லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது `விக்ரம்' திரைப்படம். படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடிகர், தயாரிப்பாளரான கமல்ஹாசன் படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு பரிசுகள் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறார். அந்த வகையில் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமான லோகேஷ் கனகராஜுக்கு 'Lexus ES300h' கார், சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் படத்தின் உதவி இயக்குநர்களுக்கு 'Apache RTR 160' பைக் என சர்ப்ரைஸ் கொடுத்தார். அண்மையில் விக்ரம் படத்தை இசையால் தெறிக்கவிட்ட அனிருத்திடம், 'கமல் என்ன கிப்ட் கொடுத்தார்' என்று கேட்டபோது, விக்ரம் படத்தில் வாய்ப்புக் கொடுத்தார் என்று அசரவைக்கும் விதமாகப் பதிலளித்திருந்தார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி தன் நடிப்பில் வெளியாகவுள்ள `மாமனிதன்' படத்தின் வெளியீட்டையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தபோது விக்ரம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு 'கமல் கிப்ட் கொடுத்தாரா?' என்று கேட்டகப்பட்டபோது சிரித்தபடி அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "கமல் சாருடன் நடிக்க வாய்ப்புக் கொடுத்தார். கற்பனையில்கூட கமல் சாருடன் நடிப்பேன் என்று நினைத்துப் பார்த்ததில்லை" என பதிலளித்தார்.
