சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

“சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டியா மொக்க ஜோக் சொல்லுவார்!”

 அதிதி ஷங்கர்
பிரீமியம் ஸ்டோரி
News
அதிதி ஷங்கர்

படங்கள்: கிரண் சா

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

``ரொம்ப ஹேப்பியா இருக்கேன். `விருமன்' படத்துக்கு முன்னாடியே என்னை ரொம்ப நல்லா வெல்கம் பண்ணியிருந்தாங்க. படத்தோட ரிலீஸூக்குப் பிறகு `முதல் படம் மாதிரியே இல்லை. நல்லா நடிச்சிருக்கீங்க'னு எல்லாரும் சொல்றதைக் கேக்குறப்போ சந்தோஷமா ஃபீல் பண்றேன். மனசார எல்லாரும் என்னை வெல்கம் பண்ணியிருக்காங்க'' என்று பேசத் தொடங்கினார் அதிதி ஷங்கர்.

``ரொம்ப ஹைப்பரா இருக்கீங்கன்னு யாராவது சொல்லியிருக்காங்களா?’’

``நிறைய பேர் சொல்லியிருக்காங்க. எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறது இல்லை. சினிமாத்துறையில என்னை மாதிரி ஹைப்பரா இருக்குற யாரையும் பார்க்கலைன்னு நினைக்கிறேன். அதனால், என்னைப் பார்த்து ஆச்சர்யமாகுறாங்க. என்னோட எனர்ஜி எல்லாருக்கும் டிராவல் ஆகணும்னு நினைக்கிறேன். எந்த வேலையிலயும் பாசிட்டிவ் எனர்ஜி ரொம்ப முக்கியம்...''

“சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டியா மொக்க ஜோக் சொல்லுவார்!”

``எந்தப் படம் பார்த்துட்டு சினிமால நடிக்கணும்னு ஆசை வந்தது?’’

``ஒரு படம்னு சொல்ல முடியாது. சின்ன வயசுல இருந்தே நிறைய படங்கள் பார்ப்பேன். டி.வி பார்த்துக்கிட்டே இருப்பேன். என் அப்பா இயக்குநர் அப்படிங்கறதுனால, வீட்டுல சினிமா பார்க்குறதுக்கு எப்போதும் தடை போட மாட்டாங்க. `சினிமாவுக்கு போகக் கூடாது'ன்னு எப்போதும் தடை போட்டது இல்லை. ஹேப்பியா சினிமாவுக்கு போயிட்டு வருவேன். இதனால, நிறைய பார்த்துப் பார்த்து சினிமாவுல நடிக்க ஆசை வந்துருச்சு. சினிமா பார்க்கவும் தடை போடலை, இப்ப நடிக்கவும் தடை போடலை.''

`` `விருமன்' பார்த்துட்டு அப்பா என்ன சொன்னார்?’’

``மத்தவங்களுக்கு இருந்த ஷாக் அப்பாவுக்கு இல்லை. ஏன்னா, அப்பாவுக்கு நான் நடிச்சுருவேன்னு நம்பிக்கை இருந்தது. `அதிதியை படத்துல தெரியலை, தேன்மொழி மட்டும்தான் படத்துல தெரிஞ்சா'ன்னு சொன்னார். மனசுக்கு நிறைவா இருந்தது. படம் ரிலீஸுக்குப் பிறகு ரஜினி சாரை இன்னும் மீட் பண்ணலை. அவர் பாராட்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.''

“சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டியா மொக்க ஜோக் சொல்லுவார்!”

`` `மாவீரன்' படத்துல நடிச்சுட்டு வர்றீங்க, ஹீரோ சிவகார்த்திகேயன் என்ன சொன்னார்?’’

``சிவா ரொம்ப பிஸியா இருக்கார். `விருமன்' ரிலீஸின்போது ஷூட்டிங்ல பிஸியா இருந்தார். ஆனா, என்னுடைய டான்ஸ் வீடியோ பார்த்துட்டு, `எனர்ஜி ரொம்ப நல்லா இருக்கு'னு சொன்னார். இப்போ இவர்கூட ஷூட்டிங்ல பிஸியா நடிச்சுக்கிட்டிருக்கேன். கார்த்தி சார்கூட முதல் படம் பண்ணிட்டேன். ரெண்டாவது படம் சிவகார்த்திகேயன்கூட நடிச்சுக்கிட்டிருக்கேன். ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. ஆசீர்வதிக்கப்பட்ட பெண்ணா உணர்றேன். சிவாவும் ரொம்ப எனர்ஜியான நபர். எங்க ரெண்டு பேருடைய வேவ்லெங்க்த் ஒரே மாதிரி இருக்கு. எனக்குப் போட்டியா செட்டில் சிவகார்த்திகேயன் மொக்க ஜோக் நிறைய சொல்லுவார். ரொம்ப ஜாலியா இருக்கும்.''

``உங்களுடைய ஃபேவரைட் டான்ஸர் யார்?’’

``பிரபுதேவா மாஸ்டர்.''

``கமர்ஷியல் ஹீரோயின் ஃபார்மேட்டை உடைச்சுட்டு ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள் நடிக்கணும்னு நினைக்குறீங்களா?’’

``நல்ல ஸ்கிரிப்ட் கிடைச்சா, கண்டிப்பா பண்ணுவேன். சமந்தா நடிப்பு ரொம்பப் பிடிக்கும்.''

``நீங்க படிச்ச காலேஜுக்கு சிறப்பு விருந்தினரா போனது எப்படியிருந்தது?’’

``நான் படிச்ச காலேஜுக்கு இவ்வளவு சீக்கிரம் சிறப்பு விருந்தினரா போவேன்னு நினைக்கலை. போனில் பேசினப்போ, `சும்மா கலாய்க்க வேண்டாம்'னு சொன்னேன். அது உண்மைன்னு தெரிஞ்சதும் இன்ப அதிர்ச்சி ஆகிடுச்சு. என் ஜூனியர்ஸையெல்லாம் பார்த்துப் பேசினேன். `அக்கா வாங்க'னு எல்லாரும் உரிமையாக் கூப்பிட்டுப் பேசினாங்க. மேடையில ஏறிப் பேசினப்போ ரொம்ப சந்தோஷப்பட்டேன். என்னுடைய புரொபசர்ஸ் எல்லாம் பேசினாங்க. ரொம்ப பெருமையா ஃபீல் பண்ணினேன்.''

“சிவகார்த்திகேயன் எனக்குப் போட்டியா மொக்க ஜோக் சொல்லுவார்!”

``இயக்குநர் ஷங்கரின் பொண்ணு, அதனால்தான் இந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைச்சதுன்னு எல்லாரும் சொல்றதை எப்படிப் பார்க்குறீங்க?’’

``அதுக்காக வருத்தப்பட மாட்டேன். இது இயல்பான விஷயம்தான். இன்னைக்கு என்னைப் பத்திப் பேசுறவங்க, நாளைக்கு வேற யாரையாவது பத்திப் பேசுவாங்க. நான் பண்ற வேலை ஆடியன்ஸுக்குப் பிடிச்சிருந்தா, என்னை ஏத்துக்கப் போறாங்க. ஒரு வாய்ப்பு கிடைக்கிறது ஈஸியான விஷயம் கிடையாது. ஒரு ஆடிஷன் பண்ணுனாங்க. போனேன். என் வேலை பிடிச்சிருந்தது. அதனாலதான் எனக்கு வாய்ப்பு கிடைச்சுது. யாரையும் ஏமாத்தி இந்த வாய்ப்பு வாங்கலை. என் திறமையைப் பார்த்துதான் இந்த வாய்ப்பை டைரக்டர் முத்தையா கொடுத்தார்.''

``எந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆசை?’’

``எனக்கு பீரியட் படங்கள் ரொம்பப் பிடிக்கும். ராஜமெளலி படங்கள் பிடிக்கும். அவருடைய `மகதீரா' பார்த்துட்டு இது மாதிரி ஒரு படத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். வாழ்க்கையில ஒரு பீரியட் படத்துலயாவது நடிச்சுடணும்னு ஆசை. இந்தியில் டைரக்டர் சஞ்சய் லீலா பன்சாலி படங்களெல்லாம் பிடிக்கும்.''

``வாழ்க்கையில மறக்க முடியாத தீபாவளி?’’

``எங்க பாட்டி இருந்தவரைக்கும் தீபாவளியை அவங்க தி.நகர் வீட்டில் கொண்டாடுவோம். இப்போ ஈசிஆரில் கொண்டாடுறோம். தீபாவளிக்கு வீட்டில் எல்லாரும் ஒண்ணா கூடுவோம். அப்பாவும் ஷூட்டிங்கை தள்ளிவெச்சுட்டு எங்க கூடத்தான் இருப்பார். அதுதான் பெரிய சந்தோஷம்.''