
- லிஜோ மோல் ஜோஸ்
தன் கதாபாத்திரங்களைப் போல நேரிலும் எளிமை விரும்பியாகத்தான் புன்னகைக்கிறார் லிஜோ மோல் ஜோஸ். ‘சிவப்பு மஞ்சள் பச்சை', ‘ஜெய்பீம்' படங்களின் மூலம் நடிப்பில் நம் புருவம் உயரவைத்தவர். இப்போது மலையாளத்தில் இரண்டு படங்கள் தவிர தமிழில் ‘அன்னபூரணி' என்ற படத்திலும் நடித்துவரும் லிஜோவிடம் பேசினேன்.

‘‘தமிழ்ல நல்லா பேசப் பழகிட்டீங்களே..?’’
‘‘அப்படியா! நான் ‘சிவப்பு மஞ்சள் பச்சை'யில் நடிக்கறப்ப தமிழ் பேசத் தெரியாது. ஆனா, நான் ஸ்கூல் படிக்கறப்ப தமிழும் ஒரு பாடம்கிறதால் எனக்குத் தமிழ் எழுதவும் வாசிக்கவும் தெரியும். ஆனா, பேச வராது. ‘ஜெய்பீம்' படப்பிடிப்புல இருளர்களோட இருந்தப்ப தமிழ் பேச ஆரம்பிச்சேன். அந்தப் படம் முடியறதுக்குள் ஓரளவு தமிழ்ல பேசப் பழகிட்டேன். த.செ.ஞானவேல் சாரும், சூர்யா சாரும் என்னை ஊக்குவித்து டப்பிங்கும் பேச வச்சாங்க. அதன்பிறகு தமிழ் கொஞ்சம் சரளமாகிடுச்சு.''
‘‘லிஜோவோட வாழ்க்கை பற்றிச் தெரிஞ்சுக்கலாமா?’’
‘‘தாராளமா! என்னோட பூர்வீகம் கேரளா. அம்மா லிசம்மா வனத்துறையில வேலை பார்த்தாங்க. அப்பா ஜோஸ் விவசாயி. ஒரே ஒரு தங்கை. அம்மா, அப்பாவோட பெயர்கள் சேர்த்து லிஜோன்னு வச்சுக்கிட்டேன். பன்னிரண்டாம் வகுப்பு வரை இடுக்கியிலதான் படிச்சேன். அப்புறம் கொச்சியில விஸ்காம் படிச்சேன். மாஸ்டர் டிகிரி மாஸ் கம்யூனிகேஷன் முடிச்சிட்டு பிரின்ட் மீடியாவுல ஒர்க் பண்ண விரும்பினேன். ஆனா, அமையல. அதனால், விஸ்காம் முடிச்சதும் ஒரு டி.வி சேனல்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்தேன். அந்த ரெண்டு வருஷம் கொடுத்த அனுபவத்துல மீடியா வேலையே வேணாம்னு விட்டுட்டேன். ஆனாலும் மீடியா மீதான ஆர்வத்தினால் முதுகலைப் பட்டம் படிக்க விரும்பினேன். பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்துல லைப்ரரி அண்ட் இன்ஃபர்மேஷன் சயின்ஸ் படிச்சேன். நான் செகண்ட் இயர் படிக்கறப்பதான் மலையாளத்துல ‘மகேஷிண்டே பிரதிகாரம்' படத்திற்கான ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். அதுல செலக்ட் ஆனேன். அதன்பிறகு நடந்த கதைதான் உங்களுக்குத் தெரியுமே!''

‘‘தமிழ்ல அறிமுகமான படத்திலேயே நல்ல பெயர் அமைஞ்சது. நாலு படங்கள் வரிசையா பண்ணுவீங்கன்னு பார்த்தால் சட்டுனு கல்யாணம் பண்ணிட்டீங்க... உங்க மேரேஜ் லவ்வா? அரேஞ்ஜ்டு மேரேஜா?’’
‘‘லவ் மேரேஜ்தான். எனக்கு இப்பவே முப்பது வயசு ஆகிடுச்சு. ‘நீ படிப்பை முடிச்சிட்டே'ன்னு எங்க வீட்டுலேயும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி வற்புறுத்திட்டு இருந்தாங்க. நான் பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகத்துல படிக்கறப்பதான் அருணைச் சந்திச்சேன். நான் லைப்ரரி சயின்ஸ். அவர் வேற டிபார்ட்மென்ட். சீனியர் வேற. அவர் இயக்குற ஒரு ஷார்ட் பிலிம்ல நடிக்க என்னைக் கேட்டார். ஆனா, அப்ப நடிப்பில் எனக்கு ஆர்வம் இல்ல. சினிமா ஆசையும் இல்ல. அதனால எனக்கு நடிக்க வராதுன்னு அவருக்கு மெசேஜ் அனுப்பிட்டேன். அதன்பிறகு நண்பர்களானோம். அவர் வேற ஒரு ஆள வச்சு குறும்படத்தை எடுத்து முடிச்சு, அதோட லிங்க்கை எனக்கு அனுப்பினார். ஐந்து வருடங்கள் நண்பர்களா இருந்தோம். ஒருத்தர்கிட்ட ஒருத்தர் காதலைச் சொல்லிக்காமலேயே காதலர்களானோம். நாங்க லவ்வைச் சொல்லிக்கிட்டதும் இல்ல. காதல் பரிசுகள் பரிமாறிக்கிட்டதும் இல்ல. வாலன்டைன்ஸ் டேக்களைக் கொண்டாடினதும் இல்ல. அந்த நட்பிலேயே ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்னு தெரிஞ்சுக்கிட்டோம். எங்களோட முதல் டேட்டிங் காலேஜ் வளாகத்துல இருக்கற காபி ஷாப்புல காபி சாப்பிட்டதுதான். அப்புறம், ஒரு கட்டத்துல வீட்ல காதலைச் சொன்னோம். கல்யாணத்துல முடிஞ்சிருச்சு. கல்யாணம் அன்னிக்கு சூர்யா, ஜோதிகா, பிரகாஷ்ராஜ் சார்னு எல்லாரும் வீடியோவுல வாழ்த்து அனுப்பினது மறக்க முடியாத தருணங்களாகிடுச்சு.''
‘‘ ‘அன்னபூரணி'யில் நீங்க கணவனுக்கு அடங்கி நடக்கற அமைதியான மனைவியா நடிக்கறதா படத்தோட இயக்குநர் ஜோஸ்வா சொல்லியிருந்தார். நிஜத்துல எப்படி?”
‘‘கணவர் அருணும் நானும் நல்ல நண்பர்கள். அதே டைம்ல நான் காலையில எழுந்து அவருக்கு பெட்காபி கொடுக்கற வழக்கம் எல்லாம் கிடையாது. லேட்டாதான் எழுந்திரிப்பேன். அவருக்கு நல்லா சமைக்கத் தெரியும். பிரியாணி செம டேஸ்ட்டா சமைப்பார். எனக்கும் சமையல் தெரியும். அவர் கிச்சன் பக்கம் போனால், கிச்சனையே க்ளீனா வச்சுக்க மாட்டார். சமைச்சு முடிச்சதும், கிச்சனை க்ளீன் பண்ற வேலை ரொம்பவே இருக்கும். அதுல கடுப்பாகிடுவேன். இதனால சின்னச் சின்ன சண்டைகள் வரும். என் முதல் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்' பார்த்துட்டு ‘நான் ஷார்ட் பிலிம்ல நடிக்கக் கேட்டதுக்கு நடிக்க வராதுன்னு சொன்னே... ஆனா, சினிமாவுல நடிச்சிருக்கே?'ன்னு சொல்லிக் கலாய்ப்பார். ‘ஜெய்பீம்'ல என் நடிப்பைப் பாராட்டினார். சந்தோஷப்பட்டார். நல்ல நண்பர்களா இருக்கோம். அருண் இப்ப ஸ்கிரிப்ட் ஒர்க்கில் இருக்கார். விரைவில் படம் பண்ணுவார்.''

‘‘நீங்க தேர்ந்தெடுக்கற படங்கள் நடிப்பிற்கு ஸ்கோர் உள்ள படங்களாகவே இருக்கு... கமர்ஷியல் பக்கம் திரும்புற ஆசை இல்லையா?”
‘‘கதையைக் கேட்கும்போதோ அல்லது அந்த ஸ்கிரிப்ட்டைப் படிக்கும்போதோ அந்தக் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவம் பத்தி முழுசா தெரிஞ்சுக்குவேன். கதையில நான் டான்ஸ் ஆட வேண்டியது வந்தால், அந்தக் கதையைத் தவிர்த்துடுறேன். ஏன்னா, எனக்கு டான்ஸ் வரவே வராது. கதைகளை நேரிலோ அல்லது போனிலோ கேட்பதைவிட, அதை பவுண்டட் ஸ்கிரிப்ட்டா கேட்டு வாங்கிடுவேன். ஸ்கிரிப்ட்டை மறுபடியும் மறுபடியும் படிக்கறப்பதான் என்னால அந்தக் கதாபாத்திரத்துக்குள் போகமுடியும்னு நம்புறேன். ஆரம்பத்துல நடிப்பு பத்தி, சினிமா பத்தி நம்பிக்கை இல்லாமல் இந்தத் துறைக்கு வந்தேன். எனக்கும் நடிப்பு வரும்னு எனக்குத் தன்னம்பிக்கையை விதைச்ச படம் ‘ஜெய்பீம்'தான்.
ஏன்னா, நான் சினிமாவுக்கு வருவேன்... நல்ல நல்ல படங்கள் பண்ணுவேன்னு ஒருபோதும் நினைச்சதே இல்லை. ஒரு நடிகைக்கான தகுதி என்கிட்ட இருக்கறதா எண்ணினதில்ல. அந்தத் தகுதிகள் என்கிட்ட இல்லவும் இல்ல. எனக்கு டான்ஸும் வராது. இப்படி இருக்கறப்ப, நான் சினிமாவில் நடிப்பேன்னு எப்படி நம்புவேன்?! நான் முதுகலைப் பட்டம் படிக்கறப்ப, அதை முடிச்சிட்டு பிஹெச்.டி பண்ணிட்டு, ஆசிரியர் ஆக விரும்பியிருக்கேன். ஆனா, நினைச்சது நடக்கல. இப்ப, நடிகையாகிட்டேன். வாழ்க்கை அழைச்சிட்டுப் போற பாதையில விரும்பிப் பயணிக்க ஆரம்பிச்சிட்டேன். ‘ஜெய்பீம்' படத்துக்குப் பிறகு செங்கேணி மாதிரி தொடர்ந்து கிராமத்துக் கதைகளாத் தேடி வந்துச்சு. ஒரே மாதிரி கதாபாத்திரங்கள் பண்ணமாட்டேன். அந்தப் படத்தை முடிச்சுப் பல மாதங்களுக்குப் பிறகுதான் ‘அன்னப்பூரணி' படம் தேடி வந்துச்சு. இன்னொரு விஷயம், கமர்ஷியல் கதைகள் இதுவரை என்னைத் தேடி வந்ததுமில்லை.''
‘‘உங்க அறிமுகப் படமே பகத் பாசிலோடு நடிச்சிருந்தீங்க... இப்ப அவர் தமிழிலும் கலக்குறாரே?’’
‘‘ஆமா. ஒவ்வொரு படமும் நான் நடிக்கறப்ப அன்னிக்கு சீன்ல எடுக்கப் போற காட்சிகள் பத்தி மட்டும் தெரிஞ்சுக்காமல், ஒவ்வொரு நாளும் முழு ஸ்கிரிப்ட்டையும் படிச்சிட்டு ரெடியாவேன். ‘மகேஷிண்டே'ல பகத் சாரோட அப்ப ஸ்பாட்டுல பேசினதில்ல. ஆனா, ஒரு விஷயத்துல அவர் பிரமிக்க வச்சார். அவரோட ஷாட் எடுக்கறதுக்கு முன்னாடி அவர் ஸ்பாட்டுல சகஜமா பேசி, சிரிச்சுட்டு இருந்தார். ஆனா, கேமரா முன்னாடி நிற்கும் போது பட்டுனு அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அந்த மேஜிக் எனக்கு ஆச்சரியமா இருந்துச்சு.''