ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“கடைசி காலகட்டம் வரை சுயமரியாதை முக்கியம்!”

ஜானகி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜானகி

நடிகை ‘டப்பிங்’ ஜானகியின் வைராக்கியம்

படம்: ச.விக்னேஷ்

ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் நடித்த வெகுசில கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகை ‘டப்பிங்’ ஜானகி. ‘மாப்பிள்ளை’ மற்றும் ‘ராஜாதி ராஜா’வில் ரஜினியின் அம்மாவாக, ‘சிப்பிக்குள் முத்து’வில் கமல்ஹாசனின் அம்மா வாக, ‘அவசர போலீஸ் 100’ மற்றும் ‘தாவணிக் கனவுக’ளில் பாக்யராஜின் அம்மாவாக, ‘கோகுல’த்தில் அர்ஜுனின் அம்மாவாக.... இப்படித் தென் னிந்திய சினிமாவில் உச்ச நாயகர்களின் பாசமிகு தாயாகவும் குணச்சித்திர நடிகையாகவும் பல படங்களில் நடித்தவர், 60 ஆண்டுகளைக் கடந்தும் நடித்துவருகிறார்.

இவரின் சென்னை வீட்டின் வரவேற்பறையில், சினிமா பங்களிப்புக்கான பெருமைகளைப் பறை சாற்றுகின்றன, ஜானகி் வாங்கிக் குவித்த பரிசுகளும் கேடயங்களும். அவற்றின் பின்னணி சுவாரஸ்யங் களை விவரித்தபடியே தொடர்ந்தவர்...

“கடைசி காலகட்டம் வரை சுயமரியாதை முக்கியம்!”

“என் பூர்வீகம் ஆந்திரா. அங்க மேடை நாடகங்கள்ல நடிச்சுகிட்டிருந்தேன். ராணுவத்துல வேலை செஞ்சுகிட்டிருந்த என் கணவர் ஜான் பாபு, நாடகங்கள்ல இசைக்கலைஞரா இருந்தார். நான் இந்து; அவர் கிறிஸ்தவர். காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். இருவீட்டாரின் எதிர்ப்பால தனிக்குடித்தனம் போய் ஜீரோவுலேருந்து வாழ்க்கையை ஆரம்பிச்சோம். பிழைப்புக்காகச் சென்னை வந்தோம். ஒருநாள் பஸ்ல போகும்போது, ‘சினிமாவுல நடிக்க விருப்பமா?’னு சினிமாக்காரர் ஒருத்தர் கேட்டார். குடும்ப கஷ்டத்தை சமாளிக் கலாமேனு ஒத்துக்கிட்டு, ஏவி.எம் தயாரிச்ச ‘பூக்கைலாஸ்’ங்கிற தெலுங்குப் படத்துல சின்ன வேஷத்துல நடிச்சேன். எம்.ஜி.ஆர் உட்பட சில நடிகர்களின் படங்கள்ல குரூப் டான்ஸ் ஆடினேன். நாலு சீன்ல தலை காட்டுறது னாலும் பரவாயில்லைனு சினிமா, மேடை நாடகம்னு நிக்காம ஓடினேன். எந்தக் காலத்துலயும் சொல்லிக்கிற அளவுக்கெல்லாம் சினிமா வுல எனக்கு வருமானம் கிடைச்சதில்லை” வலி மிகுந்த நினைவுகளைப் பகிர் பவருக்கு, ‘சங்கராபரணம்’ திரைப்படம் ஏறுமுகம் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடந்த ருசிகர சம்பவத்தைச் சொல்பவர்...

“அந்த விழாவுல ‘ஜானகி’னு கூப்பிட்டதும் நானும், பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அம்மாவும், நடிகை செளகார் ஜானகி அம்மா வும் ஒரே நேரத்துல எழுந்து நின்னோம். யாரைக் கூப்பிடுறாங்கன்னு எங்க மூணு பேருக் கும் பார்வையாளர்களுக்கும் குழப்பம். அந்தக் காலகட்டத்துல பிஸியான டப்பிங் ஆர்ட்டிஸ் டாவும் இருந்ததால, ‘டப்பிங் ஜானகி’னு என் னைக் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அந்தப் பெய ரே எனக்கு அடையாளம் ஆகிடுச்சு” என்றவர்,

“பாவமான அம்மா ரோல்னா நானும் கமலா காமேஷும்தான் அப்போதைய டைரக்டர்களின் பிரதான சாய்ஸா இருப்போம். பழைய புடவையும், கிளிசரினும்தான் எனக் கான மெட்டீரியலா இருக்கும். ‘இது நம்ம ஆளு’ படத்துல ஷோபனாவுக்கு அம்மாவா நடிச்சது மாதிரி, விதிவிலக்கா சில படங்கள்ல தான் கலகலப்பான வேஷம் கிடைச்சது. ‘இது நம்ம ஆளு’ ஷூட்டிங் நேரத்துல எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தியால பெரும் பதற்றம் ஏற்பட் டுச்சு. கோபிசெட்டிபாளையத்துலேருந்து, எல்லா நடிகர்களையும் போலீஸ் பாதுகாப் புடன் பத்திரமா சென்னைக்குக் கூட்டிட்டு வந்து சேர்த்தார் பாக்யராஜ் சார். வழிநெடுக மக்களின் அழுகை, கோபம்னு வீட்டுக்கு வந்து சேரும்வரை எங்களுக்குப் படபடப்பா இருந்துச்சு.

‘படத்துல ஹீரோக்கள் மாறினாலும், நீங்க மட்டும் மாறவே மாட்டீங்கபோல’னு கிண்டலா பேசுற அளவுக்கு, எக்கச்சக்கமான படங்கள்ல நடிச்சேன். ரஜினி, கமல், விஜயகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணானு எனக்கு மகன்களா நடிச்ச முன்னணி நடிகர்கள் பலரும் என்மேல அன்பா இருந்தாங்க. நடிக்க வந்த காலத்துலயே டப்பிங் வாய்ப்பும் கிடைச்சது. பத்மினி அம்மா, ஜெயலலிதா, ப்ரியா, லதா, ஜெயசுதான்னு பல நடிகைகளுக்கு தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களுக்கு மட்டும் டப்பிங் பேசினேன்” பலருக்கும் தெரியாத தன் வரலாறு சொல்பவர், ஐந்து மொழிகளில் நடித்ததுடன், 800 படங்களுக்கு மேல் டப்பிங் பேசியிருக்கிறார்.

“தொழில்ரீதியா நடிக்கிறதோடு சரி... யார் கூடவும் தனிப்பட்ட பழக்கம் வெச்சுக்க மாட் டேன். இதனாலயும் நான் பெரிசா அறியப் படாத ஆர்ட்டிஸ்ட்டா மாறியிருக்கலாம். இப்போ குறையேதும் இல்லாம நல்லா இருக்கேன். உடம்பும் மனசும் ஒத்துழைக்கிற வரைக்கும் தொடர்ந்து வேலை செய்யணும்னு சினிமா மற்றும் சீரியல்கள்ல தொடர்ந்து நடிக்கிறேன். என் ரெண்டு பசங்களும் ஒரு பொண்ணும் சென்னையில வசிக்கிறாங்க. நான் தெலுங்குல அதிகமா வேலை செய்றதால பெரும்பாலும் ஹைதராபாத்துல இருப்பேன். அங்க வாடகை வீட்டுல தனியா வசிக்கிறேன். கடைசி வரைக்கும் சுயமரியாதையோடு வாழ விரும்புறேன்” அரிதாரமற்ற வார்த்தைகளில் நல்ல மெசேஜ் சொல்லி நிறைவு செய்கிறார் ஜானகி.