தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர்களான அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கராவ், என் டி ராமாராவ் ஆகியோர் 60'ஸ் 70'ஸ் காலகட்டத்தில் தெலுங்கு திரையுலகில் கோலோச்சி வந்தவர்கள்.
இன்று இவர்களின் வாரிசுகள் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம்வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் என் டி ராமாராவின் வாரிசான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அண்மையில் வெளியான தனது 'வீர சிம்ஹா ரெட்டி' திரைப்படத்தின் வெற்றி விழாவில் பேசுகையில், "எனது அப்பா என்.டி ராமாராவின் சமகாலத்தில் அந்த ரங்கராவ் இந்த ரங்கராவ், அக்கினேனி, தோக்கினேனி என சிலர் இருந்தனர்" என்று கூறியிருந்தார். இதுதொடர்பான காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகி 'மதிப்ப்புமிக்க மூத்த நடிகர்களை இவ்வாறு மதிப்பில்லாமல் ஏனாதானோ என்று பெயர் சொல்லி அழைப்பது தவறானது' என்று பலர் விமர்சித்து வந்தனர்.
இந்நிலையில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் வாரிசுகளான நடிகர் நாக சைதன்யா மற்றும் அகில் அக்கினேனி இருவரும் பாலகிருஷ்ணாவின் பேச்சைக் கண்டித்து பதிவிட்டுள்ளனர். இது பற்றி தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள அவர்கள், "நந்தமுரி தாராக ராம ராவ் (என் டி ராமாராவ்), அக்கினேனி நாகேஸ்வர ராவ், எஸ்.வி.ரங்கராவ் ஆகிய மூவரின் பெருமைமிகுந்த ஆக்கப்பூர்வமான பங்களிப்புகள் தெலுங்குத் திரையுலகின் அசைக்கமுடியாத தூண்களாகும். அவர்களை அவமரியாதை செய்வது நம்மை நாமே அவமரியாதை செய்துகொள்வதற்குச் சமம்" என்று பதிவிட்டுள்ளனர். நெட்டிசன்கள் மற்றும் தெலுங்கு திரையுலகினர் என பலர் இவர்களின் இந்தக் கருத்தை ஆதரித்து 'பாலகிருஷ்ணா பேசியது பொறுப்பற்ற பேச்சு' என்று பதிவிட்டு வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.