Published:Updated:

``நாக சைதன்யாதான் என் மூத்த பையன்; அகிலுக்கு அவர் எப்படின்னா..!" - பர்சனல் பகிரும் நடிகை அமலா

கணவர், மகன் அகிலுடன் அமலா

``அகிலைப் பத்தி நான் எது பேசுறதா இருந்தாலும், அதுக்கு முன்பு நாக சைதன்யாவைப் பத்தி பேசுறதுதான் சரியா இருக்கும். சைதன்யாவுக்கு நான் வளர்ப்புத் தாய்தான். ஆனாலும், அவர்தான் என் மூத்த மகன். அவர் நடிகரானப்போ, நானும் நாகார்ஜுனாவும் சந்தோஷப்பட்டோம். என் மாமனார் பேரானந்தம் அடைஞ்சார்

Published:Updated:

``நாக சைதன்யாதான் என் மூத்த பையன்; அகிலுக்கு அவர் எப்படின்னா..!" - பர்சனல் பகிரும் நடிகை அமலா

``அகிலைப் பத்தி நான் எது பேசுறதா இருந்தாலும், அதுக்கு முன்பு நாக சைதன்யாவைப் பத்தி பேசுறதுதான் சரியா இருக்கும். சைதன்யாவுக்கு நான் வளர்ப்புத் தாய்தான். ஆனாலும், அவர்தான் என் மூத்த மகன். அவர் நடிகரானப்போ, நானும் நாகார்ஜுனாவும் சந்தோஷப்பட்டோம். என் மாமனார் பேரானந்தம் அடைஞ்சார்

கணவர், மகன் அகிலுடன் அமலா

எவர்கிரீன் நாயகி அமலா, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கம்பேக் கொடுத்திருக்கிறார். சர்வானந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் `கணம்' படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் அமலாவிடம், ரீ-என்ட்ரி மற்றும் பர்சனல் விஷயங்கள் குறித்துப் பேசினோம்.

'கணம்' படத்தில்...
'கணம்' படத்தில்...

``இது வழக்கமான கமர்ஷியல் படம் கிடையாது. மனிதர்களின் உணர்வுகளை யதார்த்தத்துடன் பிரதிபலிக்கிற படைப்பா உருவாகியிருக்கு. இந்தப் படத்தோட கதையைக் கேட்டதுமே எனக்குப் பிடிச்சுப்போச்சு. சர்வானந்த் உட்பட மூணு பசங்க, அவரவர் வாழ்க்கையை எதிர்கொள்றப்போ நடக்கிற முக்கியமான சம்பவங்கள்தான் படத்தின் கதை. சர்வானந்தின் அம்மாவா நான் நடிச்சிருக்கேன். கதையின் நகர்வுல அவரோட பயணத்துல என் பங்கும் முக்கியமானதா இருக்கும்.

ஹைதராபாத்ல செட்டில் ஆகிட்டதால, தமிழ் பேசுறதுக்கான வாய்ப்பு எனக்குக் குறைஞ்சுடுச்சு. அதனால, இந்தப் படத்தோட ஷூட்டிங்ல முதல் நாள் மட்டும் டயலாக் பேச கொஞ்சம் சிரமம் இருந்துச்சு. மத்தவங்களோடு பேசுறப்போ லாங்வேஜ் சிரமம் இருந்தாலும், டயலாக் பேப்பரைப் படிச்சதும் ஷாட்ல கடகடனு பேசிடுவேன். 'கணம்' ஷூட்டிங் முடிஞ்சதே தெரியாத அளவுக்கு சந்தோஷமா நடிச்சேன்" வழக்கத்தைவிடக் கூடுதல் உற்சாகத்துடன் ரீ-என்ட்ரிக்கான காரணத்தைச் சொன்ன அமலா, தன் குடும்ப வாழ்க்கை குறித்தும் கலகலப்பாகப் பேசினார்.

கணவருடன் அமலா
கணவருடன் அமலா

``குழந்தை நட்சத்திரமா நடிக்க ஆரம்பிச்ச என் கணவர், 80-கள்ல இருந்து இப்போவரை ஹீரோவா கலக்கிக்கிட்டிருக்கார். எங்க போனாலும் அவரோட எனர்ஜி பத்தி பலரும் கேட்பாங்க. அதுக்கு அவரின் மரபணுதான் காரணம்னு நினைக்கிறேன் (சிரிக்கிறார்). என் மாமனார் ரொம்பவே சுறுசுறுப்பானவர். 90 வயசுக்குப் பிறகும், யார் உதவியும் இல்லாம நிமிர்ந்த நடையுடன் மிடுக்கா செயல்பட்டார். அவர் வழியில வந்ததால என் கணவரும் அதே சுறுசுறுப்புடன் இருக்கார்போல. ஒவ்வொரு பட வேலைகளும் முடிஞ்சதும் ஓரிரு வாரம் நாகார்ஜுனா வெளியூர் பயணம் போவார்.

அப்போ செல்போன் உட்பட எந்தத் தொலைத்தொடர்பு வசதியும் இல்லாம, மனசுக்குப் பிடிச்ச மாதிரி தனி உலகத்துல இருப்பார். அதுக்கப்புறமா அடுத்த பட வேலையில பிஸியாகிடுவார். ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டுச் செய்வார். அதனால, பரபரப்பில்லாம உற்சாகமா வேலை செய்றார்" என்று கணவரின் எனர்ஜி சீக்ரெட் சொன்னவரின் பேச்சு, மகன்கள் பக்கம் திரும்பியது. நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவும், இளைய மகன் அகிலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மகன்களுடன் நாகார்ஜூனா
மகன்களுடன் நாகார்ஜூனா

``அகிலைப் பத்தி நான் எது பேசுறதா இருந்தாலும், அதுக்கு முன்பு நாக சைதன்யாவைப் பத்தி பேசுறதுதான் சரியா இருக்கும். சைதன்யாவுக்கு நான் வளர்ப்புத் தாய்தான். ஆனாலும், அவர்தான் என் மூத்த மகன். அவர் சினிமாவுக்கு வந்தப்போ நானும் நாகார்ஜுனா சாரும் சந்தோஷப்பட்டோம். அப்போ என் மாமனார் பேரானந்தம் அடைஞ்சார். `நம்ம குடும்பத்துல பல தலைமுறையினர் சினிமாவுல வேலை செய்யணும்'னு அவர் பிரியப்பட்டார்.

தாத்தா, அப்பாவோட சிபாரிசு ஏதுமில்லாம, சொந்தத் திறமையாலதான் நாக சைதன்யா சினிமாவுக்குள்ள நுழைஞ்சார். இப்பவரைக்கும் திறமையால மட்டும்தான் வளர்ந்துகிட்டிருக்கார். அகிலுக்கு, நாக சைதன்யா முன்னுதாரணமான அண்ணன். அவரைப் பார்த்துதான் அகிலும் சினிமாவுக்கு வர ஆசைப்பட்டார். கைப்பிடிச்சு கூட்டிப்போன காலம் மாறி, இப்போ சுய முடிவுகள் எடுக்கிற பக்குவத்துக்குப் பசங்க வளர்ந்துட்டாங்க. ரெண்டு பசங்களோட சினிமா வேலைகள்லயும் நானும் என் கணவரும் பெரிசா தலையிட மாட்டோம்.

குடும்பத்தினருடன் அமலா
குடும்பத்தினருடன் அமலா

கதை கேட்கிறதுலேருந்து ஷூட்டிங்வரை எல்லாத்தையும் அவங்களே பார்த்துப்பாங்க. நாங்க எல்லோரும் ஒண்ணா இருக்கிற நேரம் ரொம்பவே கலர்ஃபுல்லா இருக்கும். அந்த நேரத்துல அவரவர் வேலை விஷயத்தைப் பேச மாட்டோம். ஒண்ணா சாப்பிடுவோம்; ஜாலியா கதை பேசுவோம். சினிமா ரொம்பவே சவாலான ஃபீல்டு. இதுல எல்லா நேரமும் கூடவே இருந்து நம் வளர்ச்சிக்கு இன்னொருத்தர் ஆதரவா இருக்க முடியாது. யாரா இருந்தாலும் தன் வெற்றிக்கு முட்டி மோதி சுயமாதான் வளரணும். அந்த வகையில என் ரெண்டு பசங்களோட வளர்ச்சியையும் பார்த்து ரொம்பவே சந்தோஷப்படுறேன்" என்பவரின் பேச்சில் முதிர்ச்சியும் பூரிப்பும் இழையோடுகிறது.

சினிமாவில் 30 ஆண்டுக்கால இடைவெளிக்கான காரணத்தைப் பகிர்ந்த அமலா,``தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரை இப்போ நான் கம்பேக் கொடுக்கிற மாதிரி தோணலாம். ஆனா, நான் தொடர்ந்து சினிமாவுலதான் இருக்கேன். சினிமா குடும்பத்துல மருமகளா இருக்கிறதால, எனக்கும் சினிமா சார்ந்த பொறுப்புகள் அதிகம் உண்டு. எங்க குடும்பத்தோட அன்னபூர்ணா ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நூத்துக்கணக்கான பிள்ளைகள் படிக்கிறாங்க. அதன் நிர்வாக விஷயங்களை நான்தான் கவனிச்சுக்கிறேன்.

வளர்ப்பு நாயுடன் அமலா
வளர்ப்பு நாயுடன் அமலா

ரெண்டு பசங்க மேலயும் என் குடும்பத்தினர் மேலயும் நான் வெச்சிருக்கிற அன்புக்கு இணையான பாசத்தை வளர்ப்புப் பிராணிகள் மேலயும் வெச்சிருக்கேன். பிராணிகள் நலனுக்காக நான் எடுக்கிற முயற்சிகளுக்கு என் கணவர் முழு ஊக்கம் கொடுக்கிறார். வாழ்க்கை சரியான திசையில நல்லபடியா போகுது" என்று புன்னகையுடன் முடித்தார்.