
‘அச்சம் என்பது இல்லையே' பக்கா ஆக்ஷன். லண்டன்லதான் கதை நடக்குது. அதனால பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கேதான் நடந்தது. இதுல சிறை அதிகாரி சாண்ட்ரா ஜேம்ஸ் ஆக நடிச்சிருக்கேன்.
எமி ஜாக்சனின் கோலிவுட் கம்பேக். ரஜினியின் ‘2.0' படத்திற்குப் பின், சொந்த தேசமான லண்டன் பறந்தவர், திருமணம், குழந்தை, ஹாலிவுட் படம் எனச் சிறகடித்தார். இப்போது அவரை தனது `அச்சம் என்பது இல்லையே' படத்திற்காக அழைத்து வந்திருக்கிறார் இயக்குநர் விஜய். பெரம்பூர் பின்னி மில்லில் படப்பிடிப்பு. மெஷின்கன்னுடன் ஆக்ஷனுக்குத் தயாராக இருந்த எமியிடம் காட்சியை விளக்கிக் கொண்டிருந்தார் விஜய். நம்மைப் பார்த்ததும் ஆச்சரியமானார் எமி. ‘‘வாவ்வ்வ்... விகடனா! மோஸ்ட் வெல்கம்'' - என புன்னகையும் பூரிப்புமாக வரவேற்றார்.


`` `மதராச பட்டினம்' வெளியாகி 13 வருஷம் ஆகிடுச்சு...’’
‘‘நிஜமா நம்பவே முடியல. அந்தப் படத்துல நடிக்கக் கேட்கும்போது நான் லண்டன்ல ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். சந்தோஷமா அப்படியே கிளம்பி வந்து நடிச்சதுதான் ‘மதராச பட்டினம்.' மொழி தெரியாமல், நாடு கடந்து நடிக்க வந்திருக்கும் ஒரு நடிகைக்கு முதல் படமே சிறப்பான படமா அமையறது பெரிய விஷயம். நான் அதிர்ஷ்டசாலி. இயக்குநர் விஜய், ஆர்யான்னு அற்புதமான மனிதர்கள் நண்பர்களானாங்க. தமிழ் சினிமா, சென்னை, நடிப்புன்னு பல விஷயங்களைக் கத்துக் கொடுத்தாங்க. அப்போ கத்துக்கிட்ட விஷயங்கள்தான் இப்ப வரை உதவியா இருக்குது. அப்புறம், விகடன் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். என் முதல் படத்துக்காக சிறந்த அறிமுக நடிகை விருது கொடுத்தது நல்லா ஞாபகத்துல இருக்கு!''


`` `அச்சம் என்பது இல்லையே' என்ன ஸ்பெஷல்? உங்க கம்பேக் சீசனையும் இயக்குநர் விஜய்யே தொடக்கி வச்சிருக்கார்..!’’
“சந்தோஷமா இருக்கு. இயக்குநர் விஜய் சார்கிட்ட இருந்து போன், ‘எமி, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் இருக்கு, நீங்க நடிக்கணும்’னார். எதுவும் பேசாமல் புறப்பட்டு வந்துட்டேன். ஏன்னா, விஜய் சார் சினிமாவை எனக்கு அறிமுகப்படுத்தினவர். அவர் சொன்னதை முழுசா நம்புவேன். எந்த விஷயம்னாலும் அவர்கிட்டே கருத்தும் கேட்டுப்பேன். தமிழ்ல நான் நடிக்காமல் இருந்தால்கூட, அவருடன் அடிக்கடி பேசிக்கிட்டுத்தான் இருந்தேன்.
‘அச்சம் என்பது இல்லையே' பக்கா ஆக்ஷன். லண்டன்லதான் கதை நடக்குது. அதனால பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கேதான் நடந்தது. இதுல சிறை அதிகாரி சாண்ட்ரா ஜேம்ஸ் ஆக நடிச்சிருக்கேன். இப்படி ஒரு கேரக்டர்ல இதுவரை நான் நடிச்சதே இல்ல. இதுக்காக பல வருஷமா பயிற்சி எடுத்துட்டு வர்ற பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்னு எல்லாத்தையும் பயன்படுத்தியிருக்கேன். அருண்விஜய்யோட முதல்முறையா நடிக்கறேன். எளிமையா பழகுறார். சண்டைக்காட்சிகள்ல எப்படி இருக்கணும்னு கத்துக் கொடுத்தார். அதனால ஸ்டண்ட் சில்வா மாஸ்டரின் அதிரடி மூவ்மென்ட்ஸைக்கூட அசால்டா பண்ணியிருக்கேன்.''


``மார்ச் 8 மகளிர் தினம் என்பதால இந்தக் கேள்வி. சர்வதேச அமைப்பான Crime Prevention and Victim Care அமைப்பின் தூதரா இருக்கீங்க. இங்கே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிச்சிட்டே இருக்குதே?’’
‘‘இந்தப் பிரச்னை உலகம் முழுவதும் இருக்கு. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பத்திப் பேசுறப்ப, இது பெண்களோட பிரச்னை இல்லைன்னு முதல்ல உணரணும். பெண்களுக்கு எதிரா நடக்கும் அத்தனை வன்கொடுமைகளுக்கும் ஆணாதிக்கச் சமூகம்தான் காரணம். சின்ன வயசுல இருந்தே ஆண் குழந்தைகளை நாம எப்படி வளர்க்கிறோம், அவங்களுக்கு என்ன கத்துக்கொடுக்கறோம் என்பதுலதான் இதுக்கான தீர்வுகள் இருக்கு. ஆண் குழந்தைகள் மூணு, நாலு வயசுல இருக்கும்போதே, அவங்களுக்கு இரக்கம், அன்பு, அனுதாபம், சமத்துவம்னு நேசிக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. பாதிக்கப்படும் பெண்களைப் பார்த்து பெண்கள் நாம அனுதாபப்படுறோம். அதே போல ஆண்கள் அதைப் பார்த்து வெட்கப்படணும், கோபப்படணும்!
குற்றத் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டவங்களுக்கு ஆதரவான எங்க அமைப்பில் குடும்ப வன்முறையால பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகள் எல்லோருக்கும் ஆதரவு அளிக்கிறோம். அமில வீச்சால பாதிக்கப்பட்டவங்க, தீயால எரிக்கப்பட்டவங்கன்னு பாதிக்கப்பட்ட பலரையும் நேர்ல சந்திச்சேன். முகமும் உடலும் சிதைஞ்சிருந்தாலும், அவங்க எல்லாரோட முகத்திலும் நம்பிக்கையும் புன்னகையும் மிச்சம் இருந்துச்சு. எல்லாருமே வலிகளை மறைச்சு, ரொம்ப தைரியமா சிரிச்சுப் பேசினது இன்னமும் என் கண் முன்னாடி நிற்குது.''


``நீங்களும் மகனைப் பெற்ற தாய். ஒரு அம்மாவா உங்களோட மகனை எப்படி வளர்க்குறீங்க?’’
‘‘ஆன்ட்ரியாஸ் ஜாக்ஸ் பனயிட்டோவுக்கு அதீதமான அன்பை மட்டுமே சொல்லிக்கொடுத்து வளர்க்கறேன். மனசுல தோன்றக்கூடிய அத்தனை உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தற ஒரு மனுஷனா, மத்தவங்க மீது பாசம் காட்டும் அன்பான ஜீவனா வளர்க்க தினமும் முயற்சி செய்யறேன். இன்னொரு விஷயம், இப்ப லண்டன்ல ஆண்களின் தற்கொலைகளும் பெருகிட்டிருக்கு. அவங்களால தங்களோட உணர்ச்சிகளை யார்கிட்டேயும் சரியா வெளிப்படுத்த முடியலைன்னு சொல்றாங்க. யாரிடமும் மனம்விட்டுப் பேச முடியாத சூழல்ல வளர்றோம்னு ஆய்வுகள் சொல்லுது. ஆனா நான் என் மகனை, எல்லாத்தையும் தயக்கமில்லாம வந்து சொல்ற அளவுக்கு வளர்க்கறேன். தோணுற விஷயங்களை மனம்விட்டுப் பகிர்ந்துக்கக்கூடிய அளவுக்கு அவனுக்கான ஸ்பேஸ் கொடுக்குறேன். ஒரு பெண்ணாக, தாயாக நான் பெருமைப்படும் விஷயமும் அதான்!” - கெத்தாகப் புன்னகைக்கிறார் எமி ஜாக்சன்.