
ரெண்டு வருஷம் லாக்டௌன்ல போனதால, அதைக் கழிச்சிட்டு எட்டு வருஷம் மட்டுமே ஆனதாகத்தான் பார்க்கறேன். முதன்முதலில் அறிமுகமாகும் யாருமே ‘கும்கி’ மாதிரி ஒரு படத்தைக் கையில் எடுக்கத் தயங்குவாங்க.
தமிழ் சினிமாவில் நாயகனாக 11-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் விக்ரம் பிரபு. இப்போது இயக்குநர் முத்தையாவின் தயாரிப்பில் ‘ரெய்டு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான சிவராஜ்குமாரின் ‘டகரு’ படத்தின் ரீமேக் இது. முதன்முறையாக ரீமேக்கில் நடித்து முடித்த சந்தோஷமும், மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 2’க்கான டப்பிங்கைப் பேசி முடித்துவிட்ட பூரிப்புமாகப் புன்னகைத்த விக்ரம் பிரபுவிடம் பேசினேன்.
``இயக்குநர் முத்தையா கன்னடப் படத்தை ரீமேக் பண்ணுகிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கே?’’
‘‘முத்தையா சார் இயக்கத்துல ஏற்கெனவே ‘புலிக்குத்தி பாண்டி’யில் நடிச்சிருந்தேன். அப்பவே அவர், ‘அடுத்து நாம சேர்ந்து சிட்டி சப்ஜெக்ட் ஒண்ணு பண்ணுவோம்’னு சொல்லியிருந்தார். அந்தச் சமயத்துல கன்னடத்துல சிவராஜ்குமார் சார் நடிச்ச ‘டகரு’ படம் வெளியாகியிருந்தது. அது அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதோட ரைட்ஸை உடனே வாங்கிட்டார். தமிழ்ல அவரே தயாரிச்சு, இயக்கவும் விரும்பினார். நான் இதுக்கு முன்னாடி வரை ரீமேக் கதைகள் பண்ணினதில்ல. முத்தையா சார் கேட்டபோது, எனக்கு சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஏன்னா சிவராஜ்குமார் சார் அங்கே சூப்பர் ஸ்டார். அவர் என்ன பண்ணியிருந்தாலும் அவரை ரசிப்பாங்க. அவருக்கு எல்லாமே ஒர்க் அவுட் ஆகும். அவர் கேரக்டரை நான் எப்படிக் கையாள்றதுன்னு சின்னதா ஒரு பயம் இருந்துச்சு.


இதைப் பத்தி அப்பாகிட்ட பேசினேன். அப்பா என்னை என்கரேஜ் பண்ணினார். ‘நீ தாராளமா பண்ணு. தாத்தாவோட ‘திரிசூலம்’ கதையே ராஜ்குமார் சார் படத்தோட ரீமேக் தான்’னு சொல்லி ஆச்சரியப்படுத்தினாங்க. அப்புறம்தான் எனக்கும் நம்பிக்கை வந்தது. ‘ஒரு நல்லவன் இருந்தால், அவனைச் சுத்தி எந்தத் தப்பான விஷயங்களும் நடக்காது’ என்பதுதான் ‘ரெய்டு’ படத்தின் ஒன்லைன். ஆரம்பத்துல ‘டைகர்’னு டைட்டில் வைக்க நினைச்சோம். அப்புறம்தான் ‘ரெய்டு’ன்னு மாறிடுச்சு. ‘வெள்ளக்கார துரை’க்குப் பிறகு என்னோடு ஸ்ரீதிவ்யா நடிச்சிருக்காங்க. இன்னொரு கதாநாயகியா அனந்திகா. கதகளி டான்ஸர். இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ்ல அவங்க ஒரு ரவுண்ட் வருவாங்கன்னு நம்புறேன். முத்தையா சாரே இயக்கணும்னு விரும்பினார். ஆனா, அவருக்கு ‘விருமன்’ வேலைகள் இருந்ததால, இதுல டயலாக் எழுதினதோடு ‘புலிக்குத்தி பாண்டி’யில் இணை இயக்குநரா இருந்த கார்த்தியை இயக்குநராக்கியிருக்கார். கதிரவன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் நல்லா வந்திருக்கு. இதுல படத்தொகுப்பு பேசப்படும். வித்தியாசமான ஒரு எடிட்டிங்கின் மூலம், இந்தக் கதை உங்களைக் கட்டிப் போடும்.’’


`` ‘பொன்னியின் செல்வன்-2’ ரிலீஸ் தேதி அறிவிச்சிட்டாங்க. மணிரத்னம் எப்படி இருக்கார்?’’
‘‘ ‘வானம் கொட்டட்டும்’ படத்தை மெட்ராஸ் டாக்கீஸ்தான் தயாரிச்சாங்க. அதோட வேலைகள் நடக்கறப்ப மணி சாரைப் பார்ப்பேன். அதுல என்னை கவனிச்சுதான், ‘பொன்னியின் செல்வன்’ல எனக்கும் ஒரு கேரக்டர் கொடுத்தார்னு நினைக்கறேன். அவரோட பல வருஷ கனவு புராஜெக்ட்ல நானும் இருக்கிறத நினைக்கிறப்ப இனம்புரியாத சந்தோஷம் இப்பவும் இருக்கு. சமீபத்துலதான் ‘பொன்னியின் செல்வன் 2’-க்கான முழு டப்பிங்கையும் பேசி முடிச்சேன். இந்த முறை டப்பிங் அப்போ மணி சாரே பக்கத்துல இருந்தார். முதல் பாகம் அப்போ இயக்குநர் தனா இருந்து கவனிச்சுக்கிட்டார். அதனால தைரியமா பேசினேன். இந்த முறை மணி சாரே இருந்ததால ஒரு படபடப்பு இருந்துச்சு. அதனால ஒவ்வொரு டயலாக்கைப் பேசி முடிச்சதும் மணி சாரைப் பார்ப்பேன். அவர் தம்ப்ஸ் அப் காட்டி உற்சாகப்படுத்துவார். அவர் ரொம்ப சந்தோஷத்துல இருக்கார். டென்ஷன் ஏதுமில்லாமல் ரொம்பவே உற்சாகமா இருந்தார். ‘ஒரே சமயத்துல ரெண்டு பாகங்களையும் படமாக்கியாச்சு... அதனாலதான் இந்த சந்தோஷம்’னார். பாகம் 2-ம் நல்லா வந்திருக்கு. இப்ப கிராபிக்ஸ் வேலைகள் மும்முரமா போயிட்டிருக்கு.’’
``நீங்க அறிமுகமான ‘கும்கி’ வெளியாகிப் பத்து வருஷம் ஆகிடுச்சு. உங்களது திரைப்பயணம் எப்படிப் போயிட்டிருக்கு?’’
‘‘ரெண்டு வருஷம் லாக்டௌன்ல போனதால, அதைக் கழிச்சிட்டு எட்டு வருஷம் மட்டுமே ஆனதாகத்தான் பார்க்கறேன். முதன்முதலில் அறிமுகமாகும் யாருமே ‘கும்கி’ மாதிரி ஒரு படத்தைக் கையில் எடுக்கத் தயங்குவாங்க. அப்ப என்னிடம், ‘யானைகிட்ட மிதி வாங்கப்போறீயா?’ன்னு கேட்டவங்கதான் அதிகம். ஆனா, எனக்குக் கதை பிடிச்சிருந்தது. தாத்தாவும் சரி, அப்பாவும் சரி, ரெண்டு பேருமே, ‘உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதைப் பண்ணு’ன்னுதான் சொல்லியிருக்காங்க. நல்ல படங்களைத் தொடர்ந்து கொடுக்கணும்னு ஒரு நோக்கத்தோட வந்தேன். ஆனா, அதுக்கு இங்கே நிறைய தடங்கல்கள் இருக்கும்னு நினைச்சே பார்க்கல. தாத்தா, அப்பான்னு ஒரு குடும்பப் பின்னணியோட வந்திருந்தாலும்கூட, சினிமாவுக்குள் வந்து கத்துக்கிட்டதுதான் அதிகம்.

வெற்றியைக் கொடுக்க நல்ல கதைகள் மட்டும் போதாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா, கதையா கேட்கும்போது அருமையானதா இருக்கும். ஆனா, படமாகி வந்தபின், சிலதுல வெற்றிகள் மிஸ் ஆகியிருக்கு. அப்ப சில விஷயங்கள் புரிஞ்சுக்கிட்டேன். நடிகரா நல்ல படம் கொடுத்தால் மட்டும் போதாது, அதையும் தாண்டி நிறைய இங்கே இருக்குது. அதனாலதான் போட்டிகளைப் பத்தி நினைக்காமல், நின்னு நிதானமா பயணிக்கறேன்.
என்னோட ஒவ்வொரு படத்தையுமே நீங்க கவனிச்சிருந்தால் ஒரு விஷயம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். கேரக்டருக்கு ஏற்ற மாதிரி உடம்பு, தோற்றம் இரண்டிலுமே வித்தியாசம் காட்டி நடிக்க முயற்சி பண்ணியிருக்கேன். அது ‘டாணாக்காரன்’ ஆனாலும் சரி, வரப்போற ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ஆனாலும் சரி, கேரக்டருக்கேத்த நாயகனாக என்னை மாத்திக்கிட்டுதான் நடிக்கறேன். போன வருஷம் ‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன்’ ரெண்டும் வெளியாகி நல்ல பெயரைக் கொடுத்திருக்கு. திருப்தியான நிறைவான வருஷமா இருந்தது. கடந்த பத்து வருஷங்கள்ல நான் நிறைய பக்குவப் பட்டிருக்கேன். அந்த அனுபவமும் பக்குவமும் கை கொடுக்கிற பயணமா அடுத்த பத்து வருஷங்கள் இருக்கும்னு நம்புறேன்.’’