Published:Updated:

“மறக்க நினைக்கிற விஷயத்தை அப்பவே டெலிட் பண்ணிடுவேன்!”

அஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலி

அஞ்சலி ஷேரிங்ஸ்

உங்களுக்கான கதைகளை எப்படித் தேர்வு செய்றீங்க?

‘‘கதையில என்னோட கதாபாத்திரம் ரொம்ப வலிமையானதா இருக்கணும். அது கதையோட கச்சிதமாகப் பொருந்தணும். படம் பாத்துட்டு தியேட்டரிலிருந்து வெளியே வரும்போது என்னோட கதாபாத்திரம் எல்லோர் மனசிலும் நின்றிருக்கணும். அதேசமயம் படத்தின் கதையும் நல்லா இருக்கணும்.’’

இப்போ நீங்க நடிச்சிருக்கிற ‘FALL' திரைப்படத்தில் உங்களின் கதாபாத்திரம் எப்படி?

‘‘இதில் நான் திவ்யா என்கிற கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். ரொம்பவும் அமைதியா, மென்மையா, அதேநேரம் எப்போதும் குழப்பத்துடனே இருக்கும் கதாபாத்திரம் இது. வலிமையான பெண்ணா திவ்யாவைக் காட்சிப்படுத்திய விதமும் ரொம்ப அழகா இருக்கும். அதனாலதான் இந்தப் படத்தை விரும்பித் தேர்வு செஞ்சு நடிச்சேன்.’’

இது த்ரில்லர் படம். நீங்க இதுவரைக்கும் நடிச்ச படங்களில் இருந்து வேறுபட்டது. நீங்க சந்தித்த சவால்கள் என்ன?

‘‘நினைவுதப்பிய ஒரு நோயாளியா இந்த திவ்யா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துற அதேநேரத்துல, ஒருவித குழப்பத்துடனும் அதேசமயம் ரொம்பவும் ஸ்ட்ராங்காகவும் இருக்கும் கதாபத்திரம். இத்தனை பரிமாணங்கள் கொண்ட இந்தக் கதாபாத்திரத்தைக் கையாள்வதே பெரிய சவால்தான்.’’

உங்களுடைய ஃபேவரைட்ஸ் சொல்லுங்க....

‘‘இயக்குநர்களில் ராம் சார் எனக்கு ஃபேவரைட். அவர் எப்போதுமே ‘ஆனந்தி'ன்னுதான் என்னைக் கூப்பிடுவார். இசையமைப்பாளர்களில் ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா இருவரையுமே பிடிக்கும். பாடல்கள் கேட்பது பிடிக்கும். உடையில் மிடி, டெனிம் அண்டு டாப், குர்த்தா செளகரியமாக இருக்கும். ஆனால், புடவைதான் என் ஃபேவரைட். பிடிச்ச இடம் அமெரிக்கா, அடிக்கடி அங்கதான் போவேன். சென்னையில பீச் ரொம்பப் பிடிக்கும். உணவுகளில் மட்டன் பிரியாணி பிடிக்கும். சாப்பிடற மாதிரி சமைக்கவும் செய்வேன். பிடிச்ச செல்லப்பிராணி, என்னுடைய போலோ நாய்க்குட்டிதான். எங்க போனாலும் கூடவே கூட்டிப் போயிருவேன். பிடிச்ச வாகனம், கார்தான்.’’

எந்தப் பின்னணியும் இல்லாமல் ஒரு பெண்ணாக தனியாக இந்தத் திரைத்துரையில் இத்தனை வருடம் பயணித்து சாதித்திருக்கிறீர்கள். இதை உணர்ந்ததுண்டா?

‘‘இத பத்தி நினைக்கும்போது சில சமயங்களில் பெருமையாக இருக்கும். சில சமயங்களில் ‘நாம பண்ணவேண்டியது இன்னும் நிறைய இருக்கு'ன்னு தோணும். ‘போதும், சாதிச்சுட்டோம்'னு நினைச்சுட்டா எதையும் செய்ய முடியாது. எப்பவும் அந்த நினைப்பு வராமப் பார்த்துக்குவேன்.’’

“மறக்க நினைக்கிற விஷயத்தை அப்பவே டெலிட் பண்ணிடுவேன்!”

திருமணம்?

‘‘இந்தக் கேள்வியைத் திரும்பத் திரும்ப நிறைய இடங்கள்ல எதிர்கொள்றேன். திருமணம் பண்ணிக்கணுங்ற ஐடியா இருக்கு, ஆனா இப்போதைக்கு அதைப் பத்தி எதுவும் யோசிக்கல. அதுக்கான நேரம் வரும்போது பார்த்துக்கலாம்.’’

இந்தக் கதையில் வர்ற திவ்யா கதாபாத்திரத்திற்கு மெமரி லாஸ் ஆகுற மாதிரி உங்க வாழ்க்கையில நீங்க மறக்கணும்னு நினைக்கிற விஷயம் எது?

``அப்படி எதுவும் இல்ல. என் வாழ்க்கைல மறக்கணும்னு நினைக்கிற விஷயத்த அப்பவே மனசிலிருந்து டெலிட் பண்ணிடுவேன்.’’

ஒரு கதையைத் தேர்வு செய்யும் முன் யாரிடமும் அறிவுரை கேட்கும் பழக்கம் இருக்கிறதா?

‘‘இல்லை, எப்பவும் நான்தான் முடிவு செய்வேன். எந்த கேரக்டர் எனக்குப் பொருந்தும், என்னால எதைச் செய்ய முடியும், எது முடியாது... இதெல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அவங்க அவங்களோட கண்ணோட்டத்திலதான் பார்ப்பாங்க. அதனால நாமதான் முடிவு பண்ணணும்.’’

‘கற்றது தமிழ்' ஆனந்தி, ‘தரமணி' செளமியா, ‘பேரன்பு' விஜயலட்சுமி மாதிரி ராம் சாரின் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் உங்களுக்கு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம் இருக்கா?

‘‘அது ரொம்பவும் சுவாரசியமான ஸ்டோரி. ராம் சார் எப்படி இந்த மாதிரியெல்லாம் யோசிக்கிறார்னு வியந்து பார்த்தேன். இந்தப் படம் ரிலீஸ் ஆச்சுன்னா, எல்லோருக்கும் ராம் சார் மேல இருக்கிற மதிப்பு இன்னும் ஒருபடி உயரும். படத்தோட கதை பத்தியும், என் கதாபாத்திரம் பத்தியும் இப்போ எதுவும் சொல்ல முடியாது. ஆனா, அது ரொம்ப ஸ்பெஷலான ஒண்ணு!’’

“மறக்க நினைக்கிற விஷயத்தை அப்பவே டெலிட் பண்ணிடுவேன்!”

நிவின் பாலியுடன் நடித்த அனுபவம் எப்படி?

‘‘ரொம்ப நல்ல நடிகர். சில சீன்கள்ல அவர் கூட நடிக்கும்போது நமக்கு வித்தியாசம் எதுவும் பெரிசா தெரியாது. ஆனால், முடிச்ச பிறகு ஷாட்ஸ் பார்த்தால் சின்னச் சின்ன எக்ஸ்பிரஷன்களில்கூட அவ்வளவு கவனமா பண்ணியிருப்பார். எனக்கு பொதுவாக மானிட்டர் பார்க்கிற பழக்கம் இல்ல, யாராவது சொன்னா பார்ப்பேன். அப்படிப் பார்க்கும்போது அவர் நடிச்ச விதம் ஆச்சர்யம் தந்தது.’’

படப்பிடிப்பில் இயக்குநர் ஒன்ஸ்மோர் கேட்டால் கேள்வி எதுவும் கேட்காமல் பண்ணுவீங்களா? இல்ல, ஒரு டேக்கிலேயே ஓகே பண்ணிருவீங்களா?

‘‘ஒரே டேக்கிலேயே என்னோட பெஸ்ட்ட கொடுத்து, ஓகே பண்ண முயற்சி பண்ணுவேன். முதல்முறை செய்யும்போது சின்சியரா பண்ணுவோம், ரொம்ப இயல்பா இருக்கும். அதையே திருப்பிப் பண்ணும்போது கொஞ்சம் ஓவரா போயிடவும் வாய்ப்பிருக்கு. அதனால சரியான காரணம் தெரியாமல் இரண்டாவது டேக் போகமாட்டேன்.’’

‘Pink' திரைப்படம் தெலுங்கில் ‘வக்கீல் சாப்’ என்ற பெயரில் எடுக்கப்பட்டபோது பவன் கல்யாணுடன் நடித்திருந்தீர்கள். அந்த அனுபவம் எப்படி இருந்தது? தமிழில் அஜித் அதையே ‘நேர்கொண்ட பார்வை’ படமா பண்ணுனபோது உங்களுக்கு அழைப்பு வந்ததா?

‘‘தமிழில் நடிக்கக் கூப்பிடல. தெலுங்கில், நான் அந்தக் கதாபாத்திரத்தைப் பண்ணினா நல்லா இருக்கும்னு நினைச்சுக் கூப்பிட்டாங்க, அதனால் நடிச்சேன். முதல்ல அப்படி ஒரு ரோல்ல நடிக்க எனக்குத் தயக்கம் இருந்தது. ஆனால், அது பலரால் பேசப்பட்டது. எனக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது.’’

“மறக்க நினைக்கிற விஷயத்தை அப்பவே டெலிட் பண்ணிடுவேன்!”

தெலுங்கில் ‘ராரா ரெட்டி…’ பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுமாதிரி ஒரே ஒரு பாடலில் மட்டும் வருவதால் ஒரு ஹீரோயினாக உங்களுக்கு ஏதும் பாதிப்பில்லையா?

‘‘சினிமா இப்ப முன்னமாதிரி இல்லை. ஆடியன்ஸ் இப்போ அதை விரும்புறாங்க. முன்னணி நடிகர்கள் படத்தில் ஏதோவொரு பாடலை ஒரு டாப் ஹீரோயின் பண்ணணும்னு எதிர்பார்க்குறாங்க. அதனால் ஒரு நடிகையாக எனக்கு எந்த பாதிப்பும் இல்ல.’’

தமிழில் உங்களுக்கு ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அதற்கான காரணம் என்ன?

‘‘தெலுங்கில் நிறைய படங்கள் பண்ணிட்டிருக்கேன். அது மட்டும்தான் காரணம். அதேசமயம் தெலுங்கில் நான் நடிக்கும் படங்கள் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளிலும் ரிலீஸ் ஆகுது. தமிழ், மலையாளம், கன்னட மொழி டப்பிங்கையும் பெரும்பாலும் நான்தான் பண்ணுறேன். தமிழில் நான் நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை' விரைவில் வரும். அது இந்த இடைவெளியை நிரப்பிடும்.’’