
இந்தக் கதையை இயக்குநர் முத்து என்கிட்ட போன்லதான் சொன்னார். யாரோ ஒரு இயக்குநர் கதை சொல்றார் என்ற மனநிலையுடன்தான் கதையைக் கேட்க ஆரம்பிச்சேன். அவர் சொல்ல ஆரம்பிச்சதும், அப்படியே அதிர்ந்துட்டேன்.
``தமிழுக்கு ஏழு வருஷத்துக்குப் பிறகு வந்திருக்கேன். இத்தனை வருஷம் இங்கே படங்கள் கிடைக்காமல்போன வருத்தத்தை எல்லாம் ‘அயலி' போக்கிடுச்சு. இதை இவ்வளவு சிலாகிச்சு சொல்ல காரணமிருக்கு. என் நிஜ வாழ்க்கையில் நேர்ந்த துயரங்களின் தொகுப்புன்னுகூட ‘அயலி'யைச் சொல்லலாம். ‘ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஈரமான கிராமத்து மனுஷியாகவே வாழ்ந்திருக்கேன்'னு எல்லாருமே பாராட்டுறாங்க. சந்தோஷமா இருக்கு. இந்த வெப்சிரீஸின் இயக்குநர் முத்துக்குமாருக்கும், ஒளிப்பதிவாளர் ராம்ஜி சாருக்கும் நன்றி சொல்லிக்கறேன்.’’ மகிழ்ந்து நெகிழ்கிறார் அனுமோள். தமிழ் வெப்சீரிஸ்களில் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடித்திருக்கும் `அயலி'யில் குருவம்மாவாக வாழ்ந்திருக்கிறார் இவர். அடுத்து துல்கர் சல்மான், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது படங்களில் நடித்துவரும் அனுமோளிடம் பேசினேன்.

``நீங்க இந்த அளவுக்கு சிலாகிக்க என்ன காரணம்?’’
‘‘இந்தக் கதையை இயக்குநர் முத்து என்கிட்ட போன்லதான் சொன்னார். யாரோ ஒரு இயக்குநர் கதை சொல்றார் என்ற மனநிலையுடன்தான் கதையைக் கேட்க ஆரம்பிச்சேன். அவர் சொல்ல ஆரம்பிச்சதும், அப்படியே அதிர்ந்துட்டேன். அவர் சொன்ன விஷயம் எனக்கும் நடந்திருக்கு. நானும் பாதிக்கப்பட்டிருக்கேன். என் மனசுல நான் யோசிச்சு வச்சிருந்த கதை இது. கொரோனா லாக்டௌன் சமயத்துல, பெண் குழந்தைகளுக்கு நேரும் அவலங்களை என் நண்பர்கள்கிட்ட சொல்லி ‘இதையெல்லாம் ஒரு படமா கொண்டு வரலாம். ஸோ, நீங்க கதையா எழுதுங்க.. நானே நடிக்கறேன்’னு சொல்லிக்கிட்டிருந்தேன். ஆனா அவங்களோ, ‘உன் மனசுல இருக்கற கதையை நீயே எழுதிடு’ன்னு சொல்லிட்டாங்க.
அந்தச் சமயத்துலதான் இயக்குநர் முத்து, ‘அயலி' கதையைச் சொன்னார். அதான் நெகிழ்ந்துட்டேன். நான் நாலாவது படிக்கும்போதே எங்க அப்பா இறந்துட்டாரு. அம்மாவும் தங்கையும்தான் இருக்காங்க. அந்த நேரத்துல எங்களைச் சுத்தியிருந்தவங்க பலரும் எங்க அம்மாகிட்ட வந்து, ‘இது தகப்பன் இல்லாத வீடு, பொம்பளப் புள்ளைங்க மட்டும் இருக்கற வீடு. பொண்ணுங்களுக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சிடு'ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.
நான் ஏழாவது படிக்கும்போதே என்னைப் பொண்ணு பார்க்க வந்தாங்க. அதை இப்ப நினைச்சாலும் அதிர்ச்சியா இருக்கு. இப்பவும் என் ஊர்ல பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளை அவங்களுக்கே தெரியாமல் டீம் டீமா வந்து பொண்ணு பார்த்துட்டுப் போவாங்க. இந்தக் கொடுமைகளை எதிர்க்கணும்னுதான் இப்படி ஒரு கதை எழுதணும்னு தோணுச்சு. சீரிஸ்ல கமிட் ஆகும்போது எனக்கு தமிழ் அவ்ளோ பேசத் தெரியாது. ஆனா, கேரக்டர்ல ஒன்றியதும், டப்பிங்லேயும் நானே பேசணும்னு விரும்பினேன். மலையாளமும் தமிழுமாகக் கலந்து பேசினதை இன்னிக்கு எல்லாரும் பாராட்டுறது சந்தோஷமா இருக்கு.’’


``தமிழில் சத்யராஜுடன் ‘ஒருநாள் இரவில்' பண்ணியிருந்தீங்க... அதன்பிறகு மலையாளத்திலேயே கவனம் செலுத்த ஆரம்பிச்சிட்டீங்களே?’’
‘‘அப்படியெல்லாம் இல்ல. பொதுவாகவே நான் சவாலான கேரக்டர்கள்ல நடிக்கவே விரும்புவேன். ‘ஒருநாள் இரவில்'லகூட பாலியல் தொழிலாளியாதான் நடிச்சிருந்தேன். அந்தப் படம் பண்ணினதுக்குப் பிறகு தமிழ்ல என்னைத் தேடி வந்த கேரக்டர்கள் எல்லாமே அதே மாதிரி இருந்தது. அதனாலேயே தவிர்த்தேன்.
இந்தக் கதைக்காக உடல் எடையை அதிகரிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க. எங்க வீட்டுல எல்லாருமே பருமனானவங்க. அதனால உடல் எடையை அதிகரிக்கறது ஈஸியான விஷயமாகிடுச்சு. ஏன்னா, சாப்பாட்டை போட்டோவில் பார்த்தால்கூட என் எடை அதிகரிச்சிடும். வெயிட் போட்டால், அடுத்து படங்கள் கமிட் ஆக முடியாமல் போயிடுமோன்னுகூட பயப்படல. குருவம்மா ரோல் அவ்ளோ பிடிச்சிருந்தது. அதனாலதான் 12 கிலோ உடல் எடையைக் கூட்டினேன். இதுல ஒரு நல்ல விஷயம், அப்ப மலையாளத்துல நடிச்சிட்டிருந்த ரெண்டு படங்களுக்கு இந்த எடை பொருத்தமாப்போயிடுச்சு. இப்ப வெயிட்டை படிப்படியா குறைக்க முயற்சி பண்ணிட்டிருக்கேன். ஏழு கிலோ குறைச்சிட்டேன். இன்னும் குறைக்க வேண்டியிருக்கு. தமிழ்ல அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுடன் ‘ஃபர்ஹானா'வில் நடிச்சிருக்கேன். அதிலேயும் அருமையான கேரக்டர்.''

``ஐஸ்வர்யா ராஜேஷ் எப்படிப் பழகினாங்க?’’
‘‘அவங்களுக்கு ஒரு தனி அடையாளம் இருக்கு. அப்படி தனித்துவமான பெண்களை எப்பவும் பிடிக்கும். ஐஸ்வர்யாவைப் பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். நான் இவ்ளோ படங்கள் நடிச்சிருந்தாலும் சினிமாவில் இன்னமும் நான் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு எனக்குப் புரிஞ்சது. ஏன்னா, அவங்க படங்கள் தேர்ந்தெடுக்கறதுல இருந்து நிறைய விஷயங்கள் ஆச்சரியப்பட வச்சாங்க. அவங்களோட ஃபுட், கரியர், டயட்னு எல்லாத்தையும் கவனிச்சேன். ‘ஃபர்ஹானா’வில் எங்க ரெண்டு பேருக்குமான காம்பினேஷன் சீன்கள் நிறையவே இருக்கு.''