சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

கில்லி மாதிரி கதை சொல்வாங்க!

 ஜானகி சபேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜானகி சபேஷ்

``சிங்கம், புலி, கரடி, யானையெல்லாம் இருக்கிற ஒரு பெரிய்ய்ய்ய காடு. அந்தக் காட்டுல ஒரு ஃபங்ஷன். அதுல ஒரு போட்டி. அங்க இருக்கிற எல்லா விலங்குகளுமே ஆளுக்கொரு கதை சொல்லணும். எல்லாரும் தயாராகிட்டாங்க. ஆனா, நெருப்புக்கோழிக்கு மட்டும், கதை சொல்வோமா வேண்டாமான்னு தயக்கம். எதுக்காம்..?’’

- தன் எதிரே அமர்ந்திருக்கும் குழந்தைகளைப் பார்த்துக் கேட்கிறார், ஜானகி சபேஷ். ‘ஏன்?’, ‘என்னாச்சு?’ எனக் கேள்விகள் எழுப்புகிறார்கள் குழந்தைகள். கதைசொல்லும் போட்டியில் நெருப்புக்கோழி கலந்துகொண்டதா, இல்லையா என்ற மீதிக் கதையை முடித்துவிட்டு, என்னிடம் பேசவந்தார் ஜானகி. ‘கில்லி’யில் விஜய்யின் அம்மாவாக வந்தாரே, அவரேதான். இப்போது குழந்தைகளுக்கு அவர் ‘ஸ்டோரி ஆன்ட்டி.’

‘` ‘கடல் சூழ் உலகு’ன்னு பெரியவங்க சொல்வாங்க. நான், ‘இது கதை சூழ் உலகு’ன்னு சொல்லுவேன். யோசிச்சுப் பாருங்க, பேச ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே குழந்தைகளோடு சேர்ந்து பயணிக்கத் தொடங்கிடுது கதை. ஒரு வயசுல, கதைன்னா என்னன்னாவது தெரியுமா குழந்தைக்கு? பிறகு ஏன், ‘ஒரு ஊர்ல ஒரு ராசாவாம்’னு அதுகிட்ட கதை சொல்றோம்? அங்கதான் ஒரு விஷயம் இருக்கு. அது ‘கதை சொல்லல்’ மட்டுமல்ல, குழந்தைக்குக் காது நல்லா கேட்குதான்னு சரிபார்க்கிற ஒரு வாய்ப்பு.

கில்லி மாதிரி கதை சொல்வாங்க!

காது நல்லா கேட்குது சரி. காது வழியா நல்ல செய்திகளை உள்ளே அனுப்ப வேண்டாமா? கதைகளோட அடுத்த பயன்பாடு அது. ‘உண்மை பேசறவங்க, அன்பு மனசுக்காரங்க எல்லாம் நல்லா இருப்பாங்க, தப்பு செய்றவங்க கண்ணை சாமி குத்திடும்’னு கதைகள் மூலமா நல்லது, தீயது என்ற உலகின் இருவேறு முனைகளைப் பற்றிப் போதிக்க ஆரம்பிச்சோம்.

கதைகள் ஒவ்வொரு பருவத்திலும் நம்மகூட வந்துட்டேதான் இருக்கு. காலேஜ் கதைகள், காதல் கதைகள், கல்யாணத்தில் நடந்த கதைகள்னு திரும்பிப் பார்த்தா, மொத்த வாழ்க்கையுமே கதைதான். தனிநபர் தாண்டி நிறுவனங்களின் கதைகள் இருக்கு. சினிமாவுக்குன்னு ஒரு கதை இருக்கு. ஏன்... கதைக்கேகூட கதை இருக்கு’’ என்றவரிடம், ‘கில்லி’ அம்மா, ‘ஸ்டோரி ஆன்ட்டி’யான கதையைக் கேட்டோம்.

‘`நான் பிறந்தது கொல்கத்தா. பெங்களூரு, டெல்லியில வளர்ந்தேன். இப்ப சென்னைவாசி. பள்ளி, கல்லூரி நாள்கள்ல மேடை நாடகங்கள்ல ஆர்வமா இருந்தேன். அந்தத் தொடர்புல ராஜீவ்மேனன் கண்ணில் பட, ‘மின்சாரக் கனவு’ படத்துல அவர் என்னை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து ‘ஜீன்ஸ்’, ‘கில்லி’ன்னு வாய்ப்புகள் வந்தன. ‘கில்லி’ அம்மா கேரக்டர் என்னோட சினிமா கரியர்ல நல்ல ரீச் கொடுத்தது. இதுவரை 25 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன்.

கில்லி மாதிரி கதை சொல்வாங்க!

எனக்கு ஒரு பழக்கமிருக்கு. பிடிச்சு ஒரு விஷயத்துல இறங்கிட்டா, கொஞ்ச காலத்துக்கு அதிலயே பரபரபரன்னு ஓடிட்டி ருப்பேன். ஐ.ஐ.டியனான என் கணவரும் அதை ஊக்கப்படுத்துவார். கதை சொல்லத் தொடங்கினது சில வருஷங்களுக்கு முன்னாடி தான். ‘நல்லா இருக்கே’னு அங்கங்க பாராட்டுகள் கிடைச்சது. குழாயடியில உருள்றதைக் காட்டிலும் கோயில் வாசல்ல உருண்டா புண்ணியமில்லையா? அக்கம்பக்கத்து வீடுகள்ல நாலஞ்சு குழந்தைகளுக்குச் சொல்ல ஆரம்பிக்க, அந்தக் குழந்தைகளின் அம்மாக்கள் தங்களோட நட்பு வட்டாரத்துல என்னைப் பற்றிச் சொல்ல சொல்ல, அப்படியே அது வளர்ந்து, இன்னிக்கு ஸ்கூல், காலேஜ் வரைக்கும் கதை சொல்லக் கூப்பிடுறாங்க. சமீபத்துல போலீஸ்காரங்க மத்தியில போய்க் கதை சொல்லிட்டு வந்தேன்.

காதைக் கூர்தீட்டி எட்டுத் திக்கிலும் எல்லாத்தையும் கேக்கிறவங்களாலதான் நல்ல ‘கதைசொல்லி’ ஆகமுடியும் என்பது என் அனுபவத்தில் கத்துக்கிட்ட விஷயம். எப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு கதை இருக்குன்னு சொன்னேனோ, அதேபோல நாம ஒவ்வொருத்தருமே கதைசொல்லியா மாறணும். அப்படி மாறும்போது, தலைமுறை இடைவெளி இல்லாமல்போகும்’’ எனக் கதை சொல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகிற ஜானகி, கதை சொல்லும்போது குழந்தையாகவே மாறி விடுவதுடன் அவ்வப்போது பாட்டுப் பாடியும் அந்தக் கதையை நகர்த்துகிறார். ‘`பிறந்த வீடும் புகுந்த வீடும் இசைப் பின்னணி கொண்ட குடும்பங்கள். பாம்பே ஜெயஸ்ரீ என் நாத்தனார். அதான், கதையில் பாட்டும் மிக்ஸ் ஆகுது’’ என்கிறார் புன்னகையுடன்.

கில்லி மாதிரி கதை சொல்வாங்க!

சரி, கடைசியில் நெருப்புக்கோழி கதை சொன்னதா, இல்லையா என்று நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டாமா?

‘’நெருப்புக் கோழிக்கு திக்குவாய் பிரச்னை. ‘இவன் எப்படிக் கதை சொல்வான்’னு மத்தவங்க கேலி பேசினாங்க. அதனாலேயே நெருப்புக் கோழிக்குத் தயக்கம். இதைக் கவனிச்ச அவனோட நண்பன் எலி வந்து தைரியம் தர, நெருப்புக்கோழிக்கு ஒரு ஐடியா வந்துச்சு. முழுக் கதையையும் அவன் பாட்டாவே சொல்லிட்டான். அவன் முடிச்சப்ப, அவனைக் கேலி பேசினவங்க எல்லாரும் கப்சிப்! இப்போ, ‘அட ஆமா, திக்குவாய் பிரச்னை இருக்கிற வங்க எப்படித் தங்கு தடையில்லாம பாடு றாங்க?’ன்னு உங்களுக்குத் தோணுதுதானே? தேடுங்க, அதுக்குப் பின் ஒரு மருத்துவக் காரணமும், அப்படிப் பாடின நிறைய பேர் பற்றிய கதைகளும் இருக்கும்!”