Published:Updated:

“எங்க அப்பா நயன்தாரா ரசிகர்!”

வினய்
பிரீமியம் ஸ்டோரி
News
வினய்

என் முதல் படம் ‘உன்னாலே உன்னாலே'வை நினைச்சாலே அவ்ளோ இனிமையான ஞாபகங்கள் வந்துடும். ஒவ்வொரு நல்ல படமுமே இனிமையான தருணங்களை அள்ளிக் கொடுத்துடும்.

தமிழ் சினிமாவின் உயரமான வில்லன் வினய்தான் போல! 6.3 அடி உயரத்தில் கெத்தாக இருக்கிறார். நெல்சனின் ‘டாக்டர்' படத்திற்குப் பின், ‘‘வில்லனா... கூப்பிடு வினய்யை'' எனச் சொல்லும்படி ஆனதால் பல மொழிகளிலும் கலக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது எடையை 20 கிலோ குறைத்து ஸ்லிம் ஃபிட்டில் இருக்கிறார் வினய்.

``வில்லனாக எல்லார் மனதிலும் இடம்பிடிச்சிட்டீங்க...’’

‘‘ஆஹா! மிஷ்கின் சாரோட ‘துப்பறிவாளன்' படத்திலிருந்துதான் வில்லனா நடிச்சிட்டு இருக்கேன்னு நீங்க நினைக்கலாம். ஆனா, முதன்முதலில் வில்லனாக நடிக்கக் கேட்டவர் கே.வி.ஆனந்த் சார்தான். ‘கோ' படத்திற்காகக் கேட்டார். அப்போ எனக்குத் தயக்கம் இருந்தது. ஏன்னா, அப்படி நடித்தால் இங்கே என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். இங்கே ஒருத்தர் ஒரு ரோல்ல நடிச்சிட்டா, அவரை அதே மாதிரி ரோலுக்குத்தான் தொடர்ந்து கூப்பிடுவாங்க. ‘துப்பறிவாளன்'ல நடிக்கறபோதும் ‘இனி ஹீரோவாகப் பண்ணமுடியாது. அடுத்தடுத்து வில்லனாகத்தான் நடிக்க வேண்டியிருக்கும்'னு தெரிஞ்சுபோச்சு.

“எங்க அப்பா நயன்தாரா ரசிகர்!”

ஆனா, மிஷ்கின் சார் ஒரு விஷயம் சொன்னார். ‘வில்லனாக நடிக்கும்போதுதான், நடிப்பின் பல பரிமாணங்களை உன்னால கொடுக்கமுடியும். நிறைய ஷேட்ஸ் அதுலதான் கிடைக்கும்'னு சொன்னார். அது உண்மைதான்னு புரிஞ்சிடுச்சு. இந்த வில்லன் வாழ்க்கையும் திருப்தியாகத்தான் இருக்கு. ‘கனெக்ட்' படத்தையடுத்து மலையாளத்துல மம்மூட்டி சாரோடு ‘கிறிஸ்டோபர்' படத்திலும் நடிச்சு முடிச்சாச்சு. தவிர ‘மர்டர் லைவ்', ‘டீசல்'னு அடுத்தடுத்து படங்கள் இருக்கு. தெலுங்கில் ‘ஹனுமான்'னு ஒரு படம் பண்ணிட்டிருக்கேன்.''

``ரக்பி விளையாட்டு வீரரான உங்களை, மறைந்த இயக்குநர் ஜீவா கண்டுபிடிச்சது எப்படி?’’

‘‘என் முதல் படம் ‘உன்னாலே உன்னாலே'வை நினைச்சாலே அவ்ளோ இனிமையான ஞாபகங்கள் வந்துடும். ஒவ்வொரு நல்ல படமுமே இனிமையான தருணங்களை அள்ளிக் கொடுத்துடும். என் பூர்வீகம் மங்களூரு. நான் பிறந்தது மும்பை. ஆனா, படிச்சது வளர்ந்தது பெங்களூர்ல. பானிபூரி மாதிரி என் பயணம் இருக்கும். டிகிரி முடிச்சிட்டு, நிறைய கார்ப்பரேட் கம்பெனிகள்ல வேலை செய்திருக்கேன். அந்தச் சமயங்கள்ல ரக்பி விளையாடினேன். சினிமாவுக்கு வருவேன்னு யோசிச்சதே இல்ல. முதல் படத்தின்போது எனக்குத் தமிழ் பேச வராது. இயக்குநர் ஜீவா சார், கலாபவன் மணி சார், சந்தானம்னு என்னோடு நடிச்ச பலரும் தமிழ் கத்துக் கொடுத்தாங்க. அதிலும் ஜீவா சார் எனக்கு ஒரு வாத்தியாரா இருந்து நிறைய கத்துக்கொடுத்தார். நடிப்பு, நுணுக்கம், டயலாக் டெலிவரின்னு அத்தனையும் கத்துக்கிட்டேன். நான் அதிர்ஷ்டக்காரன். முதல் படமே வெளிநாட்டில் ஷூட், ஐந்து பாடல்கள்னு எனக்கு அமைஞ்சது.''

“எங்க அப்பா நயன்தாரா ரசிகர்!”

``விஷால் உங்களோட நெருங்கிய நண்பராச்சே?’’

‘‘ஆமாங்க. ‘உன்னாலே உன்னாலே'வை முடிச்சதும் ஆறு மாசம் சென்னையில் தங்கியிருந்தேன். ஆனா, பட வாய்ப்பு எதுவும் வரல. அந்தச் சமயத்துல என்னோட பெங்களூர் நண்பர்கள் மூலமா தமிழ்ல ஒரு படம் கிடைச்சது. அதுதான் ‘ஜெயம்கொண்டான்'. அந்த நண்பர்கள் டீமில்தான் விஷாலும் இருந்தார். அந்த நட்பு இப்ப வரை தொடருது.

‘துப்பறிவாளன்'ல மறக்க முடியாத சம்பவம் ஒண்ணு நடந்தது. பிச்சாவரத்துல கடலுக்கு நடுவே இருந்த செட்டில் படப்பிடிப்பு போயிட்டிருந்தது. யூனிட்ல இன்னிக்கு லன்ச் என்ன என விசாரிக்கும்போது ‘பிரியாணி'ன்னு சொன்னாங்க. எனக்கொரு பழக்கம் உண்டு. நான் எந்த ஊருக்கு ஷூட்டிங் போனாலும், அந்த ஊர்ல என்ன சாப்பாடு ஸ்பெஷலோ அதை வாங்கிச் சாப்பிடுவேன். பிச்சாவரத்துல ஒரு கடையில பிரியாணி ரொம்ப ஃபேமஸ்னு கேள்விப்பட்டதும், அங்க பிரியாணி வாங்கிட்டேன். யூனிட்ல எல்லாரும் பிரியாணிதான் சாப்பிடுவாங்க. ஆனா, நான் கொஞ்சம் ஸ்பெஷலா அந்த ஊர் கைப்பக்குவ பிரியாணியை சாப்பிடப் போறேன்னு நினைச்சு, பிரியாணிப் பொட்டலத்தைப் பிரிச்சு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். விஷால் அவரோட தட்டை எடுத்துட்டு வந்து பிரிச்சுப் பார்த்தார். அதுல தயிர் சாதம் இருந்தது. என்கூட உட்கார்ந்திருந்த அத்தனை பேரும் தயிர் சாதம் சாப்பிட்டுட்டு இருந்ததை கவனிச்சேன். அன்னிக்கு யூனிட்ல தயிர் சாதம்தான். ஆனா, யாரோ பிரியாணின்னு என்கிட்ட பொய் சொல்லியிருக்காங்க. நான் பிரியாணி சாப்பிட்டதை விஷால் ஏற இறங்க பார்த்துட்டு ஆச்சரியப்பட்டார். அந்தப் படத்தோட தயாரிப்பாளரே விஷால்தான். ‘புரொட்யூசர் நானே தயிர் சாதம் சாப்பிடுறேன். உனக்கு மட்டும் எப்படிடா பிரியாணி?'ன்னு கேட்குற மாதிரி விஷாலோட ரியாக்‌ஷன் இருந்ததை மறக்க முடியாது.''

`` ‘கனெக்ட்'ல நயன்தாராவோடு நடிச்சிருக்கீங்க. என்ன சொல்கிறார் நயன்தாரா?’’

‘‘நயன்தாரா படத்துல நடிக்கக் கேட்டதும் உடனே சந்தோஷமா ‘சரி'ன்னு சொல்லிட்டேன். ஏன்னா, எங்க அப்பா நயன்தாராவோட ரசிகர். நயன்தாராவோட படங்கள் எல்லாம் அவர் மிஸ் பண்ணாமல் பார்த்திடுவார். ‘கனெக்ட்' படப்பிடிப்பில் இந்த விஷயத்தை ஒருநாள் நயன்தாராகிட்ட சொன்னேன். அவங்களும் மகிழ்ச்சியாகி, போன்ல எங்க அப்பாகிட்ட பேசினாங்க. இந்த திடீர் ஆச்சரியத்தை அப்பா கொஞ்சமும் எதிர்பாக்கல. அவருக்கு அவ்ளோ சந்தோஷம். ஆனா, ஒரு விஷயத்துக்காக வருத்தப்பட்டார். ‘நயன்தாரா என்னை அங்கிள்னு சொல்லிடுச்சேப்பா'ன்னார்.''