கு. பள்ளிக்கூட வாத்தியார் மாதிரி எழுதி எழுதி அழிச்சுக்கிட்டே போகுது. உணர்ந்ததில் அறிஞ்சது கொஞ்சம். அதிலும் நினைவில் சேமிச்சது இன்னும் கொஞ்சம். ஒரு நல்ல நோக்கம் இருந்து அதற்காகச் செயல்பட்டால் உடனே விளைவை எதிர்பார்க்கக் கூடாது. ஐந்து வருடமோ, பத்து வருடமோ, எல்லாவற்றுக்கும் ஒரு காலத்தை அனுமதிக்கணும். எனது ஏகப்பட்ட குறைகளோடும், ஒருசில நிறைகளோடும் முழுவதும் என்னைப் புரிந்துகொள்ளப் பார்க்கிறேன்.''