சினிமா
தொடர்கள்
Published:Updated:

“தேசிய விருது வாங்கிட்டேன்... அடுத்த டார்கெட் ஆஸ்கர்!”

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

படங்கள்: நிஷாத் ஃபாத்திமா

கீர்த்தி சுரேஷ்... தமிழ், தெலுங்கு, மலையாளம் என பம்பரமாய்ச் சுழன்று திரிகிறார். சமீபமாக, `சாணிக் காயிதம்' படத்தில் ரத்தம் தெறிக்க தெறிக்க ரிவெஞ்ச் எடுத்தவர், அடுத்ததாக, மகேஷ் பாபுவுடன் கலாவதியாக பவனி வந்தார். முன்னணி இயக்குநர்கள் முதல் அறிமுக இயக்குநர்கள் வரை நடிப்புக்குத் தீனிபோடும் பெண் கதாபாத்திரம் என்றால், கீர்த்திதான் முதல் சாய்ஸாக இருப்பார். தனது அடுத்தடுத்த வேட்டைக்காகக் காத்திருக்கும் கீர்த்தியிடம் ஒரு ஜெனரல் சாட்!

``ஒரே சமயத்துல மூணு மொழியிலும் ட்ராவல் பண்ணலாம்னு எப்படி முடிவெடுத்தீங்க? அதுதான் உங்களுடைய பெரிய ப்ளஸ்னு இப்போ தோணுதா?’’

“மூணு மொழியில ட்ராவல் பண்ணலாம்னு நான் முடிவெடுக்கலை. முதல்ல மலையாளம், அப்புறம் தமிழ், தெலுங்கு அறிமுகம்னு எல்லாமே யதார்த்தமா நடந்ததுதான். ஆனா பாருங்க, முதல் இரண்டு படங்கள் மலையாளத்துல பண்ணினேன். அப்புறம், ரொம்ப வருஷம் கழிச்சுதான், `மரைக்காயர் : அரபிக்கடலிண்டே சிம்ஹம்' மூலமா மலையாளத்துல கம்பேக் கொடுத்தேன். இப்போ தமிழ்ல `சாணிக் காயிதம்', தெலுங்குல `சர்காரு வாரி பாட்டா', மலையாளத்துல `வாஷி'ன்னு அடுத்தடுத்து வெவ்வேற மொழியில என் படங்கள் வெளியாகுறது முதல் முறை. இது ரொம்ப சந்தோஷமா இருக்கு.''

`` `நடிகையர் திலகம்'க்குப் பிறகு, உங்களை மையப்படுத்தின கதைகள்,கமர்ஷியல் படங்கள் இரண்டிலும் பயணிக்கிறது எப்படி இருக்கு? ரிலாக்சேஷனுக்காக ஜாலியா ஒரு கமர்ஷியல் படம் பண்ணலாம்னு பண்றீங்களா?’’

``என்னை மையப்படுத்திய இன்டென்ஸ் கதைகள், கமர்ஷியல் படங்கள் இரண்டிலும் பயணிக்கணும்னுதான் ஆசைப்படுறேன். சொல்லப்போனா, கமர்ஷியல் படங்கள் நிறைய பண்ணணும்னு தோணுது. கமர்ஷியல் படம்னா ஜாலியா பண்ணலாம், மத்த படங்கள்னா மெனக்கெடணும் அப்படினெல்லாம் இல்லை. `சாணிக் காயிதம்' பண்ணும்போது ரொம்ப ஜாலியா இருந்தேன். நான் மட்டுமல்ல டீமே ரொம்ப ஜாலியாதான் வேலை செஞ்சோம். அதே மாதிரி, கமர்ஷியல் படங்கள் பண்ணும்போது, சில விஷயங்களுக்காக நிறைய மெனக்கெட்டிருக்கேன். டீம், அவங்களுடைய வொர்க்கிங் ஸ்டைல், அவங்களுடனான வேவ் லென்த், நம்ம கேரக்டரை இயக்குநர் நினைக்கிற மாதிரி வெளிக்கொண்டு வர்றது இதுல கிடைக்கிற திருப்திதான் நம்மளை அந்த செட்ல சந்தோஷமா ஜாலியா வெச்சுக்கும்.''

“தேசிய விருது வாங்கிட்டேன்... அடுத்த டார்கெட் ஆஸ்கர்!”

`` `அண்ணாத்த' படத்துல சூப்பர் ஸ்டாருக்குத் தங்கை, `போலா ஷங்கர்' படத்துல மெகா ஸ்டாருக்குத் தங்கை... சிரஞ்சீவிகூட நடிக்கிறது பற்றி...’’

``ரொம்ப பெருமையா இருக்கு. ரஜினி சார் கூட ஒரு ஃப்ரேம்ல வந்திடணும்ங்கிறது எனக்குப் பெரிய கனவா இருந்திருக்கு. ஆனா, அவர்கூட அவர் தங்கச்சியா ஒரு படமே நடிச்சு முடிச்சுட்டேன். அதே மாதிரி சிரஞ்சீவி சார் கூட நடிப்பேன்னு நினைச்சுப்பார்க்கவே இல்லை. `போலா ஷங்கர்'ல (`வேதாளம்' ரீமேக்) அது நடந்தது ரொம்ப ஹேப்பி. ரெண்டு பேரும் செம எனர்ஜி, செம ஸ்டைல், செம மாஸ்தான். இதுல சுவாரஸ்யம் என்னன்னா, ரஜினி சார் கூட `நெற்றிக்கண்' படத்துலயும் சிரஞ்சீவி சார்கூட `புன்னாமி நாகு' படத்துலயும் அம்மா நடிச்சிருக்காங்க.''

``நானியுடன் `நேனு லோக்கல்' படத்துக்குப் பிறகு, இப்போ `தசரா' படத்துல நடிக்கிறீங்க. எப்படி போய்க்கிட்டிருக்கு. இதுல உங்களை எப்படிப் பார்க்கலாம்?’’

``நானி கூட `தசரா' சூப்பரா போய்க்கிட்டிருக்கு. நான் அந்தப் படத்தை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கேன். `ரங்கஸ்தலம்', `புஷ்பா' மாதிரி ராவா இருக்கும். இதனுடைய இயக்குநர் காந்த், சுகுமார் சார்கிட்ட வொர்க் பண்ணுனவர். அதனால, அவர் டச்சும் படத்துல இருக்கும். இந்தப் படத்துல வித்தியாசமான வட்டார வழக்கைப் பேசியிருக்கேன். காஸ்ட்யூம், பேச்சு எல்லாம் வித்தியாசமா இருக்கும். எனக்கு துறுதுறுன்னு இருக்கிற பொண்ணு கேரக்டர். அதே சமயம் ரொம்ப ஸ்ட்ராங்கான கேரக்டரும் கூட. நானி இதுல வேற மாதிரி இருப்பார்.''

``டொவினோ தாமஸ்கூட `வாஷி' ரிலீஸாகப்போகுது. இதுல தயாரிப்பாளரும்கூட. அதைப் பற்றி...’’

``நான் தயாரிப்பாளர் இல்லை. என் அப்பாதான். அம்மா, அக்கா எல்லோரும் வேலை செஞ்சிருக்கோம். ஆனா, எதுவும் பிளான் பண்ணாமல் யதார்த்தமா அமைஞ்சதுதான். நம்ம நாட்டுல இருக்கிற முக்கியமான சமூகப் பிரச்னையைப் பத்திப் பேசுற படமா இருக்கும். படம் வெளியான பிறகு, விவாதம் உருவாகிற அளவுக்கு கன்டன்ட் இருக்கும். நானும் டொவினோவும் வழக்கறிஞரா நடிச்சிருக்கோம். கோர்ட் ரூம் டிராமாதான். எனக்குத் தெரிஞ்சு இந்த சமூகப் பிரச்னையைப் பத்தி வேறெந்தப் படமும் வந்ததில்லைன்னு நினைக்கிறேன்.''

“தேசிய விருது வாங்கிட்டேன்... அடுத்த டார்கெட் ஆஸ்கர்!”

``மாரி செல்வராஜ் இயக்கத்துல `மாமன்னன்.' முதல் முறை உதயநிதி, பகத் பாசில், வடிவேலுவுடன் நடிக்கிற அனுபவம்..?’’

`` `மாமன்னன்' படத்துல ஒரு ஷெட்யூல் முடிச்சிருக்கேன். வடிவேலு சார் இதுல வேற மாதிரி ஒரு கேரக்டர்ல நடிக்கிறார். அவருடைய கேரக்டர் நிச்சயம் பேசப்படும். அவர் காமெடிகளை ஒரு ரசிகையா அவ்ளோ ரசிச்சிருக்கேன். அவர் மாதிரி ஒரு லெஜண்ட் கூட நடிச்சது ரொம்ப சந்தோஷம். உதய் சாருக்கு இது கடைசிப் படமா இருக்கும்னு சொல்றாங்க. அவர்கூட நடிச்சது ஹேப்பி. எனக்கும் பகத் பாசிலுக்கும் இன்னும் காம்பினேஷன் வரலை. செட்டே ரொம்ப கலகலன்னு இருக்கும். மாரி செல்வராஜ் சார்கிட்ட நிறைய விஷயங்கள் கத்துக்கிறேன். அவர் படங்கள்ல பெண் கதாபாத்திரங்கள் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கும். அதே மாதிரி, எனக்கும் இதுல ஒரு போல்டான கேரக்டர் கொடுத்திருக்கார். எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. இது மாதிரி முதல் முறை நடிக்கிறேன்.''

`` `சாணிக் காயிதம்' பொன்னி மாதிரி பரிச்சயமில்லாத கதாபாத்திரங்கள் பண்ணும்போது இருக்கிற சவால்களை எப்படிக் கையாளுறீங்க?’’

``பரிச்சயமில்லாத கதாபாத்திரங்கள் நடிக்கிறது சவால்தான். ஆனா, அதைவிட பெரிய சவால் என்னன்னா, பரிச்சயமான கதாபாத்திரங்கள்ல வெரைட்டி காட்டுறது. `சாணிக் காயிதம்' பொன்னி கேரக்டருக்குள்ள போறதுக்கு ஒரு நாள்தான் ஆச்சு. அதுக்கப்புறம் நானே பொன்னி ஆகிட்டேன். ‘ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?’ன்னு படம் பார்த்துட்டு நிறைய பேர் கேட்டாங்க. நான் ரொம்ப ஜாலியா பண்ணினேன். அதுக்கு காரணம், எங்க டீமா அல்லது எங்க காம்பினேஷனா என்னன்னு தெரியலை. எனக்கான ஸ்பேஸைக் கொடுத்தார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அதனால, எனக்குக் கஷ்டம் தெரியலைன்னு நினைக்கிறேன்.''

``தேசிய விருது, உங்க வேலையில எந்த அளவுக்குப் பொறுப்பைக் கொடுத்திருக்கு?’’

``நிச்சயமா பொறுப்பு அதிகமாகியிருக்கு. இதுவரை பண்ணாததைப் பண்ணணும்னு நினைக்கிறேன். என்னை மையப்படுத்திய கதைகள் கொண்ட படங்கள், கமர்ஷியல் படங்கள், நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள்னு எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணணும். எல்லாமே நம்ம கரியர்ல இருக்கிற மாதிரி யோசிச்சுதான் ஆகணும். அதுக்குத் தேவையான முடிவுகள், ஆலோசனைகள், சிந்தனைகள்னு உள்ள ஓடிக்கிட்டே இருக்கும்.''

``டாப் ஹீரோயின், வெரைட்டியான படங்கள், தேசிய விருது... கீர்த்தியின் தேடல் என்ன?’’

``ஒரு விருது வாங்கணும்னு வந்தேன். தேசிய விருது வாங்கியாச்சு. மேலும் மேலும் நல்ல பெயர் வாங்கணும்னு நினைக்கிறேன். அடுத்து ஆஸ்கர்தான்...'' (சிரிக்கிறார்)

`` `டான்ஸ் நல்லா ஆடியிருக்கலாம், காஸ்ட்யூம் நல்லாருந்திருக்கலாம்'னு அம்மாவும் `நடிச்சிருவியா, நடிக்க வருமா?'ன்னு அப்பாவும் கேட்டதா ஒரு பேட்டியில சொல்லியிருந்தீங்க. இப்போ என்ன ஃபீட்பேக் வருது வீட்ல இருந்து?’’

``முதன்முதல்ல நான் நல்லா நடிச்சேன்னு அவங்க நம்பியது `நடிகையர் திலகம்' படத்தை தியேட்டர்ல பார்த்த பிறகுதான். நல்லா நடிச்சிருக்கேன்னு தெரியுது. ஆனா, சாவித்ரி அம்மாவா நடிச்சா மக்கள் எப்படி எடுத்துக்குவாங்கன்னு பயந்தாங்க. ஆனா, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. தேசிய விருதும் கிடைச்சது. அதுக்கு முன்னாடி வரைக்கும், `ம்ம்... நல்லா இருக்குமா'ன்னு சொல்லிடுவாங்க. வேற எதுவும் அவங்ககிட்ட இருந்து வராது. நம்ம பொண்ணு நடிக்கிறான்னு முக ஸ்துதிக்காக பாசிட்டிவா சொல்லமாட்டாங்க. அவங்ககிட்ட பாராட்டு வாங்கணும்னு நெனச்சுக்கிட்டே இருப்பேன். `சாணிக் காயிதம்' பார்த்துட்டு, என்கிட்ட என் அம்மா `என்ன இப்படி நடிச்சிருக்க', `எப்படி இதெல்லாம் பண்ணுன?', `அந்தக் கோபத்தை எப்படிக் கொண்டு வந்த?'ன்னு ஆச்சர்யமா கேட்டாங்க. `இப்படிலாம் கேட்காதம்மா. எனக்கு வெட்கமா வருது'ன்னு சொன்னேன். அதே மாதிரிதான் அப்பாவும். ரெண்டு பேருக்கும் அவ்ளோ சந்தோஷமா இருந்தது. என் அக்காவும் நல்ல விமர்சகர். எப்பவும் நம்ம பாசிட்டிவை மட்டும் சொல்லாமல் நெகட்டிவையும் சொன்னால்தான் நாம வளர முடியும்.''

``அக்கா ரேவதி உங்ககிட்ட ரெண்டு கதை சொன்னதா ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீங்க. அவங்க இயக்கத்துல எப்போ நடிக்கப்போறீங்க?’’

``கதை எழுதிக்கிட்டிருக்காங்க. முடிச்சுட்டுச் சொல்வாங்கன்னு நினைக்கிறேன், பார்ப்போம்.''

``தென்னிந்திய ஹீரோயின்கள் பாலிவுட் போகும்போது உடல் எடையைக் குறைச்சிடுறாங்க. நீங்களும் சமீபமா நல்ல சேஞ்ச் ஓவர் கொடுத்தீங்க. உங்களுடைய ஃபிட்னெஸ்?’’

``நான் உடம்பைக் குறைச்சது, என்னுடைய முடிவுதான். நான் வொர்க் அவுட் பண்ண ஆரம்பிச்சதே கடந்த நான்கு வருடங்களாதான். அது வரைக்கும் நல்லா சாப்பிடுவேன், ஷூட்டிங் போவேன், தூங்குவேன். ‘நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு, ஆறு மாதம் பிரேக்ல இருந்தேன். அப்போ வொர்க் அவுட் பண்ணலாம்னு தோணுச்சு. ஜிம் பண்ணினேன், வெயிட் குறைச்சேன், இப்போ யோகா பண்ணிக்கிட்டிருக்கேன். ஆரோக்கியமா இருக்கணும்னா இதெல்லாம் பண்ணணும். மத்தப்படி பயங்கர டயட் அது இதுன்னெல்லாம் ஒண்ணுமில்லை. நம்ம வேலைக்கு நம்மளை நாம இப்படியெல்லாம் பார்த்துக்கணும்னு ரொம்ப லேட்டாதான் புரிஞ்சது.''