கட்டுரைகள்
Published:Updated:

“இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!” - யோகிபாபு

யோகிபாபு
பிரீமியம் ஸ்டோரி
News
யோகிபாபு

ஷக்தி சிதம்பரம் சார், இந்தக் கதையை வடிவேலு அண்ணன்கிட்டதான் முதலில் சொன்னதா சொன்னார்.

லாக்டௌன் தளர்த்தப்பட்டதும் பழையபடி பிஸியாகிவிட்டார் யோகிபாபு. கைவசம் அத்தனை படங்கள்! ஜெய்ப்பூரில் விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கில் இருந்தவரை போனில் பிடித்துப் பேசினேன்.

“ `பேய் மாமா’ படம் எப்படி வந்திருக்கு?”

‘`ரொம்பவே ஜாலியான படம். கோவை சரளா மேடம், ரமேஷ் கண்ணா சார், ரேகா மேடம், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, ராஜேந்திரன், வையாபுரி, இமான் அண்ணாச்சி, சாம்ஸ்னு ஒரு பெரிய டீம். இந்தப் படத்தோட ஷூட்டிங் முழுக்கவே பல மறக்க முடியாத மகிழ்ச்சியான விஷயங்கள் நடந்திருந்தாலும், அதையெல்லாம் கொண்டாட முடியாத ஒரு துக்கமும் ஏற்பட்டுச்சு. நடிகர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன், குமுளியில் இந்தப் படத்தோட ஷூட்டிங்கில் நடிச்சிட்டிருந்தப்போதான் உடம்பு சரியில்லாமல் காலமானார். இது எங்க டீமை ரொம்பவே பாதித்திடுச்சு. ஒரு நல்ல கலைஞனை நாம எல்லாரும் மிஸ் பண்ணிட்டோம்னு நினைக்க வெச்சது.’’

“இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!” - யோகிபாபு

“ `பேய் மாமா’ படத்தில் வடிவேலுதான் முதலில் நடிக்க வேண்டியது எனத் தகவல்கள் வந்தன. ‘இம்சை அரசன்’ படத்துக்கு பிரச்னை வந்தபோதும் அதில் நீங்க நடிக்கப்போறதா செய்திகளும் வந்துச்சு. வடிவேலுவுக்கு மாற்றா யோகி பாபுவைப் பார்க்கிறார்களா?”

‘`ஷக்தி சிதம்பரம் சார் இந்தக் கதையை என்கிட்ட சொல்லும்போதே, இந்தக் கதையை வடிவேலு அண்ணன்கிட்டதான் முதலில் சொன்னதா சொன்னார். ’அவருக்காக எழுதிய கதைனா அவருக்குத்தானே செட்டாகும்’னு நான் சொன்னதுக்கு, ‘இல்லை, உங்களுக்கு ஏற்ற மாதிரி மாத்தியிருக்கேன்’னு சொல்லிட்டுத்தான் கதையைச் சொன்னார். எனக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்ததனால, நானும் ஓகே சொல்லிட்டேன். சினிமாவில் இருக்கிறவங்க என்னை வடிவேலு அண்ணனுக்கு மாற்றா பார்க்கிறாங்களான்னு எனக்குத் தெரியாது. ஆனால், நானும் மக்களும் அப்படிப் பார்க்கலைங்கிறதுதான் உண்மை. மக்கள் என்னை யோகி பாபுவா ரசிக்கிறாங்க. அவங்களுக்காக நான் இப்படியே இருக்கத்தான் ஆசைப்படுறேன்.’’

“கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம், சூரின்னு உங்களுக்கு சீனியர் காமெடி நடிகர்களாக இருக்கிறவங்க பேசிய விஷயங்கள் ஞாபகம் இருக்கா?”

``இவங்க எல்லாரையும் மீட் பண்ணிப் பேசியிருக்கேன். அவங்களும் நிறைய விஷயங்களை என்கிட்ட சொல்லியிருக்காங்க. குறிப்பா, கவுண்டமணி சார் சொன்ன ஒரு அட்வைஸைத்தான் இப்போவரைக்கும் பாலோ பண்ணிட்டு இருக்கேன். முதல்முறை அவரை மீட் பண்ணும்போது, ‘தம்பி யோகி பாபு, நீ எதை நோக்கி ஓடுறியோ அதை நோக்கி ஓடிட்டே இரு. எவனாவது கூப்பிடுறான்னு திரும்பிப் பார்த்தா, உன்னைத் திண்ணையில உட்கார வெச்சுடுவாங்க. உன் இலக்கு மட்டும்தான் உன் கண்ணுக்குக் தெரியணும்’னு சொன்னார். இப்போ வரைக்கும் அப்பப்போ சார்கிட்ட பேசுவேன். அதே மாதிரி, வடிவேலு அண்ணனும் ’கோலமாவு கோகிலா’ படம் பார்த்துட்டு என்னை ஆபீஸுக்கு வரச்சொன்னார். அவர்கிட்ட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தேன். விவேக் சாரும் `கோலமாவு கோகிலா’ படம் பார்த்ததுக்கு அப்புறம் கூப்பிட்டுப் பேசினார். அவரோடு ‘பிகில்’, ‘அரண்மனை - 3’ படத்துல நடிச்சிருக்கேன். சந்தானமும் சூரியும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.’’

“இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!” - யோகிபாபு

“ரஜினி, அஜித், விஜய்யோடு நடித்ததில் நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள் என்ன?”

‘`எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறக்கக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன். `தர்பார்’ படத்தில் ரஜினி சார்கூட நடிக்கும்போது, ரொம்ப சிம்பிளா இருந்தார். ஜெனரேட்டர் பக்கத்தில் இடம் இருந்தாலும், அங்க உட்கார்ந்து ரெஸ்ட் எடுப்பார். அதே மாதிரி, அஜித் சார் ஷூட் முடியுற வரைக்கும் எல்லா நடிகர்களோடும் பேசிட்டு இருப்பார். விஜய் சாருக்குக் கொஞ்சம் ப்ரீ டைம் கிடைச்சாலும், ஏதாவது மரத்தடியில் சின்னத் துண்டை விரிச்சுப் படுத்திடுவார். இவங்க நினைச்சால் கேரவனுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம். இல்லைனா, உட்கார்ந்திருக்கிற இடத்துக்கே ஏசியைக் கொண்டு வரலாம். ஆனால், அவங்க எளிமையைத்தான் விரும்புறாங்க. கமல் சாரோட படத்தில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ‘இந்தியன் - 2’ படத்துக்காக முதலில் பேசினாங்க. அப்பறம், அவங்க ஷூட் பண்ற நாள்கள் மாறிட்டே இருந்ததால, கால்ஷீட் பிரச்னை வருதுன்னு அதில் என்னால நடிக்க முடியாமல்போச்சு.’’

“இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!” - யோகிபாபு

“ `யோகி பாபு ஹீரோவா நடித்திருக்கும் படம்’னு சில படங்களுக்கு போலியா விளம்பரங்கள் பண்ணிட்டு இருக்காங்கன்னு சமீபத்தில் சொல்லியிருந்தீங்க. அது என்ன பிரச்னை?”

“ ‘பேய் மாமா’ படத்துக்கு முன்னாடிவரைக்கும் என்னை ஹீரோன்னு சொல்லிட்டு நான் நடிச்ச படங்கள் ரெண்டுதான். ஒண்ணு, ‘கூர்கா’ இன்னொன்னு ‘தர்மபிரபு’. இந்தப் படங்கள் போக என்னை ஹீரோன்னு சொல்லி விளம்பரப்படுத்திய மற்ற படங்களில் எல்லாம் நான் ஒரு கேரக்டரில் நடிச்சிருந்தேன்; அவ்வளவுதான். 4 நாள், 5 நாள் கால்ஷீட் கொடுத்து நடிச்ச படங்களில் எல்லாம் என்னை ஹீரோன்னு சொல்றதுல என்ன நியாயம் இருக்கு. இது நம்ம தொழிலையும் மக்களையும் ஏமாத்துற வேலை இல்லையா. இதுல இன்னும் மோசமா சில சம்பவங்களும் நடந்திருக்கு. சில வருஷத்துக்கு முன்னாடி நான் ஒரு படத்தில் 6 சீன்களில் நடிச்சேன். அப்போ டப்பிங் போனப்போ அதில் 2 சீன்தான் இருந்துச்சு. `6 சீன் நடிச்சிருந்தேனே’ன்னு அந்தப் பட இயக்குநர்கிட்ட கேட்டப்போ, ’இருக்கிற சீனுக்கு மட்டும் பேசிட்டுப் போ’ன்னு என்கிட்ட சொன்னார். இப்போ எனக்கு மார்க்கெட் வேல்யூ இருக்குன்னு அந்த டெலிட் பண்ணுன 4 சீனையும் படத்துல சேர்த்துட்டு, டப்பிங் பேச வாங்கன்னு கூப்பிட்டால் நான் எப்படிப் போவேன். இப்படித்தான் நிறைய பேர் என் முகத்தைக் காட்டி விளம்பரம் பண்றாங்க. நான் ஹீரோவாக நடிக்கிறதனால தானே இந்த மாதிரி சின்ன, சின்ன கேரக்டர்களில் நடிக்கிற படத்தையும் ஹீரோன்னு சொல்லி விளம்பரப்படுத்துறாங்க. அதனால, இனிமேல் ஹீரோவா நடிக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்.’’

“நீங்க அதிக சம்பளம் கேட்கிறதாகவும் சொல்றாங்களே?”

``நான் அதிக சம்பளம் கேட்கிறேன்னு செய்தி பரப்புறவங்ககிட்ட, அதை ஆதாரத்தோடு நிரூபிங்கன்னு கேட்டுக்கிறேன். ஏன்னா, இந்த லாக்டெளன் அறிவிச்சு படங்களோட ஷூட்டிங் எல்லாம் நிறுத்தி வெச்சப்போ, நானே என் படத் தயாரிப்பாளர்கள்கிட்ட பேசி என் சம்பளத்தைக் குறைச்சேன். இதை நான் வெளியில் சொல்லாமல் இருந்தேன். இவ்வளவு நாளா இது என் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயமா இருந்துச்சு. ஏன்னா, கஷ்டப்பட்டு சினிமாவுக்குள் வந்தவன் நான்; சினிமாதான் எனக்கு எல்லாமே. அதனால, நான் வேற யாரையும் கஷ்டப்படுத்திப் பார்க்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்.’’

“பாரம்பர்யமான ஏவிஎம் கார்டன் டப்பிங் தியேட்டர் இப்போ திருமண மண்டபமா மாறப்போகுதுன்னு செய்திகள் வந்தது; அதில் கடைசியாக டப்பிங் செய்த படம் உங்களோடதுதான். அதை நினைக்கும் போது எப்படி இருக்கு..?”

``எனக்கு எப்போதுமே பேவரைட்டான டப்பிங் ஸ்டூடியோனா, அது ஏவிஎம் கார்டன்தான். கிட்டத்தட்ட 100 படங்கள்கிட்ட அங்க டப்பிங் பேசியிருக்கேன். `மண்டேலா’ படத்தோட டப்பிங்தான், ஏவிஎம் கார்டனில் நடந்த கடைசி டப்பிங். படத்தோட கடைசி நாள் டப்பிங் முடியுறப்போ அங்க இருந்த சவுண்ட் இன்ஜினீயர் ஷாஜி சார்ல இருந்து தூய்மைப்பணி செய்ற அம்மா வரைக்கும், கண் கலங்கிட்டாங்க. எனக்குமே அழுகை வந்திடுச்சு. சிவாஜி சார்ல இருந்து இப்போ அறிமுகமான நடிகர்கள் வரைக்கும் டப்பிங் பேசியிருக்கிற பாரம்பர்யமான நிறுவனம் மூடப்படும்போது, ரொம்பவே மனசு கஷ்டமா இருந்துச்சு’’

“இனிமே ஹீரோவா நடிக்க மாட்டேன்!” - யோகிபாபு

“உங்க கல்யாணத்தை ரொம்ப சிம்பிளா பண்ணிட்டீங்களே..?”

``கல்யாணத்தை சிம்பிளா பண்ணிட்டு ரிசப்ஷனைப் பெருசா வைக்கலாம்னுதான் முன்னாடியே பிளான் பண்ணியிருந்தேன். அதே மாதிரி, மார்ச்ல கல்யாணம் முடிஞ்சதும் ஏப்ரல் மாதம் ரிசப்ஷனுக்குப் பல பேரை இன்வைட் பண்ணியிருந்தேன். முதலமைச்சரில் இருந்து என்கூட நடிச்ச எல்லா நடிகர்களையும் நேரில் போய்ப் பார்த்துப் பத்திரிகை கொடுத்தேன். ஆனால், கொரோனா வந்ததனால ரிசப்ஷனை நடத்த முடியாமல் போயிடுச்சு. உலகமே அவஸ்தைப்பட்டுட்டு இருக்கும்போது, நாம இதையெல்லாம் பெருசா நினைக்கக்கூடாதுன்னு நானும் அதைக் கடந்துபோயிட்டேன்.’’

`பேய் மாமா’ படத்தில் வடிவேலு ஏன் நடிக்கலை; அதுமட்டுமல்லாமல் கொரோனாவை வெச்சுத்தான் படமே எடுத்திருக்கீங்க போல’ எனக் கேள்விகள் கேட்டதும், ‘இந்தக் கேள்விகளுக்கு இயக்குநர்தான் பதில் சொல்லணும்’ என்றார், யோகி பாபு. இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் பேசினேன்.

``வடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்தப் படத்தை எடுக்கலாம்னு முதலில் பிளான் பண்ணினேன். அதே மாதிரி, கதையை முடிச்சதும் அவர்கிட்ட சொன்னேன். அவருக்குக் கதையும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு போட்டிருந்ததால், `இம்சை அரசன்’ படப் பிரச்னை முடிந்தால்தான், புதுப் படங்களில் அவரால் கமிட்டாக முடியும்னு சொன்னாங்க. அப்போதான், `இம்சை அரசன்’ படத்தில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு நடிக்கிறார்னு ஒரு செய்தி வந்துச்சு. அந்தச் செய்தி உண்மை இல்லை; ஆனால், அந்தச் செய்தி மூலமா ‘நாம ஏன் இந்தப் படத்துக்காக யோகி பாபுகிட்ட பேசக்கூடாது’ன்னு தோணுச்சு. `இது வடிவேலுவுக்குப் பண்ணின கதை’ன்னு சொன்னதும், முதலில் தயங்கினார். `உங்க இயக்கத்தில் நடிக்கிறதுக்கு எனக்கு ஓகே. ஆனால், அதே கதையில்தான் நடிக்கணுமா சார், வடிவேலு அண்ணன் ஏதாவது நினைச்சுக்கப் போறார்’னு சொன்னார். அதுக்கப்புறம், ’உங்களுக்காகக் கதையை மாத்திட்டேன். அவர் எதுவும் நினைக்க மாட்டார்’னு சொல்லி யோகி பாபுவை கமிட் பண்ணினேன். படத்துல யோகி பாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள்தான் படமே. இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் படத்தில் இருக்கு. வெளிநாட்டு மருத்துவ கம்பெனியோடு சேர்ந்துகிட்டு, இங்கிருக்கிற சிலர் ஒரு வைரஸைப் பரப்புறாங்க. அந்த வைரஸுக்கான மருந்தும் அவங்ககிட்ட இருக்கு. ஆனால், அதை உடனே வெளியிடாமல் நோய் பரவட்டும்னு காத்திட்டு இருக்காங்க. இந்த கேப்ல தலைமுறை, தலைமுறையா சித்த மருத்துவம் பார்க்கிற குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுப்பிடிக்கிறார். இதைத் தெரிஞ்சுக்கிட்ட அந்த மருத்துவக்குழு, சித்த மருத்துவரோட குடும்பத்தையே கொலை பண்ணிடுறாங்க. இவங்களோட ஆவி, யோகி பாபுவோட சேர்ந்து எதிரிகளைப் பழிவாங்குறதும், அந்த வைரஸிலிருந்து மக்களைக் காப்பாத்துறதும்தான் கதையே. படத்தை நாங்க நவம்பரிலேயே ஷூட் பண்ணி முடிச்சிட்டோம். பிப்ரவரி, மார்ச்சில்தான் கொரோனாவே வந்துச்சு. இப்போ இருக்கிற நிலைமையை அப்படியே சித்திரிக்கிற படமா `பேய் மாமா’ இருக்கும். படத்தைக் கண்டிப்பா தியேட்டரில்தான் ரிலீஸ் பண்ணுவோம்’’ என்றார், இயக்குநர் ஷக்தி சிதம்பரம்.