Published:Updated:

``அவரோட கனவு இப்படி தகர்ந்துடுச்சே!” - நிதிஷ் வீரா நினைவுகள் குறித்து ஈஸ்வரி ராவ்

நிதிஷ் வீரா

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற நிதிஷ் வீராவின் கனவை, கொரோனா காலகட்டம் முற்றிலுமாகத் தகர்த்திருக்கிறது. அவரின் நினைவுகள் குறித்து, `காலா’ பட நாயகி ஈஸ்வரி ராவிடம் பேசினோம்.

Published:Updated:

``அவரோட கனவு இப்படி தகர்ந்துடுச்சே!” - நிதிஷ் வீரா நினைவுகள் குறித்து ஈஸ்வரி ராவ்

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற நிதிஷ் வீராவின் கனவை, கொரோனா காலகட்டம் முற்றிலுமாகத் தகர்த்திருக்கிறது. அவரின் நினைவுகள் குறித்து, `காலா’ பட நாயகி ஈஸ்வரி ராவிடம் பேசினோம்.

நிதிஷ் வீரா

கொரோனா இரண்டாவது அலை, உயிர் பயத்துடன், நெருங்கிய உறவுகளின் இழப்புகளால் தீராத சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதேபோல, சினிமா துறையிலும் அடுத்தடுத்து இறப்புகள் ஏற்படுகின்றன. விஜயகாந்த்தின் `வல்லரசு’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நிதிஷ் வீரா. `புதுப்பேட்டை’, `வெண்ணிலா கபடிக்குழு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருக்கு, `காலா’ படம் அடையாளத்தையும் புகழையும் கொடுத்தது. அதில், ரஜினியின் மூத்த மகனாக நடித்தவர், `அசுரன்’, `லாபம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

'காலா' படத்தில்...
'காலா' படத்தில்...

சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்ற நிதிஷின் கனவை, கொரோனா காலகட்டம் முற்றிலுமாகத் தகர்த்திருக்கிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிதிஷ், சென்னையிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று அவர் உயிரிழந்த செய்தி, சினிமா துறையினர் உட்பட பலருக்கும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நிதிஷ் வீராவின் நினைவுகள் குறித்து, `காலா’ பட நாயகி ஈஸ்வரி ராவிடம் பேசினோம். ``கொரோனா பத்தி அடுத்தடுத்து எதிர்மறையான, மனசை பாதிக்கிற தகவல்கள் வர்றதால, செய்திகள் பார்க்கிறதைக் கொஞ்சம் குறைச்சுகிட்டேன். நீங்க சொல்லித்தான் நிதிஷின் இறப்புச் செய்தியை அறிகிறேன். ரொம்பவே அதிர்ச்சியா இருக்குது. `காலா’ படம் எனக்கும் நிதிஷ் உட்பட பலருக்கும் திருப்புமுனையைக் கொடுத்தது.

ரஜினி உடன் நிதிஷ் வீரா
ரஜினி உடன் நிதிஷ் வீரா

அந்தப் பட ஷூட்டிங் அனுபவமே வித்தியாசமா இருந்துச்சு. சில நாள்கள் ஒத்திகை பார்த்துட்டுத்தான் ஷூட்டிங் போனோம். அந்த வொர்க்ஷாப்ல நிதிஷ் எனக்கு ரொம்ப பழக்கமானார். அவருக்கும் எனக்கும் வயசு வித்தியாசம் குறைவுதான். ஆனா, எனக்கு அவர் மூத்த புள்ளை ரோல்ல நடிச்சார். அந்த அன்புனால, `மம்மி’ன்னுதான் என்னைக் கூப்பிட்டார். `மகனே’ன்னு நானும் அவர்கூட பாசமா பழகினேன்.

அந்தப் படத்துல நடிச்சபோதுதான் எங்கள்ல பலருக்கும் பழக்கம் ஏற்பட்டுச்சு. குறுகிய நாள்கள்லயே ஒரே குடும்பம்போல எல்லோரும் நட்பானோம். ரிகர்சல்லயும், ஷூட்டிங் நேரத்துலயும் நடிப்பு விஷயங்கள்ல என்கிட்ட நிறைய கருத்துகள் கேட்டார் நிதிஷ். என்னோட நடிப்பு சிறப்பா அமையவும் ஆலோசனைகள் கொடுத்தார். அவரோட முந்தைய பட அனுபவங்கள் பத்தி என்கிட்ட பகிர்ந்துகிட்டார்.

நிதிஷ் வீரா
நிதிஷ் வீரா

சினிமாவுல பெரிசா ஜெயிக்கணும்; பெயர் எடுக்கணும்னு ரொம்பவே கனவுடன் இருந்தார். `காலா’ ரிலீஸ் நேரத்துல தொடர்ந்து பேசிட்டே இருப்போம். அடுத்து அவரவர் வேலையில பிஸியா இருந்தாலும்கூட, நேரம் கிடைக்கிறப்போதெல்லாம் போன்ல பேசுவோம். அவரோட நடிப்புல `அசுரன்’ படமும் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சு. தொடர்ந்து நல்ல படங்கள்ல நடிச்சு பெயர் எடுப்பார்னு நம்பிக்கையுடன் இருந்தேன்.

போன வருஷம் கொரோனா வந்த பிறகுதான் நம்மள்ல பலரின் லைஃப் ஸ்டைலுமே மாறிடுச்சு. அதனால, நிதிஷ்கிட்ட தொடர்ந்து பேச முடியல. சினிமா நண்பர்கள் பலரையும் இழந்துகிட்டு இருக்கும் இந்தச் சூழல்ல, நிதிஷின் இழப்பு எனக்கு விவரிக்க இயலாத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கு. அவரோட கனவு முற்றிலுமா தகர்ந்துடுச்சே. என்னோட இன்றைய பொழுது இப்படி துக்கத்துடன் தொடங்கும்னு நிச்சயமா நினைச்சுப் பார்க்கல” என்று வருத்தப்பட்டவர் மீண்டும் தொடர்ந்தார்.

வெற்றி மாறன் உடன் நிதிஷ் வீரா
வெற்றி மாறன் உடன் நிதிஷ் வீரா

``கொரோனா காலகட்டத்துல என்னை ரொம்பவே பாதிச்சது எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாரோட இழப்பு. விவேக் சாருடன் எனக்கு நல்ல நட்பு உண்டு. எந்தச் சூழல்ல இருந்தாலும், மாசத்துல ஓரிரு முறையாவது போன்ல பேசுவோம். `விரும்புகிறேன்’ படத்துல நடிச்சபோது, அதுல ஒளிப்பதிவாளரா இருந்த கே.வி.ஆனந்த் சாருடன் நட்பு ஏற்பட்டுச்சு. அவரோட திறமைமீது எனக்குப் பெரிய மதிப்பு உண்டு. பெரிய கொடுமை என்னன்னா, இந்த மூணு பேருக்கும் இறுதி அஞ்சலி செலுத்த என்னால போக முடியல.

சின்ன கலைஞர்கள், பெரிய கலைஞர்கள்னு அடுத்தடுத்து பலரையும் இழந்தாலும், எல்லாமே சினிமா துறைக்கும், அவரவர் குடும்பங்களுக்கும் பெரிய இழப்புதான். கொரோனாவைப் பத்தி வெளியாகும் அடுத்தடுத்த செய்திகள், ஒவ்வொரு நாளும் பயத்தைக் கூட்டுது. வீட்டை விட்டு வெளியே வராம இருப்பதால ஓரளவுக்குப் பாதுகாப்புடன் இருக்கிறோம்னு சொல்லிக்கிட்டாலும், ஒருவிதமான பயமும் மன அழுத்தமும் இருக்குது.

நிதிஷ் வீரா
நிதிஷ் வீரா

எல்லோரும் கட்டாயம் மாஸ்க் பயன்படுத்துவோம். வெளியிடங்களுக்குப் போறதை முடிஞ்ச வரை குறைச்சுப்போம். இப்போதைக்கு இருக்கிறதை வெச்சு சமாளிப்போம். குடிக்க கஞ்சி இருந்தாக்கூட போதும். அதைச் சாப்பிட்டு, வீட்டுல பாதுகாப்புடன் இருப்போம். பணம், பொருள் ஈட்டுறதையெல்லாம் நிலைமை சரியான பிறகு பார்த்துக்கலாம். எல்லோரும் பாதுகாப்புடன் இருப்போம்” என்று அக்கறையுடன் முடித்தார் ஈஸ்வரி ராவ்.